Friday, August 19, 2022

‘#இந்தியா_இலங்கை_ஈழத்தமிழர்’

‘தமிழன் ‘ (விஜேராம மாவத்தை , கொழும்பு 7 . ஆசிரியர் சிவராஜா ) என்ற இலங்கை- கொழும்பிலிருந்து வரும் இன்றைய (19-8-2022)தினசரியில் வந்துள்ள எனது கட்டுரை.
‘#இந்தியா_இலங்கை_ஈழத்தமிழர்’


இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதென்று உலக சமுதாயம் அறிந்ததே. உலகின் சொர்க்க பூமி என்றும் இந்து மகாக் கடலின் முத்து என்றும் வரலாற்றில் அறியப்பட்டது இலங்கைத் தீவு. 103 நதிகள், 16 ஜீவநதிகள் கொண்டது இலங்கை. இலங்கையைச் சுற்றி இயற்கை துறைமுகங்கள், கடலால் சூழப்பட்ட அழகான பூங்காவனத் தீவாகும். உலக மக்களை சுற்றுலாவில் எட்டுத் திக்கும் ஈர்க்கக் கூடிய பூமி. மலையகத்தில் விளையும் அரிய தேயிலை, உலக நாடுகளுக்கு வேண்டி விரும்பி ஏற்றுமதி செய்கின்ற சூழ்நிலையும் இருந்தது.  செழிப்பான, வளமான விவசாய பூமி இரத்தினக் கற்கள், காரீயம், வாசனைப் பொருட்கள், தேயிலை, சுற்றுலா, மீன்பிடி என்ற வளமான பூமி ஆசியாவில் சிங்கப்பூரை விட எளிதாக முன்னேறியிருக்க வேண்டும். சிங்கப்பூர் கடல் மண்ணை பரப்பி பரப்பி பல சிரமங்களை நேர்கொண்டு உலகில் முன்னேறியது. 

ஏன் இவ்வளவு இயற்கை வளங்கள் இருந்தும் இலங்கை சிங்கப்பூரை தாண்டி ஆசியாவில் முன்னேறவில்லை என்பது முக்கியமான விடயம். இயற்கையின் அருட்கொடை இலங்கைக்கு சாதகமாக இருந்தும் விடுதலைப் பெற்று 74 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக தத்தளிக்கின்றது. இதன் காரணம் என்ன, அரசில் உள்ள பணம் அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கு செலவு செய்யாமல் அயல்நாடுகளில் இருந்து கடன் வாங்கி தமிழர்களை அழிக்கும் ஒரே திட்டமாக 1948 இலங்கை விடுதலை பெற்ற காலத்தில் இருந்து சிங்கள ஆட்சியாளர்கள் இராணுவத்திற்கு வழங்கி தமிழினத்தை அழிக்கும் ஒரே கடமையைச் செய்தார்கள். நாட்டின் வளர்ச்சி முன்னேற்றம் என்பதில் சிங்களர்களுக்கு அக்கறை இல்லை.

