Saturday, August 4, 2018

#ஒரே_நாடு_ஒரே_தேர்தல்

மின்னம்பலம் இணைய இதழில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்த எனது பத்தி வெளிவந்துள்ளது. அது குறித்தான இணைப்பு.

#மின்னம்பலம்
#ஒரே_நாடு_ஒரே_தேர்தல்
#one_nation_one_election
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-08-2018.

http://www.minnambalam.com/k/2018/08/02/18

சிறப்புக் கட்டுரை: 356ஐ வைத்துக்கொண்டு இப்படிப் பேசலாமா?

வழக்கறிஞர். கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

பல்வேறு இனங்கள், மொழிகள், கலாச்சாரம், அரசியல் அக, புற வேறுபாடுகளை உடைய நாடு இந்தியா. நம் நாட்டில், ஒரே தேர்தல் என்ற நிலைப்பாடு சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறிதான். பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகளும் வட்டாரப் பிரச்சினைகளும் இருக்கின்றன. கூட்டாட்சியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஆய்வுக்குட்பட வேண்டிய விஷயம். மாநில சுயாட்சி, மாநிலங்களின் உரிமை என்ற அணுகுமுறையில் உள்ள வட்டாரக் கட்சிகள் இதற்கு உடன்படுமா?

இந்தத் திட்டத்தால் என்ன நன்மை?

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை 2024இல் இருந்து நடைமுறைக்குக் கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. தேர்தல் செலவுகள் குறைவது மட்டுமல்லாமல், மக்களவை, மாநில சட்டசபைகளின் தேர்தல்களைத் தனித்தனியாக நடத்துவதால் அரசின் நிர்வாக இயந்திரங்கள் ஐந்தாண்டிற்கு இருமுறை தேவையில்லாமல் தங்களுடைய பணிகளை விடுத்துத் தேர்தல் வேலையில் ஈடுபட வேண்டியிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கும் இரண்டு தேர்தல்களை ஐந்தாண்டுகளில் சந்திப்பது சுமைதான். இந்தக் காரணங்களால் ஐந்தாண்டுகளுக்கு ஒரே முறை தேர்தல் என்று சொல்கிறார்கள்.

வாக்காளர் பட்டியலை ஐந்தாண்டுகளுக்கு இருமுறை சரிபார்ப்பது மட்டுமல்லாமல், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இருமுறை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆளும்கட்சிகள் தங்களுடைய அதிகாரத்தினைத் தேர்தல் காலத்தில் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் தடுக்கப்படலாம்.

2014இல் தேர்தலுக்காக கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் செலவானது என முன்னாள் தேர்தல் ஆணையர் குரோஷி கூறியுள்ளார். சட்டமன்றங்களுக்குத் தனியாகத் தேர்தல் நடத்தினால், 18,000 கோடி செலவாகும். இந்தச் செலவுகளைக் குறைக்கலாமே என்று சிலர் கருதுகின்றனர்.

நடைமுறையில் சாத்தியம்தானா?

இந்தியாவில் பல மாநிலங்களை மாநிலக் கட்சிகள்தான் ஆட்சி செய்கின்றன. சில மாநிலங்களில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், ஆட்சிகள் கவிழ்ந்தாலும் உடனடியாக அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நோக்கத்திற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். கடந்த 29 ஆண்டுகளாக மாநிலக் கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இடம்பெறுகின்றன. ஏன், 1977இல் ஜனதா, மொரார்ஜி ஆட்சிக் காலத்தில் இருந்தே இந்த நிலை நிலவுகிறது. இப்படியான நிலையில் சில மாநிலக் கட்சிகளும் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகும்போது, ஆட்சிக்கே ஆபத்து வரும்.

1977, 1989, 1997 ஆகிய ஆண்டுகளில் பொறுப்பேற்ற மத்திய அரசுகள் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யாமல் கவிழ்ந்தன. அப்போது, உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டது. இதுபோன்ற சூழல் மீண்டும் உருவானால், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம்தானா?

அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்களே நேரடியாக நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுப்பதால் ஒரு நாடு, ஒரு தேர்தல் சாத்தியம். அங்கு இரண்டு கட்சிகள்தான் முக்கியம். இங்கு பல அரசியல் கட்சிகள் உள்ளன.

இது நடைமுறைக்கு வந்தால் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் மாநிலக் கட்சிகளைக் கட்டுப்படுத்தும் நிலைக்குத் தள்ளிவிடும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரத்யேகமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வாதாடிப் பெற வேண்டிய நிலையில் உள்ளோம். மாநிலங்களின் அபிலாஷைகளைத் தீர்க்க மாநிலக் கட்சிகள் ஒரு தேசியக் கட்சியின் குடையின்கீழ் போய்விட்டால், நியாயமான போர்க் குணம் இல்லாமல் போய்விடும்.

