Wednesday, August 8, 2018

*தலைவர் கலைஞர் -சில நேரங்களும், சில நினைவுகளும்*







--------------------------
தலைவர் கலைஞரோடு பழகியதும், அவர் சார்ந்த நிகழ்வுகளையும் எதை சொல்ல, எதை விட என்று எனக்குத் தெரியவில்லை. 1979லிருந்து ராதா என்று அன்போடு அழைக்கும் கலைஞர் இன்றைக்கு இல்லை. ஈழப் பிரச்சனை காலத்தில் 1983, 1986 காலக்கட்டங்களில் அவரைச் சந்தித்ததும், என்னுடைய திருமணத்தை நடத்தி வைத்ததும், மதுரையில் நடந்த டெசோ மாநாடும், பிரபாகரன், விடுதலைப் புலிகளை குறித்தான அவருடைய பார்வையும், குட்டி மணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோரை வெலிக்கடை சிறையில் தூக்கிலிட தடுப்பதை வேண்டி அவரது பங்களிப்பும் அளப்பரியது. 
கோவில்பட்டி தொகுதியில் 1989 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட போது, அந்த தேர்தலில் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டம், தஞ்சை மாவட்டம், நாகை மாவட்டம், தென்னாற்காடு மாவட்டம் (விழுப்புரம், கடலூர்), ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டம் (திருவள்ளூர், காஞ்சிபுரம்), வடாற்காடு மாவட்டம் (வேலூர், திருவண்ணாமலை), சேலம் மாவட்டம் (சேலம், நாமக்கல்), தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஈரோடு மாவட்டம், ஒன்றுபட்ட கோவை மாவட்டம் (திருப்பூர், கோவை), நீலகிரி மாவட்டம் போன்ற பல தமிழக மாவட்டங்களில் திமுகவிற்கு மக்களிடமிருந்த ஆதரவையும், 1989 தேர்தல் ஆதரவு களநிலையும், தொகுதிவாரியாக வெற்றிவாய்ப்புள்ள நல்ல வேட்பாளர்கள் யாரென்று அறிந்துவரும் பெரும் பொறுப்பை எனக்குத் தந்து, மாவட்ட அளவில் தொகுதிவாரியாக தலைவர் கலைஞரிடம் வழங்கிய அறிக்கையை என்னால் மறக்க முடியாது. அந்த அறிக்கையை முரசொலி மாறனும் பாராட்டினார். 
நான் வழங்கிய இந்த அறிக்கையில் இருந்த பெயர்களை தான் கழக வேட்பாளர்களாக 70% பேர் அறிவிக்கப்பட்டனர். நான் தலைவர் தலைமையில் நடக்கும் தேர்தல் நேர்காணலுக்கு இந்த பணியின் காரணமாக செல்ல முடியவில்லை. அந்த ஆய்வில் பொன்முடியின் பெயரை தெய்வாசிகாமணி என்றும், கே.என்.நேருவையும் பட்டியலில் சேர்த்திருந்தேன். இவர்களைப் பற்றி நான் எழுதிய பின்புலத்தைப் பற்றிய குறிப்புகளை தலைவர் கலைஞர் அவர்கள் படித்ததெல்லாம் நினைவில் உள்ளது. அப்போது கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். அந்த அறிக்கையை குறித்து கலைஞரும் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு, நீ வெற்றி பெற்று வருவாய். உனக்கான இடம் உண்டு என்று கூட்டம் முடிந்தபின் என்னிடம் சொல்லிய வார்த்தைகள் காதுகளில் ரீங்காரமிடுகிறது.
வைகோ அவர்கள் 1989 பிப்ரவரி மாதம் தனது நண்பர் குட்டி மூலமாக கடிதம் கொடுத்துவிட்டு இலங்கைக்கு சென்றார். குமரி அனந்தன் சட்டமன்றத்தில் இதை பிரச்சனையாக எழுப்பியபோது, கலைஞர் என்னை கோட்டைக்கு அழைத்து தனது அறையில் நேரடியாக விசாரித்த நிகழ்வுகளும் இன்றைக்கும் மனதில் உள்ளன. 
2001இல் தலைவர் கலைஞரை போலீசார் நள்ளிரவில் அராஜகமாக கைது செய்த கொடூரக் காட்சியின் ஒளிநாடாவை மாநகர காவல் துறை ஆணையர் முத்துகருப்பன் ஐபிஎஸ் கைகளுக்கு போகாமல் பத்திரமாக காப்பாற்றி விடியற்காலை 5 மணிக்கு சன்டிவியில் தலைவர் கலைஞரை நள்ளிரவில் தாக்கி கைது செய்த கொடூரக் காட்சியின் ஒளிநாடாவை கொடுத்ததை கலைஞர் பாராட்டியதும் உண்டு. அவர் சிறையிலிருந்த நாட்களில் தினமும் காலை 10 மணிக்கு மத்திய சிறையில் என்னை சந்திக்க வேண்டுமென்று என்னிடம் அறிவுறுத்தியிருந்தார். நான் தினமும் சென்றுவந்தேன். அப்போது நான் உடனடியாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டு கலைஞரின் கைதின்போது, கைதுசெய்யப்பட்ட 60,000 திமுகவினரை 48 மணிநேரத்தில் ஜெயலலிதா ஆட்சியில் விடுதலை செய்தது அடியேன் தான். 
அந்த சமயத்தில் இரவு நேரத்தில் டைடல் பார்க் அருகே காரை நிறுத்திவிட்டு நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது சோடா பாட்டிலால் தாக்கப்பட்டேன். அப்போது தலையில் கட்டு போட்டு இரண்டு வாரங்கள் இருந்தபோது, தலைவர் கலைஞர் என்னிடம் தொலைபேசியில் ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்து பார்த்தாயா என்றெல்லாம் தாயுள்ளத்தோடு விசாரித்தார்.
