Saturday, July 7, 2018

காவிரிப் பிரச்சனையில் பழைய நினைவுகள்.


காவிரிப் பிரச்சனையில் பழைய நினைவுகள்.
-------------------------------------------------------------------
காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதைக் குறித்து செய்திகள் 1982இல் ஒருநாள் ஆங்கில இந்து ஏட்டில் வெளிவந்தது. இதன் முழுத் தரவுகளையும் நெடுமாறன் அவர்கள் என்னிடம் தேடச் சொன்னார். சட்டமன்றத்தின் கேள்வி நேரத்தில் இதைக் குறித்து பிரச்சனையைக் கிளப்பினார். அது குறித்தான பழைய செய்திகளை குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் திரு. கோமல் அன்பரசன் காவிரி க(த)ண்ணீர்என்ற தொடரில் எழுதப்பட்டிருந்த செய்தி வருமாறு.

மத்தியிலும், கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்த இத்தகைய பின்னணியில் பிரதமர் இந்திரா காந்தியை நேரடியாக பகைத்துக் கொள்ள எம்.ஜி.ஆர். விரும்பவில்லை. என் மூத்த மகன்என்று இந்திரா காந்தியால் முன்பு வர்ணிக்கப்பட்ட பழ.நெடுமாறனை வைத்து காய்களை நகர்த்தினார். அவரது கோரிக்கையின் பேரில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அதில் மேக்கேதாட்டுவுக்கு எதிராக நெடுமாறனை வைத்தே தீர்மானம் கொண்டு வரச் செய்தார். பின்னர் சட்டப்பேரவையில் நெடுமாறன் முன்வைத்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் அரசின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. அணைக்கு அடிக்கல் நாட்ட வரக்கூடாது என்று குடியரசுத் தலைவருக்கு எம்.ஜி.ஆர். கடிதம் எழுதினார். சர்ச்சையானதை அடுத்து மேக்கேதாட்டு அடிக்கல் நாட்டு விழாவுக்கு வர சஞ்சீவ ரெட்டி மறுத்துவிட்டார். திட்டமும் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
என்று எழுதியுள்ளார். இத்தோடு சில செய்திகளை சொல்ல வேண்டும்.

நீலம் சஞ்சீவ ரெட்டி நெடுமாறனுக்கு நெருக்கமானவர். ஸ்தாபனக் காங்கிரசின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய சஞ்சீவ ரெட்டிக்கு தனிப்பட்ட முறையில் கடிதமும் எழுதினார். அந்த கடிதத்தை தி.சு. கிள்ளிவளவனும், நானும் தயார் செய்ததெல்லாம் நினைவில் உள்ளது. அந்த கடிதத்தில் நெடுமாறன், சஞ்சீவ ரெட்டியிடம் ‘‘நீங்கள் சென்னையில் படித்தவர். சென்னை ராஜதானியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சென்னை சட்டமன்றத்தில் செயல்பட்டவர். தமிழ்நாடு உங்களுக்கு நெருங்கிய மாநிலம். காவிரியில் எங்களுக்கான நியாயங்கள் கர்நாடகத்தால் மறுக்கப்படுகிறது. கர்நாடக முதல்வர் குண்டுராவ் 1982இன் புத்தாண்டுப் பரிசாக கர்நாடக மக்களுக்கு மேக்கேதாட்டு அணையை கட்டுவேன் என்கிறார். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய நடவடிக்கை இல்லை. எனவே நீங்கள் ஒத்துக் கொண்ட மேக்கேதாட்டு அணை அடிக்கல் நாட்டு விழாவிற்கு கர்நாடகத்திற்கு வருகை தரக் கூடாது என்பது என்னுடைய நேர்மையான கோரிக்கை. உங்களிடம் அன்பு பெற்றவன் என்ற நிலையில் தமிழகத்தின் நியாயங்களை சொல்லியுள்ளேன்.
என்று எழுதிய கடிதத்தில் குடியரசுத் தலைவருக்கு மனதைத் தொடும் வகையில் அந்த கடிதம் அமைந்தது. தொலைபேசியில் அழைத்தும், சஞ்சீவ ரெட்டியிடம் நெடுமாறன் பேசியதெல்லாம் நினைவுகள். அப்போதெல்லாம் உடனிருந்தவன் என்ற நிலையில் இதைப் பதிவு செய்கிறேன். சஞ்சீவ ரெட்டியும் மேக்கேதாட்டு அணையின் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்.

இதே காலக்கட்டத்தில், 1982இல் மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் நெடுமாறன் அவர்களும், நானும் டெல்லியிலிருந்து மத்திய முன்னாள் அமைச்சர் கே.பி.உன்னிக்கிருஷ்ணனை, அவர் திருவனந்தபுரம் செல்லும் வழியில் சந்திக்கச் சென்றோம். அதே வேளையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு அன்றைய கர்நாடக முதல்வர் குண்டுராவும் வந்திறங்கினார். அதிர்ஷ்டவசமாக விமான நிலைய ஓய்வறையில் சந்தித்தபோது, குண்டுராவிடம் நெடுமாறன் மேக்கேதாட்டு அணையை ஏன் கட்டுகிறீர்கள்? தமிழகத்திற்கு வரும் தண்ணீர் குறைந்துவிடுமே. சற்று யோசியுங்கள் என்று நட்பு ரீதியாக சொன்னதெல்லாம் என்னுடைய நினைவுகளில் இன்றும் உள்ளது.

#காவிரிப்_பிரச்சனை
#குண்டு_ராவ்
#நீலம்_சஞ்சீவ_ரெட்டி
#பழ_நெடுமாறன்
#மேகதாது_அணை
#Mekedatu_dam
#Neelam_Sanjeeva_Reddy
#Pazha_Nedumaran
#Gundu_Rao
#Cauvery_Issue
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07-07-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...