Friday, August 19, 2016

சில வார்த்தைகள்..

சில வார்த்தைகள்..
.....................................

இந்தியாவுக்கு இரண்டு வார விடுமுறை எல்லாம் போதாது. நிச்சயம் சந்தித்தாக வேண்டிய பலரை சந்திக்க இயலவில்லை. செய்ய நினைத்த பல விஷயங்களை செய்ய முடியவில்லை. அத்தனைக்கும் ஆசைப்படுபவன் நான். ஆனால், காலம்? அது ஓடிக்கொண்டே இருக்கிறதே. எனக்காக நிற்க மறுக்கிறதே, என் நினைவுகளைப் போலவே. இன்னும் சில நொடிகளில் அபுதாபியிலிருந்து ப்ரசல்சுக்குச் செல்லும் விமானம் கிளம்பிவிடும். அதற்கு முன்பு சில வார்த்தைகள். இது வெறும் பகிர்வல்ல. அனுபவிக்காத எதையும் எழுதவோ பகிரவோ கூடாது என்கிற உறுதியோடு இருக்கிறேன். ஆனால் எல்லா நேரங்களிலும் அது முடிவதில்லை. எத்தனை பேர் ஏலாதி படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இதை என்னுடைய ஏலாதி என்று வைத்துக்கொள்ளுங்கள், ஏழுக்கு அதிகமாகவே இருப்பினும்.   

1. உடல்நலம் பேணுங்கள்: கடும் உடற்பயிற்சி தேவையில்லை. காலையிலோ மாலையிலோ குறைந்த பட்சம் நடக்கவாவது செய்யலாமே. சாதாரண நடை வேண்டாம். வீர நடை. அத்தனை ஆசனங்களும் செய்ய வேண்டியதில்லை. குறைந்த பட்சம் மூச்சுப்  பயிற்சியாவது செய்யுங்கள். ஒரே கல்லில் இரு மாங்காய்கள் அடிக்கும் வித்தை அது. மனம், உடல் இரண்டுக்குமான பயிற்சி அது. பழங்கள் நிறைய சாப்பிடுங்கள். இங்கு யாரும் பழங்கள் காய்கறிகள் அதிகம் சாப்பிடுவதில்லை. வருத்தமாக இருக்கிறது. ஒரே ஒரு ஆப்பிள் பழத்தையாவது, அட ஒரு கொய்யாப்பழத்தையாவது சாப்பிடுங்கள். எண்ணெய், மாமிசம், மது வேண்டாமென்று கூறவில்லை. ஆனால், குறைத்துக்கொள்ளுங்கள்; அளவுடன் எடுத்துக்கொள்ளுங்கள். 

2. புத்தகம் படியுங்கள்: ஒரு மாதத்துக்கு ஒரு புத்தகமாவது வாசித்துப் பழகுங்கள். மற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் தேவையில்லை என்று கூறவில்லை. எல்லாம் வேண்டும். ஆனால், புத்தகங்கள் உங்கள் பார்வையை மாற்றும். நூல் பல கல்லாத மனிதனை கல்லுக்கும், துர்நாற்றம் வீசும் குளத்துக்கும் நம் முன்னோர்கள் ஒப்பீடு செய்ததை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். புத்தகங்கள் நம்மை ஓடிக்கொண்டே இருக்கும் நீரோடைகளாக்கும் வல்லமை படைத்தவை. அல்லது காட்டாறாக ஓடிக்கொண்டிருந்தால்  கட்டுப்படுத்தி சரியான பாதையில் இட்டுச் செல்லும். நம் பழக்கம் நம் பிள்ளைகளுக்கும் தொற்றி அவர்களை சான்றோர்களாக்கும். நாமிட்ட விதையின் கனிகளை அவர்கள் பறிப்பார்கள். உங்களுக்காக இல்லையென்றாலும் இந்த தேசத்தின் வருங்காலத்துக்காகவாவது படியுங்கள். 

