Sunday, October 16, 2022

*ஜாதி, மத விவாதங்களை விட, வளர்ச்சி* *முன்னேற்றத்தைப் பேசுங்கள்!* *மாயமான, போலியான, பாசாங்குத்தனமான இயல்புகளைக் கைவிடுங்கள்!*

*ஜாதி, மத விவாதங்களை விட, வளர்ச்சி* *முன்னேற்றத்தைப் பேசுங்கள்!*
*மாயமான, போலியான, பாசாங்குத்தனமான இயல்புகளைக் கைவிடுங்கள்!*

பொதுவெளியில் ஜாதி மறுப்பு, ஜாதியில்லாத சான்றிதழ்கள் என்று நல்ல கருத்துகளை நடைமுறையில் பேசினாலும், ஜாதி ஒழிப்பு என்பது ஓரளவுதான் வெற்றி பெற்றுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது.
 ஜாதியில்லை என்றாலும் வேலைவாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு ஜாதி அடையாளங்கள், ஜாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. இது அவசியமானதுதான். மறுக்கவில்லை. 

ஜாதிக்கு ஒரு கட்சி என இருப்பது, சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட ஜாதிவாரியாக இடங்களை ஒதுக்குவது, சாதியை மறுக்கின்றேன் என்று சொல்லிக் கொண்டு ஜாதி கட்சித் தலைவர்கள் ஜாதி துவேஷம் பற்றியெரியக் கூடியவகையில் எண்ணெய்யை ஊற்றுவதைப் போல பேசுவதை இன்றைக்கு பார்க்க முடிகிறது. இது வேடிக்கையாக இருக்கிறது.

ஜாதிப் பாகுபாடு கூடாது என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு, ஜாதிக் கட்சிகள் ஒருபுறமும், தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதில் ஜாதியை முன்னிலைப்படுத்துவதும் இருக்கும்போது, எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்? என்பதுதான் நம்முடைய வினா.

கடந்தகால நினைவுகளில் இருந்து சொல்கின்றேன். 1950- 60களில் தேர்தலில் போட்டியிட, வேட்பாளர்களை ஜாதி பார்த்து கட்சிகள் தேர்ந்தெடுக்கவில்லை. அதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம்.
 சென்னையைச் சேர்ந்த டி.டி.கே.குழுமத்தின் தலைவர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், நாடார் மக்கள் அதிகமாக வாழும் திருச்செந்தூர் தொகுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார். டி.வி.எஸ், குழுமத்தின் சுந்தரம் ஐயங்காரின் மகள் டாக்டர் சௌந்தரம்மாள் திண்டுக்கல்லிலும் மதுரையில் போட்டியிட்டு மத்திய அமைச்சராக ஆனதெல்லாம் உண்டு. அவருக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், திருக்கரங்குடி.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், நீண்டகாலம் தமிழ்நாடு சட்டமேலவை உறுப்பினராகவும் இருந்த கோவை பிஎஸ்ஜி கல்விநிறுவனங்களின் நிறுவுனர் முனைவர் ஜி.ஆர்.டி என்ற ஜி.ஆர்.தாமோதரன்  பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் கவுண்டர் சமுதாயம் வாழும் பகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். எக்ஸ்பிரஸ் தினமணி ஏடுகளின் உரிமையாளரும், சிறந்த ஜனநாயகவாதியுமான ராம்நாத் கோயங்கா, வன்னியர் சமுதாயம் அதிகமாக வாழும் பகுதியான திண்டிவனம் நாடாளுமன்றம் தொகுதியில் திருக்குறள் முனுசாமியை எதிர்த்து துணிந்து போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தார். இவர் வடபுலத்தைச் சார்ந்தவர். 
 மணிக்கொடி ஏட்டின் மணிக்கொடி சீனிவாசன் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எங்கள் பகுதியில் சங்கரன்கோவிலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்தது.  அதேபோல தி.மு.க.சார்பில் தனக்குச் சம்பந்தமில்லாத பகுதிகளான கும்பகோணத்திலும், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் இருமுறை போட்டியிட்டு இரா.செழியன் வெற்றி பெற்றார். பெருந்தலைவர் காமராஜர் விருதுநகரைச் சார்ந்தவரானாலும் குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கம்யூனிஸ்ட் தலைவர் பி. இராம்மூர்த்தி தஞ்சை மாவட்டத்தை சார்நதவர் சிறையில் கைதியாக இருந்து கொண்டு மக்களை சந்திக்க இயலாமல் மதுரையில் வெற்றி பெற்றார்.அதேபோல கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணமேனன் - பின்னாளில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் - பாம்பாய் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்படி ஒரு நீண்ட பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 இன்றைக்கு என்ன நிலைமை? ஜாதி, மதம், பணம்,சொந்த ஊர் தாண்டி ஒரு வேட்பாளர் போட்டியிட சாதாரணமாக வாய்ப்புக் கிடைக்குமா? இதற்குக் காரணம், ஜாதியும் மதமும்தான். ஒருபக்கம் ஜாதியை ஒழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஜாதியப் போக்குகள் வளர்ந்து கொண்டுதான் இரு்ககின்றன. 1970 வரை இந்த சூழல் இல்லை. துட்டு கொடுத்து அரசியல் பின்புலம் இல்லாமால் ஆள் பலத்தில் மக்கள் பிரதிநியாக மாநிலங்கள் அவை
எம்பியாக எளிதாக செல்கின்றனர். கடந்த காலத்தில் மல்லையா, தமிழகத்தை சேர்ந்த எம்.எம். இராமசாமி என பலர் எம்பி ஆனார்கள்.
பிகாரில் சில குற்றவாளிகள் அமைச்சர்கள், எம்பிகளும் உண்டு.என்ன சொல்ல….

இனி எதிர்காலத்தில் ஜாதிவெறியும், மதவெறியும் தலைவிரித்து ஆடும். நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சி, என்ற பிரச்னைகளை விட்டுவிட்டு, இன்றைக்கு பிரதான விவாதப் பொருளாக இருப்பது ஜாதி, மத விடயங்கள்தான். 
  நாம் வளர்ச்சிக்கு எதிராக எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றி பேசத் தவறிக் கொண்டிருக்கிறோம். கடந்த முப்பது ஆண்டுகளாக சாதிய பிளவுகளை தூண்டி விடும் அரசியலையும் தானே நடக்கின்றன. இந்தப் போக்கு, எதிர்காலத்தில் பெரும் அபாயத்தை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும் என்பதை மறுப்பதற்கில்லை. உண்மையாகவே ஜாதி, மத துவேஷங்களை அகற்ற பாடுபடுங்கள். போலித்தனங்கள் வேண்டாம்.

#ksrpost
16-10-2022.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...