Tuesday, December 18, 2018

03மார்கழி திருப்பாவை

03மார்கழி-: 

 " *நீங்காத செல்வம் நிறைந்து ஏல்-ஓர்- எம்பாவாய்* "

இந்தப் பாசுரம் மிகவும் மங்களகரமானது! இரண்டு முறை சொல்லுவாங்க! திருமண வீடுகளில்/சுப நிகழ்ச்சிகளில் வாழ்த்திப் பாடுவாங்க!

ஓங்கி உலகளந்த உத்தமன், "பேர்" பாடி,
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து,
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயல் உகளப்,

பூங் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்!
நீங்காத செல்வம் நிறைந்து ஏல்-ஓர் எம் பாவாய்!
 

ஓங்கி உலகளந்தவன் யாரு? = வாமனனா? திருவிக்ரமனா??
சாதாரணமா உலகு அளக்கல! குள்ளமாய் இருந்தாத் தானே பின்னாடி ஓங்க முடியும்? அப்படி வாமனனா இருந்து, திருவிக்ரமனா ஓங்கி, உலகளந்தான்!

மாவலி அசுரன்! ஆனாலும் பக்தன்! பிரகலாதனின் பேரன்!
எம்பெருமானுக்கு என்னிக்குமே தேவாசுர பேதா பேதங்கள் கிடையாது!

* அசுரன் பிரகலாதன் = பக்த சக்ரவர்த்தி! யாரும் பிரகலாதாசுரன்-ன்னு சொல்லுறதில்லை! பிரகலாதாழ்வான்-ன்னு தான் சொல்லுறாங்க! இன்னிக்கும் சுலோகங்களில்/பூசைகளில், பிரகலாதனை முதலில் சொல்லிட்டு, அப்புறம் தான், சுக-வசிஷ்ட முனிவர்களையே சொல்லுகிறார்கள்!

* அசுரன் வீடணன் = வீடணாசுரன் இல்லை! விபீஷணாழ்வான்! 

இப்படி குலம் பார்த்து அல்ல! குணம் பார்த்து வருவது தான் எம்பெருமானின் தனிப் பெருங் கருணை! அருட் பெருஞ் சோதி!

சாதி இரண்டொழிய வேறில்லை என்றே, தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தம் என்போம்!

நீதி நெறியில் நின்று பிறர்க்கு உதவும், நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்!

இந்த உண்மையை உலகத்துக்கு காட்டி அருளியதால் தான் ஓங்கி உலகளந்த "உத்தமன்" என்றாள் கோதை! இந்த அவதாரம் மட்டுமே அவன் திருவடிகளை "அனைவருக்கும்" தந்தது! இராம அவதாரம் கூட பாதுகைகளைத் தான் தந்ததே தவிர, திருவடிகளைத் தரவில்லையே மொத்த உலகத்துக்கும்? 

அதான் "திருவடிகளைத் தந்த ஒரே அவதாரம்" = அதை உத்தமன் என்று பாடுகிறாள்  கோதை!

சைவர்களும், சாக்தர்களும், இன்னும் வேறு வேறு பிரிவினரும், தங்கள் முதன்மைக் கடவுளாகக் கொள்ளாவிட்டாலும், இந்தத் திருவிக்ரமனுக்கு மட்டும், ஒவ்வொரு வேள்வியிலும் மூன்று முறை "உத்தமா, உத்தமா" என்று அழைத்து அவிர்ப்பாகமும், ஆகுதியும் கொடுக்கிறார்கள்! வைணவர்களும் அப்படியே!

திருப்பாவையும் ஒரு ஞான யக்ஞம் அல்லவா! ஆண்டாளும் மூன்று முறை இந்த வாமனை விளித்து, 

1 ஓங்கி "உலகளந்த" உத்தமன் பேர் பாடி
2 அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி "உலகளந்த"
3 அன்று "இவ்வுலகம் அளந்தாய்" அடி போற்றி-ன்னு 
முதல் பத்து, இரண்டாம் பத்து, மூன்றாம் பத்து என்று மும்முறை "உத்தமனுக்கு" அவிர்ப் பாகத்தையும் அளிக்கிறாள்! அவள் பாகத்தையும் அளிக்கிறாள்!
 
