Thursday, March 22, 2018

புதிரான புதினும், சீன அதிபரான ஷீ ஜின்பிங்கும்

குழப்பத் தலைவர் என்று எல்லோரும் கருதுவதுண்டு. அவரைப் பற்றி சில சந்தேகங்களும், குழப்பங்களும் கொண்ட செய்தியும் உண்டு. ஒரு முறை ஆஸ்திரேலியாவில் நடந்த உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் சிறிதும் நாகரிகமற்ற முறையில் எனக்கு தூக்கம் வருகிறதென்று கூறி உடனே ரஷ்யா செல்லவேண்டுமென்று புறப்பட்டு சென்றுவிட்டார். பெண்களுடனான தொடர்பு, ஊழல் குற்றச்சாட்டுகள், பணம் சம்பாதித்துவிட்டார் எனப் பல புகார்கள் உண்டு. மீண்டும் நான்காவது முறையாக வெற்றி பெற்றதே கேள்விக்குறி என்று ரஷ்யாவில் பேசிக்கொள்கின்றனர்.
அதே போல சீன அதிபரான ஷீ ஜின்பிங் இனி தனது வாழ்நாள் முழுவதும் நிரந்தர அதிபராக நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்து தன்னை அறிவித்துக் கொண்டார். தமிழகத்தில் தான் சிலர் நிரந்தர முதல்வர், நிரந்தர பொதுச் செயலாளர் என்று அபத்தமாக பேசிக் கொள்வதுண்டு. அது போல் இவரது கூற்று எப்படி ஒரு நாட்டுக்கு நெறிமுறையாகும்.
ரஷ்யாவின் அதிபராக மீண்டும் விளாடிமர் புதின் வெற்றி பெற்றதற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை மேற்கத்திய தலைவர்கள் யாரும் புதின் வெற்றிக்கு வாழ்த்தவில்லை.
"வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரஷ்யாவுடன் நல்ல உறவு நிலவி வருவதாக" சீன அதிபர் ஷீ ஜின்பிங் கூறியுள்ளார்.
கசகஸ்தான், பெலாரஸ், வெனிசுவேலா, பொலிவியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளும் புதினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் மேற்கத்திய தலைவர்கள் யாரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஞாயிறன்று நடைபெற்றஅதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றிப்பெற்றார். அவரின் இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது; வெற்றியை தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் ரஷ்யாவின் அதிபராக செயல்படுவார் விளாடிமிர் புதின்.
1999ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவை பிரதமராகவோ, அதிபராகவோ ஆண்டு வரும் புதின், 76 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார் என அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.
முக்கிய எதிர்கட்சி தலைவரான அலக்சே நவால்னி தோல்வியை சந்தித்துள்ளார்.
தேர்தலின் முதல்கட்ட முடிவுகளை தொடர்ந்து மாஸ்கோவில் நடைபெற்ற பேரணியில் பேசிய புதின், "கடந்த சில ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட சாதனைகளை வாக்காளர்கள் அங்கீகரித்துள்ளனர்" என தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் இடைவெளியில், இரண்டு மிகப் பெரிய நாடுகளில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது. சீனா, ரஷ்யா. பல ஒற்றுமைகள் பளிச்சென்று தெரிகின்றன. இரண்டுமே ‘பொதுவுடைமை’ நாடுகள். இரண்டிலுமே, தற்போதைய அதிபரே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவைப் போல் ஜனநாயகக் குடியரசு ஆட்சி இந்த இரு நாடுகளிலுமே இல்லை. அதிலும் சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறைதான். ஜனநாயக உரிமை கேட்டு இளைஞர்கள் வீதிக்கு வந்து போராடினால், தயவு தாட்சண்யமின்றி ‘புல்டோசர்’ ஏற்றிக் கொல்லத் தயங்காத ஆட்சி.
இது போதாதென்று தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங், நாட்டின் ‘நிரந்தர’ அதிபராகத் தொடர்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டார். எந்தவொரு சலசலப்போ, முணுமுணுப்போ இல்லை. 
