Thursday, December 15, 2022

பி. ராமமூர்த்தி CPM

பி. ராமமூர்த்தி வேப்பத்தூரைச் சேர்ந்தவர். வி.பஞ்சாபகேச சாஸ்திரியின் மகன். வயது 36/ 40, உயரம் 5 அடி 4 அங்குலம். பிரவுன் நிறம்.மெல்லிய உடல். கிராப்புத் தலை. வலது கால் ஊனம். இந்தியப் பாதுகாப்பு விதிகளின் கீழ் தேடப்பட்டு வரும் நபரின் அடையாளம் இது. இவரைக் கைது செய்வதற்கு உதவும் நம்பிக்கையான தகவல் தரும் எந்த ஒரு நபருக்கும் இரயில்வே துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலும் மற்றும் சென்னை சிஐடி இலாகாவும் 100 ரூபாய் அன்பளிப்பாக தரும். இவரை உபசரிப்பவர்கள் தண்டிக்கப்படுவர்.

   இந்த விளம்பரம் 1940 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் நாள் தமிழ்நாட்டில் அனைத்து நாளேடுகளிலும் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. அன்றைய நூறு ரூபாய் இன்றைக்கு லட்சம் ரூபாய் மதிப்புடையதாகும் அந்த அளவிற்கு இவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

  யுத்த எதிர்ப்பு நடவடிக்கையில் இவர் தீவிரமாக ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை மையமாகக் கொண்டிருந்த வேப்பத்தூரில் வீட்டுக் காவலில் 24 மணி நேரம் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். போலீஸ் காவலை மீறி பி ராமமூர்த்தி தப்பி தலைமறைவாகி விட்டார். இதனால் ஆத்திரம் கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் மேலே சுட்டிய விளம்பரத்தை வெளியிட்டது.

    பி.ராமமூர்த்தி பள்ளிக்கூடத்தால்/  படிப்பால் ஈர்க்கப்பட்டதைப் போன்று விடுதலைப் போரும் இவரை ஈர்த்தது. 1919 ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் ரவுலட் சட்டத்தை எதிர்த்து அவரவர் வீட்டில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்ற காந்தியின் அறைகூவலை ஏற்று சிறுவன் பி. ராமமூர்த்தி தன்னுடைய வீட்டில் உண்ணாவிரதம் இருந்து விடுதலைப் போரில் தனது முதல் முத்திரையைப் பதித்தார்.

   பின்  கதர் கட்டுவது இவரது லட்சியமாக மாறியது. கரன்சி ஆபீஸில் வேலை பார்த்து வந்த அவரது அண்ணன் தனது வேலைக்கு ஆபத்து வந்துவிடும் என்று கடுமையாக எதிர்த்த போதும் தனது பிடிவாதமான உண்ணா விரதத்தால் கதர் ஆடை வாங்கித்தர நிர்ப்பந்தித்தார் தனது குடும்பத்தாரை. அன்று தொடங்கிய கதர் ஆடை அணிதல் 1987 டிசம்பர் 15 அன்று அவர் இறுதி மூச்சு அடங்கும் வரை தொடர்ந்தது. 1920 ஆம் ஆண்டில் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க மரத்தின் மீது ஏறி கீழே விழுந்து தன் காலை உடைத்துக் கொண்டார். வலது காலில் ஏற்பட்ட அந்த ஊனம் அவரது வாழ்வில் நிரந்தரமானது.

  அன்றைக்கு தேசபக்த மாணவர்களுக்கு புகலிடம் தந்த காசி பல்கலைக்கழகம் ராமமூர்த்திக்கும் இடம் தந்தது. நான்காண்டு காலம் அங்கு பயின்றார். அக்கால கட்டத்தில் தான் விடுதலைப் போரின் பல்வேறு போக்குகளை அவர் அறிந்து கொண்டார். சுயராஜ்ஜியம் பெற இந்தியர்களுக்கு அருகதை உண்டா? என விசாரணை செய்யும் சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சைமன் குழு காசி வந்த போது மக்கள் எதிர்ப்புக்குப் பயந்து படகுகள் மூலம் கங்கை ஆற்றின் வழியாக ராம் நகர் செல்ல குழு திட்டமிட்டது. இதனை அறிந்த ராமமூர்த்தியும் அவரது மாணவ நண்பர்களும் படகுகளில் சென்று நடு ஆற்றில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்து சைமன் கமிஷனை அலற வைத்தனர். 1930ல் பி.எஸ்சி இறுதித் தேர்வு முடிந்த மறுநாளே அந்நியத் துணி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டதால் பதேகர் சிறையில் ஆறு மாத காலம் அடைக்கப்பட்டார்.இதுதான் அவரது முதல் சிறைவாசம். 1932 ல் திருவல்லிக்கேணியில் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று ஆறு மாத காலம்  தண்டனை பெற்று மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இச்சத்தியாகிரகக் காலத்தில் தான் மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமீர் ஹைதர் கான் போன்றவர்களோடு தொடர்பு கிடைத்தது.

