Monday, March 26, 2018

*ஈரோடு திமுக மாநாட்டில் தமிழக நதிநீர் சிக்கல்களை குறித்து பேசியதன் சுருக்கம்*.

*மாட்சிமைக்குரிய செயல்தலைவர் தளபதியார்* அவர்களே,
கழக முன்னோடிகளே, கழகத் தோழர்கள் அனைவருக்கம் எனது வணக்கங்கள்.

இந்த மாநாட்டில் எனக்கு வழங்கப்பட்ட தலைப்பு "*தமிழக நதிநீர் சிக்கல்கள்*". நேரடியாக தலைப்புக்கு வந்துவிடுகிறேன் தோழர்களே!!
தோழர்களே!!
*தமிழக மக்கள் அறிந்திடாத நதிநீர்ப் பிரச்சனைகள்* ஏராளம் உள்ளது. 
காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல், சிறுவாணி போன்ற பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டன என்பதை அறிவோம். ஆனால், இன்னும் அறியப்படாத பல தமிழக நதிநீர் தாவாக்கள் தமிழக மக்களின் கவனத்திற்கு வராமல் அரசின் கோப்பில் மட்டுமே பல ஆண்டுகளாக கேள்விக்குறியாக உள்ளன. அவைகளில் மாவட்ட வாரியாக சில பிரச்சனைகளை கூறுகிறேன்.

- கன்னியாகுமரி மாவட்டத்தில் 1963இல் திறக்கப்பட்ட நெய்யாறு அணையை கேரளம் மூடிவிட்டது. இதனால் விளவன்கோடு பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் விவசாயம் கேரளத்தின் செயலால் பாதிக்கப்பட்டுள்ளது.
- நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே 1989இல் கட்டப்பட்ட அடவிநயினார் அணையை இடிக்க கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கடப்பாளை, மண்வெட்டியோடு வந்தார். அங்கும் நதிநீர் வரத்து தடுக்கப் பட்டுள்ளது.
- நெல்லை மாவட்டம், சொக்கம்பட்டி அருகே அமைந்த செண்பகவல்லி அணையைத் தமிழகத்திற்குத் தெரியாமல் கேரள அரசு ஊழியர்கள் நமது எல்லைக்கே வந்து 1994ஆம் ஆண்டு மார்ச் 14இல் இடித்துத் தள்ளினர். இதைப் பற்றி 19 ஆண்டுகள் ஆகியும் தமிழக மக்களுக்குத் தெரியவில்லை.
- நெல்லை மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் அருகே உள்ளார் திட்டம் நிறைவேற்றுவதில் கேரளம் முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்தவித முயற்நீநீசியும் எடுத்து வருவதாகத் தெரியவில்லை.
- விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் அருகே ரூ.300 கோடி மதிப்பீட்டில் அழகர் அணை திட்டம் 50 ஆண்டுகளாக அப்பகுதி மக்களால் போராடியும் கேரளத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. 1970இல் இதற்கான ஆய்வுப் பணிகளும் நடந்தன. இதனால் வானம் பார்த் வறட்சியான கரிசல் பகுதிகள் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர் பாசன வசதி பெறும். சொல்லி என்ன பயன்? திட்டம் நிறைவேறுவதாகத் தெரியவில்லையே!
Image may contain: indoor
- தேனி மாவட்டத்தில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் ஆலடி அணை கட்ட 1970இல் திட்டமிடப்பட்டது. இதனால் பெரியகுளம், நிலக்கோட்டை, திண்டுக்கல் வரை பாசன வசதி பெறும். இதற்கும் கேரளம் அனுமதி தராமல் புறக்கணிக்கின்றது.
