Friday, August 26, 2016

Kathaisoli

Malan,
பல ஆண்டுகளுக்கு முன் கி.ராஜநாராயணன் 'கதை சொல்லி' இதழை வெளியிட்டபோது அதன் முதன் இதழை அனுப்பி என் கருத்துக்களைக் கேட்டிருந்தார். அப்போது எழுதிய கடித்தத்தை 30 இதழில் "வீட்டில் பழைய குப்பைகளிலிருந்து சில பழைய கடிதங்கள் கிடைத்தன.தங்கர் பச்சன் கடிதம் ஒரு உண்மையைச் சொல்கிறது. மாலன் கடிதமும் அப்படியே" என்ற குறிப்போடு வெளியிட்டிருக்கிறார். அந்தக் கடிதம் இங்கே

சளைக்காமல் கதை சொல்லியைக் கொண்டு வந்து கொண்டிருக்கும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கழனியூரான் ஆகியோருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்
____________________
அன்பிற்குரிய திரு.கி.ரா அவர்களுக்கு,

வணக்கம். அன்புடன் நீங்கள் அனுப்பி வைத்த கதைசொல்லி கிடைத்தது. அந்த முயற்சி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. காரணங்கள் பல. எழுத்துக்குப் பரிசாகக் கிடைத்த பணத்தை மீண்டும் எழுத்துக்கே செலவிட விரும்புகிற உங்கள் யோக்கியம், வறண்ட கரிசக்காட்டு வழியே போகிறபோது, உடைமரத்திலிருந்து விசுக்கென்று பறக்கிற மயிலைக் காணும்போது ஒரு சின்ன சிலிர்ப்பு புறப்படுமே அது போல இருக்கிறது. கவிதை கிடையாது என்று அறிவித்திருக்கிறீர்கள். ரொம்ப நிம்மதி. வாசகர் கடிதங்கள் கிடையாது என்றும் சொல்லிவிட்டீர்கள். பஜனை கோஷ்டிகள், சண்டைக் கோழிகள் இரண்டு தரப்புக்கும் ஏமாற்றமாக இருக்கும். கேள்வி பதில் பகுதியில் அரசை ஒரு மொங்காம் போடாகப் போட்டுத் தள்ளி விட்டீர்கள். (அந்த அரை நிர்வாணப் பக்கிரி எதற்கெல்லாம் கை கொடுக்கிறான் பாருங்க) ஆனால் அதே விஷயத்தை "சிறு பத்திரிகைகளில் எழுதுபவர்களெல்லாம் எழுத்தின் மேல் அதுவும் தங்கள் எழுத்தின் மேல் மிகுந்த மோகம் கொண்டவர்கள் என்ற வரிகளைக் கொண்ட ஒரு கடிதத்தை மறுப்பேதும் சொல்லாமல் வெளியிட்டு (கூடவே ஞானஸ்தர் என்று ஒரு ஷொட்டு வேறு) இருக்கிறீர்கள். என்ன செய்வது மருமகள் உடைத்தால் பொன்குடம்!

நான் கிடக்கிறேன் கிரிசை கெட்ட கோட்டிக்காரன். ஆனால் சிற்றிதழ்களைப் பரிசெல்லாம் அறிவித்துத் தட்டிக் கொடுத்து, கொம்பு சீவி, வர்ணம் பூசி, உருமாலை விரித்து கட்டிக் கொண்டிருக்கிற பெரிய மனிதர்கள், கண்ணை மறைக்கிற பாசத்தையும், காதை நிறைக்கிற குலாவலையும் வழித்துப் போட்டுவிட்டு, சிறுபத்திரிகைகள் கடந்த 30வருடத்தில் அறிவு ஜீவிகளிடம் எத்தகைய கலா ஆசாரத்தை உருவாக்கியிருக்கின்றன, அது ஏற்கனவே இங்கு புழங்கி வந்த மொழிக்கும், விழுமியங்களுக்கும். ஏதேனும் பலம் சேர்த்ததா, இல்லை பழைய பாப்பான்களைத் தூக்கி ரேழியில் போட்டுவிட்டு புதுப் பாப்பான்களுக்குப் பூனூல் போட்டு, மனையில் உட்கார்த்தும் சூடோ எலிட்டிசத்தை அரங்கேற்றியதா என்றெல்லாம் திறந்த மனத்துடன் யோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சிறு பத்திரிகைகள் சோத்தை ஊறவைத்த நீராகாரமாக இருந்தனவா/ இருக்கின்றவா அல்லது குமிழிகள் பொங்கி வரும் சோடத் தண்ணிராக இருந்தனவா/இருக்கின்றனவா என்ற கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொண்டு, உங்களுக்கு கிடைக்கும் விடைகளை எனக்கும் சொல்லுங்கள்.

