Sunday, March 11, 2018

பஞ்சாபிக் கவிஞர் ‘அம்ரிதா பிரீதம்’



இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பஞ்சாபிக் கவிஞர் என புகழப்படுபவர் அம்ரிதா பிரீதம் (Amrita Pritam). இவரின் எழுத்துகள் பஞ்சாபி மொழியைத் தவிர இந்தியிலும் உள்ளது. கவிதை மட்டுமன்றி சிறுகதைகள், நாவல்கள், வாழ்க்கை வரலாறுகள் மற்றும் கட்டுரைகள் என நூற்றுக்கும் மேலான நூல்களைக் எழுதியுள்ளார்.
இந்தியாவின் பிரிவினைக்கு முன், அதாவது இன்றைய பாகிஸ்தானில் உள்ள கஜூரன்வாலாவில் 1919இல் பிறந்தவர் அம்ரிதா பிரீதம். இவரின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ஆச்சாரமான சீக்கிய மதப்போதகரும் ஆவார். அவரது வீட்டில் முஸ்லீம்களை ஒதுக்கும் முறையை சிறுவயதிலேயே அம்ரிதாவை எதிர்த்து நிற்க வைத்துள்ளது. தனது தாயை 10 வயதிலேயே இழந்தவர். தனது தாயைக் காப்பாற்றச் சொல்லி இறைவனிடம் பல முறை மன்றாடிய போதும் மனமிரங்காத இறைவன் மீது ஒருபோதும் அவர் நம்பிக்கை வைத்ததில்லை. தனது தாயின் மரணமும் அதனைத் தொடர்ந்த தனிமையும், வயதிற்கு பொருத்தமற்ற கடமைகளும், சலிப்பும் அவரை கவிதைகளிடத்தில் அடைக்கலம் கொள்ளச் செய்தது.
அவரது முதல் கவிதைத் தொகுப்புஅம்ரித் லெஹ்ரன்’ – மரணமில்லாத அலைகள் என்ற பெயரில் தனது பதினாறு வயதில் பதிப்பாக வெளிவந்தது. அதை தொடர்ந்து எழுதிய அம்ரிதா பிரீதம் 1943ஆம் ஆண்டிலேயே தனது 23வது வயதிலேயே ஆறு தொகுப்புகள் கொண்ட புத்தகமாக தனது படைப்புகளை வெளியிட்ட கவிஞராக அறியப்பட்டார். தொடக்கத்தில் காதல், சலிப்பு, தனிமை ஆகியவை மட்டுமே அவரது கவிதைகளை ஆட்கொண்டிருந்தது. பின்னர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்தபிறகு அவரது இலக்கிய உள்ளத்தை விரிவுபடுத்தியது. அவரது லொக் பீட்’ – மக்களின் மனவேதனைஎன்ற கவிதைத் தொகுப்பு அவரது பயணத்தின் முதல் அடியாக இருந்தது. மேலும் வங்கப் பிரிவினை, போர்க்கால பொருளாதார நிலை போன்றவை கொண்டுவந்த சொல்லொணாத் துயரங்கள் ஆகியவை அவரது கவிதைகளின் முக்கிய பாடுபொருள்களாயின. பெண்ணியக் கவிஞராகவும், இடதுசாரிக் கவிஞராகவும் படு துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் அவரது கவிதைகள் வெளிவந்தன. ஒரு செயற்பாட்டாளராகவும் அவர் இயங்க ஆரம்பித்தார். லாகூர் வானொலி நிலையத்திலும் சில காலம் பணியாற்றினார்.
அனைத்திற்கும் மேலாக 1947ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்திய நாட்டுப் பிரிவினையும் அதையொட்டி நடந்த படுகொலைகளும், வன்முறைச் சம்பவங்களும் அவரை மிகவும் உலுக்கிவிட்டது. ஒரு அகதி போல அவர் லாகூரை விட்டு டெல்லி வந்து வாழ்க்கையை நடத்தினார். அந்த காலக்கட்டத்தில், தனது 28 வயதில் ஒரு மோசமான திருமணம், கருத்தரிப்பு என அனைத்து வகையிலும் துயரத்தில் மூழ்கியிருந்த காலம். அவரது சொந்த துயரங்களும் அந்த காலகட்டத்தின் பொதுவான சமூகத் துயரமும் கலந்த அவரது நாவல்பின்ஜார்எலும்புக் கூடுவெளிவந்தது. அதன் பின் அவர் ஒரு இன்றியமையாத நாவலாசிரியராகவும் பஞ்சாபி, இந்தி இலக்கிய உலகம் வெளிப்படுத்தியது. டெல்லி வானொலி பஞ்சாபி சேவையிலும் பணியாற்றினார். பின்னர், ‘கால் சேட்னா’ – கால ஓர்மை, ‘அகயத் கா நிமாந்தரன்’ – அறியப் படாததின் அழைப்பு, காலா குலாப்’ – கருப்பு ரோஜா, ரஷிதி டிக்கெட்’ – ரெவின்யூ ஸ்டாம்புபோன்ற நாவல்கள் வந்தன.
இவருக்கு 1956 இல் சாகித்ய அகாடமி விருது, 1982 இல் ஞானபீட விருது, 2004 இல் பத்ம விபூஷண் விருது ஆகியன அவரைத் தேடி வந்தது.
அம்ரிதா பிரீதம், ப்ரீத்தம் சிங் எனும் ஜவுளி வியாபாரியின் மகனுக்கு 1936 ஆம் மணமுடிக்கப்பட்டு, இரண்டு மகன்கள் உள்ளனர். பின் 1960ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்து னர். சில ஆண்டுகள் புகழ் பெற்ற திரைப்பட பாடலாசிரியர் சாஹிர் லுதியான்வியோடு காதல் வாழ்க்கையில் இருந்துள்ளார். பின் 40 ஆண்டுகள் புகழ்பெற்ற ஓவியரும், எழுத்தாளருமான இம்ரோஜ் உடன் வாழ்ந்துள்ளார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு கடந்த 2005ஆம் ஆண்டு மறைந்தார்.