- கோவை மாவட்டத்தில் தமிழகம் 130 கோடி ரூபாய் செலவில் கட்டிய ஆழியாறு – பரம்பிக்குளம் முறையாகச் செயல்பட்டால் 24 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோன்றதுதான் லட்சகணக்கான ஏக்கருக்குப் பயன் தரும் பாண்டியாறு – புன்னம்புழா திட்டம். இரண்டு பிரச்சினைகளிலும் கேரளம் தொடர்ந்து பாராமுகம் காட்டி வருகிறது.
இப்படி தென்மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் அண்டை மாநிலங்களுடன் பிரச்சனை உள்ளது.
இது மட்டுமல்லாமல் தோழர்களே,
மத்திய அரசு பரிந்துரைத்த திட்டங்களான,
1. மேற்கு நோக்கி கேரளத்தில் அரபிக் கடலில் பாயும் நதிகளின் உபரி நீரைத் தமிழகம் திருப்பும் திட்டம் – 1973இலிருந்து விவாதத்தில் உள்ளது.
2. கேரளத்தில் இருக்கும் அச்சன்கோவில் – பம்பை – தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறோடு இணைப்பு
3. பம்பை – கங்கை இணைப்பு ஆகிய திட்டங்களுக்கு கேரளம் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது.

இந்த மூன்று திட்டங்களும் சாத்தியமானது என வல்லுநர் அறிக்கைகள் மத்திய அரசுக்கு வழங்கியும் கேரளத்தின் பிடிவாதத்தால் நிறைவேற்ற முடியவில்லை.
இது மட்டுமா தோழர்களே!!! நந்தி மலையில் உற்பத்தியாகி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போன்ற 5 மாவட்டங்களில் 30 லட்சம் ஏக்கரில் பாசன வசதி தரும் தென்பெண்ணையில் கர்நாடகமும், ஆந்திரமும் பிரச்சினை செய்கின்றன.
பொன்னியாறு, தெலுங்கு கங்கை, திருவள்ளூர் மாவட்டத்தில் 6,125 ஏக்கர் பாசன வசதி பெறும் கொற்றலை ஆற்றுத் தண்ணீர் வராமல் ஆந்திரம் தடுப்பு அணைகளைக் கட்டுகிறது. பழவேற்காடு ஏரிப் பிரச்சினையில் தொடர்ந்து ஆந்திரம் சிக்கலைத் தருகிறது. தமிழக மீனவர்களும் பழவேற்காடு ஏரிப் பிரச்சினையில் பாதிக்கப்படுகின்றனர்.
தோழர்களே!!! கேரளத்தில் நீர் வளம், வன வளம் அதிகம். கர்நாடகத்தில் நீர் வளம், தாதுவளம் அதிகம். ஆந்திரத்தில் நீர்வளம், தாதுவளம் அதிகம்.
தமிழகத்தில் நீர்வளம் குறைவு. ஆனால் தமிழகத்தில் மனித ஆற்றல் அதிகம். நம்மிடம் மின்சாரம், மணல், அரிசி, காய்கறி எனப் பல அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொண்டு, கூட்டாட்சி அமைப்பின் அடிப்படை மறந்து அண்டை மாநிலங்கள் பிடிவாதமாக இருப்பது கவலையைத் தருகிறது.
இவ்வாறு இந்தியாவில் மாநிலங்களுக்கிடையே நதிநீர் பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் உள்ளன. ஆனால் பன்னாட்டு அளவில் நாடுகளின் நதிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. சில சான்றுகள்: ஆப்பிரிக்காவில் எகிப்து நதி பிரச்சினை குறித்து தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் இடையே ஐக்கிய நாடுகள் மத்தியஸ்தத்தில் பேசித் தீர்த்தன.