3. சான்றோர்களைச் சந்தியுங்கள்: அவர்களுடனான சந்திப்பு நம் அறிவைப் பெருக்குவது மட்டுமல்ல, நூல்களைப் போன்றே நம் பார்வையை மாற்றும், நம்மை இன்னும் வலிமையானவர்களாக ஆக்கும். நம்மைவிட அறிவில் குறைந்தவர்களை சந்திக்கும் போது, அவர்களிடம் பேசி அவர்களையும் மேலே கொண்டு வர முயலுங்கள். அது நம் கடமை. நமக்கு எதிர் கருத்து உடையவர்களிடம் விவாதம் செய்யுங்கள். விவாதத்தில் ஒளி பிறக்கும். நமக்கு மேலான அறிவு படைத்தவர்களிடம் அடக்கத்தைக் கடைபிடியுங்கள். அமைதியாக கவனியுங்கள். மூடர்கள் உங்களிடம் அறிவு போதிக்கும்போதும் அதே அமைதியைக் கடைபிடியுங்கள். ஆனால் கவனிக்காதீர்கள்.  

4. அன்பு பழகுங்கள்: வெறுப்பு வேண்டாம். சண்டைகள் புரிவது என்பது மனித இயல்பு. ஆனால் அதை அன்றே அல்லது ஓரிரு நாட்களிலேயே மறந்துவிட்டு புன்னகையுடன் கைகுலுக்கவேண்டும். வன்மத்தை வளர்த்துக்கொள்வது நம்மீது எண்ணெய்யை ஊற்றி தீவைத்துக்கொள்வது போன்றது. யார் மீது நாம் அதீத வெறுப்பு வைக்கிறோமோ, அவர்களைத்தான் நம் மனம் எப்போதும் எண்ணிக்கொண்டிருக்கும். மனதின் எளிய செயல்பாடு இது. வெறுப்பு அது குடிகொண்டிருக்கும் இடத்தை மலக்கிடங்காகவும், பிணவறையாகவும் மாற்றிவிடும் சக்தி படைத்தது. அதைத்  தூக்கி எறிய முயலுங்கள். ஒரு மலரின் அழகை ரசித்து விட்டு, வாசத்தை நுகர்ந்து களிப்புற்று, பின்பு அதைப் பறித்து தலையில் வைத்துக்கொள்ளும்போது சிறு முள் குத்தியது என்பதற்காக, எப்படி அந்த மலரை கசக்கி நசுக்கி வீசி எறிவது சரியல்ல. மலர் மட்டுமல்ல தைக்கும் முள்ளும் அழகுதான். அந்த அழகை ரசியுங்கள். ஒருவனை வெறுப்பதற்கான சந்தர்ப்பம் நேரும்போது அவன் செய்த நல்ல செயல்களை நினைத்துப்  பாருங்கள். தவறு செய்யாத மனிதனே இல்லை. நாம் செய்யும் தவறுகளை விடவா மற்றவர்கள் செய்துவிடப் போகிறார்கள். நம்மையே நாம் மன்னித்து நேசிக்கும்போது மற்றவர்களை நேசிக்கமுடியாதா என்ன?  நேசிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம்  வெறுப்பையாவது துடைத்தெறியுங்கள். 

5. தவறுகள் செய்யுங்கள்: பல தவறுகள் செய்தவன் நான். இவ்வகையில் என்னை விட கீழானவன் இருப்பானா என்று நான் தேட முயன்றதில்லை. ஆனால், அத்தகைய செயல்களுக்குப் பிறகான படிப்பினைகள்தான் என்னை மேலான உயரத்துக்கு இட்டுச் செல்ல உதவிக்கொண்டிருக்கும் ஏணிப்படிகள். என் தவறுகளை பொதுவெளியில் வெட்கப்படாமல் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லிக்கொள்கிற மனவுறுதியையும் எனக்குத் தந்தவை அவை. தவறுகள் செய்வதை விட, அந்தத் தவறுகளுக்குப் பின்பான தீவிர சுயபரிசோதனையம், சுயமன்னிப்பும், பிறரிடம் தைரியமாக பகிர்ந்துகொள்ளுதலும் மிகவும் அவசியம். 

