Monday, March 16, 2020

காவிரியின்_துணை_ஆறு #அமராவதியில்_புதிய_அணை: கேரளா திட்டம்.

#காவிரியின்_துணை_ஆறு #அமராவதியில்_புதிய_அணை: 
கேரளா திட்டம்.

———————————————— 

காவேரி நடுவர்மன்றத் தீர்ப்பை மீறும் கேரளாகாவிரியின் துணை ஆறுதான் அமராவதி. கேரள மாநிலத்தின் மூணாறு, ராஜமலை, தலையாறு உள்ளிட்ட வனப்பகுதிகளில் உருவாகும் பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகியவை இணைந்து தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணைக்கு வருகிறது. 1956இல் கட்டப்பட்ட இந்த அணையிலிருந்து கரூர் வரை 148 கிமீ பயணித்து திருமுக்கூடலூர் பகுதியில் காவிரியில் கலக்கிறது அமராவதி ஆறு.
அமராவதி அணையின் உயரம் 90 அடி; கொள்ளளவு 4 டிஎம்சி நீர். இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களின் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது; 75க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் நீராதாரம் பெறுகின்றன.
அமராவதியில் 3 டிஎம்சி நீரை கேரளா எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளது காவிரி நடுவர்மன்றம். அதோடு, “தமிழக - கேரள அரசுகள் இணைந்து பாம்பாற்றின் தூவானம் அருவி பகுதியில் 5.6 டிஎம்சி கொள்ளவு உடைய நீர்மின்திட்ட அணை அமைத்துக்கொள்ளலாம்; மின் உற்பத்திக்குப் பின் நீர் அமராவதிக்குச் செல்ல அதைப் பாம்பாற்றில் விட வேண்டும்; இதன் நிர்வாகச் செலவை இரு மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டும்” எனவும் நடுவர்மன்றம் அனுமதித்துள்ளது.
இந்நிலையில், கேரள அரசு இடுக்கி மாவட்டத்தில் விவசாய சாகுபடிப் பரப்பை அதிகரிப்பதற்காக ‘இடுக்கி பேக்கேஜ்’ என்ற திட்டத்தை 2012இல் துவக்கியது. அதன் முதற்கட்டமாக மறையூர், காந்தலூர், பட்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 6 இடங்களில் தடுப்பணைகள் கட்ட ரூ.300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தயாரித்தது. காந்தலூர், அப்பர்சட்டு மூணாறு, லோயர் சட்டு மூணாறு, தலையாறு, வட்டவடா, செங்கல்லாறு ஆகியவையே தடுப்பணைகள் கட்டத் தேர்வான அந்த 6 இடங்கள். இதன் மூலம் 74 ஆயிரம் ஏக்கர் சாகுபடி நிலமாகும் என்று கணக்கிடப்பட்டது.
உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அளிக்கும் மேற்கண்ட ஆறுகளின் குறுக்கே 6 இடங்களில் தடுப்பணை கட்டும் முயற்சியானது காவிரி நடுவர்மனறத் தீர்ப்புக்கு எதிரானது.
கடந்த 2014இல் பட்டிச்சேரியில் செங்கல்லாற்றில் அணைகட்டும் பணியைத் துவக்கியது கேரளா. உடனே இதை எதிர்த்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தமிழக அரசு இதை எதிர்த்து 2014 நவம்பர் 28இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதையடுத்து இத்திட்டத்தை நிறுத்திவைத்தது கேரளா.
ஆறு ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இத்திட்டத்தை இப்போது மீண்டும் துவக்கியுள்ளது கேரளா. இந்த பட்டிச்சேரித் திட்டம் என்பது பாம்பாற்றில் இணையும் செங்கல்லாற்றின் குறுக்கே பட்டிச்சேரியில், 98.4 அடி உயரம், 459.2 அடி நீளம் கொண்ட அணையைக் கட்டுவதாகும். ஏற்கனவே 12 அடி உயரத்தில் இரு மடைகளுடன் இருந்த தடுப்பணையை அகற்றிவிட்டு, மலைப்பகுதியில் பல கிமீ சுற்றளவில் நீர் தேங்கும் அளவுக்கு இரு மலைகளுக்கு இடையில் கட்டும் பெரிய அணையாகும். கோடைகாலத்திற்குள் முடித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டு பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
இதனால் உடுமலை அமராவதி அணைக்கு வரும் 4 டிஎம்சி நீரில் பாதி அளவுக்கு, அதாவது 2 டிஎம்சி நீர் தடுக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் அடிப்படையிலான காவிரி ஒழுங்காற்று ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அனுமதியைப் பெறாமல் புதிய அணை கட்டவோ, பாசனப்பகுதியை விரிவாக்கம் செய்யவோ கூடாது என்கிறது விதி. ஆனால் கேரள அரசு அனுமதியே பெறாமல் தன்தோன்றித்தனமாக அணை கட்டும் பணியில் மூழ்கியுள்ளது.
இதனால் சுற்றுச்சுழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது கேரளா. எப்படியெனில், அணைக்குத் தேவையான கற்கள் மலைப்பகுதியை அழித்தே பெறப்படுகிறது. மலைப்பகுதி அழிவதால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி சிறுசிறு மலைகள் அதில் மூழ்கும். இப்படி இயற்கை அழிவது சுற்றுச்சூழல் பாதிப்பே ஆகும்.
“பருவ மழை குறைவால் அமராவதி அணைக்கு நீர்வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. குடிநீருக்கும் தட்டுப்பாடு. அணையிலுள்ள மீன்கள், முதலைகளுக்குக் கூட தண்ணீர் இல்லை. இந்நிலையில் பட்டிச்சேரியில் கேரளா புதிய அணையைக் கட்டுவது, ஒட்டுமொத்த நீர்வரத்தையுமே தடுப்பதாகும். இதத் தடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள் அமராவதி அணைப் பாசன விவசாயிகள்.

#அமராவதிஅணை
#காவேரி
 #ksrpost
16-3-2020.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.


No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...