Sunday, April 10, 2016

நாகரீகமான தேர்தல் பிரச்சார வடிவம்

நண்பர் சுதாகர் பிச்சமுத்து அயர்லாந்தில் வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரம் எப்படி நடக்கிறது என்ற செய்தியை கூறியுள்ளார்.

அது வருமாறு:

"வடக்கு அயர்லாந்து சட்ட சபைக்கு எதிர் வரும் மே 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அடியேனுக்கு ஓட்டு போட வாக்குரிமை தகவல் வந்துள்ளது.

ஆச்சரியம் என்னவென்றால் இங்கே தேர்தல் நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை, சுவரொட்டிகள், பதாகைகள், போடுங்கம்மா ஓட்டு என்ற மைக் செட் கதறல்கள் இல்லை.

பிறகு எப்படி பிரச்சாரம் செய்கிறார்கள்.

பொது இடங்களில் அரசின் அனுமதி பெற்று சிறு கூட்டங்கள் நடத்துகிறார்கள். ஒவ்வொரு பகுதியில் இருக்கும் சமூக மன்றங்களில் இது பற்றிய விவாதங்களை முன்னெடுக்கிறார்கள். ஊடகங்களில் வாக்காளர்கள் நேரிடையாக கலந்து கொண்டு விவாதம் செய்கிறார்கள்.

இது தவிர பிரச்சார துண்டுகளை தபாலில் அனுப்புகிறார்கள். நேற்று என் வீட்டு முகவரிக்கு தபால் மூலம் பிரச்சார துண்டு சீண்டுகள் அனுப்பப்பட்டு இருந்தது. அதன் புகைப்படங்களை இங்கு இணைத்துள்ளேன்.


இந்த பிரச்சார துண்டு சீட்டில், வேட்பாளர்கள் தங்களது தொடர்பு எண், மின்னஞ்சல், டிவிட்டர், முகநூல் என அனைத்து தகவல்களையும் தந்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்த வரை, கடந்த மூன்று மாதங்களாக சமூக வலை தளங்களில் நம்மவர்கள் முன்னெடுக்கும் பிரச்சார உத்திகள் அருவருப்பின் எல்லையை தாண்டுபவை. தனி நபர் தாக்குதல், வாக்குக்கு பணம் கொடுத்தல், எதிர் கட்சிகளுக்கு முறையான தேர்தல் பரப்புரை உரிமை இல்லாமை என அடுக்கி கொண்டே போகலாம்.

வெளிநாடுகளைப் போல் நமது தேர்தல் பிரச்சாரங்கள் பொதுமக்களுக்கும், பொதுசொத்துகளுக்கும் சேதமின்றி நவீன வடிவில் மாறினால் நன்றாக இருக்கும்."

-----

  இதேபோல பிரிட்டனில் நடந்த தேர்தலை பார்க்க முடிந்தது.  சுவர்களை பாழ்படுத்துகின்ற சுவரொட்டிகளும், கிராமங்களில் சுவர் விளம்பரங்களும் இல்லாமல் எளிமையான பிரச்சாரங்கள் நடக்கின்றன. படோபடம் இல்லாமல் எளிமையான பிரச்சாரங்கள். பிரதமர் டேவிட் கேமரூன் கூட சாதாரணமாக பிரச்சார பணிகளை செய்தார். இந்தியாவில் இப்படி செய்ய முடியாது, மக்கள் தொகை அதிகம் என்று ஒரு சிலர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 1990 என்று நினைக்கின்றேன். ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் பீகாரில் ஹஜ்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு சிவகாசியிலிருந்து அச்சடித்த சுவரொட்டிகள் எடுத்துச் சென்றேன். வி.பி. சிங் அவர் தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வந்தபோது அதை பார்த்துவிட்டு பாஸ்வான்ஜி, எப்படி தமிழ்நாடு கலாச்சாரம் பீகாரில் வந்தது என்று கேட்டுள்ளார்.  ஆமாம். தமிழ்நாட்டில்தான் அச்சடித்து அனுப்பினார்கள் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. வட மாநிலங்களில் எளிமையான பிரச்சாரங்கள் இன்றைக்கும் நடக்கின்றன. ஏன் அருகாமையில் கேரளாவில் இப்போது தேர்தல் நடக்கிறது. வேட்பாளர்கள் மக்களை எளிமையாக அணுகுகிறார்கள். ஓட்டுக்கு பணம் விளையாடவில்லை.

எளிமையான, நேர்மையான தேர்தல் பிரச்சார யுக்திகள் தமிழகத்தில் வரவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாகும். அந்த தேர்தல்தான் உண்மையான, நேர்மையான தேர்தல் என்று கருதப்படும்.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...