அதே காலக்கட்டத்தில் அண்ணன் முரசொலி மாறன் ஏற்பாட்டில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கினை சென்னை நீதிமன்றத்திலிருந்து கர்நாடகா நீதிமன்றத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் நானும், டெல்லி சம்பத்துடன் டெல்லிக்கு செய்து அந்த பணிகளை முழுமையாக செய்தோம். அப்போது டெல்லியில் வழக்கறிஞர் மோகன் இந்த வழக்கில் ஆஜரானார். தலைவர் கலைஞருடைய அனுமதியோடு முரசொலி மாறன் வழிக்காட்டுதலோடு இந்த பணிகளை செய்தோம். மறைந்த முரசொலி மாறன் அவர்கள் திமுக பொதுக்குழுவில் இதற்காக என்னை பாராட்டியதுண்டு. அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் என்னிடம் மாறன் யாரையும் எளிதில் பாராட்டமாட்டார். வசிஷ்டர் வாயாலே வாக்கு வாங்கியது போல என்றார். அப்போது ஏ.எல்.சுப்பிரமணியம், ஆவுடையப்பன், தூத்துக்குடி பெரியசாமி, சுப.சீத்தாராமன் போன்ற மாவட்டத் தலைவர்கள் இருந்தனர்.
அப்போது நாடாளுமன்ற தேர்தல் வரும்போது, வாக்கு உங்களுக்கு எங்கிருக்கிறது என்று முரசொலி மாறன் கேட்டபோது கோவில்பட்டியில் என்றேன். நீங்கள் தான் வேட்பாளர் என்று கூறினார். சில காரணங்களால் வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்தார்கள். அந்த சமயத்தில் தான் சண்முகசுந்தரம் நாடாளுமன்றத்திற்கு சென்றார். என்ன நிலைக்காக மாற்றம் செய்தார்கள் என்று முரசொலி மாறன் வருத்தப்பட்டார். கலைஞருக்கும் எனக்காக செய்யமுடியவில்லையே என்று வருந்திய நிகழ்வும் நினைவில் உள்ளது. இன்றைக்கும் சன்டிவியில் பணியாற்றிய கருப்பசாமி சாட்சியாக உள்ளார்.
அதேபோல, 2009இல் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பிறகு டெசோ மாநாடு நடத்தி அதன் தீர்மானங்களை ஐநா சபைக்கு தளபதி அவர்கள் எடுத்துச் சென்றதும், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தளபதி அவர்கள் உரையாற்றவும் நான் எடுத்துக் கொண்ட முயற்சிகளை கலைஞர் பாராட்டியதும் உண்டு. 
கலைஞரும் -முல்லைப்பெரியாறு, கலைஞரும் – ஈழத்தமிழர்கள், இலங்கைத் தமிழர் பிரச்சனை, தமிழக மேலவை, 1950 ஆகஸ்ட் மாதம் 26,27 தேதிகளில் திமுக துவங்கிய போது, நெல்லை மாவட்ட மாநாடு, கோவில்பட்டியில் நடந்த பேச்சை சிறுபிரசுரமாக‘இளைஞர் குரல், அன்று போலவே! என்றும்ஒலித்திட!’ என்ற தலைப்பில் வெளியிட்டது போன்ற எனது நூல்களுக்கு சிறப்பாக அணிந்துரையும் கலைஞர் அவர்கள் கொடுத்த்தோடு மட்டுமல்லாமல் அந்தநூலில் உள்ள சிறப்புகளையும் பாராட்டுவார்கள், காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழாவில் சிறப்பு வெளியீடாக திமுக சமூகநீதி, DMK Social Justice என்ற இரண்டு நூல்களுக்கும் தலைவர் கலைஞரே அணிந்துரை கொடுத்து, திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிட்டது. 
முரசொலியில் ஏன் கட்டுரை எழுதமாட்டேங்கிற. தினமணியில் உன்னுடைய கட்டுரை நன்றாக இருக்கிறதே என்பார்.
எவ்வளவோ நினைவுகள். எதைச் சொல்ல, எதை ஒதுக்க என்பது மனதில் பிடிபடவில்லை. ஆனால், பலசமயம் உன்னை நாடாளுமன்றத்திற்கு, சட்டமன்றத்திற்கு அனுப்ப முடியாமல் காலம் தள்ளிக் கொண்டு போகின்றதே என்று என்னிடம் கலைஞர் கூறுவதுண்டு. நெஞ்சக்கு நீதியில் எனது புகைப்படத்தோடு எழுதியுள்ளீர்களே அதுபோதும். பல அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் உங்களின் நெஞ்சுக்கு நீதியில் இடம்பெறவில்லையே. காலமும், வரலாறும் இதை பார்த்துக் கொள்ளும் என்றேன்.
பல நினைவுகள் எழுகின்றன. சொல்ல வேண்டியவை மட்டும் சொல்கிறேன். 
*உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு*
ஆளுமைமிக்க கம்பீரமான தலைவர் கலைஞர், என்றென்றும் நிரந்தரமாக மக்களின் மனதில்...

#கலைஞர் 
#பொது_வாழ்வு 
#கலைஞருக்கு_நிகர்_கலைஞரே
 #அரசியல் 
#ripkarunanithi
#Public_Life 
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
 08-08-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...