Saturday, April 9, 2016

கண்காணிப்பது மக்களின் கடமை

இன்றைய (09-04-2016) தினமணி நாளிதழில் “கண்காணிப்பது மக்களின் கடமை” என்ற தலைப்பில் "தகுதியே தடை" என்ற நிலையில் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் குறித்து தலையங்க பக்கத்தில் வந்த எனது பத்தி.

கண்காணிப்பது மக்களின் கடமை


ஒவ்வொரு மாநிலத்திலும் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் என இரண்டு தேர்தல் திருவிழாக்களை காண்கின்றோம். தேர்ந்தெடுத்து செல்கின்ற மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமைகளை ஆற்றுகிறார்களா என்று கண்காணிப்பது மக்களின் கடமையாகும்.  மக்களே என்ற மகேசன்களிடம்தான் ஜனநாயகத்தின் இறையாண்மை உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சரியில்லை என்றால் திரும்ப அழைக்கும் முறை (recall) அவசியம் நடைமுறைக்கு வரவேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் இது சாத்தியமில்லை என்று சொன்னாலும் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயன் வலியுறுத்திய கருத்தாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய கண்ணியமற்ற செல்பேசி உரையாடல்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் பார்க்கும்பொழுது முகத்தை சுளிக்க வைக்கின்றது. மதுவை ஒழிக்கவேண்டும் என்ற கோஷங்கள் ஒலிக்கும்போது மது அருந்தினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகளா?  அரசியலில் கிரிமினல்களாக இருந்தாலும் வெற்றிபெற முடியும் என்ற தையரித்தை அனைவரும் பெற்றுவிட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றவாளிகளாக இருப்பவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

இக்காலத்தில் தகுதியே தடை! சமதா கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஒரு சமயம் கிரிமினல்கள் அரசியலில் நுழைவதை தடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுர்ஜித் மட்டும்தான் பதில் கடிதம் எழுதி உரிய நடவடிக்கைகள் அவசியம் என்பதை ஆமோதித்தார். கடிதம் எழுதிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் செயல்பட முடியாமல் உடல்நிலை குன்றி படுக்கையில் உள்ளார். சுர்ஜித்தோ இறந்துவிட்டார். ஆனால் குற்றவாளிகள் மக்களின் பிரதிநிதிகள் அவைக்கு சென்றுகொண்டே இருக்கின்றனர்.  இந்த அவலம் என்று மாறப் போகிறது?

தேர்தலில் பணமும், மனித பலமும், மதமும் ஜாதியும்தான் இன்றைக்கு தேர்தலை நிர்ணயிக்கின்ற அடிப்படை காரணிகள். தகுதி, தியாகம், களப்பணி, அர்ப்பணிப்பு என்பதெல்லாம் அவசியமில்லை. இப்படியான நிலை நீடித்தால் ஜனநாயகம் இல்லாமல் பணநாயகமும், ரௌடிநாயகமாகத்தான் நாடு சென்றுவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஆதிக்க பேர்வழிகள், குண்டர்படை எல்லாம் இன்றைக்கு அரசியல் களத்தில் சாதாரணமாகிவிட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8ன் படி குற்றவாளிகள் தேர்தலில் பொறுப்புக்கு வரமுடியாது என்றாலும், அதையும் மீறி தைரியமாக மக்கள் விரோதிகள் நாடாளுமன்றத்தையும், சட்டமன்றத்தையும் அபகரிக்கின்றன.  நாடாளுமன்றத்தில் ஒரு காலத்தில் கிருபளானி, லோகியோ, அசோக் மேத்தா, மதிலிமாயி, என்.ஜி. கோரே, எஸ்.ஏ. டாங்கே, பேரறிஞர் அண்ணா, கிரண் முகர்ஜி, பிரேம்பாசின், பூபேஷ் குப்தா, எச்.ஏ. காமத், ஏ. ராமசாமி முதலியார், என்.ஜி. ரங்கா, எம்.ஆர். மசானி, எச்.எம். படேல், பிலு மோடி, ஏ.கே. கோபாலன்,  இரா. செழியன், ஜோதி மயூர் பாசு போன்றோர்கள் நேரு காலத்தில் எதிர்கட்சி வரிசையில் இருந்து ஆட்சியின் குறைகளை விமர்சித்த காலங்கள் இந்திய நாடாளுமன்றத்தின் பொற்காலம் ஆகும். நேருவும் எதிர்கட்சியினுடைய வாதங்களை கேட்டறிந்தார். பண்டித நேரு தகுதியானவர்களையும் தன் கட்சி சாராதவர்களையும் தன்னுடைய அமைச்சரவைக்கு அழைத்து அமைச்சராக்கினார். டாக்டர் அம்பேத்கர், ஆர்.கே. சண்முகம் செட்டியார், சி.டி. தேஷ்முக், ஜான் மத்தாய், பல்தேவ்சிங் போன்றவர்களையெல்லாம் அமைச்சர்களாக்கி நாட்டுக்கு பயன்படுத்தினார்.  ஆனால் இப்போது தகுதியான, நேர்மையான களப்பணியாளர்கள் தேவையில்லை என்ற நிலை அரசியல் களத்தில் ஏற்பட்டுவிட்டது.