பொருளாதாரச் சிக்கலில் இன்றைக்கு இலங்கை பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதை மறுப்பதற்கு இல்லை. அதிலிருந்து இலங்கை விடுபட வேண்டும் என்பது தான் உலக சமுதாயத்தின் கருத்து. 
இலங்கையில் படிப்படியாக இயற்கை விவசாயம் என்று கொண்டுவராமல் ஒரே நாளில் இரசாயன உரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக விவசாயம் அழிந்து பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. அரிசி, காய்கறிகள், புகையிலை, மிளகாய், வெங்காயம் எல்லாம் விவசாய உற்பத்தியில் இல்லாமல் போய்விட்டது. இப்படி தொலைநோக்குப் பார்வை இல்லாமல் தமிழர் விரோத மனப்பான்மையில் சிங்கள ஆட்சியாளர்கள் தங்களுக்குத் தானே கொள்ளிக்கட்டையை வைத்துக் கொண்டனர்.
பொருளாதாரச் சிக்கல் என்று கடந்த 74 ஆண்டுகளாக தமிழர்கள் போராடியதை மறக்கவும் முடியாது, புறந்தள்ளவும் முடியாது. பொருளாதாரச் சிக்கல் என்று தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இலங்கை மண்ணில் தொடர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழர்களின் போராட்டங்கள் இனி எப்படி கவனிக்க வேண்டும் என்பதையும் உலக சமுதாயமும், இந்திய அரசும் கவனிக்க வேண்டும்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருவதையும், 16ஆம் நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கீசியர், டச்சு மற்றும் ஆங்கிலேயர்களின் படையெடுப்பு வரை தீவில் தனித்தனி இறைமையுள்ள தமிழ், சிங்கள அரசுகள் இருந்ததையும் ஒப்புக்கொண்டு, மற்றும் 1833 இல் மட்டுமே, ஆங்கிலேயர்களால் நிர்வாக வசதிக்காக முழுத் தீவும் ஒன்றுபட்டது. 

கடந்த 1911, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சொத்து-கல்வி என்ற தகுதியில், மொத்தம் 2934 வாக்காளர்கள் கொண்ட தேர்தலில் சிங்களர்கள் யாரும் வெற்றிபெறவில்லை. அந்தத் தேர்தலில் தமிழரான சர்.பொன்னம்பல ராமநாதன் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்த சிங்கள மருத்துவர் எஸ்.மார்க்கோஸ் பெர்னாண்டஸ் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஒரு காலத்தில் சிங்களர்களுக்கு நிகரான வடக்கு-கிழக்கு மரபு ரீதியான தமிழர்கள், மலையகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் சேர்ந்து சிங்களருக்கு சமமாக மக்கள் தொகையை கொண்டிருந்தனர். சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்திற்கு பின் சரிபாதியாக இருந்த மக்கள் தொகை படிப்படியாக குறைந்தது. இன்றைக்கு இரண்டாம் தரமாக சரிசமற்ற நிலையில் தமிழர்கள் சிங்களர் ஆட்சியில் நடத்தப்படுகின்றனர். 

கடந்த 1948 இல் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றபோது ஈழத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதையும், இலங்கைக்கான சுதந்திரம் ஈழத் தமிழர்களுக்கு முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனியாதிக்கமாகும் என்பதே தொடர்ந்தது.

1948 ஆம் ஆண்டு "சுதந்திரம்" பெற்ற உடனேயே இலங்கை தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை ஆரம்பித்ததையும், ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக முதலில் அகிம்சை வழியிலும், பின்னர் ஆயுதப் போராட்டத்தின் மூலமும் போராடினர். 

விடுதலையின் போது இலங்கையின் ஜனத்தொகையில் 33% தமிழர்கள் இருந்ததை நினைவுகூர்ந்து, விடுதலை கிடைத்த உடனேயே, தமிழர்களுக்கு எதிரான முதல் நடவடிக்கையாக, சிங்கள மொழி, மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமை என்ற ஆணைகள் கொண்டுவரப்பட்டு கிட்டத்தட்ட 1 மில்லியன் தமிழர்களுக்கு குடியுரிமை மறுத்தது. மலையகத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் தமிழகத்திலிருந்து அழைத்துச் சென்றவர்களின் வாழ்வு சூன்யமானது.

சிங்கள இனம் தமிழருக்கு எதிராக பௌத்தத்தில் திரிபுவாதமாக தேசிய சிந்தனை என்று புத்தத்திற்கு எதிராக இனவாத மகாவம்சத்தை கல்வியிலும் நடைமுறையிலும் புகுத்தி இனவாதத்தை வலுப்படுத்தியது. 1956, 1958, 1977, 1981, மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். 

அனைத்து பிரதான தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் கீழ் ஒன்றிணைந்து, 1976 ஆம் ஆண்டு மே 14 அன்று வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து தமிழர்களின் நாடு (ஈழம்) அமைய வேண்டும் என தீர்மானித்தனர். பின்னர் நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அமோகமான ஆணையை வழங்கினர்.

