Saturday, December 15, 2018

திருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டு.



————————————————

எட்டையபுரம் பாரதி விழா முடிந்தவுடன் திருநெல்வேலி சென்ற போது ஜங்சன் பஸ் ஸ்டாண்டு கண்ணில் பட்டது; திருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டை இடித்துக் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புது பேருந்து நிலையம் அமைக்க இருக்கிறார்கள்.அதைச் சுற்றிக் கழிந்த எத்தனையோ நினைவுகள் அப்போதெல்லாம் தகரக் கொட்டகையும் மர அழியில் பிரப்பம் பாய் அடித்த டிக்கெட் கவுண்டர்தான் .
ஜங்சன் பஸ் நிலையத்தின் பழைய தோற்றத்தை மாற்றி புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி ஜங்சன் பஸ் நிலையம் இருக்குமிடம் வீரராகவபுரம். பழைய பஸ் நிலைய அடையாளம் மாறிவிட்டது. 

திருநெல்வேலி பழைய இரயில்வே சந்திப்பு கட்டிடம் அடையாளமும் மாறிவிட்டது. சிவாஜி ஸ்டோர், நடராஜ் ஸ்டோர், சந்திரவிலாஸ் ஹோட்டல், தாஜ் ஹோட்டல் (தற்போது பெயர் மாற்றப்பட்டு நியாஸ் ஹோட்டல் என்று உள்ளது), எஸ்.ஆர். சுப்பிரமணியம் பிள்ளை புத்தகக் கடை, ஆறுமுகம் பிள்ளை புத்தக கடை,பேலஸ் டி வேலஸ் சினிமா அரங்கம், சந்தோஷ நாடார் பாத்திர கடை, சந்திரா சாமி வாட்சு கடை போன்றவையெல்லாம் அன்றைய திருநெல்வேலி ஜங்சனின் அடையாளங்களாகும்.

அதில் இன்றைக்கு சாலைக்குமரன் கோவிலும், த. மு கட்டிடமும் தான் எச்சமாக அப்படியே உள்ளன. மற்ற அனைத்து வடிவங்களும் மாறிவிட்டன. பாளையங்கோட்டையில் பஸ் ஏறினால் ஜங்சனில் சற்று நேரம் நின்றுவிட்டு தான் டவுனில் உள்ள தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்வதுண்டு. ஒருமுறையாவது இந்த ஜங்சனை வலம் வந்தால் தான் மனதிருப்தி ஏற்படும். 

வடக்கும், தெற்குமாக மூன்று செட்டுகள் இருக்கும். மேற்புறமுள்ள செட்டில் தான் டீ கடை, ஜூஸ் கடை, பேப்பர் கடை அமைந்திருக்கும். மேற்கு செட்டு பக்கம் தான் திருநெல்வேலி நகரப்பேருந்துகள் வரும். மத்திய செட்டிலும், கிழக்கு செட்டிலும் தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், நாகர்கோவில், திருச்செந்தூர், மணப்பாடு, சங்கரன்கோவில், இராஜாபளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் பஸ்கள் நிற்கும். கல்லூரி காலங்களில்,விடுமுறைக்கு கிராமத்திற்கு திரும்புவதற்கு கோவில்பட்டிக்கு வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவதற்குள் பெரும்பாடாகிவிடும். பலமுறை கெஞ்சினாலும் டிக்கெட் பெறுவது அவ்வளவு கடினம். அன்றைக்கு டிக்கெட் போடும் இடத்தில் பஸ் நடத்துநர் கம்பீரமாக, சக்தி வாய்ந்தவராக கண்ணில்படுவார். டிக்கெட் க்யூவிற்கு மரத்தடுப்புகள் போடப்பட்டிருக்கும். குறிப்பாக டி.வி.எஸ் பேருந்து சரியான நேரத்தில் புறப்பட்டு சரியான நேரத்தில் சென்று சேரும். பேருந்ததை சுத்தமாகவும், 50 பேருக்கு மேல் ஏற்றாமலும் சரியானபடி பராமரிப்பார்கள். அதுபோல லயன் பஸ், ஸ்ரீராம் பாப்புலர் டிரான்ஸ்போர்ட், சீதாபதி, ஏ.வி.ஆர்.எம், ஆண்ட்ரோஸ், சாலைக்குமரன் ஆகிய  நிறுவனங்களின் பஸ்கள் பிரதானமாக இருந்தன. 
அன்றைக்கு நான் 50களில் பார்த்த பஸ்நிலையம் இன்றைக்கு இல்லை. மனதளவு கவர்ந்த நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் என்றைக்கும் நினைவில் இருக்கும். 

