Tuesday, March 6, 2018

*பொதுடமைவாதி கோவில் பட்டி சோ. அழகிரிசாமி நினைவு நாள்*





-----------------------
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராக நீண்டகாலம் 1967லிருந்து 1991 வரை (ஓர் தேர்தலில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தார்) இருந்தவர். கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய கம்யூனிச கட்சி சார்பாக ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக கூட்டணியில் இருந்தபோது 1967 தேர்தலில் இவருக்கு மட்டும் தான் அண்ணா நேரடியாக வந்து கோவில்பட்டியிலும், எட்டயபுரத்திலும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. பாட்டாளி வர்க்கத்தின் நாயகன் என்று அண்ணா,சோ. அழகிரிசாமியை அழைத்தது உண்டு. 

எனக்கு நெருங்கியவர். சென்னை சட்டக் கல்லூரியில் படிப்பதற்கான இடம் கிடைக்க உதவினார். அது மட்டுமல்லாமல், இவருடைய சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறையில் சில நாட்கள் தங்கியதும் உண்டு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி   ஏட்டின் அலுவலகம் சென்னை பிராட்வேயில் இருந்தது. அந்த சிகப்பு கலர் செங்கல் தெரியும்  கட்டிடம் இன்றைக்கும் அங்கே உள்ளது. அங்கு என்னை அழைத்து செல்வார்.மையால் எழுதும் விதவிதமான பேனாக்கள் விற்கும் கடை அங்கே இருந்தது. அங்கிருக்கும் பேனாக்களை சில சமயம் எனக்கு வாங்கிக் கொடுத்ததும் உண்டு. அவரும் அங்கே தான் பேனாக்களை வாங்குவார். அங்கு ஒரு மருத்துவரும் தனது மருத்துவமனையை நடத்தி வந்தார் (பெயர் நினைவில்லை). அவரிடம் தன்னுடைய உடலையும் பரிசோதித்துக் கொள்வார். இவரை குறித்து பல பதிவுகளை எனது சமூக வலைத்தளங்களில் எழுதியுள்ளேன். இன்றைக்கு அவருக்கு 9வது நினைவு தினம். 

சென்னையில் அவருடைய கட்சியின் தலைமையகமான தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்திற்கும் இவருடன் சென்றதுண்டு. சோ. அழகிரிசாமி மூலமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ப.மாணிக்கம், ஆர். நல்லகண்ணு, கோபு, தியாகராஜன், ஆதிமூலம் போன்ற முக்கியத் தலைவர்களுடன் அறிமுகமானேன். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக 1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் சோ. அழகிரிசாமி போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பாக நான் போட்டியிட்டேன். இருவரும் எதிரெதிர் முனையில் இருந்த போதும் பிரச்சாரங்களுக்கு செல்லும்போது சந்தித்துக் கொண்ட போதும் என்னிடம், இளைஞராக போட்டியிடுகிறாய். நீ வெற்றி பெற்றாலும், நான் வென்றாலும், எனக்கு மகிழ்ச்சி தான் என்று பெருந்தன்மையுடன் வாழ்த்தும் சொன்னார். 

அந்த சமயத்தில் எட்டயபுரத்தில் இவருடைய இல்லத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றபோது எதிர்முனையில் நான் போட்டியிட்டாலும் என்னை வரவேற்று இவருடைய துணைவியார் தாயம்மாள் எனக்கு தேநீர் கொடுத்து உபசரித்து வாழ்த்தி அனுப்பியதெல்லாம் இப்போதுள்ள அரசியல் நிலைமையில் ஆச்சரியமாக இருக்கும். 

கோவில்பட்டி நகரில் எப்போதும் சைக்கிளிலேயே செல்வது வடிக்கை. யாரும் எப்போதும் எளிதில் அவரை சந்திக்க முடியும். அவரிடம் பரிந்துரைக் கடிதமோ, சான்றிதழோ வாங்குவது தொகுதி மக்களுக்கு எளிதாக இருக்கும். 

அவர் கோவில்பட்டியில் பாலமுருகன் உணவு விடுதியின் அருகேயுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம், மெயின் ரோடில் சாத்தூர் டீ ஸ்டாலில் பகல் வேளையில் எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியும். 

எட்டயபுரத்தில் ஒரு மாதிரி பால்பண்ணையை அமைத்து இப்படித்தான் பால் பண்ணையை நடத்த வேண்டுமென்று 50 ஆண்டுகளுக்கு முன்பே முன்மாதிரியாக இருந்து வழிநடத்தியவர். கிராமப்புறங்களில் கூட்டுறவு இயக்கம் வலுப்பெற வேண்டும் என்று கூறியவர். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு சட்டத்தில் மக்களுக்கு நலம் தரக்கூடிய திருத்தங்கள் வேண்டுமென அறிக்கையாக தயார் செய்தது அதை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வழங்கினார். அந்த அறிக்கையை எம்.ஜி.ஆர் ஏற்றுக் கொண்டார்.

1970களில் நடந்த தேர்தலில் இவருக்காக கோவில்பட்டி தொகுதியில் மஞ்சள், கருப்பு வர்ணமிட்ட வாடகைக் கார்களில் ஒலி பெருக்கியைக் கொண்டு நல்லகண்ணுவும், கோடங்கால் கிருஷ்ணசாமி, கொளத்துள்ளாபட்டி ராமசுப்பு, நானும் கிராமங்களுக்கு பிரச்சாரத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றதுண்டு. மதியம் என் வீட்டில் சாப்பிட்டு விட்டு வெறும் பாயில் படுத்துக் கொண்டு என்னுடைய கிராமமான குருஞ்சாக்குளத்தில்; கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாக்கு சேகரித்ததுண்டு. 

எனது திருமணம் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்து. திருமணத்தில் கலைஞர், வைகோ, பழ. நெடுமாறன், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறைந்த இரத்தினவேல் பாண்டியன் மற்றும் வி. இராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பி.இராமமூர்த்தி, முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணி, மற்றும் இராம் விலாஸ் பஸ்வான், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கம் போன்ற முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திருமணத்தன்று காலைப் பொழுதிலேய நல்லகண்ணுவுடன் வந்து வாசலில் அனைவரையும் வரவேற்றார்.

எட்டயபுரத்தில் பாரதிக்கு தொடர்ந்து
விழாக்கள் எடுத்தவர் .

இப்படியாக அழகிரிசாமிக்கும் எனக்கும் இடையிலான தொடர்புகளையும், நிகழ்வுகளையும் சொல்லிக் கொண்டு செல்லலாம்.

சுத்தமான கதர் ஆடைகளையே விரும்பி அணிவார். கதர் சட்டை, வேட்டி மற்றும் தூய இளஞ்சிவப்பு கதர் துண்டை போட்டுக் கொண்டு செல்வது தான் அவரின் அடையாளம். எப்போதும் வெளுப்பான உடை உடுத்தவே விரும்புவார். ஆனால் உடையும் எளிமையாக இருக்கும். 

நேர்மை, எளிமை, பகட்டில்லாத பொதுவாழ்வை மேற்கொண்ட மாட்சிமைக்குரிய சோ. அழகிரிசாமி மறைந்து 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவருக்கு 9வது ஆண்டு நினைவு நாள். அவருடைய நினைவுகளை போற்றுவோம். 

#சோ_அழகிரிசாமி
#S_Alagirisamy
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-03-2018

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...