தோழர்களே!!! அமெரிக்காவில் டெலவர் நதி, ஆஸ்திரியாவுக்கும் – துருக்கிக்கும் டான் நதி, ஜெர்மனிக்கும் – பிரான்சுக்கும் ரைன் நதி, ஆப்பிரிக்காவில் நைஜர், செனகல், இஸ்ரேல் – பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கிடையே ஜோர்டான் நதி, துருக்கி – சிரியா – இராக் வழியாக பாயும் யூப்ரடீஸ் போன்ற நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் அஸ்வான் அணைக்கட்டுப் பிரச்சினையில் சூடானுக்கு சாதகமாகவும் (ஆயக்கட்டுப் பகுதி) கொலம்பியா நதிநீர்ப் பிரச்சினையில் அமெரிக்கா – கனடா ஒப்பந்தம் மூலமும் இவ்வாறே தீர்க்கப்பட்டன.
நேபாளத்திலிருந்து இந்தியா வழியாகச் செல்லும் கங்கை நதியின் பராக்கா தடுப்பு அணை சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டபோது வங்கதேசம் மிகவும் பிரச்சினை செய்தது. அந்நாட்டோடு பேசித் தீர்க்கப்பட்டது.
உலக அளவில் பல நதிநீர்ப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்போது, இந்தியாவில் ஒரு மாநிலத்துக்கும் இன்னொரு மாநிலத்துக்கும் இடையே உள்ள நதிநீர்ப் பிரச்நீசினையைத் தீர்க்க தாமதமும், பிடிவாதமும், தேவையற்ற சச்சரவுகளும் ஏன் என்று தெரியவில்லை தோழர்களே!!!
நேரு ஆட்சிக் காலத்தில், ஹிராகுட் அணை, தாமோதர் பள்ளத்தாக்கு திட்டத்தில் மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களுக்கிடையே தகராறு எழுந்தது. அப்போது சட்டம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர், கண்டிப்போடு அணுகி அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்தார். அதேபோன்று ஒடிசா, மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கிடையே ஏற்பட்ட நதிசிநீர்ப் பிரச்சினை அம்பேத்கர் நடந்து கொண்ட கண்டிப்பான முறையில் தீர்த்து வைக்கப்பட்டது. அம்மாதிரியான கண்டிப்பான அணுகுமுறை இப்போது ஏன் இல்லாமல் போய்விட்டது?
தோழர்களே!!!
ஹார்மன் கோட்பாடு, ஹெல்சிங்கி கொள்கை ஆகியவை சர்வதேச நதிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பயன்படுகிறது. இருதரப்பும் பேச்சுவார்த்தை, சமரசம், சமாதானம், விசாரணை, சம்மதம், பின் நீதிமன்ற முடிவு அல்லது மற்ற இருதரப்பும் ஒப்புக் கொள்கின்ற அமைதியான வேறு வழிகளைக் கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
1966இல் ஆகஸ்டு 20 அன்று ஹெல்சிங்கியில் நடைபெற்ற நதிநீர் மாநாட்டில் ஐ.நா. மன்றமும், சட்ட வல்லுநர்களும் கலந்து கொண்டு நதிநீர் தாவாக்களைத் தீர்க்க முக்கிய முடிவுகளை எடுத்தனர். அவை:
1. நதிநீர் வடிநிலப் பகுதி உள்ள ஆறுகள், ஏரிகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பார்க்க வேண்டும்.
2. உடன்பாடு, பாத்தியம், பழக்கவழக்கங்கள் அடிப்படையில் நதிநீர்ப் பிரச்சினையில் தீர்வு காண வேண்டும்.
3. ஆறுகள் பாயும் அனைத்துப் படுகைப் பகுதிகளுக்கும் ஆற்றின் மீது உரிமை உண்டு.
4. நீர்ப் பகிர்வுக்கு உண்மையான விவரங்களை கொண்டு தீர்வு மேற்கொள்ள வேண்டும்.
5. ஒரு நாட்டின் உரிமையில் மற்ற நாடு குறுக்கீடு செய்யக் கூடாது.
தோழர்களே!!! நான் நதிகள் தேசியமயமாக்கல், நதிகள் இணைப்பு குறித்து தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கடந்த 2012 பிப்ரவரி 27ஆம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் தங்களுக்கு அக்கறை இருப்பதாக கூறி வரும் மத்திய அரசு இதுவரை அதற்கான ஈடுபாட்டை காட்டவில்லை.