1981 ஆம் ஆண்டு மே 31 அன்று சிங்கள ஆட்சியாளர்கள் யாழ் பொது நூலகத்தை எரித்ததை மறக்க முடியுமா? கடந்த 1983-ல் தமிழர் பகுதியில் நடந்த கலவரம், இனப்படுகொலையைப் பார்த்து உலகமே கண்ணீர் விட்டது

கடந்த 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது, தமிழ் போராளிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இந்தியா உத்தரவாதம் அளித்ததுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாக இணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், அது நடக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தில் உறுதிக் கொடுத்தவாறு சிங்கள் அரசின் நடவடிக்கைகள் இல்லை. மாகாண சபைகள் என உறுதியளிக்கப்பட்டது, அதிகாரமற்ற சபைகளாகவே ஒப்புக்கு ஏற்படுத்தப்பட்டது.

ஐநா பொதுச்செயலாளரின் (2011 மார்ச்) பொறுப்புக்கூறல் தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கை, இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின் போது இலங்கையில் ஐ.நா. நடவடிக்கை குறித்த ஐ.நா. பொதுச்செயலாளர் உள்ளக மீளாய்வுக் குழுவின் நவம்பர் 2012 அறிக்கையின்படி, 70,000க்கும் அதிகமானோர் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை வலியுறுத்துவது. மன்னார் ஆயர் மறைந்த டாக்டர் ராயப்புவின் அறிக்கையிலும், 2009 இல் இனப் போரின் முடிவில் 1,46,679 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கணக்கில் வரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற UNHRC அமர்வில் 30/1 தீர்மானத்திற்கு இலங்கை நம்பகமான விசாரணையை நடத்துவதற்கு தன்னை அர்ப்பணித்து, மேலும் இரண்டு தீர்மானங்கள் மூலம் 2017 மார்ச் மற்றும் 2019 மார்ச்சில் கால நீட்டிப்புகளைப் பெற்றது. ஆனால் தாமதப்படுத்தும் தந்திரோபாயங்களை விளையாடிய பின்னர், 2020 பிப்ரவரியில் அனைத்து UNHRC தீர்மானங்களில் இருந்தும் இலங்கை விலகியது, மேலும் அவர்களது போர்க்குற்றவாளிகளை போர்வீரர்கள் என்று அழைக்கும் எந்த விசாரணையையும் நடத்த மறுத்தது;
இலங்கை அரசும் அதன் தலைவர்களும் தமிழ் மக்களுக்கும், இந்திய அரசுக்கும் மற்றும் அதன் அரசுக்கும் அளித்த வாக்குறுதிகள் மற்றும் அர்ப்பணிப்புகளில் தொடர்ச்சியாக உலக சமுதாயத்திற்கு கொடுத்த உறுதிமொழிக்கு  மாறாக சிங்கள ஆட்சியாளர்கள் பின்னோக்கிதான் சென்றுள்ளனர்.
  
இனப்போர் முடிந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழர் பிரதேசம் இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழ் மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் நில அபகரிப்பு, அழிவுகளில் ஈடுபட்டு வருவதாகவும் வலியுறுத்தினார். மற்றும் 300க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் அழிப்பு, அவற்றின் நிலங்கள் மற்றும் சூழல்களை நாசப்படுத்த மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த விகாரைகளை கட்டியெழுப்புவதில் ஈடுபட்டு ஜனத்தொகையை மாற்றும் நோக்கத்துடன் தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் தொடர்பை உடைக்க வேண்டும்;

