Thursday, October 27, 2022

#* செய்ந்நன்றி கொன்ற மகற்கு*….. -#ப்ரியன்- (*மூத்த பத்திரிகையாளர் கல்கி ப்ரியன் அவர்களின், சமூக வலைதளங்களில் என்னைக் குறித்தான அவரின் நேற்றைய (26-10-2022)பதிவு. நன்றி ப்ரியன்*)



-----------------------
                        
 கோவை மாவட்டத்தில் பழங்குடியினர் வாழும் சின்னாம்பதி என்னும் கிராமத்தில் காவல் துறை நடத்திய அராஜகத்தில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.. இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.மனித உரிமை மீறல்கள் குறித்த ஒரு தொகுப்புக்காக இந்த  சம்பவம் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டன. அந்த நிகழ்வு பற்றி வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதிய "மனித உரிமைகள் என்றால் என்ன?'" என்ற சிறு கையேட்டில் படித்ததாக ஞாபகம். எனவே அந்த புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தேன்.

அதைத் தேடும்போது ராதா எழுதிய "ஈழத் தமிழர் பிரச்னை- சில குறிப்புகள்" என்ற புத்தகம் கண்ணில் பட்டது. 2012 ஆகஸ்டில்
திமுக நடத்திய  "தமிழ் ஈழம்ஆதரவாளர்கள்"
(TESO) மாநாட்டை ஒட்டி வெளியிட்ட புத்தகம்.  இந்த புத்தகத்துக்கு நான்  பிழை திருத்தியது நினைவுக்கு வந்தது. அது மட்டுமா? டெசோ மாநாட்டை வெற்றிகரமாக நடத்த கலைஞர் வழிகாட்டுதலில் ராதா கிருஷ்ணன் கால நேரம் பார்க்காத கடின உழைப்பும் நினைவு அடுக்குகளில் பளிச்சிட்டது.
      
ஈழ விவகாரத்தில் திமுகவை குறித்த மிகக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்ட காலகட்டம் அது.எதோ திமுகவே ஈழத்திற்கு படைகளை அனுப்பி தமிழர்களை இனஅழிப்பு செய்து விட்டதாக ஜெயலலலிதா, வைகோ, சீமான்,  இன்னும் பலர் ஆவேசமாக பரப்புரை செய்து வந்தார்கள். ஓட்டு அரசியலில் இந்த விமர்சனங்கள் உண்டாக்கிய பாதிப்பை சரியாக அளவிட முடியாவிட்டாலும், தமிழக மக்களிடையே - குறிப்பாக ஈழத் தமிழர்களிடையே திமுகவுக்கு  மிகப் பெரிய அவப்பெயரை அந்த  விமர்சனங்கள் உண்டாக்கின.
      
காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கலைஞருக்கு தர்மசங்கடமான நேரமது.

திமுகவின் மீது பூசப்பட்ட கறையை முற்றிலுமாக நீக்க முடியா விட்டாலும் சேதத்தை குறைக்க முயன்று கொண்டிருந்தார் அவர்.  அப்போது அவருக்கு உதவியாகவும் உறுதுணையாகவும்  இருந்தவர் தான் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
பிரபாகரன் முதற்கொண்டு அனைத்து ஈழப் பிரமுகர்களோடும் 30, 40 ஆண்டுகளுக்கு மேலாக தனிப்பட்ட உறவு முறையை பராமரித்து வந்தவர். கேஎஸ்ஆர் திருமணத்தில் தான் பிரபாகரனைப் முதலில் பார்க்கிறார் கலைஞர்.மயிலை சாலைத் தெருவில் பிரபாகரன் ராதாவுடன் இருந்தபோது லட்சிய வெறியோடு வலம் வந்து கொண்டிருந்த பிரபாகரனை நானும் பார்த்திருக்கிறேன்.
       
தனது ஈழத்தொடர்பை பயன்படுத்தி புலம் பெயர்ந்த தமிழர்களிடம் மட்டுமல்லாது இலங்கையிலிருந்த முக்கிய தமிழ் பிரமுகர்களிடமும் கலைஞரின் எண்ண ஓட்டங்களை எடுத்து வைத்தார் கேஎஸ்ஆர். ஈழத்தமிழர் பிரச்னையில் கலைஞரின் கடிதங்கள், கட்டுரைகள்,திமுகவின் தீர்மானங்கள் ஆகியவற்றை தொகுத்து "கலைஞரும் ஈழத்தமிழரும்" என்ற புத்தகத்தையும்  வெளியிட்டார் ராதா .
       
