Wednesday, August 31, 2022

கொர்பச்சோவ் (Mikhail Sergeyevich Gorbachev[e]

*கொர்பச்சோவ்* :
———————————-
*'சோவியத் யூனியன்' கொர்பச்சோவ் காலமானார். என்னை ஈர்த்த உலக தலைவர்களில் இவரும் ஒருவர்*.

சோவியத் யூனியனின் (USSR)கடைசி அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ்(கோர்பச்சேவ் )(வயது 91) காலமானார்.

ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய 1991 வரையிலான சோவியத் யூனியனின் அதிபர் கொர்பச்சோவ்.இவரின் பெரெஸ்த்ரோயிக்கா முக்கியமானது.

1985- 1991வரை சோவியத் யூனியன் அதிபராக இருந்தார்.

மிக்கைல் செர்கேவிச் 

 ( பி 2-3-1931  
இ30 -8-2022) இவர் சோவியத் ஒன்றியத்தின் 8-ஆவது, கடைசி அதிபர். 1985 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியில் இருந்தார். 1988 முதல் 1989 வரை சுப்ரீம் சோவியத் தலைமைப் பீடத்தின் தலைவராகவும், 1989 முதல் 1990 வரை சுப்ரீம் சோவியத்தின் தலைவராகவும் பதவியில் இருந்தார். கருத்தியல் ரீதியாக, கொர்பச்சோவ் தொடக்கத்தில் மார்க்சியம்-லெனினிசக் கொள்கையைக் கடைப்பிடித்தாலும், பின்னர் 1990களின் முற்பகுதியில் சமூக ஜனநாயகத்தை நோக்கிச் சென்றார். இவரது சில சீர்திருத்தக் கொள்கைகள் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தன. இவருக்கு 1990இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கொர்பச்சோவ், ருசியாவில் இசுத்தாவ்ரப்போல் பிரிவில் பிரிவல்னோயே என்ற நகரில் ருசிய, உக்ரைனிய ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இசுத்தாலினின் ஆட்சியில் தனது இளமைப் பருவத்தில் பொதுவுடைமைக் கட்சியில் சேருவதற்கு முன்பு ஒரு கூட்டுப் பண்ணையில் கூட்டு அறுவடை இயந்திரங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டார். மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, ​​அவர் 1955 இல் சட்டப் பட்டம் பெறுவதற்கு முன்பு 1953 இல் சக மாணவியான ரைசா தைத்தாரென்கோவை மணந்தார். இசுத்தாவ்ரப்போலுக்குச் சென்ற அவர், கொம்சோமால் இளைஞர் அமைப்பில் பணியாற்றினார். 1953 இல் இசுத்தாலினின் இறப்பிற்குப் பிறகு, சோவியத் தலைவர் நிக்கித்தா குருச்சேவின் இசுத்தாலினியத்திற்கு எதிரான சீர்திருத்தங்களுக்குத் தீவிர ஆதரவாளரானார். 1970 இல் இசுத்தாவ்ரப்போல் பிராந்தியக் குழுவின் கட்சியின் முதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில், அவர் இசுத்தாவ்ரப்போல் கால்வாயின் கட்டுமானத்தை பணியை மேற்பார்வையிட்டார். 1978 இல், அவர் கட்சியின் மத்தியக் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டு மாஸ்கோ சென்றார். 1979 இல் கட்சியின் ஆளும் பொலிட்பியூரோவில் சேர்ந்தார். சோவியத் தலைவர் லியோனீது பிரெசுனேவ் இறந்த மூன்று ஆண்டுகளுக்குள், யூரி ஆந்திரோப்போவ், கான்சுடான்டின் செர்னென்கோ ஆகிய தலைவர்களின் சுருக்கமான ஆட்சியைத் தொடர்ந்து, பொலிட்பியூரோ 1985 இல் கொர்பச்சோவை கட்சியின் பொதுச் செயலாளராகவும், அரசுத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தது.

