Wednesday, July 18, 2018

‘தமிழ் நாடு’ என்று பெயர் சூட்டிய பொன்விழா





-------------------------------------
1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, ஹைதராபாத்தும் இதரப் பகுதிகளும் ‘ஆந்திரப் பிரதேசம்’ என்றும், திருவிதாங்கூரும் இதரப் பகுதிகளும் ‘கேரளம்’ என்றும் அழைக்கப் பட்டது.

ஆனால், சென்னை மாகாணமும் இதரப் பகுதிகளும் தமிழ்நாடாக மாற வில்லை. சரியாக 11 ஆண்டுகள் கழித்து அண்ணா முதல்வரானப் பிறகே சென்னை மாகாணம் தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டது சென்னை மாகாணம் (Madras State) எனும் பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சங்கரலிங்கனார் விருதுநகர் தேசபந்து திடலில் ஜூலை 27, 1956இல் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார். 

அண்ணா, ம.பொ.சி.,  ஜீவா, கக்கன் போன்றவர்கள் தியாகி சங்கரலிங்கனார்  சந்தித்து, உண்ணா நோன்பைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் தம் உண்ணாவிரத்தில் உறுதியாக இருந்தார். 76 நாட்கள் கடந்த நிலையில், அக்டோபர் 13, 1956 ல் உயிர் துறந்தார். தன்னுடைய உடலை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மாயாண்டி பாரதியிடம் இறுதி அடக்கத்திற்கு ஒப்படைக்க கூறினார். 

இதையொட்டி தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டுமென்று சட்டமன்றத்தில் நுழைந்த திமுக மே 7, 1957இல் தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 42 வாக்குகள் கிடைத்தன. இதை எதிர்த்து 127 வாக்குகள் பதிவானது. எனவே திமுகவின் முதல் தீர்மானம் தோல்வியடைந்தது. ஆனால் தொடர்ந்து தமிழ்நாடு கோரிக்கையை திமுக முன்னெடுத்துச் சென்றது. 

சோசலிஷ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சின்னதுரை ஜனவரி 30, 1961இல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு சிலம்புச் செல்வர் மா.பொ.சி., தலைமையில் தமிழரசுக் கட்சியினர் ஆதரித்து பல்வேறு அடையாளப் போராட்டங்களை நடத்தினார்கள். 1961சனவரி 30ஆம் நாள் போராட்டம் தொடங்கியது. சென்னை, காஞ்சி, குடந்தை, வேலூர், திருச்சி, மதுரை, நாகர் கோயில், பழனி, தூத்துக்குடி, காரைக்குடி, திருவள்ளூர் ஆகிய ஊர்களில் போராட்டம் நடத்திய தமிழரசுக் கழகத் தலைவர்களாகிய நாடகக்கலைஞர் ஒளவை சண்முகம், கு.சா.கிருஷ்ண மூர்த்தி, கவிஞர் கா.மு.செரீப், கு.மா.பாலசுப்பிரமணியம், இயக்குநர் ஏ.பி.நாகராசன், புலவர் கீரன், கோ.கலிவரதன் ஆகியோர் உள்பட 1700 பேர் கைது செய்யப்பட்டனர். அன்றைக்கு சட்ட மன்றத்தில் நுழைய முயன்ற காமராசரின் காரை மறித்தும் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் மூன்று நாட்கள் கழித்து, அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்ற ம.பொ.சி. அறிவிப்பும், பிரஜா சோசலிஸ்ட் சட்ட மன்ற உறுப்பினர் சின்னத்துரை கொண்டு வந்த முதல் பெயர் மாற்றத் தீர்மானமும், அவருக்கு ஆதரவாக தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பும் காமராசர் அரசை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

அதன் விளைவாக அன்றைய முதல்வர் காமராஜர், சின்னதுரையின் தீர்மானத்தின் மீதான விவாதத்தை சட்டமன்றத்தில் ஒரு மாதம் தள்ளி வைக்க கேட்டுக் கொண்டார். 

