Tuesday, August 14, 2018

வெள்ளக் காலத்தில் மட்டும் கூப்பாடு போட்டு எந்தப் பயனுமில்லை.

வெள்ளக் காலத்தில் மட்டும் கூப்பாடு போட்டு எந்தப் பயனுமில்லை.
------------------------------------------
கேரளத்தில் ஒருபக்கம் வெள்ளக்காடு, கர்நாடகத்தில் வெள்ளம் பெருகி காவிரியில் நீர்ப்போக்கு அதிகரிப்பு. கர்நாடகமும் காவிரியில் வெள்ளம் வந்தால் மட்டும் தண்ணீரை திறந்துவிடுகிறது. தமிழகம் கர்நாடகத்தின் வடிகால் அல்ல. தமிழக ஆட்சியாளர்களும் காவிரியில் வெள்ளம் புரண்டு வந்தால் கடலுக்கு சென்றது போக ஓரளவு தண்ணீரினை 45 தடுப்பணைகள் வரை கட்டி வெள்ள நீரை சேகரிக்கலாம். வெள்ளநீர் கடலுக்கு போவதை யாரும் தடுக்க சொல்லவில்லை. மணல் அள்ளுவதையும் தடுத்திருக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் உள்ள குளம், ஏரிகளை தூர்வாரி ஆயக்காட்டு பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இதை தமிழக அரசும் செய்யத் தவறிவிட்டது. யாருக்கும் தொலைநோக்குப் பார்வை இல்லாததால் இம்மாதிரியான துயரங்கள். இதை குறித்து கவனிக்க ஆளவந்தவர்களுக்கு மனமும் இல்லை, போதிய புரிதலும் இல்லை. என்ன செய்ய?
தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருவதால் கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவால் கடந்த சில தினங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மீட்புப் பணியில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

கேரளத்தில் உள்ள 40 ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து, 22 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையின் மதகுகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்படி கேரளம் வெள்ளத்தால் தத்தளிக்கும் வேதனையை பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு தான் கேரளாவின் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பிவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தேன். கேரளாவின் மேற்கு நோக்கி பாயும் 90 நதிகளின் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பியிருந்தால் இடுக்கி அணைப் பிரச்சனையும், கேரளாவில் இன்றைக்கு ஏற்பட்ட வெள்ள சேதங்களை தடுக்கப்பட்டிருக்கலாம். தமிழகம் கேரளாவிற்கு அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இதையெல்லாம் மனதில் கொள்ளாமல் கேரளா இதுவரை பிடிவாதமாக இருந்தது. இனிமேலாவது, இந்த பிரச்சனையில் பிடிவாதமாக இல்லாமல் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
#காவிரி_வெள்ளம் #கேரளா_வெள்ள_பாதிப்பு #கேரளா_மேற்கு_நோக்கி_பாயும்_நதிகள் #நீர்_மேலாண்மை #தமிழக_நீர்நிலைகள் #KSRadhakrishnanpostings #KSRPostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 13-08-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...