இதே நிலைமை ஏதேனும் ஒரு சிறிய நாட்டில் நடந்து இருந்தால்...? மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்காக, அமெரிக்கா, சீனா, ரஷ்யா மூன்றும் உள்ளே பாய்ந்து இருக்கும். ஐக்கிய நாடுகள் சபையும் தன் பங்குக்கு சகட்டு மேனிக்கு தடைகளை விதித்து இருக்கும். இது எதுவுமே சீனா விஷயத்தில், நடந்தது இல்லை; நடக்கவில்லை; நடக்கப் போவதும் இல்லை.
இரு முறைக்கு மேல் அதிபராக முடியாது என்று இருந்த சட்டத்தை, தன் ஆணைப்படி நடக்கிற நாடாளுமன்றம் மூலம் மாற்றி அமைத்து, சீனாவின் முடிசூடா மன்னராகத் தன்னை வரித்துக் கொண்டு விட்டார் ஜி ஜின்பிங்.
எப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார தாராளமயமாக்கலில் இறங்கினார். அப்படியும் சீனாவின் பொருளாதாரம் அத்தனை வலுவாக இல்லை. சீனாவில் நகரம் - கிராமம் இடைவெளி பெருகி வருவதாகவும், கிராமப்புறப் பொருளாதாரம் நாளுக்கு நாள் நலிவடைந்து போய்க்கொண்டு இருப்பதாகவும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் தேய்ந்து கொண்டே வருவதும் தெரிகிறது. ஆனாலும் ஜின்பிங், ஆரவாரமாக நிரந்தர அதிபர் ஆகிறார்.
நான்காவது முறையாக வெற்றி பெற்று அடுத்த 6 ஆண்டுகளுக்கு ரஷ்ய அதிபர் பதவியைத் தன்னகத்தே வைத்துக் கொண்டு இருக்கிறார் விளாடிமிர் புதின். சீனா அளவுக்கு இல்லை என்றாலும், ரஷ்யாவிலும், ஜனநாயக நெறிமுறைகள் இன்னமும் முழுமையாக செயல்பாட்டில் இல்லை. தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல், எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது?
சதுரங்க விளையாட்டில் உலக ‘சாம்பியன்’ ஆகத் திகழ்ந்த ரஷ்ய வீரர் ‘கேரி காஸ்பரோவ்’, இதனை ‘தேர்தல்’ என்று அழைப்பதையே எதிர்க்கிறார். "ரஷ்யாவில் பதிவான ஒரே ஒரு நேர்மையான ஓட்டு - புதின் உடையது தான்" என்கிற காஸ்பரோவ், ரஷ்யாவில் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் தலைவராகவும் இருக்கிறார்.
இருப்பினும் புதினின் சில பொருளாதார நடவடிக்கைளும் அவரது வெற்றிக்கு கைகொடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஹட்ரோகார்பன் போன்றவற்றை காட்டிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு பெரு நிறுவனங்களே நாட்டின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ரஷ்ய அரசின் மொத்த கடன் ஜிடிபியில் 15 சதவீதமாகவே உள்ளது.
இரு நாட்டு அதிபர்களுமே, ஆக்கிரமிப்பில் நாட்டம் கொண்டவர்களாய், அத்துமீறித் தாக்குதல் நடத்துவதை ஆதரிப்பவர்களாய் இருப்பதுதான் மிகப் பெரிய சோகம். ‘பனிப் போர்' காலம் முடிவுற்ற பின், ‘சோவியத் யூனியன்' சிதறுண்ட பிறகு, சில பத்தாண்டுகளாக ‘அடக்கி வாசித்த’ ரஷ்யா, மீண்டும் தனது ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டது. உக்ரைன், சிரியா போன்றவை எடுத்துக்காட்டுகள்.
சீனாவைப் பற்றியோ, சொல்லவே வேண்டாம். வடகொரியா, பாகிஸ்தான், தென்சீனக் கடல் என்று அங்கெங்கினாதபடி உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கிவிட்டது.
இந்த இரண்டு நாடுகளுமே நமக்கு அண்டை நாடுகள் தான். எனவே நமக்கு தான் நேரடி பாதிப்பு ஏற்படுகிறது. வறுமை ஒழிப்பு, தொழில் வளர்ச்சி, கட்டுமானப் பெருக்கம், கல்வி, சுகாதார மேம்பாடு ஆகியவற்றுக்குச் செல்ல வேண்டிய நிதியை, ‘பாதுகாப்புக்கு’ ஒதுக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் ஆளாகிறோம்.
உலக அமைதி, மண்டல ஒத்துழைப்பு போன்ற சொற்கள் எல்லாம், பொருள் இழந்து போய் நீண்ட காலமாகிவிட்டது. சர்வதேச அமைப்புகள் எல்லாமே, வல்லமை பொருந்திய நாடுகளின் கைப்பொம்மையாக, அவர்களின் ஏவலுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-03-2018

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...