சோவியத் அரசையும் அதன் சோசலிசக் கொள்கைகளையும் பாதுகாப்பதில் உறுதியாக இருந்த போதிலும், குறிப்பாக 1986 செர்னோபில் பேரழிவிற்குப் பிறகு குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் அவசியம் என்று கோர்பச்சோவ் நம்பினார். சோவியத்-ஆப்கான் போரில் இருந்து விலகி, அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தவும், பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவரவும் அமெரிக்க அதிபர் ரீகனுடன் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். உள்நாட்டில், கிளாஸ்னோஸ்த் ("திறந்த தன்மை") என்ற அவரது கொள்கையானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றை மேம்படுத்த அனுமதித்தது. அதே நேரத்தில் அவரது பெரெஸ்த்ரோயிக்கா ("மறுசீரமைப்பு") கொள்கை அதிகாரப் பரவலாக்கல் மூலம் பொருளாதார முடிவெடுத்து செயல்திறனை மேம்படுத்த முயன்றது. அவரது ஜனநாயகமயமாக்கல் நடவடிக்கைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் காங்கிரசின் உருவாக்கம் ஆகியவை ஒரு கட்சி அரசுக்கு சவாலாக அமைந்தது. 1989-1990-இல் பல்வேறு கிழக்கு ஐரோப்பிய சோவியத் உறுப்பு நாடுகள் மார்க்சிய-லெனினிய ஆட்சியைக் கைவிட்டபோது கொர்பச்சோவ் இராணுவ ரீதியாக தலையிட மறுத்துவிட்டார். உள்நாட்டில், வளர்ந்து வந்த தேசியவாத உணர்வு சோவியத் ஒன்றியத்தை உடைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மார்க்சிய-லெனினியக் கடும்போக்குவாதிகள் 1991 ஆகஸ்ட் மாதத்தில் கோர்பச்சேவுக்கு எதிராக நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு சதி தோல்வியுற்றது. இதைத் தொடர்ந்து, கொர்பச்சோவின் விருப்பத்திற்கு எதிராக சோவியத் ஒன்றியம் கலைந்ததை அடுத்து அவர் தனது பதவியைத் துறந்தார். பதவியை விட்டு வெளியேறிய பிறகு, அவர் தனது கொர்பச்சோவ் அறக்கட்டளையைத் தொடங்கினார், ருசிய அரசுத்தலைவர்கள் போரிஸ் யெல்ட்சின், விளாதிமிர் பூட்டின் ஆகியோரக் கடுமையாக விமர்சித்தார். மேலும் ருசியாவின் சமூக-ஜனநாயக இயக்கத்திற்காக பிரச்சாரம் செய்தார். இவர்  நேற்று (30-8- 2022) மாஸ்கோவில் கடுமையான மற்றும் நீடித்த நோயால்" இறந்தார்.

20-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் மிகவும் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவராகப் பரவலாகக் கருதப்பட்ட கொர்பச்சோவ் தொடர்ந்து சர்ச்சைக்குரியவராகக் காணப்பட்டார். அமைதிக்கான நோபல் பரிசு உட்படப் பலதரப்பட்ட விருதுகளைப் பெற்ற இவர், பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்ததிலும், சோவியத் ஒன்றியத்தில் புதிய அரசியல், பொருளாதார சுதந்திரங்களை அறிமுகப்படுத்தியதிலும், கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவில் மார்க்சிய-லெனினிய நிர்வாகங்களின் வீழ்ச்சியை சகித்துக்கொள்வதிலும்ன் ஜெர்மானிய மீளிணைவிலும் அவர் முக்கியப் பங்காற்றியதற்காகப் பரவலாகப் பாராட்டப்பட்டார். ஆனால் சோவியத் கலைப்பை விரைவுபடுத்தியதற்காகவும், இந்த நிகழ்வால் ருசியாவின் உலகளாவிய செல்வாக்கில் சரிவைக் கொண்டு வந்து பொருளாதார சரிவைத் தூண்டியமைக்காகவும் ருசியாவிலும் முன்னாள் சோவியத் நாடுகளிலும் இவர் அடிக்கடி விமரிசிக்கப்பட்டு வந்தார். இன்றைய புட்டின் வரை இவர் காட்டிய வழியில் ருசிய ஆட்சி நடத்துகின்றனர்.

#KSR post 
31-8-2022.

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...