இரண்டு நாட்களுக்கு முன் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஆங்கிலத்தில் பார்லிமெண்ட் என்பதை எழுத்துப் பிழையாக எழுதியதை பார்த்து தலையில் அடித்துக்கொள்ள வேண்டிய எண்ணம் ஏற்பட்டது. இப்படியெல்லாம் தப்பிலிகள் நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களாக சென்று திரும்பியுள்ளனர்.



இதெல்லாம் நேரு காலம். இப்போது என்ன நிலைமை. நாடாளுமன்றம் கூடினாலும், விவாதங்கள் கிடையாது. கூடிய அடுத்த வினாடியே ஒத்தி வைக்கப்படுகிறது. கூச்சல் குழப்பம். நாடாளுமன்ற நெறிமுறைகளும், விதிகளும் மீறப்பட்டு கேலிக் கூத்தாகிவிட்டன. மக்களின் பிரச்சினைகளை பேசவேண்டிய அவைகள் கடந்த 1985லிருந்தே சரியாக நடப்பதில்லை. போபர்ஸ் ஊழல் காலத்திலிருந்து இம்மாதிரி புரையோடிய நிலை இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு.

நாடாளுமன்றம் ஒரு நிமிடத்திற்கு 2.5 லட்சம் செலவாகிறது. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆண்டிற்கு மொத்த 32 லட்சம் ரூபாய் ஊதியமற்ற செலவுகளுக்கு அளிக்கப்படுகிறது. இது போக தனக்கும், தன் மனைவிக்கும் இலவச ரயில் பயணங்கள், இலவச விமானப் பயணங்கள், டெல்லிக்கு மட்டும் 40 முறை இலவசமாக தானும் தன் துணைவியாரும் சென்றுவிட்டு திரும்பலாம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 வருடத்திற்கு அரசு கஜனாவிலிருந்து 850 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவ்வளவு சலுகைகளும், பயன்களையும் பெற்றுக்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் பணிகள் அனைத்தும் பயனற்ற நிலையில் உள்ளன. இம்மாதிரியான ஆரோக்கியமற்ற போக்கு நாட்டுக்கு தேவைதானா என்பதை அடிப்படையில் நாம் சிந்திக்க வேண்டும்.

27 ஆகஸ்ட் 2015 அன்று குற்றவாளிகளாக இருப்பவர்களை அமைச்சர் பொறுப்புக்களிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தும் இன்னும் சிலர் தப்பித்துக்கொண்டு பொறுப்புகளில் உலாவுகின்றனர். மத்திய அமைச்சரவையில் 27 சதவீதமும், மாநில அமைச்சரவையில் 23 சதவீதமும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உட்பட்டவர்கள். பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லண்டனில் வீட்டு வசதி கூட கிடையாது. அவர்கள் வாடகைக்குத்தான் வீடு எடுத்த தங்க வேண்டும். அலுவலகம் மட்டும் நாடாளுமன்றத்திற்கு எதிரே உள்ள அரசு கட்டிடத்தில் வழங்கப்படும். அங்கு மட்டுமல்ல. அமெரிக்கா போன்ற நாடுகளில் கையில் காசைப் பெற்றுக்கொண்டு கேள்விகளை எழுப்பியதனால் நாடாளுமன்ற பொறுப்புகளில் விடுவிக்கப்பட்டனர். திரும்ப அழைக்கப்பட்டனர். இப்படியான சூழல் தவறிழைப்பவர்கள் மீது நம் நாட்டில் வரவேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தன்னுடைய தொகுதியில் குறைந்தபட்சம் 10 நாட்களாவது மக்களை சந்தித்து களப்பணி ஆற்ற வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அவைகளுக்கு அவசியம் சென்று நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும். அப்படி ஆர்வமில்லாதவர்களுடைய பதவியை பறிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதிப் பிரச்சினைகளை பேசினார்களா என்பதை தங்கள் தொகுதி மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.   வெட்டி படோபடங்கள் இல்லாமல் எளிமையாக, கம்பீரமாக நிமிர்ந்த நேர்நடையோடு, கண்ணியமிக்க வார்த்தைகளோடு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வலம் வரவேண்டும்.

இன்றைய நிலையில் உள்ள அவலங்களை போக்கவேண்டுமென்றால் தேர்தலில் நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அனைவரும் கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவரவேண்டும்.  உலகில் 20க்கும் மேலான நாடுகளில், குறிப்பாக அர்ஜெண்டைனா, ஆஸ்த்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கிரீஸ் போன்ற நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டு, சட்டங்களும் நடைமுறையில் உள்ளன .