6. ஆணவம் தவிருங்கள் : ஆணவம் என்பது அவம். அதைத் தவிர்த்து விடல் நலம். உறவுகளில் சிக்கல் ஏற்படுவதற்கு ஆணவம் மிகப் பெரும் எதிரி. எதிர்த்துப் பேசுபவன் எதிரியும் அல்ல. எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டிக்கொண்டிருப்பவன் நண்பனுமல்ல. எதிர்த்துப் பேசுபவனை விலக்கிவிட நினைப்பவர்கள் தங்களைச் சுற்றி அடிமைகளையும், தலையாட்டி பொம்மைகளையும், வருங்கால துரோகிகளையும், மூடர்களையும் பெருக்கிக்கொள்கிறார்கள். மன்னிப்புக் கேட்கத் தெரியாதவனும், மன்னிக்கத் தெரியாதவனும் மனிதனே இல்லை. விமர்சனங்களுக்கு மதிப்பளித்துக் கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் உயர்ந்தவராகவே இருக்கலாம். ஆனால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புனிதம் என்கின்ற ஒன்று இந்தப் பேரண்டத்தில் இல்லவே இல்லை. குறைந்த பட்சம், சுய விமர்சனம், சுய எள்ளலாவது செய்து கொள்ளுங்கள். கண்ணாடி முன்பு நின்று நீங்கள் செய்வதையெல்லாம் ஒரு நாளாவது கவனியுங்கள். உங்கள் மனதை ஒரு மணிநேரமாவது உற்று நோக்குங்கள். உங்களை விட அதிபெரும் கோமாளி இந்த உலகில் இல்லை என்பது உங்களுக்கு விளங்கும். என்னை விட என்னை யாரும் அதிகமாகப் பகடி செய்தது கிடையாது என்பதை என்னால் கர்வத்துடன் பகிர்ந்துகொள்ள முடியும். 

7. உதவி செய்யுங்கள்: முடிந்த வரை பிறருக்கு  உதவுங்கள். இதில் நான் கூறியுள்ள 'முடிந்த வரை' என்பது நான் போகிற போக்கில்  எழுதியதல்ல. எனக்கானவற்றை நான் செய்து கொண்ட பின், என் கடன்கள் அத்தனையும் தீர்ந்த பின் உதவி புரிவேன் என்று இருக்காதீர்கள். அந்தக் காலம் நமக்கு எப்போதுமே வராது. எப்போதும் ஏதாவது ஒரு தேவை இருந்துக்கொண்டேதான் இருக்கும் என்பது உலக நியதி. இருப்பதில் முடிந்ததை கொடுத்துதவுதல் நலம். பணமில்லாதவர்கள் நேரத்தை தானமாகக் கொடுங்கள். நேரமில்லாதவர்கள் நல்ல வார்த்தைகளையாவது கொடுங்கள். ஆனால், கொடுத்து உதவிய பின், தயவு செய்து அவர்களை உங்கள் கண்காணிப்பில் வைத்து, அவர்களிடம்  உங்களுக்கான மரியாதையை எதிர்பார்த்து, அவர்களை உங்கள் அடிமைகளாக்கி விடாதீர்கள். அவர்களுக்கான சுதந்திரத்தை அவர்களிடமிருந்து பறித்துவிடாதீர்கள். உதவி பெறுபவன் அடிமையல்ல. எதையோ ஒன்றை எதிர்பார்த்து செய்தால் அது உதவியுமல்ல. ஒன்றுக்கு  மற்றொன்று என்பது எளிய வியாபாரம் அன்றி வேறில்லை.   

8. சுற்றித் திரியுங்கள்: நாடோடி போன்று சுற்றித் திரியுங்கள். சுற்றலும் கற்றலும் ஒன்றுதான். பயணங்கள் புத்தகங்களுக்கு நிகரானவை. பல்வேறுபட்ட மனிதர்களைப் படிக்க பயணங்கள் உதவும். ஒரு பயணத்தில் ஒரு வித்தியாசமான மனிதரையாவது நீங்கள் சந்திப்பீர்கள். அவர் உங்கள் மனதில் ஒரு விதையிடுவார். அது மரமாக வளர்ந்து, பின்னொரு நாளில் காய்த்து கனி கொடுக்கும். சுவைக்கலாம். இந்தியாவில் நம்மில் பலருக்குப் பயணம் என்றாலே கோயில்கள் குளங்கள் மட்டும்தான். அவை வேண்டாம் எனக்கூறவில்லை, அத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டாம் என்று கூறுகிறேன். நான் கனவு காண்பவன். காட்சியாகக் கிடைப்பது மட்டுமின்றி, விழிகளுக்கு எட்டாதவற்றையும் என் உணர்வுகளால் உணர்ந்து ரசிக்க முனைபவன். ஆயினும், காணாத கடவுளை விடக் கண்முன்னே விரியும் அத்தனையும் எனக்கு அதிமுக்கியம்.  

