Wednesday, March 18, 2020

”#சேர்த்து_நடமாட்டீர்களா?” -சிவகிரி எஸ்.சேதுராமன்- (#சிந்தனை_இதழ்_1949 #பேராசிரியர்_அ_சீநிவாசராகவன்)

”#சேர்த்து_நடமாட்டீர்களா?”
-சிவகிரி எஸ்.சேதுராமன்-

(#சிந்தனை_இதழ்_1949
#பேராசிரியர்_அ_சீநிவாசராகவன்)

 
வயல்களில் வேலை ஆரம்பிக்கிறது. பதத்திற்காகவும் உழவு ‘தொலி’வதற்காகவும் தண்ணீர் வயல்களில் பாய்ச்சப்பட்டிருக்கிறது. உழுவதற்கென்றே ஏற்பட்டிருக்கும் ‘உழவு குட்டைகள்’ அதாவது, சிறிய மாடுகள் செய்யும் நாணயமான வேலையில்தான் சமுசாரி நல்ல பெயர், நல்ல வருமானம் பெறமுடியும். கழுத்திலே மேக்கால் இருக்க தண்ணீருக்குள் சல் சல் என்ற சப்தத்துடன் அவைகள் தலையை ஆட்டி ஆட்டி நடப்பதே வெகு அழகாக இருக்கும். நாணயமற்ற ‘சழுசண்டி மாடுகள்’ தார்க்கோலின் இடிதான் வாங்கும்.
​ஆழங்கால் நீர்பாய்ச்சி அழகான ஏர்பூட்டி
​அழகான மாடேநீ உழவறியாக் காளங்கன்றே
​நடவுதொழி போடுதற்கு நாணயமாய் வேலைபாரு
​நானயமா யில்லையின்னா நான் தாரேன் தார்வாங்கு.
உழவிலே வேலை சுறுசுறுப்பாக நடக்கவேண்டுமானால், முன் ஏரைப் பொறுத்துத்தான் இருக்கிறது. முதல் கோணினால் முற்றும் கோணல்தான். “வயலுக்குச் சொந்தக்காரன் வரும் நேரமாகிறது. சாயாமல் சாலையடி” என எச்சரிக்கின்றாள். இன்னும் “மாடுகளைக் கருக்காகப்பற்றி ஆழமாகவும் உழு” என்கிறாள். அதில்தான் இருக்கிறது மேழிச் செல்வம். அகல உழுவதைப் பார்க்கிலும் ஆழ உழுவது மேலல்லவா?