அரசியல் கட்சி அலுவலகங்கள் ஜங்சனை சுற்றியே பெரும்பாலும் இருந்தன. திமுக கட்சி அலுவலகம் அன்றைக்கு சரஸ்வதி லாட்ஜில் இயங்கியது. சிந்து பூந்துறையில் கம்யூனிஸ்ட் மாவட்ட கட்சி அலுவலகம் இயங்கியது. ராஜாஜியின் சுதந்திரா கட்சி அலுவலகம் மீனாட்சிபுரத்திலும், காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் வண்ணாரப்பேட்டையிலும், ஜங்சனிலும் மாறி மாறி இருந்ததாக  நினைவு.

நெல்லை நகரில் இயங்கிய முதல் நகரப்பேருந்து எண். 1 சிறிய பேருந்தாக இயங்கியது. வீரராகவபுரம் - நெல்லை டவுனுக்கு மீனாட்சிபுரம் குறுக்குத்துறை வழியாக செல்லும். அப்போதெல்லாம் பேருந்துக்கு முன்பாக இன்ஜின் மட்டும் தனியாக இருக்கும். தற்போது முன்பக்கம் தட்டையாக இருப்பது போலில்லாமல் சற்று கீழிறங்கி நீண்டிருக்கும்.

காயிதே மில்லத், ப.மாணிக்கம்(சிபிஐ) நல்லசிவன்(சிபிஎம்) சோ.அழகர்சாமி,
நல்லகண்ணு, முன்னாள் அமைச்சர்கள மஜீத் ,லூர்து அம்மாள் சைமன் மற்றும் 
ராஜாத்தி குஞ்சிதபாதம் போன்ற அரசியல் தலைவர்கள் தென்படுவார்கள்.

படைப்பாளிகள் தொ.மு.சி.ரகுநாதன்,
கு.அழகிரிசாமி,வல்லிக்கண்ணன், கி.ராஜநாராயணன்,தி.க.சிவசங்கரன்,தோப்பில் முகமது மீரான் என பலருடனும் இந்த பேருந்து நிலையத்தில்
வலம் வந்தது நினைவில் பசுமையாக
உள்ளது.

இந்த ஜங்சனில் பஸ் ஸ்டாண்டில், ஜான்ஸ் கல்லூரி ரசாயனப் பேராசிரியர் கல்யாணசுந்தரம் 6 மணிக்கு ஜங்சன் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தால் 10 மணிவரை அப்படியே அமர்ந்திருப்பார். தமிழ் பேராசிரியர் வளனரசு அங்கு பார்க்க முடியும்.ம.தி.தா.இந்துக் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் லயனல்,அற்புதமாக ஷேக்ஸ்பியரை பாடம் எடுப்பார்,அவரை அங்கு காணலாம். இந்துக் கல்லூரியின் பொருளாதாரப் பேராசிரியர் ராமச்சந்திரன் அந்த கல்லூரியின் முதல்வரானார். அவர் அருமையான குவிஸ் மாஸ்டர். திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் வட்டாரங்களில் நடக்கும் குவிஸ் போட்டியில் இவரை காணலாம்.
சவேரியர் கல்லூரி பேராசிரியர் அந்தோணிசாமி, கிளாரிந்தா  எழுதியவர் சாரா டக்கர் கல்லூரி பேராசிரியர் சரோஜினி பாத்திமுத்து ஆகியோரை அடிக்கடி ஜங்சனில் பார்ப்பதும் பேசிக்கொள்வதும் உள்ளது. முடிந்தால் இவர்களோடு அருகாமையில் உள்ள விடுதிக்கு சென்று காபி சாப்பிட்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டதெல்லாம் உண்டு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
14-12-2018

#KSRadhakrishnan_postings
#KSRpostings
#மலரும்_நினைவுகள்...
(படம் :திருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டை1980களில்)

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...