Sunday, December 23, 2018

*இன்றைக்கு விவசாயிகள் தினம் தான். யார் கவனத்திற்கும் வரவில்லை.*



-------------------------------------
தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களின் வழியாக விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க கூடாது என்று கடந்த 7 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விவசாயிகளின் நிலத்தில் அனுமதியின்றி உயர்மின் கோபுரங்கள் அமைக்க கூடாது என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் மத்திய, மாநில அரசுகள் பாராமுகமாக இருக்கிறது. பவர் கிரிட் என்ற நிறுவனம் இதை முன்னெடுத்து விவசாயிகளுக்கு விரோதமாக இந்த திட்டத்தை அமல்படுத்துவதை கொங்கு வட்டார விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஈரோடு மாவட்டம் மூலக்கரை, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசன் சாவடி போன்ற பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றனர். 




தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி இந்த வட்டாரத்தை சேர்ந்தவர். மின்சாரத் துறை அமைச்சரும் இந்த பகுதியைச் சேர்ந்தவர் தான். ஆனால், மின்சாரத் துறை அமைச்சர் விவசாயிகளை திமுக தூண்டிவிடுவதாக அப்பட்டமாக பொய்யை பரப்பி வருகிறார். இந்த திட்டத்தை தடுக்க முடியாமல் தன் இயலாமையை ஒத்துக் கொள்ளாமல் மின்சாரத் துறை அமைச்சர் திமுக மீது போடும் பழிகளை போராடும் விவசாயிகளே நம்பவில்லை. என்ன செய்ய? 

இது தான் இன்றைய விவசாயிகளுடைய பாடு. ஒவ்வொரு துறையிலும் வஞ்சிக்கப்படுகிறார்கள். இன்றைக்கு விவசாயிகள் தினம். கொண்டாடப்பட வேண்டிய நாளில் போராடுகிறார்கள். தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் நாட்டிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயிகள் நேரடியாக தங்களின் விளைபொருட்களை விற்க உழவர் சந்தை, வறட்சியால் வாடிய விவசாயிகளின் 7,500 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை ரத்து செய்து அறிவித்தார். ஆனால், இதே பகுதியை சேர்ந்த மின்சாரத் துறை அமைச்சரால் கூட இந்த திட்டத்தை நிறுத்த முடியவில்லை. 

விவசாயிகள் தான் மனித நாகரிகத்தின் அடிப்படை. வேட்டையாடி உணவை பச்சையாக உண்டவர்கள், மண்ணிலிருந்து தானியங்களை விளைவித்து, முறையாக உணவுப் பழக்கங்கள் வந்த காலத்திலிருந்து நாகரிகங்கள் தொடங்கியது என்பது வரலாறு. விவசாயிகள் கால்வைத்த மண்ணில் கிடைக்கும் விளை பொருளால் தான் ஒவ்வொரு மனிதனும் ஜீவிக்கின்றான். அதற்காக தான் மண்ணை வணங்குகிறோம், போற்றுகிறோம், கொண்டாடுகிறோம். அந்த மண்ணை உணவாக மாற்றுவது தான் விவசாயம். விவசாயம் என்பது 12,000 ஆண்டுகளாக நடைமுறைக்கு வந்ததாக சில தரவுகள் உள்ளன. அமெரிக்கர்கள் மண்ணை அழுக்கு என்கிறார்கள். ஆனால், இங்கு விவசாயிகள் மண்ணை தாய் மண் என்றும் வணங்கி கொண்டாடுகிறோம். 

நாடு விடுதலை பெற்ற 1947இல் 70 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இன்றைக்கு 60 சதவீதம் மக்கள் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, விளைநிலங்களும் குறைந்துவிட்டது. இந்தியாவில் நமக்கு இருக்கும் ஒரே வளம் மனித ஆற்றல். அந்த மனித ஆற்றலின் பெரும்பான்மை விவசாயத் தளத்தில் தான் இருந்தது. கார்ப்ரேட் நிறுவனங்கள் இந்தியாவில் காலூன்றி விவசாயத்தை பாழ்படுத்தியது. இந்தியாவில் கடன் தொல்லையால் 3000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். உரிமைகளுக்காக போராடிய 47 விவசாயிகள் தமிழக காவல் துறையால் சுடப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு விவசாயம் புரையோடிய நிலைக்கு போய்விட்டது. 12,000 ஆண்டுகளின் பாரம்பரியமான விவசாயம் தேய்மானத்தை நோக்கி செல்வதை தடுக்கவேண்டியது ஒவ்வொருவருடைய கடமை. 

இன்றைய விவசாய நிலத்தில் இந்த உணர்வை நாம் எடுத்து செல்ல வேண்டும். இதில் என்ன வேடிக்கை என்றால் இன்றைக்கு விவசாயிகள் தினம் என்பது பலர் அறிந்திருக்கவில்லை என்பது தான் வேதனையான விடயம். என்ன செய்ய?

விதியே, விதியே, தமிழ் சாதியே!!!

#விவசாயிகள்_தினம்
#Farmers_day
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
23/12/2018

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...