நதிநீர் இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த நதிநீர் இணைப்புக்கான சிறப்பு உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும். அக்குழுவுக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் தலைமை வகிக்க வேண்டும். குழுவில் மத்திய நீர்வளத் துறை செயலர், மத்திய வனம் – சுற்றுச்சூழல் துறை செயலர், மத்திய நீர் வள ஆணையச் செயலர், தேசிய நீர் மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் – செயலர் உள்பட 15 பேர் இடம் பெற வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இக்குழு கூடி திட்ட அமலாக்கம் பற்றிய முடிவுகளை ஆராய வேண்டும். ஆண்டுக்கு இருமுறை அதன் அறிக்கையை மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்ய வேண்டும். நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றும்போது பல கட்டங்களில் திட்டமிடுவது, அமல்படுத்துவது, நிறைவேற்றுவது ஆகிய பணிகளை நீறப்புக் குழு மேற்கொள்ள வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள் ஆகும். இந்தப் பரிந்துரைகளை ஓராண்டாகியும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. எனவே உடனே நிறைவேற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.
தோழர்களே!!! 
நதிகள் இணைப்பு நடவடிக்கைக்கு தமிழ்நாடு, ஆந்திரம், பீகார், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் போன்ற பல மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் எதிர்த்தன.

தமிழகத்தில் தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் நடைமுறைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதுதான் தமிழ்நாட்டின் முதல் நதிகள் இணைப்புத் திட்டமாக இருக்கும்.
தோழர்களே!!! இந்த நதிகள் இணைப்புத் திட்டம் செயல்வடிவம் பெற்றால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும். இதற்கு வழியமைக்கும் வகையில் கனடியன் அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படும் நீர், மணிமுத்தாறு கால்வாய் வழியாக, சாத்தான்குளம், திசையன்விளை சென்றடையும். கேரளத்தில் மேற்கு நோக்கிச் செல்லும் நதிகள் இணைக்கப்பட்டால், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, கோவை, ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகள் பாசன வசதி பெறும். கங்கை – காவிரி நதிகளுடன் தாமிரபரணி வரை இணைத்து கேரளத்தில் ஓடும் அச்சன்கோவில் – பம்பை நதிகளை வைப்பாற்றுடன் இணைக்க வேண்டும் என்பது உச்சசிசிசிநீதிமன்ற மனுவின் சாரம்.
கேரளத்தில் ஆறுகளில் நீர்வளம் 2,500 டி.எம்.சி. அதிகம். இதில் கேரளம் பயன்படுத்துவது வெறும் 600 டி.எம்.சி.தான். மீதி கடலுக்குச் செல்கிறது. அதில் 400 டி.எம்.சி.யை தமிழகத்துக் கொடுக்க மறுக்கிறது. இது என்ன நியாயம்? இதில் பல நீர் பிடிப்புப் பகுதிகள் தமிழக எல்லையையொட்டி உள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இதை ஐ.நா. அறிக்கைக்கூட எச்சரித்துள்ளது. பள்டைக் காலத்து தமிழகம் நீர் நிர்வாகத்தில் வளமாக இருந்ததால் கல்லணை, ஏரிகள், குளங்கள் அமைந்தன. இன்று ஏரிகள், குளங்கள் வீட்டு மனைகளுக்காக கபளீகரம் செய்யப் படுகின்றன.