ஓங்கி உலகளந்த உத்தமன், "பேர்" பாடி = அவனைப் பாடவில்லை! அவன் "பேரை"ப் பாடுகிறார்கள்! சென்ற பாட்டில் "அடி" பாடி! இந்தப் பாட்டில் "பேர்" பாடி! 
இறைவனின் பேர், இறைவனின் திருநாமம், இறைவனைக் காட்டிலும் உயர்வானது! அடியார்களுக்கு அவனைக் காட்டித் தருவது!

* முன்னம் அவனுடைய "நாமம்" கேட்டேன்! மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டேன்!! - இப்படி முதலில் நாமத்தைச் சொல்லி, அப்புறமாத் தான் அவனைச் சொல்கிறார் அப்பர் சுவாமிகள்!

* நமசிவாய வாழ்க-ன்னு முதலில் நாமத்தைப் பாடித் தான் திருவாசகமே தொடங்குறாரு மணிவாசகர்! 

இப்படி "நாமம்" பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!
* நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்! நாராயணா என்னும் "தெய்வம்" - அப்படின்னா இருக்கு? இல்லையே!
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்! நாராயணா என்னும் "நாமம்"!-ன்னு நாமம் தானே இருக்கு?

இந்த நாமத்தை நாமும் இப்போ உரக்கச் சொல்லிப் பாத்துக்குவோமா? ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா - கோவிந்தா! கோவிந்தா!
 

நாங்கள் நம் பாவைக்கு, சாற்றி, நீராடினால் = எங்கள் நோன்புக்கு, திருநாமத்தைச் சாற்றிக்கிட்டே (சொல்லிக்கிட்டே) நீராடுகிறோம்!

தீங்கின்றி, நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து = எந்தக் குறைவும் இன்றி, ஒரே இடத்தில் மட்டும் இல்லாமல், நாடு முழுக்க மும்மாரி என்னும் மூன்று மழைகள் பெய்யும்!
ஒரேயடியாக் கொட்டினாலும் பாதகம்! கொட்டவே இல்லீன்னாலும் பாதகம்! அதான் மும்மாரி! 

ஓங்கு பெறும் செந்நெல், ஊடு கயல் உகள = இப்படிப் பெய்ததால் விளைந்த நெல்லு! அந்த நெல் வயலின் ஊடே, தண்ணி பாய்ச்சி இருக்கு! 
அதில் கயல் மீன்கள்
குதித்து விளையாட

பூங் குவளைப் போதில் = நெல்வயலே குளம் போல சதசத-ன்னு இருக்க, அதில் குவளைப் பூ பூத்திருக்கு! (போது=பூ)
பொறி வண்டு கண் படுப்ப = அந்தக் குவளைப் போதில், சாதாரண வண்டு இல்ல பொறி வண்டு! அது வந்து கண் படுக்குது! ஆனா தூங்கலை! 

தேங்காதே, புக்கு இருந்து, சீர்த்த முலை பற்றி வாங்க = பசு வச்சிக்கிட்டே இல்லை-ன்னு சொல்லலை இந்த ஜீவன்! எல்லாத்தையும் நமக்குக் கொடுக்க, நாமளா பாத்து, அதுக்கும் அதன் கன்றுக்கும் கொஞ்சம் பாலை விட்டு வைக்கிறோம்!

குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் = குடம் குடமா நிறைக்கும் வள்ளல்கள் வாழ்க!

நீங்காத செல்வம் நிறைந்து = என்னிக்குமே நீங்காத செல்வம், உங்க வாழ்வில் நிறைஞ்சிக்கிடே இருக்கட்டும்!

ஏல்-ஓர் எம் பாவாய் = பெண்களே, மக்களே, நீடுழி வாழுங்கள்! நீடுழி வாழுங்கள்!!

#பிடித்து_பகிரல்

#திருப்பாவை
#கோதைமொழி

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...