9. சாலை விதிகளை மதியுங்கள்: சாலைகளில் இத்தனை மோசமான ஒழுங்கின்மையும்  இருக்கும் வரை, பிற விஷயங்களில் நம் தேசம் மாறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நம்முடைய உயிரைக் காத்துக்கொள்ளக்கூட, குறைந்த பட்ச விதிகளைக்கூட, பின்பற்றாத  தேசத்தில் மற்றவை எப்படி மாறும்? நான் நம்பிக்கையுடையவன், நன்மையைக் காண முற்படுபவன் என்றாலும், இந்த விஷயத்தில் எனக்குச் சோர்வுதான் மிஞ்சுகிறது. தன்னைத் தான் மாற்றிக் கொள்ளும் முனைப்பில்லாமல் அரசாங்கத்தையும், ஏனைய அத்தனையையும் எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கு நாம் தகுதியற்றவர்கள். உண்மையில் இங்கு நேருபவை எல்லாம் விபத்துக்களே இல்லை. நாமே திட்டமிடுபவை. நாமே நமக்கான விதிகளை உருவாக்கிக்கொண்டதால் விளைந்தவை. ஒவ்வொருவரும் நலமுடன் வீடு திரும்புவது அவரவர் செய்த தர்மத்தினாலோ அல்லது அதிர்ஷ்டத்தாலோ என்று நினைக்கத் தூண்டுகிறது. நம் தேசத்தின் கம்பீரம் - அதிநவீனமாகக் கட்டப்பட்ட விமான நிலையங்களிலோ, தேசியகீதத்தைக் கேட்டுக்கொண்டு, தேசியக் கொடி முன்பு விரைப்புடன் நின்று வீரவணக்கம் செலுத்துவதிலோ இல்லை. அது, 'பொறுப்பின்றி வீசி எறியப்பட்ட குப்பைகள்' அற்ற, எளிய விதிகளை மதித்து வாகனங்கள் நேர்த்தியாகச் செல்லும்   சாலைகளில்தான் இருக்கிறது. 

இறுதியாக, 

நாளை என்பது நம் கையில் இல்லை. அடுத்த பிறவியிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படியே இருந்தாலும் நான் மாதவன் இளங்கோவாக வாழப் போவதில்லை. அப்படியிருக்க அடுத்தப் பிறவியைப் பற்றி எனக்கு யாதொரு கவலையும் இல்லை, எனக்கு அது உதவப் போவதுமில்லை. உண்மையான மரணம் என்பது நினைவுகளின் மரணமே. இந்தப் பிறவி என்று மட்டுமல்ல, என் நினைவுகளில் நான் இருக்கும் போதே செய்ய நினைக்கும் அத்தனையும் செய்து விட வேண்டும். அவற்றை யாரையும் பாதிக்காத வகையில் செய்ய வேண்டும். அதே நேரம் அதற்குள் தொலைந்து போகாத வண்ணம் செய்துவிட வேண்டும். 

இவையெல்லாம் நிச்சயம் அறிவுரைகளல்ல. எளியவன் நான் யார் அறிவுரை கூற. ஆயினும் என் மனம் எனக்கு உரைத்தவற்றை எல்லாம் சற்றுநேரம் பின்தொடர்ந்து சென்று எழுதினேன் உங்களுக்காக, எனக்காகவும்தான். இதை உங்கள் மனதின் குரலாக வைத்துக்கொள்ளுங்கள்.

வாழிய நலம்.

இன்று வாட்சேப்பில் எழுதிப் பகிர்ந்தது. இங்கும் பகிரலாம் என்று தோன்றியதால் பகிர்கிறேன்.

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...