தமிழகத்தில் 1947ல் நாடு விடுதலை பெற்ற போது 60,000 ஏரி, குளங்கள், நீர் நிலைகள் இருந்தன. சுயநலப் போக்கோடு இந்த குளங்களை சமூக விரோதிகள் கபளீகரம் செய்துவிட்டனர். இதில் பாதியளவு எண்ணிக்கையான நீர்நிலைகளே தற்போது உள்ளது. தமிழக அரசு பொதுப் பணித் துறை ஒப்புக்கு பராமரித்து வரும் ஏரிகள் 39,202 என கணக்கில் உள்ளது. 18,789 நீர்நிலைகள் நூறு ஏக்கர் பரப்பில் அப்போது அமைந்திருந்தது. உள்ளாட்சி அமைப்புகள் 20,413 ஏரிகள், குளங்கள், நீர் நிலைகளை தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கிறது.
ஆனால், இவையாவும் கணக்கில் மட்டுமே உள்ளதே அன்றி ஆயக்காட்டுதாரர்களுக்கு பயன்படுத்தும் அளவில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குடிமராமரத்துப் பணிகளும், கடந்த 40 ஆண்டுகளில் சரியாக நடத்தப்படவில்லை. இயற்கை வழங்கிய நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் இதற்கான மேலாண்மை கொள்கையும் இன்றைக்குள்ள சூழ்நிலையில் வகுக்க வேண்டுமென்றும் மூன்று மாதத்திற்கு முன்னால் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதையும், தமிழக அரசு அந்த கடிதத்தின்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய ஆணையை பெற சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளேன்.
தோழர்களே!!
மதுரை, சென்னை மாநகரங்களைச் சுற்றி 500 ஏரிகள் - குளங்கள் காணாமல் போய்விட்டன. பழவேற்காடு ஏரியை ஆந்திர அரசு சிறிது சிறிதாக அபகரித்துக் கொண்டது. வீராண ஏரியும் சரியாகப் பராமரிப்பு இல்லை.

இன்றைக்கு தமிழகத்தில் 18,789 பொதுப்பணித்துறை ஏரிகள், 29,484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் என்ற புள்ளிவிபர கணக்கில் தமிழக நீர் நிலைகள் உள்ளன. நிலத்தடி நீரும் மிகவும் குறைந்துவிட்டது. விவசாய சாகுபடி நிலங்களும் குறைந்துக்கொண்டே வருகின்றன. நீர் நிலைகளில் நீரில்லாமல் நிலத்தடி நீரும் குறைந்துவிட்டதால் 1.10 கோடி ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளன.
இருக்கின்ற நீர் நிலைகளை தூர் வாராமல் மதகுகளை சரிவர பழுது பார்க்காமல், நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்வதை தடுக்காமல் இருந்த நிலையில் நீர் நிலைகளுடைய பயன்பாடு குறைந்துவிட்டது.
மணல் திருடர்கள் ஆறுகளிலும், ஏரிகளிலும் உள்ள மணலை கொள்ளை அடித்ததனால் நீர் வரத்துகளெல்லாம் குறைந்துவிட்டன. இயற்கையின் அருட்கொடையான அந்த நீர் நிலைகளை நாம் சரிவர பாதுகாக்காமலும் ஆயக்காட்டு நலன்களை புறந்தள்ளியதால் இன்றைக்கு இவ்வாறான கேடுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.
. மன்னராட்சியில் கூட மக்களுடைய பங்களிப்பில் குளங்களும், நீர் நிலைகளும் வெட்டப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டது. அது அக்காலம் இன்றைக்கு நாம் ஓட்டுப்போட்டு அனுப்பியவர்கள் இயற்கை வளங்களைச் சுரண்டக் கூடிய கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவாளர்களாக உள்ளனர். மனிதர்கள் பூமியில் தோன்றலாம். சில காலங்களில் வாழ்ந்து மடியலாம். ஆனால் நாகரீகத்தின் தொட்டிலான நதிகள் என்றைக்கும் நிரந்தரமானது. அதை தாயை வணங்குவதைபோல நதிதீரங்களை வணங்கி பாதுகாப்பதுதான் மானிடத்தின் அடிப்படை கடமையாகும்.