இந்தியாவில் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குரிமையைக் கட்டாயமாக்குவது முதன்முதலாகக் கர்நாடகாவில் பஞ்சாயத்து தேர்தலில் சட்டமாக்கப்பட்டும்,  ஆனால் அதை நிறைவேற்ற வேண்டிய செயல்பாடுகள் சரிவர நடைபெறாமல் அந்த நோக்கம் முடங்கிப் போனது.

குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குரிமை கட்டாயமாக்கப்பட்டு, அவ்வாறு வாக்களிக்கும் கடமையைச் செய்யவில்லை என்றால் ரூபாய் 100/- அபதாரம் என்ற சட்டத்துக்கு குஜராத் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததினால் இச்சட்டம் இப்போது நிறுத்திவைக்கப் பட்டுள்ளது.

2014ல் கட்டாய வாக்களிப்பு என்ற தனிநபர் மசோதாவை பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனார்த்தன சிங், சிக்ரிவால், வருண் காந்தி மக்களவையில் கொண்டுவந்தனர். 2004லும் 2009லும் இதேமாதிரியான மசோதா நாடாளுமன்றம் வந்து  நிறைவேறவில்லை.

அமெரிக்காவிலும் இதைக்குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு, அதிபர் ஒபாமா கடந்த மார்ச்சில் வாக்குரிமை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தினார்.

ஆஸ்திரியாவிலும், பெல்ஜியத்திலும் வாக்களிக்காதவர்களுக்கு அபதாரமும், சிங்கப்பூரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கமும், பெரு நாட்டில் பொது அங்காடியில் இருந்து வழங்கும் அத்யாவசியப் பொருட்களை நிறுத்துவதும், பொலிவியா நாட்டில் மூன்றுமாத ஊதிய ரத்தும், பெல்ஜியத்தில் மேலும் அரசு ஊழியர் என்றால் பதவி உயர்வை நிறுத்துவது என  கடுமையான விதிமுறைகள் உலகளவில் நடைமுறையில் உள்ளன.

நெதர்லாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்தவர்கள் இணையதளம், செல்பேசி, பதிலி (Proxy) போன்றவை மூலம் வாக்களிக்கும் வசதிகளும் உள்ளன. சில இடங்களில் ஏ.டி.எம் மையத்திலே வாக்களிக்க முடியுமா என்று பரிச்சயார்த்த சோதனைகளும் நடந்து வருகின்றன.

“ஓட்டுக்குப் பணம்” என்ற நிலைக்கு இந்திய வாக்காளர்கள்  தள்ளப்பட்டுவிட்டனர். இதைப் போக்கக்கூடிய வகையில் உலகநாடுகளில் அமலில் இருக்கும், “அரசே வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை ஏற்கின்ற முறை” வேண்டுமென்று இந்திரஜித் குப்தா அறிக்கை  1999ல் பரிந்துரை செய்துள்ளது. அதுவும் நிலுவையில் உள்ளது. விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்குரிமை இந்தியாவில் நடைமுறைக்கு வரவேண்டும் என்று குரல்கள் கேட்கின்றன. இதுவும் நடைமுறைக்கு வரவேண்டும்.

சிரம்ஜித்மான் போன்றவர்கள் எல்லாம் சிறையிலிருந்து போட்டியிட்டபோது ஏன் பாதுகாப்பு கைதிகளுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற வினாவும் உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தப்படவேண்டும் என்ற பரிந்துரையும் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது.

இதுகுறித்தெல்லாம் என்னுடைய பொதுநலவழக்கு உச்சநீதிமன்றத்தில், தேர்தல் சீர்திருத்தங்கள் எவையெல்லாம் பரிந்துரைகளாக உள்ளன. அவையெல்லாம் வரிசைப்படுத்தி, வாய்ப்புள்ளவைகளை உடனே நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் என்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விரைவில் விசாரணைக்கு வர இருக்கின்றது.

பூமி பந்து சுற்றுவதால் ஏற்படும் கால வர்த்த மானங்களில் மனமிருந்தால் மாற்றங்களை பொதுவாழ்வில் திடமாக கொண்டு வரலாம். அரசியல் சதுரங்கத்தில் நேர்மையாக களமாடினால் வரலாற்று பதிவில் நேர்மையான இடமிருக்கும். அரசியல் என்பது அம்சதுளிகா மஞ்சமல்ல என்பதை பொதுவாழ்வில் உள்ளவர்கள் உணரவேண்டும்.

ஜனநாயகம், நாடாளுமன்றம், தேர்தல்கள், மக்கள் நல அரசுகள் என்பதற்கெல்லாம் அச்சாணி தேர்தல். அந்த தேர்தலில் தகுதியற்ற கிரிமினல்கள் களத்தில் குதிக்காமல் கண்காணிப்பது மக்களின் கடமை. தகுதியே தடை என்பதை தகர்த்ததெறிய வேண்டும்..

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...