இந்திய சீனா போர், இந்திய பாகிஸ்தான் போர், 1971 இல் பாகிஸ்தான்-வங்காளதேசம்/இந்தியா-பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானின் பக்கம் நின்றதால், இலங்கை தனது போர் விமானங்களுக்கு கொழும்பில் எரிபொருள் நிரப்ப அனுமதித்ததன் மூலம், இந்தியாவை முழுமையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்தத் தவறியதால், இலங்கை வரலாற்று ரீதியாக இந்தியாவுக்கு எதிரானது என்பதை வலியுறுத்துகிறது. 1987 இன் இலங்கை ஒப்பந்தம், கொழும்பு கிழக்கு துறைமுக முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியா-ஜப்பான்-இலங்கை ஆகிய மூன்று தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து 2021 பிப்ரவரியில் ஒருதலைப்பட்சமாக விலகிக்கொண்டது. ஆனால், ஈழத்தமிழர்கள் செல்வா காலத்தில் சீனப் போரின்போது நிதி திரட்டி, அன்றைய பிரதமர் நேருவுக்கு போர் நிதியாக அனுப்பியதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு இலங்கை என்ன நிலைமை?. தமிழர்களை அழித்த  ஜெயவர்தன மருமகனும் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டவருமான  ரணில் விக்கிரமசிங்க இலங்கையின்  ஜனாதிபதி  ஆகியுள்ளார் என்பது வேடிக்கையான விடயம் ஆகும். கருப்பு ஜூலை என 1983-ல் இலங்கைக் கலவரம் நடந்தபோது ரணில் விக்கிரமசிங்க தன் மாமனார் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் இடம்பெற்றார். அன்றைக்கு தமிழர்களைத் தாக்குவதை நிறுத்த  அவசரநிலை காலத்தை இலங்கையில் பிரகடனம் செய்யுங்கள் என்று இந்தியா சொல்லும்போது ஜெயவர்த்தனவும் ரணில் விக்கிரமசிங்கவும் உடன்படவில்லை. தேர்தல் காலத்தில் பல உறுதிகள் தமிழர்களுக்குக் கொடுத்து ஆட்சிக்கு வருவார்கள். ஆனால், அந்த உறுதிமொழிகளை நடமுறைப்படுத்துவதில்லை. இது தொடர்ந்து சேனநாயக்கா, கொத்தலாவல, பண்டாரநாயக்காக்கள் என இன்றைக்கு வரை சந்திரிக்கா, ராஜபக்சக்கள், ரணில் விக்கிரமசிங்க என பலரும் தமிழர்களுக்கு கொடுத்த உறுதிமொழிகளை குப்பைத் தொட்டியில்தான் போட்டார்கள். 


1. இன்றைய இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அமைதியான அரசியல் தீர்வைக் காணும் நோக்கத்தில் இந்திய அரசு அவசரமாகவும் அவசியமாகவும் தலையிட்டு, சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு முயல வேண்டும். 1948 ஆம் ஆண்டுக்கு முன்னர் தீவின் வடக்கு-கிழக்கு தமிழர் பாரம்பரிய தாயகத்தில் வாழ்ந்த மக்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரமான சுதந்திர இறையாண்மை கொண்ட தனி நாடு ஈழத்தை விரும்பினால் அதை பரிசீலிக்க வேண்டும்.

2. கடந்த 1987ஆம் ஆண்டு தமிழ்த் தலைவர்களுக்கு இந்தியாவும், 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படியும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

3. இலங்கையில் 1950-லிருந்து போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கையால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைகள், இன அழிப்பு உட்பட அனைத்து குற்றங்களையும் புலன் விசாரணை செய்து விசாரிக்க சர்வதேச சுதந்திரமான, நம்பகமான விசாரணை அயலக பொறிமுறையில் நடத்த இந்திய அரசு தனது ஆதரவை தெரிவிக்க வேண்டும். உக்ரைன் போரில் இன அழிப்பு என்ற நிலையில், சர்வதேச சுதந்திரமான, நம்பகமான விசாரணை வேண்டும் என்று இந்தியா கடந்த மார்ச் 2022 ஐ.நா மனித உரிமை ஆணைய 49-வது அமர்வில் வலியுறுத்தியுள்ளது. அது போலத்தான் இந்தியா இதை ஆதரிக்க வேண்டும் என்று தொடர்ந்து 2012 லிருந்து குரல் கொடுத்து வருகின்றோம். ஏற்கனவே தமிழக சட்டமன்ற தீர்மானம், டெசோ தீர்மானங்களும் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு நம்பகமான சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  