தோழர்களே!!! 1965-2000க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்த 37 சதவீத குளத்து நீர்ப் பாசனங்கள் அழிந்துவிட்டன. தமிழ்நாட்டில் மொத்த 39,402. இதில் பல ஏரிகள் காணாமல் போய்விட்டன.
இந்தியாவில் ஓடும் நதிகளின் நீர்வளத்தில் 20 சதவீதம் மட்டுமே மக்கள் பயன்பாட்டுக்கு உள்ளது. மீதம் 80 சதவீதமும் கடலில் வீணாகக் கலக்கிறது. அதில் நாற்பது சதவீத நீரை முறையாகப் பயன்படுத்தினால் சுமார் 2,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது நதிகள் இணைப்வு நிபுணர்களின் வாதம்.
தோழர்களே!!! தேசிய நதிகளை இணைப்பதன் மூலம் பாசன வசதி, உள்நாட்டில் மீன் பிடித் தொழில் மேம்படும், நீர்வழிப் பயண வசதி ஏற்படும், குடிநீர் வசதி, நீர்மின் திட்டங்களைச் செயல்படுத்த முடியும். இவற்றின் மூலம் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.
உலக மக்கள் தொகையில் 17 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். நீர் வளத்தில் 4 விழுக்காடு, உலக நிலபரப்பில் 2.6 விழுக்காடு மட்டுமே இந்தியாவுக்குச் சொந்தமானது. நீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. மக்கள் தொகைப் பெருக்கம், நகரமயமாக்கல், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஆகியவற்றால் நீர்த் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது. பருவநிலை மாற்றம், நிலத்தடி நீர் குறைவு ஆகியவற்றால் நீர் வளம் குறைந்து வருகிறது. நீரைத் தனியாருக்குத் தாரை வார்க்கவும் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
தோழர்களே!!! இனிமேலாவது நீர் மேலாண்மையை விழிப்புணர்வோடு அணுகி நாம் செயல்பட வேண்டும். நதிநீர்ப் பிரச்சினைகளால் உலகப் போர் ஏற்படும் என்று பலர் சொல்கின்றனர். தமிழகத்தில் அறிந்தும் அறியாமலும் நதிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வந்தால்தான் தமிழகம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்.
ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காவிரி கண்காணிப்புக் குழு என்று 9 பேரை கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது வேதனையைத் தருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தென்ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நீரை ரேசனில் மக்களுக்கு வழங்குகிறார்கள். தண்ணீர்தானே என்று நினைக்காதீர்கள். நீர் என்பது திரவத் தங்கம். அதை சரியாக பயன்படுத்துவது மட்டுமின்றி நீர் மேலாண்மை வேண்டும். இது குறித்து, தளபதி அவர்கள் உச்சநீதிமன்றத்தில் என்னுடைய வழக்கையொட்டி நதிகளை தேசியமயமாக்கி இணைக்க வேண்டுமென்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஐ.நா. மன்றத்தின் அறிக்கையும், தமிழகம் எதிர்காலத்தில் பாலைவனம் ஆகிவிடும் என்று எச்சரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நதிநீருக்காக அண்டை மாநிலங்களை நம்பி இருக்கவேண்டிய நிலைதான் உள்ளது. தாமிரபரணி நதி மட்டும் தமிழகத்தின் பொதிகை மலையில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் கடலில் கலக்கிறது. மற்ற அனைத்து நதிகளும் அண்டை மாநிலங்களை நம்பி தான் உள்ளது. இப்படியான நிலையில் நீர்ப் பாதுகாப்பு மேலாண்மையை காக்க புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும். நாளை தளபதி தலைமையில் அமையவிருக்கின்ற கழக ஆட்சியில் இதை சரிவர மேற்கொள்ள மாநிலத்தில் நீர்வளத்துறை என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்க சரியான அமைச்சரின் தலைமையில் இயங்க வேண்டுமென்று கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி, வணக்கம்.
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
25-03-2018

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...