அம்ரிதா பிரீதம் கவிதைகள் சில…
தீராவலி
               ஒரு சிகரெட் புகைபோல
      மௌனமாய் உள்வாங்குகிறேன்
      சிகரெட்நுனி சாம்பல்போல
      மெல்லச் சுண்டி விடுகின்றேன்.

அந்நியம்
      என் நண்பனே
      அந்நியமாகிப் பேனவனே
      திடீரென்று ஒருநாள் வந்துநின்றாய்
      ஆச்சரியத்தில்
      காலம் என் அறையில் ஸ்தம்பித்து நின்றது
      மேற்கே மறைந்துகொண்டிருந்த சூரியனும்
      தயங்கி நின்றது
      மீண்டும் மீண்டும்
      காலை மீள்வதற்கு
      பணிக்கப்பட்ட சூரியன்
      அன்பணி மறந்து நின்றது
      பேரண்ட ஒருங்கு
தன் புகார்களைக் கூற ஆரம்பித்தது
வாரிஷ் ஷா
               வாரிஷ் ஷா
      இன்று வாரிஷ் ஷாவிடம் திரும்பினேன்
வாரிஷ் ஷா
நீங்கள் துயிலும் கல்லறையிலிருந்து எழுந்து பேசுங்கள்
நமது அன்பின் புத்தகத்தின்
அடுத்த பக்கத்தைப் புரட்டுங்கள்
பஞ்சாபின் ஒற்றை மகள் அழதது பொறுக்காது
நூலின் பக்கமெல்லாம் அழுது புலம்பின
உங்கள் பாடல்கள்
இன்றைக்கு ஒரு நூறு மகள்கள்
உம்மிடம் பேச அழுது நிற்கின்றனர்
வாரிஷ் ஷா
எழுங்கள் எளியோரின் நண்பரே எழுங்கள்
பஞ்சாபின் நிலையைப் பாருங்கள்
வயல்வெளிகளில் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன
ஜீனாப் நதி ரத்தவெள்ளமாய் ஓடுகின்றது
ஐந்து நதிகளிலும் சிலர் நஞ்சைக் கலந்து விட்டனர்
இப்போது அந்த நச்சுநீர்
நமது நிலமேல்லாம் பாய்ந்துகொண்டிருக்கிறது
எங்கு தொலைத்தோம் நம் புல்லாங்குழலை
எங்கே சென்ற காதல் பாடல்ளெல்லாம்
எப்படி மறந்தனர் புல்லாங்குழல் வாசிப்பை
நம் பஞ்சாபின் சகோதரர் அனைவரும்
நிலத்தின் மீது ரத்தம் மழையாய் பெய்தது
கல்லறையிலிருந்து ரத்தம் ஊற்றாய் கசிகின்றது
அன்பின் இளவரசிகள் கல்லறைகளில் இதயம் வெடிக்க
அழுது நிற்கின்றனர்.
இன்றைக்கு காவலர்களெல்லாம்
காதலையும் அழகையும் திருடுபவர்களாக ஆகியுள்ளனர்
வாரிஷ் ஷா போன்ற ஒருவரை
நாங்கள் எங்கே சென்று தேடுவது
வாரிஷ் ஷா.... உங்களிடம் தான் சொல்கின்றோம்.
உங்கள் கல்லறையிலிருந்து எழுந்து பேசுங்கள்
உங்கள் அன்பின் புத்தகத்தில்
புதியதோர் பக்கத்தைச் சேருங்கள்
வாரிஷ் ஷா....
சங்கடம்
      இன்றைக்குச் சூரியன் ஏதோ சங்கடத்தில் இருந்தது
      அது ஒளியின் ஜன்னலைத் திறந்தது
      பின்னர் மேகங்களின் ஜன்னலை மூடியது
      பின்னர் இருண்ட படிகளில் இறங்கிச் சென்றது
பாலம்
      நேற்று நீயும் நானும் கடைசிப் பாலத்தை எரித்து
      நமது பயணத்தை
      ஒரு நதியின் இருகரைபோல பிரித்து விட்டோம்