   பி. ராமமூர்த்தி காங்கிரஸ் கமிட்டியும் காந்தியும் அழைத்த விடுப்பை ஏற்று ஹரிஜன சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திவ்ய பிரபந்தம் சொல்லிக் கொடுத்து மார்கழி மாதம் பனிக்காலைப் பொழுதில் கோயிலை சுற்றி பாடி வரச் செய்தார். கோவில் வாசல் வரை இந்த பஜனை கோஷ்டி வந்து பின் கலைந்து விடும். ஆயினும் வைதீக பிராமணர்கள் மத்தியில் இது கடும் வெறுப்பை ஏற்படுத்தியது. அந்த நொண்டி ராமமூர்த்தியின் இன்னொரு காலையும் ஒடித்து விடுவேன் என்று சம்பகேச ஐயங்கார் சபதம் எடுத்தார்.

   இந்தச் சமயத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது; கோயிலுக்குப் பக்கத்தில் கூட போகக்கூடாது என்றிருந்த பார்த்தசாரதி கோயில் தர்மகர்த்தா தேர்தல் வந்தது. இக்கோயில் சட்ட விதி 18 வயது நிரம்பிய தென்கலை வைஷ்ணவர்கள்  வாக்களிக்கலாம்; வருடத்திற்கு நான்கு அணா சந்தா செலுத்தி இருக்க வேண்டும். கோவில் அருகே குடியிருப்பவராக இருக்க வேண்டும் என்பதாக இருந்தது.

   இதனை முறியடிக்கும் விதத்தில் ராமமூர்த்தி ஓர் உத்தியைக் கையாண்டார். திருவல்லிக்கேணி சார் ஜெண்ட் குடியிருப்பு அருகில் உள்ள செருப்புத் தைக்கும் தொழிலாளிகளை அணுகினார். அவர்கள் எப்போதும் ராமனையும் கிருஷ்ணனையும் வணங்குபவர்கள். அவர்களில் 200 ஆண்களைத் தெரிவு செய்து அவர்களது தோள்பட்டையில் சங்கு சக்கர அடையாளம் போடுவதை செய்து அதற்கு ஏற்ப சில சின்ன மந்திர வாக்கியங்களையும் கற்றுக் கொடுத்தார். இதற்கு ஷமா ஷயம் என்று பெயர். அவர்களை அழைத்து போய் வாக்காளர்களாக பதியும்படி கூறினார். கோவில் நிர்வாகிகள் மறுக்கவே சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

   வழக்கு விசாரணையின் போது நீதிபதி செருப்பு தைக்கும் தொழிலாளிகளை பார்த்து உங்களது குரு யார்? என்று வினவ அதற்கு அவர்கள் அனைவரும் ஒரே குரலில் என் குரு சாத்தாணி ஐயங்கார் என்று கூறி சங்கு சக்கர அடையாளத்தையும் காட்டினார்கள். இவ்வழக்கில் 200 பேர் சார்பாக வாதாடிய டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரிக்கு பி. ராமமூர்த்தி உதவினார். எவ்விதத்தில்? பாஞ்சராத்ரம் ஆகமத்தில் இருந்த எந்தவொரு வைணவனும் இன்னொரு வைணவனைப் பார்த்து நீ என்ன சாதி என்று கேட்டால், அவன் தன் தாயுடன் உடலுறவு கொண்ட பாவத்தைச் செய்தவனாவான் என்ற மேற்கோளை எடுத்துக் கூறி உதவினார்.இந்த மேற்கோள் நீதிமன்றத்தை உலுக்கியது. இறுதியில் 200 பேருக்கும் வாக்குரிமை வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வைதீகர்கள் உயர் நீதிமன்றம் சென்றனர். அங்கும் அவர்களுக்கு தோல்வியே  ஏற்பட்டது.

  வேறு வழியின்றி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை வழங்குவதை வைதீகர்கள் ஏற்றுக் கொண்டாலும் சொத்து இல்லாதவர்கள் தர்மகர்த்தாவாக ஆக முடியாது என்ற விதியைக் காட்டி தர்மகர்த்தாவாக மாறுவதை தடுத்தனர்.இருப்பினும் இத்தேர்தலில் தாழ்த்தப்பட்டோர் முதன்முதலாக வாக்களித்தது பெரும் வெற்றியே. நாடெங்கும் கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடந்து வந்த சூழலில் இந்த முயற்சி அதற்கு உறுதுணையானது. 1935 ஜனவரி 18 ஆம் நாள் மகாத்மா காந்தி தமது ஹரிஜன் என்ற ஏட்டில் இத்தீர்ப்பு குறித்து, வழக்கு குறித்து விரிவாக எழுதி இத் தீர்ப்பை வரவேற்றார்.




   இவ்வாறாக அனைத்து விதமான மக்களுக்கான போராட்டங்களிலும் கம்யூனிஸ்டுகள் மக்களின் நலனையே / தரத்தையே உயர்த்தி பிடிப்பார்கள் என்பதற்கு இலக்கணமாக,  எடுத்துக்காட்டாக விளங்கிய தோழர்களால் அன்போடு தோழமையோடு பி.ஆர் என்று அழைக்கப்படும் தோழர் பி. ராமமூர்த்தியின் நினைவு தினம் இன்று.

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...