Thursday, March 26, 2020

இத்தாலி_நிலைமை #நமக்கு_வேண்டுமா?

#இத்தாலி_நிலைமை #நமக்கு_வேண்டுமா?
———————————————
பார்த்த படங்களில் இத்தாலியில் #கரோனா_virus  பாதிப்பில் ஏற்பட்ட
கொடுமைகள்,  அங்கு  தெருக்களில் சிகிச்சைகள்   நடக்கின்ற   துயர நிலையை  பார்கின்றோம்.  உரிய மருத்துவ  வசதி இல்லாமல்   அங்கு  திண்டாட்டம்.  இத்தாலியில்  கட்டுப்
பாடான  போக்கு  ஆரம்ப காலத்தில் எடுக்காதால்  இப்படி நிலமை  மோசமாகி
விட்டது.  அடுத்து ஹண்டா வைரஸ் (Hantavirus)சீனாவில் பரவும் தொற்று  உலகுக்கு அடுத்த அச்சுறுத்தலாக மாறுமா? என்ற அடுத்த அச்சம் சவால் உள்ளது.

இது  நமக்கும் படிப்பினையாகும் ....

உண்மை தான் காரணம் நோயின் தாக்கம், அதன் பரவும் தன்மை இங்கு மக்களுக்கு இன்னும் புரியவில்லை

ஆனால் இங்கு “வீட்டுலயே இருங்க, வெளியில வராதீங்க”ன்னு சொன்னாலும் சிலர் கேட்க மாட்டேங்குறீங்களே..
சுய அக்கறை இல்லாதவங்ககிட்ட சமூக அக்கறை மட்டும் எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

#எனவே,#ஊரடங்கு_உத்தரவு_144

ஊரடங்கு உத்தரவு என்றால் என்ன? 

உலகில் சுமார் 170 நாடுகளில் பரவியுள்ள, கொரோனோ வைரஸ் இந்தியாவில் பரவுதலை மேலும் தடுக்கும் பொருட்டு, நேற்று (மார்ச் 24) நள்ளிரவு முதல், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு (ஏப்ரல் 14 தேதி வரை) ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன ஊரடங்கு உத்தரவு என்று நம்மில் பலருக்கு சந்தேகம் இருக்கலாம். ஆகவே, ஊரடங்கு உத்தரவு குறித்தும் அது குறித்த நடைமுறைகளையும், அதனை மீறினால் ஏற்படும் பின்விளைவுகளை குறித்தும் காணலாம்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம்,1973ன் 10ஆவது பகுதியில், “பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலை நாட்டுதல்” என்ற தலைப்பின் கீழ் பிரிவு 129 முதல்  148 வரையிலான பிரிவுகளில் அதுகுறித்த நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் பிரிவு 144ல், “பொதுமக்களுக்கு ஏற்படும் தொல்லை அல்லது எதிர்பார்க்கப்படும் ஒரு அச்சமான சூழல் போன்ற அவசர நிலைகளில், அவைகளை உடனடியாக தடுத்தல் மற்றும் அந்த பிரச்சினைகளிலிருந்து விரைவான தீர்வு ஆகியவைகளுக்காக, தகுந்த காரணங்கள் இருக்கும் பட்சத்தில் நிர்வாக அதிகாரிகள் தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கலாம்” என்று கூறுகிறது. அவ்வாறு பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், நடைமுறையில், “ஊரடங்கு உத்தரவு” என அழைக்கப்படுகிறது.

பொது அமைதிக்கு இடையூறு ஏற்படக்கூடிய சூழல்களில், நிர்வாக அதிகாரிகளால் பொதுவாக, குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில், அந்த குறிப்பிட்ட பகுதிகளில், ஐந்து அல்லது அதற்கு அதிகமான நபர்கள் தகுந்த காரணம் இல்லாமல் பொது இடத்தில் கூடுவது தடை செய்யப்படுகிறது. அவ்வாறு கூடுவது, சட்ட முரணான கூடுகை என்று பார்க்கப்படுகிறது. அவ்வாறு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு உத்தரவு அதிகபட்சமாக இரண்டு மாத காலத்திற்கு மிகாத ஒரு  கால அளவிற்கு  அறிவிக்கப்படலாம். ஒருவேளை தகுந்த  காரணம் இருக்கும் பட்சத்தில் 6 மாத காலம் வரையிலும் அந்த உத்தரவானது நீட்டிப்பு செய்யலாம்.  இந்த சட்ட விதியானது, 1882ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியில் இயற்றப்பட்டு தற்போது வரையிலும் அமலில் உள்ளது.

