Thursday, August 25, 2022

*அரசியிலில் நேர்மையின் இலக்கணம்* *சென்னை ராஜதானியின் (Madras Presidency) பிரதமர்( பிரீமியர்)* *ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் நினைவு தினம்* *அரசியிலில் தவம் மேற்கொண்ட அரசியிலில் துறவி*.



_____________________
நானும் ஒரு விவசாயி என்று உரிமை கொண்டாடும் முதல்வர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அரசியல் வாழ்விலிருந்து மீண்டும் விவசாயத்தை நோக்கி அவர்கள் திரும்புவார்களா என்றால் சந்தேகம்தான். இந்தியா சுதந்திரம் பெற்றபோது, சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பொறுப்புவகித்தவர் ஓ.பி.ஆர். என்று அழைக்கப்படும் ஓமந்தூர் பெரியவளைவு ராமசாமி (1895-1970). தேடிவந்த முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள மூன்று மாத கால அவகாசம் எடுத்துக்கொண்டது அரசியல் அதிசயம். முதல்வர் (அன்று பிரதமர்)பதவியிலிருந்து விலக நேர்ந்ததும் சொந்த ஊருக்குச் சென்று முழுநேர விவசாயியானார்.

காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடிய திராவிட இயக்கத்தினரும் ஓமந்தூராரைப் பாராட்டவும் ஆதரிக்கவும் செய்தார்கள் என்பது வரலாறு. காந்தியர்களின் எளிமைக்கு காமராஜரையும் கக்கனையும் உதாரணம் காட்டுபவர்கள்கூட ஓ.பி.ஆரை ஏனோ மறந்துவிடுகிறார்கள். ஆதிதிராவிடர் நலத் துறையைத் தனித் துறையாக இயங்கச் செய்தவர் அவர். ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலராக நியமித்தவர். முதல்வரின் அலுவலகச் சுவரில் காந்தி, நேருவின் படங்கள்; வீட்டுச் சுவரில் வள்ளலாரின் படம் என்று அரசியலுக்கும் ஆன்மிகத்துக்கும் நடுவில் ஓமந்தூராரின் பொதுவாழ்க்கை இருந்தது.

ராமசாமி ரெட்டியார் அவர்கள் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை பதவியில் இருந்தார். 

சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராவர்.

 இவரது பதவிக் காலத்தில், சென்னை கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் தலித்துகள், தாழ்த்தப்பட்டோர் இந்து கோயில்களுக்குள் செல்ல உரிமையளிக்கப்பட்டது.

 அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார்.

ஜமீன்தார் இனாம்
 முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்

.இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றை இயற்றினார். சமூக நீதி உத்தரவு பிறப்பித்தார். தமிழ் பயிற்சி மொழி. தமிழ் கலை களஞ்சியம் (Tamil Encyclopaedia) 8  தொகுதிகள், தமிழில் பாட நூல்கள் வெளிவரவும், அணைகள் கட்ட திட்டங்கள் என பல இவரின் பணிகளை பட்டியல் போடலாம். அரசியிலில் தவம் மேற்கொண்ட அரசியிலில் துறவி.

இப்படியான மாமனிதர் படத்தை  கடந்த 1950 களில் வைக்க வேண்டியது ; நீண்ட காலமாக கோரிக்கை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்தான் தமிழக சட்ட மன்றத்தில் வைக்கப்பட்டது. இங்கே
உண்மையான அரசியலில் களப்பணி, நேர்மை என கடந்த கால அரசியிலில் இன்று தேவையில்லை. அதை குப்பை தொட்டில் போட வேண்டும் என நினைக்கும் அறிவு கெட்ட ஜென்மங்களை என்ன சொல்ல…?

மாக்கவி பாரதி வரிகள் நினைவில் வருகிறது…..

விதியே, விதியே, தமிழச் சாதியை

என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்

தன்மையும் தனது தருமமும் மாயாது

என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்

வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ?

தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று

உள்ளுறு தருமமு உண்மையும் மாறிச்

 சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?

‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?

வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?

கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?

விதியே, தமிழச் சாதியை எவ்வகை

விதித்தாய்’ என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.

ஏனெனில்,

“சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்,

திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்

ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,

‘எல்லையொன் றின்மை’ எனும்பொருள் அதனைக்

கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்

முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச்

சாதியை அமரத் தன்மை வாய்ந்தது” என்று

உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்

சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்

உள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக்

கண்டுஎனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.

ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்

தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்

பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள

பற்பல தீவினும் பரவி யிவ்வெளி்ய

தமிழச் சாதி, தடியுதை யுண்டும்

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்

வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது

செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்

பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்

நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்

இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்!

விதியே! விதியே! தமிழச் சாதியை

என்செயக் கருதி யிருக்கின் றாயடா?

– *பாரதியார்*

#ksrpost 
25-8-2022.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...