சமீபத்தில்தான் குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநிலத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இந்த மாநிலங்களுக்கான அடுத்த தேர்தலை 2019 அல்லது 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து நடத்துவதற்கான வாய்ப்பு சாத்தியமா? 1989இல் இருந்து 31 முறை வெவ்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை 1996இல் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் இணைந்து தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் என்ற ஒரே கட்சி இந்தியா முழுவதும் ஆட்சியில் இருந்த ஒரே காரணத்தினால் கிட்டத்தட்ட 1960 வரை நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல்கள் இணைந்தே நடந்தன.

கலைக்கும் போக்கும் தேர்தல் நடைமுறையும்

மாநில அரசுகளைக் கலைக்க வழிசெய்யும் அரசியல் சாசனப் பிரிவு 356ஐ வைத்துக்கொண்டு, ஒரே தேசம், ஒரே தேர்தல் என்று நடத்துவதற்கான வாய்ப்புகள் அடிப்படையில் சாத்தியமில்லை என்றுதான் கருத வேண்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில், எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் தீர்ப்பு வரும் வரை மத்தியில் ஆண்ட அரசுகள் அரசியல் சாசனப் பிரிவு 356ஐ தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு தவறாகப் பயன்படுத்தினர். விடுதலை பெற்ற பிறகு, இந்த 70 ஆண்டுகளில் 128 முறை 356ஐப் பிரயோகித்து மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன.

பலர் நம்பூதிரிபாடு அரசுதான் முதன்முதலாக 356 பிரிவின் கீழ் கலைக்கப்பட்ட அரசாங்கம் என்று கருதுகின்றனர். ஆனால், முதன்முதலாக பஞ்சாபில் டாக்டர் கோபி சந்த் தலைமையிலான காங்கிரஸ் அரசு 16.06.1951 அன்று கலைக்கப்பட்டது. ஆந்திர அரசு 15.11.1954 அன்று கலைக்கப்பட்டது. திருவாங்கூர் கொச்சின் அரசு 1956இலும், காங்கிரஸ் இல்லாத நம்பூதிரிபாடு கேரள கம்யூனிஸ்ட் ஆட்சி 1959இலும் கலைக்கப்பட்டன.

மாநிலங்களில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி

1960களின் இறுதியிலேயே காங்கிரஸ் மேல் அதிருப்தி ஏற்பட்டு இந்தியாவில் எட்டுத் திக்கும் காங்கிரஸ் இல்லா மாநில அரசுகள் உருவாகின. 1967இல் தமிழகத்தில் காங்கிரஸ் இல்லா அரசை அண்ணா அமைத்தார். மேற்கு வங்காளத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டது. வங்காள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜாய் குமார் முகர்ஜி முதலமைச்சரானார். பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாப் ஐக்கிய முன்னணிக் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டது. அகாலி தளத்தைச் சேர்ந்த சர்தார் குர்னாம் சிங் முதல்வரானார். பிகார் மாநிலத்தில் ஜன கிராந்தி தளக் கட்சியைச் சேர்ந்த மகாமாயா பிரசாத் சின்ஹா முதலமைச்சரானார். 1959இல் கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு முதலமைச்சரானார். ஒரிசா மாநிலத்தில் சுதந்திரா கட்சியைச் சார்ந்த ஆர். என். சிங்தேவ் முதலமைச்சரானார். ராஜஸ்தான் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில், 1967ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் நாள் காங்கிரஸ் கட்சி ஆட்சி ஏற்பட்டு சி.பி.குப்தா முதலமைச்சரானார். ஆனால் 18 நாட்களில் அவர் ஆட்சி கவிழ்ந்து கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டு சரண்சிங் முதலமைச்சரானார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில்லாமல் வேறு கட்சிகள், கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி உருவாகிய மாநிலங்களில் தொடர்ந்து அந்தந்தக் கட்சிகளின் ஆட்சிகள் நீடிக்க முடியவில்லை. இடையிலேயே சில கவிழ்ந்தன. சில அன்றைய மத்திய காங்கிரஸ் ஆட்சியால் திட்டமிட்டுக் கவிழ்க்கப்பட்டன.

பாஜகவும் குறையில்லாமல் தங்களுடைய பங்குக்கு அரசியலமைப்புச் சட்டப் பிரிவான 356ஐப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்திருக்கிறது. இப்படியான மனப்போக்கில் மத்திய அரசு இருக்கும்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எப்படி சாத்தியம்?

கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை - பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். இவரைத் தொடர்புகொள்ள: rkkurunji@gmail.com

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...