பொதுவாக சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி ஒரு குறிப்பிட்ட பகுதியில் அல்லது குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில், சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு சமயங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய சான்றாக, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டமானது 100 நாட்கள் நடந்து வந்ததைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 5 நாட்கள் அமலில் இருந்தது. பின்னர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பொதுமக்கள் மனித உரிமைகளை மீறி சட்டத்திற்க்கு புறம்பாக சுட்டுக் படுகொலை செய்யப்பட்ட பிறகு அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

அதுபோல கடந்த 2019 டிசம்பர் மாதத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடக மாநில பெங்களூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலத்திற்கு அதுநாள் வரையிலும் வழங்கப்பட்டு வந்த சிறப்பு உரிமைகளுக்கு காரணமான இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் சரத்து 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்டம்  ஒழுங்கு பிரச்சனைகள் எழலாம் என்று காரணம்காட்டி, கடந்த 2019ம் ஆகஸ்ட் மாதம், காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழக விவசாயிகள் போராட்டத்தின போது  1970-1980களில்  சில நேரங்களில் ஊரடங்கு உத்தரவு 144 அறிவிக்கப்பட்டு   மொத்தம்
40 க்கு அதிகமான விவசாயிகள் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொடுமையாக கொல்லப்பட்டனர் .அது போல 1965இல்
தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம்.

இந்தியாவில் இதற்கு முன்பு இந்திரா காந்தி பிரதமராக இருந்த கால கட்டத்தில், 1975 முதல் 1977 வரையிலான காலத்தில் அரசியலமைப்பு சட்டத்தில் சாசனத்தின் அடிப்படையில், அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது. அப்போது சட்ட ஒழுங்கு பிரச்சினை எழலாம் என காரணம்காட்டி, 18 மாதங்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் மேலும் பரவுதலை தடுக்கும் நடவடிக்கை என்ற பெயரில், டெல்லி மற்றும்  மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் தமிழ்நாட்டிலும் ஒரு வார காலம் ஊரடங்கு உத்தரவு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் தான் நடுவண் அரசு நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவினை மீறுபவர்கள், இந்திய தண்டனைச் சட்டத்தின், பிரிவு 188 கீழ் தண்டிக்கப்படுவார்கள். முதலில் கைதும் பின்னர் சிறையிலும் அடைக்கப்படலாம். ஒரு மாத காலம் சிறை தண்டனையும் ரூ.200 அபராதம் விதிக்கப்படலாம். மேலும், மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கும் வகையில் மீறல் இருக்கும்பட்சத்தில், ஆறுமாதம் சிறை தண்டனையும் அல்லது ரூபாய் 1,000/- வரையில் அபராதமும் தண்டனையாக வழங்கிட சட்டத்தில் இடமுள்ளது. ஒருவேளை இந்த உத்தரவு அதிகப்படியான மக்களால் மீறப்படும் பட்சத்தில், ராணுவம், கப்பல் படை மற்றும் விமானப்படையின் துணைகொண்டு மீறல்களை கட்டுக்குள் கொண்டு வரவும் சட்டத்தில் இடமுள்ளது.

தற்போது நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது, சட்ட ஒழுங்கு பிரச்சனை அடிப்படையில் அல்ல. கொரோனா வைரஸ் மேலும் பரவுதலை தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட சிவில் ஊரடங்கு உத்தரவு. ஆகவே தான் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள்,  துப்புரவு பணியாளர்கள், தீயணைப்பு துறையினர், நீதிமன்றங்கள், பால், காய்கறி விற்பனையாளர்கள் உள்ளிட்டவைகள் தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் வீட்டிற்குள் இருக்கவிட்டால் கண்டதும் சுட உத்தரவிடுவேன் என இன்று (25.03.20) தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

பொதுவாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படுவது தொடர்பான நிகழ்வுகளில் நீதிமன்றங்கள் தலையீடு செய்யாது. இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை சார்ந்த முடிவு. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க செய்யாமல் இருப்பதற்கான அல்லது தளர்த்தப் படுவதற்கான தகுந்த காரணங்களை மாநில அரசு அல்லது நடுவண் அரசின் கவனத்திற்கு கொண்டு வரும்போது அவைகள் நீக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம்.

#ksrpost
26-3-2020.


No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...