4. சர்வதேச கண்காணிப்பு நிதியம், உலக வங்கி, பாரிஸ் கிளப், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச சமூகத்திடம் இருந்து இலங்கை பொருளாதார உதவியை நாடும் நிலையில், இலங்கைக்கு உதவி செய்யும்போது தமிழர்களின் நலன் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். சர்வதேச சமூகம் இலங்கையின் ஏமாற்று வடிவங்களையும், ஐ.நா மற்றும் UNHRC உட்பட சர்வதேச சமூகத்திற்கான அதன் சிறந்த அர்ப்பணிப்புகளையும் உணர்ந்து கொள்ள வேண்டும். எந்தவொரு உதவியும் பின்வரும் நிபந்தனைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

5. இலங்கையில் வடக்கு, கிழக்கு மாநிலங்களிலிருந்து இலங்கை இராணுவத்தை திரும்பப் பெறுதல்…. இவ்வளவு பொருளாதாரச் சிக்கல் இருந்தும் சிங்கள அரசு ஏன் தனது இராணுவத்தை தேவையில்லாமல் அதிகமாக செலவு செய்து தமிழர் வாழும் பகுதிகளில் பீதியைக் கிளப்பும் அளவில் பெரிய பெரிய இராணுவ முகாம்களை தொடர்ந்து ஏன் அனுமதிக்க வேண்டும். 

6.முள்ளிவாய்க்காலின்போது காணாமல் போனவர்களைக் கண்டறிந்து அவர்களின் உறவினர்களிடம் இலங்கை அரசு ஒப்படைக்க வேண்டும்.

7.இறுதிப் போர் 2009-ன்போது கைது செய்யப்பட்ட தமிழர்களை இலங்கை அரசு விடுவிக்க வேண்டும்.
8. தமிழர் பகுதியில் சிங்களர்களைக் குடியமர்த்துதல், தமிழர்களின் விவசாய நிலங்களை அரசு உத்தரவால் ஆக்கிரமிப்பு செய்தல், சிங்கள மக்களுக்கு விவசாய நிலங்களை அத்துமீறி அழித்தல், இந்துக் கோவில்களை புத்த விகாரைகளாக மாற்றுதல் நிறுத்த வேண்டும்.

9.அமைதிப்படை இலங்கையில் இருந்தபோதும், முள்ளிவாய்க்கால் போரின்போதும் கணவன்/தந்தையை இழந்த விதவை/வாரிசுகளுக்கு மறுவாழ்வை உறுதி செய்ய வேண்டும்.

10. இந்தியா தமிழர்களுக்கு அளித்த மறுவாழ்வு நிதியை தமிழர்களுக்கே செலவு செய்யப்பட்டதா என்பதை இந்திய அரசு இலங்கை அரசிடம் விசாரிக்கவும் வேண்டும்.

11. புவி அரசியலில் வெளிநாட்டு பண உதவிக்காக இலங்கை இந்து மகாக் கடலிலும் இலங்கையிலும் சீனா போன்ற இந்தியாவுக்கு எதிரான நாடுகளை இலங்கை ஆதரிப்பதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