புட்டபர்த்தி, மந்திராலயம், சிருங்கேரி, காஞ்சிபுரம், சீரங்கம், நாங்குநேரி, தர்மபுரம், குன்றக்குடி, மேல் மருவத்துர், திருவண்ணாமலை போன்று அவ்வப்போது மடங்களும் பெரியவர்களும், புதுப் பெரியவர்களும், பண்டார சன்னதிகளும் தோன்றி பக்தகோடிகளுக்குப் பிரசாதம் கொடுத்து ஆசிர்வதிப்பது சிறு பத்திரிகை உலகிலும் தலையெடுத்துத் தழைத்து வருகிற நேரத்தில் கதைசொல்லியைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். மெய்யாகவே நீங்கள் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் உள்ள ஆள் என்பதால் அருள் வேண்டி பக்தகோடிகள் வந்து மொய்ப்பார்கள். ஜாக்கிரதையாக இருங்கள். இன்னுமொரு விஷயத்திலும் கூட நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். சிறு பத்திரிகை என்பது ஒரு ஆட்கொல்லி, பலி கேட்கும். சரஸ்வதிக்கு ஒரு விஜயபாஸ்கரன், எழுத்துக்கு ஒரு செல்லப்பா, நடைக்கு ஒரு மணி, கசடதபறவிற்கு ராமகிருஷ்ணன், அஃக்குப் பரந்தாமன் என்று ஏகப்பட்ட பலவான்களை ஜீரணித்த ஆட்கொல்லி, உங்களிடத்தில் அது கருணையோடு இருக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். இது எண்வழிச் சிற்றிதழ் என்று ஒரு ஜாக்கிரதையாகத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். விருதாப்பயல்களாக இருந்த நாங்க வாசகன் இதழ்களைத் துவக்கியபோது, காலில் கட்டியிருக்கும் குண்டாகக் கணக்கும் கடிகாரத்தைத் தூக்கி எறிந்து விட்டுத்தான் பயணத்தை ஆரம்பிக்கிறோம். இது எங்கள் செளகர்யம் போல் வெளிவரும் என்று கெத்தாகத்தான் ஆரம்பித்தோம். ஆனால் ஒன்றும் பிரேயாசனம் இல்லை.

கதை சொல்லியில் கவிதை கிடையாது, கடிதம் கிடையாது. சரி, ஆனால், இந்திய மொழிகளில் உள்ள நாட்டுப்புறக் கதைகளை மொழி பெயர்த்து வெளியிடலாமே? என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வரையில் ஏ.கே.ராமானுஜம் தொகுத்து பென்குவின் வெளியீடாக ஒரு புத்தகம்* வந்திருக்கிறது. கதைகளைப் போட அனுமதி கிடைக்காத பட்சத்தில் அதன் முன்னுரையைப் போடலாம். எப்படியானாலும் நீங்கள் பார்க்க வேண்டியப் புத்தகம் அது. (உங்கள் தயவில், “மிகவும் எளிது வேலை கிடைப்பது’ என்றொரு (ஓசி) புத்தகம் படித்தேன். அதில் உலக அளவில் ஆங்கிலத்தில் எழுதுகிற ஒரு தமிழர் கூட இல்லை. அப்படி ஒருவர் இருவர் இருக்கக் கூடுமானால் அவர் நிச்சயமாக இலங்கைத் தமிழராகத்தான் இருப்பார் (பக்.112) என்று இருந்தது. ஆர்.கே.நாராயணன், ஏ.கே.ராமானுஜன், ஆர்.பார்த்தசாரதி என்ற பெயர்களை உங்கள் நண்பருக்கு அறிமுகப்படுத்தக் கூடாதா?”)

வேறு எதாவது யோசனை தோன்றினால் அப்புறம் எழுதுகிறேன்.

* (Folktales from India) 
அன்புடன்
மாலன்

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...