24.2.1961இல் நடந்த சட்ட மன்ற விவாதத்திற்குப் பிறகு, சென்னை மாகாணம் இனிமேல் ஆங்கிலத்தில் “MADRAS STATE” என்றும், தமிழில் “தமிழ்நாடு” என்றும் அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அரசுக் கடிதப் போக்குவரத்தில் மட்டும் தமிழ்நாடு என்று குறிப்பிடலாம் என்பதற்கு மட்டும் காமராஜர் சம்மதித்தார். இந்த முடிவை யாரும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் புபேஷ் குப்தா, தமிழ்நாடு என பெயர் மாற்றம் வேண்டி தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார். புபேஷ் குப்தா, மாநில அரசு இதற்கான சட்டத்தினை நிறைவேற்றாவிட்டாலும் மத்திய அரசு இதற்கான ஒப்புதலைத் தரலாம் என்று வாதாடினார். புபேஷ் குப்தாவோடு அந்த அவையில் உறுப்பினராக இருந்த பேரறிஞர் அண்ணா, தமிழ்நாட்டு வரலாற்றுத் தரவுகளிலிருந்தும் பரிபாடல், சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம் என்று எடுத்துச் சொல்லி தமிழ்நாடு என்று பெயரிட வேண்டுமென்று புபேஷ் குப்தாவின் மசோதாவை ஆதரித்து பேசினார். 

பார்லிமென்டை லோக்சபா என்றும் கவுன்சில் ஆப் ஸ்டேட்சை ராஜ்யசபா என்றும் மாற்றிக் கொண்டீர்களே, அதே போல மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்பதை மாற்ற உங்களுக்கு என்ன சிரமம் என்று காங்கிரஸ் ஆட்சியைப் பார்த்து நேரடியாக கேட்டார் அண்ணா. ஆனால் புபேஷ் குப்தாவின் மசோதா தோற்கடிக்கப்பட்டது. 

தமிழக சட்டமன்றத்தில் திரும்பவும் திமுக சட்டமன்ற உறுப்பினர் இராம அரங்கண்ணல் ஜுலை 23, 1963இல் தமிழகப் பெயர் மாற்றத்திற்கு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது காமராஜர் பதவி விலகி பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்தார். அரங்கண்ணலின் தீர்மானத்தின் மீது பதிலளித்த காங்கிரசின் மாநில அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் மெட்ராஸ் என்றால் தான் வெளியுலகத்திற்கு தெரியும் என்றும், மாகாண அரசு போட்ட ஒப்பந்தங்களை எல்லாம் மாற்ற வேண்டியது சிரமம் என்றார். அதற்கு திமுக கோல்ட் கோஸ்ட் என்ற நாடு கானா என்று மாற்றப்பட்ட போது இந்த பிரச்சனை எல்லாம் எழவில்லை என்று கூறினர். திரும்பவும் அரங்கண்ணல் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜூலை 18, 1967 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் “‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்கிற தீர்மானத்தை அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்தார். தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்திலும் சென்னை மாகாணத்துக்கு, ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்டுவதற்கான சட்ட முன்வடிவு நவம்பர் 23, 1968 அன்று நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு பெயர் சூட்டு விழா டிசம்பர் 1, 1968 இல் பாலர் அரங்கத்தில் (இன்றைய கலைவாணர் அரங்கம் அமைந்த இடம் ) நடைபெற்றபோது, உடல் நலிவுற்ற நிலையிலும் பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த வரலாற்று நிகழ்வில் உரை நிகழ்த்தினார். 

தமிழ்நாட்டில் குமரி, செங்கோட்டை, திருத்தணி இணைந்த இன்றைய எல்லைகள் வரையறுத்த போராட்டங்களையும், தமிழ்நாடு பெயர் சூட்டும் போராட்டத்தையும் குறிப்பிடுகின்றனர். அது வேறு காலக்கட்டம். இது வேறு காலக்கட்டம் என்று தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

சங்கரலிங்கனார் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் போராடினார். மா.பொ.சி., நேசமணி, என்.எஸ்.மணி, குஞ்சன்நாடார், மங்கலக்கிழார், விநாயகம், கரையாளர், ரசாக் போன்றோர்களெல்லாம் தமிழ்நாடு எல்லைப் போராட்டத்திற்காக போராடியவர்கள். எனவே அது வேறு. இது வேறு.

#Tamil_Nadu 
#Madras_State
#தமிழ்நாடு_பெயர்_சூட்டு_விழா#சென்னை_மாகாணம்



#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
18-07-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...