Wednesday, April 13, 2016

மகாபாரதம், இராமாயணம்

வேதங்களின் கருத்துக்கள் ஏற்புடையது இல்லை என்றாலும், வியாசர் இயற்றிய பாரதம் நூற்றுக்கணக்கான பாத்திரங்களை உள்ளடக்கியதாகும். இதில் ஏராளமான கிளைக் கதைகள், பல வகையான கருத்துக்கள், நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. வியாஸ பாரதத்தில் நளதமயந்தி கதை, சத்தியவான்-சாவித்திரி வரலாறு, இராம கதை, துஷ்யந்தன்-சகுந்தலை, ஹரிச்சந்திரன் கதை, குசேல பாக்கியம், கந்தபெருமான், பரசுராமன் போன்ற பல நிகழ்வுகளை சொல்கின்றது.

அதேபோல இராமாயணத்தில் கதையில் வரும் மற்ற மாந்தர்களும் உயர்ந்து சிறந்து நிற்கிறார்கள். அண்ணனுக்குப் பணிவிடை செய்வதில் நிகரற்று விளங்கும் இலக்குவன்: அண்ணன் சொல்லைச் சட்டமாக ஏற்றுச் செயல்படும் பரதன்; தாயன்பே உருவான கோசலை; ஞானியான சுமித்ரை; செருக்கு வாய்ந்த கைகேயி; சற்றே காமத்தால் ஏமாந்து தருமத்தால் கட்டுண்டு துடிக்கும் தசரதன்; தூய்மை உள்ளத்தில் குடிகொண்ட இராமபக்தியால் செயற்கரிய செயல்களைச் செய்த அனுமன்; இணையற்ற தோழனான சுக்கிரிவன்; நெறியற்ற வழியில் சென்ற இராவணனைத் துறந்து இராமனைச் சார்ந்த விபிஷணன்; தவறென்று தெரிந்தும் அண்ணன் என்ற பாசத்துக்கு கட்டுப்பட்டு உயிர் துறந்த கும்பகருணன் ஆகிய இவர்கள் போன்ற எண்ணற்ற பாத்திரங்களை மறக்க முடியாத வகையில் தோற்றுவித்துள்ளார் வால்மீகி. இத்தகைய மாந்தர் வாயிலாக வால்மீகி உலகப் போக்கையும் அழிவில்லாத தருமத்தையும் ஒருங்கே விளங்குகிறார்.

வியாசர் பாரதத்தை மட்டும் நிறுத்தாமல் அதோடு இணைப்பாக பாகவதத்தையும் இயற்றினார். இந்துத்துவா, இறையருள் என்பதையெல்லாம் விட்டுவிட்டு, இந்த காப்பியங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை மனதில் கொள்ளவேண்டும். மனித வாழ்க்கையை நெறிப்படுத்தவும், அறவழியில் நடக்கவும், இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கையில் நேர் வழியில் செல்லவும், பயன்களை எதிர்பாராமல் கடமையை செய்வது, பொறாமை, கோபம், அறவழியற்ற தன்மைகள் நீங்க வேண்டும். அமைதியும், அன்பும் கொண்ட நற்பண்புகள் பரவ வேண்டும். இந்த இரண்டு இதிகாசங்களும் மானுட வாழ்வை பண்டைய காலங்களில் நெறிப்படுத்தி நல்வழியில் பயணிக்க தோன்றியவை. மனிதர்கள் எப்படி வாழ வேண்டும், அறவழியில் எப்படி செல்லவேண்டும், அப்படி செல்லும்போது ஏற்படும் ரணங்களை பொறுமையோடு, தைரியமாக எதிர்கொள்ளவேண்டும்.

அறம், பொருள், இன்பம் என்பவற்றில் அறத்தை இராமரும், பொருள் இன்பங்களை இராவணனும் லட்சியமாக கொண்டுள்ளனர். இராவணன் கடும் தவத்தால் ஆட்சியை வரமாக பெற்று தேவர்களின் தலைகளை நிந்திக்கிறான்.  இராமரோ, நல்வழி, அறம், ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற செய்திகளெல்லாம் இராமாயணத்தில் வருகின்றன.

பாகவதத்திலும், பாரதத்திலும் நல்லதற்கு சூது செய்வதில் தவறு இல்லை. அந்த தவறையும் நேர்மையாக நெறிப்படுத்தவேண்டும். ஹரிச்சந்திர புராணத்தில் உண்மையே உயிர் என்ற நிலைகொண்ட பல நல்ல செய்திகளை சொல்வதனால் எப்போதோ இயற்றிய இதிகாசங்கள் இன்றைக்கும் சிரஞ்சீவியாக திகழ்கின்றன.

கிராமப்புறங்களில் மழை இல்லை என்றால் கஷ்டக் காலங்களில் விராடப் பருவம் படிப்பதுண்டு.

இப்படி இந்த இரண்டு இதிகாசங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏன் இப்போது இந்த பதிவு என்று என்னிடம் கேட்கலாம். நேற்றைக்கு தென்காசியிலிருந்து பேராசிரியர் ஜெயபாரதி வந்திருந்தார். அவர் ரசிகமணி டி.கே.சி. பற்றாளர். டி.கே.சி. கம்பனின் இராம காவியத்துக்கு ரசிகர். அப்போது பேராசிரியருடன் விவாதித்த கருத்துக்களின் தாக்கம்தான் இந்தப் பதிவு.

இராமாயணமும், மகாபாரதமும் இன்றைக்குள்ள அரசியல், பொதுவாழ்வு, குடும்ப வாழ்க்கை, நமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு, தீர்வுகளுக்கு வழிகாண சில செய்திகளை சொல்கின்றன. சோ அவர்களுடைய இராமாயணமும், மகாபாரதமும் இன்றைய அரசியலை ஒட்டி எழுதியுள்ளார். இராஜாஜி அவர்கள் கல்கியில் வியாசர் விருந்து என்ற பாரதம், சக்கரவர்த்தி திருமகன் என்ற இராமாயணம் இன்றைக்கும் அருமையான இலக்கியங்களாக திகழ்கின்றன.

அ.சா.ஞானசம்பந்தனுடைய கம்பராமாயண பாடல்களும், உரையும் இன்றைக்கும் தமிழ் இலக்கியத்திற்கு சீதனங்களாக உள்ளது.

அரசியலில் தகுதியே தடை என்ற நிலையில், பல களப்பணிகளும், யாரும் செய்ய முடியாத செயல்களை செய்து முடித்தாலும் அங்கீகாரம் கிடைக்காத நிலையில் சோர்வாக இருந்தால் இரண்டையும் அடியேன் படிப்பதுண்டு. இது சற்று மனத்தெம்பை கொடுக்கும்.

காப்பிய சிந்தனைகளை எடுத்துக்கொள்வதில் மட்டும்தான் ஆர்வமும் அக்கறையும் உண்டு.  இன்றைக்கு நிலவும் ஜாதி, மத பிளவுகளை நீக்கி நல்லிணக்கம் நிலவ வேண்டும். திருக்கோவில்களில் ஆறுகால பூஜை நடக்கவேண்டும். தேவாலயங்களில் ஜெபங்கள் நடக்கவேண்டும்.  மசூதிகளில் தொழுகைகள் நடக்கவேண்டும். இறை மறுப்பாளர்கள் அவர்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தவேண்டும். இது அவர்களுடைய விருப்பம். இந்த விருப்பத்திற்கு மாறாக எந்த சேதாரமும் நிகழக் கூடாது. அம்மாதிரி அமைதிக்கான தத்துவங்களையும் மறைமுகமாக இந்த காவியங்களில் காணலாம்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...