Wednesday, October 19, 2022

#*KSR VOICE கருத்துப்பதிவுகள்…*



————————————

மிக்க அன்புடன்,  பல நண்பர்கள், நலம் விரும்பிகள் தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில் தங்களைப் பார்க்க முடியவில்லை என்று விசாரிக்கின்றனர். ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக  தொலைக்காட்சி விவாதங்களுக்கு நான் செல்வதில்லை. தொலைக்காட்சி நிர்வாகம் என்னை அழைத்தாலும் வர இயலாது என்றும் கூறிவிட்டேன்.
 
ஏன் செல்லவில்லை என்பதைக் குறித்து ஏற்கெனவே பலமுறை என்னுடைய முகநூலில் பதிவிட்டது மட்டுமல்லாமல், தினமணியில் இருமுறை நடுப்பக்கக் கட்டுரைகளையும் இது குறித்து எழுதியுள்ளேன். தொலைக்காட்சி விவாதங்களுக்குச் சென்றால், ஓர் ஆரோக்கியமான விவாதமாக அது இருக்க வேண்டும். உண்மையில் நடந்த நிகழ்வுகள், வரலாற்றுச் செய்திகள், புள்ளி விவரங்களோடு தொலைக்காட்சி விவாதங்களில் பேசினால், அதற்கான நேரத்தை நெறியாளர்கள் வழங்குவதில்லை. 
சரி, பரவாயில்லை என்று நினைத்தாலும், சக பங்கேற்பாளர்கள் பேசும்போது, பிழையான வாதங்கள், வீணாக முட்டுக் கொடுக்கும் பேச்சுகள், பொருளற்ற விவாதங்கள் என்ற நிலையில் ரௌத்ரம் அடைய வைக்கின்றனர். எனவே எதற்கு இந்த விவாதத்துக்குச் செல்ல வேண்டும் என்று 2017 - இன் இறுதியில் தொலைக்காட்சி விவாதங்களுக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டேன்.
 
அதற்கு முன்பு, தினமும் மாலை, இரவுப்பொழுதில் ஏதாவது ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்பது 30 -20 ஆண்டுகள் வாடிக்கையாக இருந்தது. அந்த சூழலில் அந்த விவாதங்களை ரசித்த நண்பர்கள் ஏன் கலந்து கொள்வதில்லை என்று கேட்பதில் நியாயம் உள்ளது. என் மீது கொண்ட அன்பினாலும் அவர்கள் கேட்பது தொடர்ந்த வாடிக்கையாகிவிட்டது. 
  “தொலைக்காட்சி விவாதங்களில் நீங்கள் பங்கேற்பதை நாங்கள் விரும்பிப் பார்த்தோம். இப்போது பார்க்க முடியவில்லையே. தொலைக்காட்சி விவாதங்களில் நீங்கள் பங்கேற்றால் மகிழ்ச்சி அடைவோம்” என்று நண்பர்கள்  வலியுறுத்தியதனால், ‘கேஎஸ்ஆர் வாய்ஸ்’ என்ற யூ டியூப் சேனலை எனக்கு நெருக்கமானவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். 

இந்த ‘கேஎஸ்ஆர் வாய்ஸ்’ என்ற சமூக ஊடகம் மூலமாக அன்றாட நடப்புகள், சிக்கல்களைக் குறித்து ஆய்வுரை, கருத்துரை, தெளிவுரை என வெற்றுக் கூப்பாடு இல்லாமல், பொதுவெளியில் நண்பர்களுக்குப் பயன்படும் வகையில் இயங்கும். எனவே நண்பர்களுடைய கோரிக்கையை ஏற்று, என் மீது பற்றுக் கொண்டவர்கள் இதைத் துவக்கியுள்ளனர் என்பதை மிக்க அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் இந்த வாரம் இந்த ஊடகம் மூலமாக என்னுடைய கருத்து பதிவுகள் பொதுவெளியில் வரும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
19-10-2022.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...