12-08-2012 அன்று "டெசோ" மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டுககாக "கருத்துரு விளக்கம்" என்ற கையேட்டையும் தயாரித்தார் கேஎஸ்ஆர் . கலைஞரின் வழிகாட்டுதலில் ராதாகிருஷ்ணன் என்ற தனிமனிதனின் உழைப்பு தான் அந்த மாநாடு.அது முடிந்த பின்  ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்துக்கு ஸ்டாலின் போனார் . அப்படியே லண்டனுக்கும் போனார்கள் அவர்கள். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த ஈழத்தமிழர் பிடிஎப் ஏற்பாடு செய்த மாநாட்டில்,புலம் பெயர்ந்த தமிழீழ பிரமுகர்களைச் சந்தித்து திமுகவின் நிலைப்பாட்டை எடுத்து வைக்கும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு  கேஎஸ்ஆர் மூலம் கிடைத்தது.இதை எல்லாம் பலர் மறந்து விட்டனர்

ராதாவின் அயராத  செயல்பாடுகள் காரணமாக தமிழர்களிடையே  ஈழ விவகாரத்தில் திமுகவின் மீதிருந்த கசப்புணர்வும் வெறுப்புணர்வும் ஓரளவு குறைந்தது என்றால் அது மிகைப்படுத்தல் அல்ல.
  
ஆனால் வைகோ, சீமான் போன்றவர்கள் 2016 தேர்தலுக்கு பிறகும் கூட அந்த வெறுப்பணர்வை விசிறிவிட்டுக்கொண்டுதானிருந்
தார்கள். அரசியல் தட்பவெப்ப நிலை  திமுகவையும் வைகோவையும் நெருங்க வைத்திருக்கிறதது. அவரை மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆககியிருக்கிறது. .அதற்கு அவர் தகுதியானவர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
திமுகவின் மீது சீமான் மற்றும் பல்வேறு சிறு குழு தலைவர்களின் விமர்சனங்கள் தொடரும் . முள்ளி வாய்க்கால் நினைவு நாளின்போது அவைகளின டெசிபல் அதிகமாகும்.

கே.எஸ். ராதாகிருஷ்ணன் பின்னால் அரசியலுக்கு வந்து fast trackல் ஏற்றம் பெற்றவர்கள் நிறைய பேர் உண்டு. 1989சட்டமன்ற தேர்தலில் கே.எஸ். ராதாகிருஷ்ணன் கோவில்பட்டியில் நின்ற போது பிரச்சாரத்தை   பற்றி கல்கிக்கு எழுதுவதற்காகச் சென்றிருந்தேன்.அப்போது அவருக்கு உதவியாளராக இருந்தவர் கூட எம்.பி.ஆகும்  அதிசயம் நடந்தது.

கேஎஸ்ஆர் உழைப்பை பிழித்தவர் களுக்கு வாய்ப்பின் வாசலைத் திறக்கும் விசால மனது இல்லாதது  என் போன்ற அவரது பரந்த உலகில் முழுதும் வாழும் எண்ணற்ற நண்பர்களுக்கு வருத்தம் கொடுக்கும் விஷயமே.

ராதாவைப் பொறுத்தவரை "கடமையைச் செய்;பலனை எதிர்பாராதே" என்பது "விதி"யாகி விட்டது.அவரே அடிக்கடி சொல்வது போல " தகுதியே  தடை". அறிவார்ந்தவராக இருப்பது மட்டுமல்லாமல் அவர் கட்டிக்காக்கும் சுயமரியாதை கூட அவருக்கு எதிராக  சமயங்களில் சதி செய்யும்.

ஆனால் கேஎஸ்ஆர்  இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பணியைத் தொடர்கிறார். இலங்கை மீது போர்  குற்ற விசாரணை, தமிழ் நாட்டு நலன்; தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சி,  நதிநீர் பிரச்சனைகள், சுற்று சூழல், தூக்கு தண்டனை எதிராக, தேர்தல் சீர்திருத்தம் என்று தனது எழுத்துக்கள் மற்றும் பொது நல வழக்குகள்-சட்டப் போராட்டங்கள் மூலம் சமர் செய்து வருகிறார்.

இந்த சூழலில் திமுகவிலிருந்த தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன்..கலைஞர் மறைவுக்கு பிறகு  கேஎஸ்ஆருக்கும் திமுக தலைமைக்கும்  உறவு சுமூகமாக இல்லை என்பது வெளிப்படையான விவகாரம். புதிய அதிகார மையங்களுக்கு கேஎஸ்ஆர் பன்முகத் திறமை தெரியவில்லையா அல்லது அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி ராதா நடக்கவில்லையா என்ற பிரச்னைக்குள் நான் போக விரும்பவில்லை. 