முன்னத்து ஏர்க்காரா! மிளகுபொடி லேஞ்சிக்காரா!
சாயாமல் சாலையடி சாமிவர்ர நேரமாச்சு
சுண்டியே மாட்டைப்பற்று சுருக்கமாக ஆழஉழு
கூனநல்லூர் கூழைக்காளை கூடநல்ல மயிலைக்களை.
அவள் சொன்னபடி செய்ய முடியாது என்பதற்குக் காரணம் சொல்ல ஆரம்பிக்கிறான் உழவுக்காரன். “வயல் கோணல், போதாக்குறைக்குக் கோரைகள் அபரிமிதமாய் முளைத்திருக்கின்றன. அதுதானா? ஆராக்கீரையும் முளைத்திருக்கிறது, கொட்டிப்பூவும் பூத்துக் குலுங்குகிறது. இன்னும் வயல் ஏற்றடி இறக்கடியாக இருக்கிறது” என்கிறான்.
நிகரக் குளத்துவயல் நாணலடி கோணவயல்
கோரை முளைத்தவயல் கொட்டிப்பூ பூத்தவயல்
ஆராப் படிந்தவயல் ஆர்உழுவா வையகத்தில்?
அங்கேஒரு ஏத்தமடி அடுத்தஒரு இறக்கமடி.
இவ்வளவும் சொன்னவுடன், அவள் பார்வை மரம் அடிப்பவனிடம் செல்கிறது. விவசாயத்திலே மரமடித்தல்தான் மிக முக்கியம். விளைச்சலையும் அது ஓரளவு பாதிக்கும். மேடு பள்ளமில்லாமல் சமமாய் தொழி நிரவவேண்டும். அப்படிச் செய்வதற்காக எங்கே மேடு இருக்கிறது என நினைக்கிறானோ, அந்த இடம் வரும்போது காளைகளின் மூக்குச் சரட்டை சிறிது இழுத்துப் பிடித்து, மரத்தின்மேல் ஏறி நின்றுகொள்வான். அப்போது மரமானது தொழியை அதிகமாய் இழுத்துச் செல்லும். பள்ளம் வரும்போது இறங்கிவிடுவான். அத்தொழி பள்ளத்தைச் சரிப்படுத்தும். இப்படி நிரவாவிட்டால், பின்னால் பயிருக்குத் தண்ணீர் ‘அரட்டை பிரட்டையாக’ப் பாயவேண்டிய காலத்தில் மேடான பாகத்திலிருக்கும் பயிர்கள் சீக்கிரம் வாட ஆரம்பித்து மேனியும் குறைந்துவிடும். அதைத்தான் “அரள் மணியாசைப் போட்டிருப்பதுபோல் தடவவேண்டும்” என்கிறாள்.
​எட்டேரு பின்னாலே இழுத்து மரம்தடவு
​எங்கெங்கு மேடுளதோ ஏறி நிண்ணு மரமேலே
​மட்டம் தடவுரது மணியாசையாபோ லிருக்கவேணும்
​மறந்துநீ போனாயானால் மகசூலு குறைஞ்சுவிடும்.
அங்கே, அப்பால் கொஞ்ச தூரத்தில் கொழிஞ்சிக் குழை வந்துகொண்டிருக்கிறது. வண்டி அடிப்பவனோ அவள் கொழுந்தன். கொழுந்தன் என்றாலே கேலி செய்வதற்குக் கேட்கவா வேண்டும்? ‘குழை வாடிவிட்டாலும் பாதகமில்லையாம். கொழுந்தன் முகம் வாடிவிடக் கூடாதாம்.’ கேலியைப் பாருங்கள்! இன்னும் ‘நாத்தெடுக்கும் குழந்தைகள் சீராக இல்லை’ என்று இவளது நாத்தனார் ஆங்கொரு பக்கம் கோபப்படுகிறாள். இப்படிப்பட்ட கோபதாபமான கோலாகலங்களுக்கிடையே நடுகை நடக்கிறது.
கொழிஞ்சிக் குழைபிடுங்கி கொழுந்தன் வண்டி பாரமேத்தி
கொழிஞ்சிக்குழை வாடிட்டாலும் கொழுந்தன்முகம் வாடிராம
சிலுசிலென்று மழைபெய்ய சிறுபிள்ளைகள் நாத்தெடுக்க
சீராக இல்லை என்று அங்கே சீறுராளே நாத்தனாரும்.
மரம் முன்னால் தடவிக்கொண்டே போகிறது. பின்னால் நடவு நட்டுக்கொண்டே வரப்படுகிறது. மத்தியானம் ஆகிறது. மாடுகளும் களைத்துவிட்டன. பசியும் எடுக்கிறது. நாத்து நடும் பெண்கள் இருக்கிறார்களே; அப்பா! அவர்களை அடிக்கடி ‘ஊன்றி நடு, நெருக்கி நடு’ எனச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் நாத்தைத் தாவி விட்டுத்தான் வந்துவிடுவார்கள்.
​மத்தியான ஏரவுத்து மயிலைக்காளை தும்புருவி
​சாட்டைக்கம்பு தோளிலிட்டு சாப்பிடுவ தென்னேரம்?
​நடவுதொழி ஆயிருச்சு நாத்துவந்து சேந்திடுச்சு
​நாத்துநடும் பெண்பிள்ளையா சேர்த்துநட மாட்டீர்களா!
என்கிறாள். இவைபோன்ற கிராமியக் காட்சிகளைக் கண்டு யார்தான் சற்று நேரம் நின்று பார்க்கமாட்டார்கள்? ஆண்களும் பெண்களும் ஓடியாடித் தொழியிலே வேலை செய்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

#சிந்தனை_இதழ்
#பேராசிரியர்_அ_சீநிவாசராகவன்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-03-2020.
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings
http://ksradhakrishn


No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...