இலங்கையில் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்த வேண்டும் என்றால் ஏறத்தாழ 8 பில்லியன் டொலர் தேவை. அதற்கான சூழலும் இல்லை. எனவே அனைத்துக் கட்சி இணைந்த ஒரு தேசிய அரசை அமைத்து நிலையான ஆட்சி இலங்கையில் நடக்கிறது என்று சர்வதேசத்திற்கும் ஐ.எம்.எஃப் போன்ற சர்வதேச பண அமைப்புகளுக்கும் இலங்கையில் பிரச்சினை இல்லாமல் இருக்கின்றது என்ற பாவலாக காட்ட வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க விரும்புகின்றார். 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பாரீசில் உலக பண நிறுவனங்களான சர்வதேச கண்காணிப்பு நிதியம், உலக வங்கி, பாரிஸ் கிளப், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பன்னாட்டு பணப் பரிவர்த்தனை மாநாட்டில் மூன்றாம் உலக நாடுகள் கலந்து கொள்ளும் வரை தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து தருவோம் என்று சொன்னால் தான் பன்னாட்டு நிதி உதவி கிடைக்கும் என்பதற்காக சிங்கள ஆட்சியாளர்கள் கரிசணமாக தமிழர்களின் நலனை ஒப்புக்கு பேசுவார்கள். இப்படி நடந்தது தான் சந்திரிகாவின் சமஸ்டி வரைவுத் திட்டம். அதன்பின் பிரேமதாசாவின் உறுதிமொழி, ராஜபக்சேவின் புதிய அரசியல் நிர்ணய சபை, சகல அதிகாரங்கள் கொண்ட மாகாண கவுன்சில் என்ற உறுதிமொழி, இன்றைக்கு மொட்டு சின்னத்தில் ஒரே உறுப்பினராக வெற்றிபெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கேவின் உறுதிமொழியும் தண்ணீரில் எழுதியது தான்.

இன்றைக்கு இலங்கைஹம்பாந்தோட்டையில்  சீனாவின் யுவான் வாங்க்-5 உளவு கப்பல், பாகிஸ்தான் பி என் எஸ் 5 போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் ஒகஸ்ட் 12 வரை நிற்க அனுமதி என்ற நிலையில் இந்தியாவுக்கு விரோதமாகவும், இந்துமகா கடலில் அமைதியை நாசாப்படுத்துகின்ற வகையில் கையால் ஆகாத இலங்கையாக இருக்கின்றது. ஏற்கனவே டிகோகர்சியாவில் அமெரிக்கா, பிரிட்டன் மையம் கொண்டுள்ளன. இந்து மகாக் கடலில் ஜப்பான் எண்ணை ஆய்வுகள் நடத்துகின்றன. பிரான்ஸ் இந்த பிராந்தியத்தில் தலைகாட்டுகிறது. சீனா இலங்கையின் கொழும்பு துறைமுகம் என எட்டுத்திக்கும் சுற்றி தமிழகத்தின் அருகில் உள்ள கச்சத் தீவின் அருகில் வரை வந்துவிட்டது. 

இவ்வாறான நிலையில், இலங்கை பொருளாதாரச் சிக்கல் இருந்தபோது மற்ற நாடுகளை விட இந்தியா துடிதுடித்து உதவியதை மறக்க முடியாது. இன்றைக்கு இந்தியாவுடன் பாகிஸ்தான், சீனா, மியான்மர் உறவுகள் சீராக இல்லை. நேபாளமும் சீனா பக்கம் சாய்ந்து விட்டது. வங்கதேசமும் பட்டும் படாமல் உள்ளது. இலங்கையை சீனா மிரட்டிக் கொண்டிருக்கிறது. மாலைதீவு நம்மிடம் உதவிகள் வாங்குவதற்காக சீனாவுக்கும் நமக்கும் மதில்மேல் பூனையாக உள்ளது. எனவே தென்கிழக்கு ஆசிய புவியரசில், இந்து மகா சமூத்திர கேந்திரப் பகுதி, இந்தியாவின் பாதுகாப்பு என்பதையெல்லாம் மனதில் கொண்டு இலங்கைப் பிரச்சினையில் இந்திராகாந்தியைப் போல ஈழத்தமிழர் ஆதரவு நிலை எடுத்தால்தான் நமக்கும் நல்லது, அங்குள்ள தமிழர்களுக்கும் நல்லது என்பதை டெல்லி சௌத் ப்ளோக்  உணர வேண்டும். இது அவசியமானது, அவசரமானது.
 



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...