Tuesday, December 6, 2022

#முன்னாள் முதல்வர் ஜானகி எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை அவரின் பேரன் டாக்டர் குமார் ராஜேந்திரன் நடத்தினர்.அவர் எழுதிய பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் என்ற நூலை தமிழக முதல்வர் அந்த விழாவில் கலந்து கொண்டு இதை வெளியிட்டார். அதில் இடம் பெற்ற எனது கட்டுரை: *** வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பெரிதும் உதவிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

#முன்னாள் முதல்வர் ஜானகி எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை அவரின் பேரன் டாக்டர் குமார் ராஜேந்திரன் நடத்தினர்.அவர் எழுதிய பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்  என்ற நூலை தமிழக முதல்வர் அந்த விழாவில் கலந்து கொண்டு இதை வெளியிட்டார்.
அதில் இடம் பெற்ற எனது கட்டுரை: 
***
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பெரிதும் உதவிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
*****
மக்கள் திலகம் என்று மக்களால் போற்றப்பட்ட புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களை சினிமா உலகம் 1960-களில் கொண்டாடி மகிழ்ந்தது. அந்த காலத்தில் கல்லூரியில் படிக்கும் போது நான் சிவாஜி ரசிகர். இருப்பினும் எம்.ஜி.ஆர். படங்களை ஆர்வத்தோடு சென்று பார்த்திருக்கிறேன்.
ஆரம்ப கட்டத்தில் நெல்லையில் அவரது திரைப்படம் 100 நாட்கள் 125 நாட்கள் ஓடியபோது நான் நெல்லைக்கு வந்து திரையரங்குகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசியபோதுதான் எம்.ஜி.ஆரை முதல் முதலாக சந்தித்தேன்.
அதன்பிறகு நேரடியாக சந்திக்கக்கூடிய வாய்ப்பு என்பது 70-80 கட்டங்களில் தான் கிடைத்தது. அப்போது நாங்கள் காங்கிரஸில் இருந்தோம். அப்போது நெடுமாறனோடு வெளியேற்றப்பட்ட போது தமிழ்நாடு காங்கிரஸ் காமராஜர் என்ற ஒரு இயக்கத்தை நிறுவினோம். அப்பொழுது எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார்.
அப்போது கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்தோம். தஞ்சை ராமமூர்த்தி, தி.சு.கிள்ளிவளவனோடு நேரடியாக எம்.ஜி.ஆரை சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அதே காலகட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் மதுரை மாவட்டத்திற்கு வந்தபோதும் தஞ்சை நகருக்கு வந்தபோதும் அவரை சந்திக்கின்ற வாய்ப்புகள் கிட்டியது.
முதலில் அவரை பார்க்கக் கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. அதன்பிறகு கூட்டத்தில்  நேரடியாக சந்தித்து பேசக்கூடிய வாய்ப்புகளும் கிடைத்தன.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் 80-ல் நடந்தது. அந்த நேரத்தில் தான் நாங்கள் வெளியேற்றப்பட்டோம். நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போது அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் போட்டியிட்டு சிவகாசி, கோபி செட்டிபாளையம் ஆகிய இரண்டு இடங்களில்  வெற்றி பெற்றது.
அகில இந்திய அண்ணா திமுக வெற்றி பெற்றது. அந்த நேரத்தில் சிவகாசி தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் நெடுமாறனுடைய இயக்கத்திலிருந்து நான் போட்டியிடலாம் என்ற சூழல் வரும்போது, எம்.ஜி.ஆர். என்னை அந்தத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த விருப்பப்பட்டார். 
அதில் ஆறு தொகுதிகள் இருந்ததால் அந்த தொகுதியில் நிற்க எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. காங்கிரஸ் கட்சி வெளியே வந்துவிட்டதால், அங்கு தேர்தல் களத்தை சந்திப்பதில் மனதளவில் சில சந்தேகங்கள் இருந்ததால் போட்டியிட மறுத்தேன்.
அதே காலகட்டத்தில் பழனியில் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு காமராஜருக்கு நெருக்கமானவரான தாராபுரத்தைச் சேர்ந்த தோழர் எஸ்.ஆர்.வேலுசாமி போட்டியிட்டார். எம்ஜிஆர் பழனியில் தன் கட்சிதான் போட்டியிட வேண்டும் என்று நினைத்தபோது வேறு வழியில்லாமல் அந்த தொகுதி தமிழ்நாடு காங்கிரஸ் நெடுமாறனுக்கு ஒதுக்கப்பட்டது.
சிவகாசி தொகுதியில் என்னை நிற்கச் சொன்னார். ஆனால் மனதளவில் எனக்கான தைரியம் இல்லாததால் நான் பின் வாங்கினேன். இந்த சூழ்நிலையில் சிவகாசி கோபிசெட்டிபாளையம் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களோடு தமிழ்நாடு காங்கிரஸ் நெடுமாறன் தலைமையில்  எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்றிருந்தோம்.
அப்போது எம்.ஜி.ஆர். என்னிடம், “சிவகாசியில் உங்களை நான் நிற்கச் சொன்னேனே” என்று கைகாட்டி சொன்னதெல்லாம் இன்றும் என் நினைவில் இருக்கின்றது.
பிறகு வழியில்லாமல் ஹெச்.வி.ஹாண்டே சௌந்தரராஜன் என்ற ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றார். கோபிசெட்டிபாளையத்தில் சின்னசாமி வெற்றி பெற்றார். இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது.