      ஓருடல் ஒருகரையின் தனிமையையும்
      மறுஉடல் மறுகரையின் தனிமையையும்
      பெறும் வகையில்
      நமது உடலை உதறிப் பிரிந்தோம்
பரணில் கிடக்கும் புத்தகம்
      நான் பரணில் கிடக்கும் ஒரு புத்தகம்
      ஒரு வணிக ஒப்பந்தமாக இருக்கலாம்
      இல்லை ஒரு பக்திப் பாடலாக இருக்கலாம்
      அல்லது காமசூத்திரத்தின் ஒரு அத்தியாயமாக இருக்கலாம்
      இல்லை அந்நியோன்னிமான உறவு ஒன்றின்
      உரையாடலாக இருக்கலாம்
      ஆனால் நான் இதில் ஏதும் இல்லை
      அப்படி இருந்திருந்தால் 
      என்னை யாரேனும் ஒருவராவது படித்திருப்பார்
      நான் 
      புரட்சியாளர்களின் அவை ஒன்றில்
      நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
      அந்த தீர்மானத்தின் 
      கையெழுத்துப் பிரதி
      காவல்துறையின் முத்திரைகூட இடப்பட்டுள்ளது
      ஆனால் ஒரு போதும் அமலாகாத தீர்மானம்
      அது ஒரு சம்பிரதாயம் என்ற வகையில்தான்
      எடுத்து வைத்துப் பேணப்படுகிறது
அடுத்த தலைமுறைக் கவலை
      இப்போது தம் அலகில் சிறு வைக்கோலோடு
      சிட்டுக் குருவிகள் மட்டுமே வருகின்றன
      எனது உடலின் மீது அமர்கின்றன
      பின் அடுத்த தலைமுறை குறித்து
      கவலை கொள்கின்றன
      அடுத்த தலைமுறை குறித்து கவலைப்படுவதுதான்
      எத்தனை உன்னதமானது
      சிட்டுக் குருவிகளுக்கு இறக்கைகள் உண்டு
      தீர்மானங்களுக்கு இறக்கைகள் இல்லை
      தீர்மானங்களுக்கு அடுத்த தலைமுறை இல்லை
எதிர்காலம்
      சமயத்தில்
      எதிர்காலத்தில் என்ன விதித்திருக்கிறது
      என்பதை
      இன்றே முகர்ந்துபார்க்க விழைவேன்
      ஒவ்வொருமுறை முகரும்போதும்
      கவலை என்னை சிதிலமாக்கும்
      ஒவ்வொருமுறை முகரும்போதும்
      பறவையின் எச்சம்போல எரியும் மனம்
      என் இனிய பூமிப்பந்தே 
      அதுவே உன் எதிர்காலம்
      நானே உன் இன்றைய நிலை
ராஜ்ஜியங்கள்
      மொத்தமே இரண்டு ராஜ்ஜியங்கள்தாம்
      முதலாவது எனைனையும் அவனையும் தூக்கி எறிந்தது
      இரண்டாதை நாங்கள் புறக்கணித்தோம்
      மேகமற்ற வெளிரிய நீலவானின் கீழே
      நான் எனதுடலின் மழையில் நனைந்து திளைத்தேன்
      அவன் தனது மழையில் நனைந்து நொந்தான்
      பல ஆண்டு காலத்தின் பெருவிருப்பை
      அவன் விஷத்தைக் குடிப்பதுபோல் குடித்தான்
      நடுங்கும் கரங்களால் என் கரம் பற்றினாள்
               வா! நாம் தலைக்குமேல் ஒரு கூரையைக்