எனவே அவரின் " நீக்கல்" விவகாரத்தை ஒதுக்கி வைப்போம்.
ஆனால் ராதா போன்றவர்கள் கட்சியில் இருந்தால்-அவர்கள் பயன்படுத்தப்பட்டால்-- கட்சிக்குதான் வலிமை என்பது என் கருத்து.இதை கலைஞர் புரிந்து கொண்டிருந்தார். பல பிரச்னைகளில், பின்னணியில் இருந்து செய்யப்படும் யுக்திகளின் மூலம் கட்சிக்கு சாதகமான நிலைப்பாடுகளை உருவாக்கலாம்.அதற்கேற்ற உலக நாடுகள் , டில்லி, பலமாநிலங்கள் தமிழக வரை தொடர்புகளோடும் பரந்துபட்ட பார்வையோடும் இருந்தவர் கேஎஸ்ஆர் . தற்போது திமுக  சந்திக்கும் சில பிரச்சனைகளை சமாளிக்க ராதாவின் ஐம்பது வருட மேலான அரசியல் அனுபவம் உதவியாக இருக்கும்.

ஜெயலலிதா ஊழல் வழக்கை பங்களூருக்கு மாற்றியது; கலைஞர் கைது செய்யப்பட்டபோது  அந்த காட்சியை உள்ளடிக்கிய வீடியோ காஸட்டை ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து சன் தொலைக்காட்சி க்கு கொண்டு சேர்த்தது;
அறிவாலயம் வெளிகேட்டை உடைத்து உள்ளே போக முயற்சித்த கமிஷனர் முத்துகருப்பனை தடுத்து நிறுத்தியது; மனத உரிமை மீறல்களுக்காக புகார் கொடுக்க ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா அவர்களை சம்பந்தப்பட்ட  மாநில மனித உரிமை ஆணையத்துக்கு அழைத்துச் சென்றது;  அண்ணா நகர் ரமேஷ் பிரச்சனை,சைதை-ஆண்டிபட்டி இடைத்தேர்தகளில் ,திமுகவினர் மீது அடக்குமறையை கையாண்ட துணை கமிஷனரை நடுசாலையில் தைரியமாக எதிர் கொண்டது----இப்படி கட்சிசார்ந்த ராதாகிருஷணனின் பங்களிப்புகள் நிறையவே உண்டு.

இதில் பலவற்றை நான் கல்கி இதழில் பதிவு செய்திருக்கிறேன்.ஒருமுறை மறைந்த முரசொலி மாறன் கட்சி பொதுக்குழுவில் பேசும்போது "அறிவாலயத்தைநான் எப்போது தொடர்பு கொண்டாலும் ராதாகிருஷ்ணன்தான் பதில் சொல்கிறார்; மற்றவர்கள் தலைவர் வரும்போது மட்டும் "பிலிம்" காட்டுகிறார்கள்" என்று பேசி விட்டார்.
அன்றிலிருந்து இரு சீனியர்கள் ராதாவுக்கு எதிராக தங்கள் "வேலை களை" காட்டத்துவங்கி விட்டனர்.மாறன் இருந்திருந்தால் கேஎஸ்ஆர்  டில்லி அரசியல் வரை ஏற்றம் பெற்றிருப்பார். இவைகள் பழைய கதைகளாக இருந்தாலும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

இதோ.... முதல் பத்தியில் சொன்ன,  எனக்கு  வேண்டிய புத்தகம் கண்ணில் படும் முன் ராதாவின் மற்றொரு புத்தகம் தென்படுகிறது. 2014ல்  ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தை முன்னிட்டு அவர் எழதிய கலைஞரின் அணிந்துரை இருந்த ஆங்கிலப் புத்தகம்: Impunity in Sri Lanka
இலங்கை மீது போர் குற்றங்களுக்காக "பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை ஏன்  தேவை " என்பதை ஆதாரபூர்வமாக விளக்கும் புத்தகம்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எந்த இயக்கத்தில் இருக்கிறார் என்பது முக்கியமல்ல.
இத்தனை வருட அனுபவத்தில், தனது அறிவுசார் தளத்தில்   தமிழர் நலன், தமிழ்நாட்டு நலன் ஆகியவற்றுக்காக குரல் கொடுக்கும் வகையில் அவரே ஒரு  இயக்கமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.
                    
                        ---------------+--+---
Re posted on 27-10-2022.
#ksrpost

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...