பிற இடங்களில் காங்கிரஸ் திமுக தான் வெற்றி பெற்றது. இதுதான் ஆரம்ப கால தொடக்கம். அந்த நேரத்தில் தான் பிரபாகரன் மற்றும் அவருடைய தோழர்கள் தமிழகத்தோடு தொடர்பில் இருந்தார்கள். அப்போது அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது நெடுமாறன், பிரபாகரனுடன் எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்றோம். 
அப்போது எங்களுக்கு சைவம் அசைவத்துடன் கூடிய காலை நேர விருந்து அளிக்கப்பட்டது.  அப்போது பிரபாகரனிடம் எம்.ஜி.ஆர். அசைவ உணவுகளை நிறைய எடுத்து சாப்பிடுமாறு சொன்னார்.
அதன்பின்னர் ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகள் கட்சி தான் இலங்கையில் போராடுகிறது. தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கிறது என்பதை புரிந்து கொண்டு அவர்கள் மீது எம்.ஜி.ஆருக்கு இயற்கையாகவே பிரபாகரன் மீது பற்றும் பாசமும் ஏற்பட்டது. 
எம்.ஜி.ஆருக்கு இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது அக்கறை உண்டு. ஒருமுறை இலங்கைக்கு எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் சென்றபோது, கொழும்பு விமான நிலையம் முழுதும் மக்கள் கூட்டம் திரண்டது.
யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கெல்லாம் எம்.ஜி.ஆர். சென்று வந்தார். அங்கு அவருக்கு அந்த மக்கள் நல்ல மரியாதை செலுத்தினார்கள். இப்பொழுதும் கூட பிரபாகரன் வீட்டிலிருந்து 20 அடி தூரத்தில் எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு ஈழ மக்கள் மீது தனிப்பட்ட பாசம் உண்டு. அங்குள்ள ரசிகர்களும் அந்த காலகட்டங்களில் அவருடைய திரைப்படங்கள் பார்த்து எம்.ஜி.ஆர். மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டிருந்தனர். 
எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகளுக்கு பண உதவிகள் செய்ததை எல்லாம் மறக்க முடியாது. அதற்குமுன் அமர்தலிங்கம் செல்வநாயகம் தான் ஈழப் பிரச்சனையில் முக்கியமான பங்கு வகித்தார்கள் என்பது உலகம் அறிந்த விஷயம்.
ஒருமுறை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அணையை திறக்க எம்.ஜி.ஆர். வந்திருந்தார். அப்போது விவசாய அமைச்சராக இருந்த காளிமுத்து, பி.எச்.பாண்டியன், எனது உறவினரான சிவகாசி எம்எல்ஏ பாலகிருஷ்ணன், ராமநாதபுரம் எம்பி ஆக இருந்த அன்பழகன், பழக்கடை பாண்டி, தாமரை உள்ளிட்ட பலரும் உடன் இருந்தார்கள். அப்போது இராணுவ பயிற்சி முகாம் வைப்பது குறித்து எம்.ஜி.ஆரை சந்தித்து பேசி விட்டு வந்தோம். அதன்பிறகு உரிய இடத்தை தேர்ந்தெடுத்து சிறுமலையில் முதல் முகாம் நடத்தப்பட்டது.
பிரபாகரனின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் இருந்தார் எம்ஜிஆர். விடுதலைப் புலிகளின் நலனுக்காக பெரியளவில் பண உதவிகள் செய்தவர். எம்.ஜி.ஆருடைய பாடல்கள் பிரபாகரனுக்கு மிகவும் பிடிக்கும். நீங்க நல்லா இருக்கணும், அச்சம் என்பது மடமையடா பாடல்கள் உள்ளிட்ட பல பாடல்களை பிரபாகரன் விரும்பி கேட்பதுண்டு.
இலங்கை பிரச்சனையில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு இல்லையென்றால் முகாம்கள் சரியாக நடத்தி இருக்க முடியாது. விடுதலைப் புலிகள் இயங்குவதற்கும் அன்றாடம் அவர்களுடைய தேவைகளை எந்தவித சுணக்கமும் இல்லாமல் பூர்த்தி செய்வதிலும் அவர்களுடைய பாதுகாப்பதிலும் மிகுந்த அக்கறை காட்டியவர் எம்.ஜி.ஆர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை போன்று தங்களது இனத்தின் விடுதலைக்காக போராடியவர் பிரபாகரன். தன் நாட்டு மக்களுடைய விடுதலைக்காகவும் தங்களுடைய இனத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்காகவும் அந்தந்த நாடுகளில் ஒரு இயக்கம் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. அந்த சுய உரிமை ஐநாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று தான். அப்படிப்பட்ட ஈழப் பிரச்சனைக்காக பிரபாகரனுடைய விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.
இலங்கை தமிழர்கள் வாழும் பூமி, அம்மக்கள் தங்களது நாட்டின் விடுதலைக்காக போராடி வருகின்றனர், எம்.ஜி.ஆர். சிறிது காலம் வாழ்ந்த பூமி இந்த மூன்று காரணங்களுக்காக அவர்களுடைய விடுதலைக்காக உதவினார் எம்.ஜி.ஆர். இந்திராகாந்தி மறைவையும் எம்.ஜி.ஆர். மறைவையும் விடுதலைப் புலிகள் இயக்கம் அவர்களுடைய சின்னம் பொறிக்கப்பட்டு பிரபாகரினின் கையெழுத்துடன் இரங்கல் அறிக்கை வெளியிட்டனர். 
மற்ற எந்தத் தலைவர்களுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கம் அவ்வளவு எளிதில்  இதுபோன்ற இரங்கல் அறிக்கைகளை வெளியிட்டது கிடையாது. இந்திராகாந்தி எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின் விடுதலைப்புலிகள் இயக்கம் தங்களது இயக்கத்தை வழிநடத்திச் சென்ற தலைவர்களை இழந்து தவித்தது. விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு எம்.ஜி.ஆரின் மறைவு மீள முடியா துயரமாக இருந்தது.


No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...