கட்டுவோம்
      பார்! மேலும் முன்னோக்கிப் பார்!
      அங்கே உண்மைக்கும் பொய்க்கும் இடையே
      இருக்கும் வெற்றிடத்தைப் பார்!
சமகாலத்தவர்கள்
      ஏராளமான சமகாலத்தவர்கள் இருக்கின்றனர்
      ஆனால் எனக்கு நான் சமகாலத்தவர் அல்ல
      நான் இல்லாத என் பிறப்பு
      அன்ன வட்டிலில் ஓர் களங்கம் கொண்ட படையல்
      சதையில் சிறையுண்ட சதையின் தருணம்
      நாக்கெனும் தசை நுனியில்
      சில வார்த்தைகள் வரும்போது
      அவை கொல்லப்பட்டு விடுகின்றன
      அவ கொல்லப்படுவது தடுக்கப்பட்டால்
      அவை கீழிறங்கி வெள்ளைத்தாள் அடைகின்றன
      அங்கொரு கொலை நடந்தேறுகின்றது
      துப்பாக்கியின் வெடிப்பு
      அது ஹவானாவில் என்னைச் சுட்டுத் துளைத்தால்
      மீண்டும் ப்ராகிலும் சுட்டுத் துளைக்கின்றது
      ஒரு சிறு பொறியாய் புகை மிதந்து மேலேறுகின்றது
      எனது நான் எட்டுமாத குறைப்பிரசவ
      குழந்தையா மரிக்கின்றது
      என்றைக்கேனும் ஒருநாள் எனது நான்
      எனது சமகால மாந்தராய் ஆகுமா?
நான் மீண்டும் உன்னைச் சந்திப்பேன்
      நான் மீண்டும் உன்னைச் சந்திப்பேன்
      எங்கே எப்போது என்பதை
      இப்போது நான் அறியேன்
      உன் கற்பனை வானின்
      ஒரு ஓரத்து மேகப் பொதியாக
      அல்லது உன் ஓவியக் கித்தானில்
      ஒரு மர்மமான தூரிகை இழுப்பாக
      நான் உன்னை உற்று நோக்கலாம்
      ஒருவேளை உனது வண்ணங்கள்
      குழைந்து இணைந்து உருவாகும் 
      சூரியப் பேரொளியின் ஒரு கீற்றாக 
      உனது ஓவியத்தில் என்னைத் தீட்டிக் கொள்ளலாம்
      ஒருக்கால் பொங்கிப் பெருகும்
      ஊற்றாய் வடிவெடுக்கலாம்
      சிதறும் என் நீர்த்துளிகளாய் 
      பற்றி எரியும் உன்நெஞ்சில் படிந்து
      எனது குளுமையை உனக்களிக்கலாம்
      ஏதொன்றும் நானறியேன்
      இந்த வாழ்க்கை என்னை ஒட்டி என்னோடு 
      நடக்கும் என்பதற்கு
      ஏதொன்றும் நானறியேன்
      உடல் அழியும்போது அத்தோடு
      எல்லாம் சேர்ந்தழியும்
      ஆனால் நினைவுகள் அழிவில்லா
      அணுக்களின் இழைகளால் ஆனது
      நான் இந்தத் துகள்களை மீண்டும்
      இணைத்து இழையாக்குவேன்
      நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்

-நன்றி,
செம்மலர், மார்ச், 2018,

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11 -03-2018

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...