Thursday, March 22, 2018

மத்திய அரசு தமிழகத்தில் மேலும் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏறத்தாழ 2,40,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள நிலம் மற்றும் கடல் பகுதிகளில் முதல் கட்டமாக 24 கிணறுகளை அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான சர்வதேச ஒப்பந்தப் புள்ளியை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இது விவசாயிகளின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  தென்மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் வரை சுற்றுச் சூழலை பாதிக்கும் இந்த திட்டத்தை எப்படியாவது கொண்டு வர வேண்டுமென்று மத்திய அரசு கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறது.

இந்தியாவின் எரிபொருள் தேவையில் 80 முதல் 85 சதவீதம் வரை இறக்குமதியை சார்ந்துள்ளது. எனவே உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்துடன் மரபு சார்ந்த கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி உற்பத்தி மட்டுமன்றி தற்போது அணு மின் நிலைய உற்பத்தியுடன் இன்னும் அபாயகரமாக கருதப்படும் மீத்தேன், ஷேல் காஸ், ஷேல் ஆயில் போன்றவற்றை எடுப்பதில் மத்திய அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருவது சற்று அதிர்ச்சியாக உள்ளது.

மத்திய அரசின் 2013 காலகட்டத்தில் ‘நெல்ப்’ கொள்கையின்படி தனியார் நிறுவனங்களும் எண்ணெய், எரிவாயு போன்ற எரிபொருட்களை கண்டறிந்து எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையிலேயே ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற இந்திய தனியார் நிறுவனங்கள் நிலத்திலும், கடலிலும் எண்ணெய் உற்பத்தியில் தற்போது ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு 2022ம் ஆண்டுக்குள் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியை ஓரளவு உயர்த்த வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்பட்டு வருகிறது. அதன்படி எரிசக்தி துறையில் தனியார் அதிகளவில் ஈடுபடும் வகையில் இந்தியா முழுவதும் 65 இடங்களில் சிறு மற்றும் நடுத்தர எண்ணை வயல்களை உருவாக்க கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரியில் ஏலம் விட்டது. அப்படிதான் நெடுவாசல், காவிரி டெல்டா உள்ளிட்ட இடங்களில் பல எண்ணெய் வயல்கள் தனியாருக்கு வழங்கப்பட்டது.

அதில் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. சுமார் 150 நாட்கள் நடந்த போராட்டம் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. போராட்டம் தீவிரமாக இருந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நெடுவாசலுக்குச் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டன. ஆதரவும் தெரிவித்தன. இந்தநிலையில், மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட எந்த இடத்திலும் மீத்தேன், கார்பன் காஸ் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் கூறினார். 

ஆனால், தற்போது “ஹெல்ப்’’ எனப்படும் ஒற்றை உரிமம் திட்டத்தில், இனி ஹைட்ரோ கார்பனை தனியாரே எடுத்துக்கொள்ள முடியும். இதற்கான திறந்தவெளி டெண்டர் விடப்பட்டு, ஏல நடைமுறை தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, காவிரி டெல்டாவில் ஆபத்தான நீரியல் விரிசல் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நெல்ப் முறையை மாற்றி, ஹெல்ப் என்ற ஒற்றை உரிமம் வழங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை மேலும் எளிதாக்கி புதிய கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, எண்ணெய் வயல்களை மத்திய ஹைட்ரோ கார்பன் இயக்குநரகமே அடையாளம் கண்டு, அதை அரசு அல்லது தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் வழக்கமான முறையை மாற்றியுள்ளது. அதன்படி, தேவைப்படும் இடங்களை தனியார் நிறுவனங்களே தேர்ந்தெடுக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. 

அதேபோன்று கச்சா எண்ணெய், மீத்தேன், ஷேல் ஆயில் மற்றும் காஸ் எடுக்க தனித்தனியாக லைசென்ஸ் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஹெல்இஎல்பி-ஓஏஎல்பி என்ற கொள்கைப்படி ஒரே உரிமம் பெற்றாலே போதும். அதை வைத்து எல்லாவித ஹைட்ரோ கார்பன்களையும் எடுக்க முடியும் என்ற வகையில் இந்த புதிய திருத்தத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியா முழுவதும் புதிய எண்ணெய் இருக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்த பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள சர்வதேச டெண்டர், ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் மூலமாக கடந்த ஜனவரி 19ம் தேதி வெளியிடப்பட்டது. 100 சதவீதம் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் உள்பட உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வரும் ஏப்ரல் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு வருவாய் பங்கீடு அடிப்படையில் ஆய்வு மற்றும் எண்ணெய், எரிவாயு உற்பத்தி பணிகளை தொடங்க வருகிற ஜூன் மாதம் அனுமதி அளிக்கப்படும். இதில் இமயமலை, கங்கை, காவிரி, கோதாவரி, தாமோதர், காம்பே, கட்ச் வடிநில பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதுச்சேரியில் மரக்காணம் முதல் கன்னியாகுமரி வரை 2,40,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான நிலம் மற்றும் கடல் பகுதிகள் காவிரி வடிநில பகுதியாக அறிவிக்கப்பட்டு, நிலத்தடி எரிபொருள் வள இருப்பு மண்டலமாக அடையாளம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் காலங்களில் இவற்றில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்படலாம். 

அதே போன்று, தமிழ்நாட்டில் ஒரு நிலப்பகுதி, 2 கடல் பகுதிகள் என புதிய பகுதிகளில் முதல்கட்டமாக 4,099 சதுர கி.மீ. பரப்பளவில் 24 கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி, கடலூர் மாவட்டம் தியாகவள்ளி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் வரையிலான 731 சதுர கி.மீ. நில பகுதியில் 10 கிணறுகள், புதுச்சேரி அருகே மரக்காணம் முதல் கடலூர் வரை 1,794 சசதுர கி.மீ. கடல் பகுதியில் 4 கிணறுகள், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த புஷ்பவனம் வரை 2,574 சதுர கி.மீ. கடல் பகுதியில் 10 கிணறுகள் என மொத்தம் 24 கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. 

மத்திய அரசின் இந்த கொள்கை மிக ஆபத்தானது, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், காவிரி டெல்டா பகுதிகள் வறட்சி அடையும், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் பாதிக்கும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் 65 திட்டங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதில், 24 திட்டங்கள் தமிழகத்திலேயே தொடங்கப்பட உள்ளது பெரும் பரபரப்பையும், விவசாயிகள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்தியுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் 10 கிணறுகள்: நிலப்பரப்பில் அமைய உள்ள ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அனைத்தும் கடலூர் மாவட்டத்தில் தோண்டப்படும். 
அமையும் இடங்கள்: குறிஞ்சிப்பாடி ஆலப்பாக்கம் ஊராட்சியில் ஒரு கிணறும், சாத்தப்பாடி ஊராட்சியில் ஒன்று உட்பட புவனகிரி பகுதியில் 6 கிணறுகளும், சிதம்பரம் பகுதியில் 3 கிணறுகளும் தோண்டப்படும். 

தற்போது புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களின் வழியாக சாயல்குடி, விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் இருந்து குமரி முனை வரை விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நடைமுறைப்படுத்த பணிகள் உள்ளன. இந்த படத்தில் இருப்பது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கிழக்கு கடற்கரைச் சாலை அருகே திருச்செந்தூர் – சாத்தான்குளம் வரை இத்திட்டத்தை நீட்டிக்க விவசாயத்தை பாதிக்கும் அளவில் பூமியைத் தோண்டும் கொடுமை.

#ஹைட்ரோ_கார்பன்
#Hydro_carbon
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22/03/2018

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...