Thursday, April 14, 2016

ஓவிய நண்பர் செண்பகராஜ், கோவில்பட்டி ஓவியர் ராமலிங்கம் அவர்களைப் பற்றி எழுதிய பதிவைப் படித்து விட்டு எழுதுகிறேன். 

காலண்டர் ஓவியங்கள் வரைந்து புகழ் பெற்ற கொண்டையாராஜு அவர்களிடம் பயின்ற இருவர் மிக முக்கியமானவர்கள். ஒருவர் திரு.சுப்பையா(ஓவிய நண்பன் மாரிசின் அப்பா - சாரதா ஸ்டுடியோ). மற்றொருவர் திரு.ராமலிங்கம். கோவில்பட்டி மாதாங்கோவில் தெரு என்றாலே நினைவுக்கு வருவது டாக்டர் சென்னகேசவன் அவர்களும், ஓவியர் ராமலிங்கம் அவர்களும் தான். இவரது கிளினிக் கும், ஓவியரது வீடும் எதிரெதிராக.  இருவரும் புகழ் பெற்றவர்கள். முன்னவர் மக்கள் டாக்டர். எழுபதுகளில் வெறும் இரண்டு ரூபாய் மட்டும் வாங்கி, மாத்திரை,மருந்து,ஊசி எல்லாமே அதற்குள் அடங்கிப்போகும். அவரைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவை சென்ற ஆண்டு போட்டுள்ளேன்.
ஓவியர் ராமலிங்கம் அவர்களின் வீடு " சித்ராலயா " என்ற பெயரைத் தாங்கியிருக்கும். காலண்டர் ஓவியங்கள் மற்றும் யதார்த்தபாணி ஓவியங்கள் வரைவதை தொழிலாகக்கொண்டவர். 
அந்தக் காலங்களில், இறந்து போன  வீட்டின் பெரியவர்களை வர்ண ஓவியத்தில் தீட்டி, கற்பனையில் திரை சீலைகள் தொங்க விட்டு, கம்பீரமாக நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போன்று வரைந்து  சுவரில் மாட்டுவது வசதியான, மற்றும் நடுத்தரக்  குடும்பங்களில் நடக்கும் விஷயம். 
ஓவியர் ராமலிங்கம் அவர்கள் இது போன்ற வர்ண ஓவியங்கள் தீட்டுவதில் புகழ் பெற்று விளங்கினார். அடுத்த தெருவில் இருந்த நான் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். எங்கள் இரு குடும்பங்களுக்கும் பூர்வீகம் ஆழ்வார்குறிச்சி. ஊர்ப்பாசம் இழுக்கும்.
அவருக்கு சொந்த ஊரான ஆழ்வார்குறிச்சியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்தது என் அப்பா தான். அந்த விழாவில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். திருவள்ளுவர் கழகம் நடத்திய ஆண்டு விழாவில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் வந்து வாழ்த்திப்பேசினார்.
             ஓவியர் ராமலிங்கம் அவர்களின் வீட்டு கொலு ரொம்பப் பிரசித்தி பெற்றது. ஏராளமான பொம்மைகள்,சிற்பங்கள் இருக்கும். விதவிதமான கிருஷ்ணன் பொம்மைகள், செட்டியார் பொம்மைகள்..வீட்டில் வைத்திருக்கும் நவராத்திரி கொலு பார்க்க யார் வேண்டுமானாலும் போகலாம். நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். தினமும் நூற்றுக்கணக்கான ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் இஷ்டத்திற்கு வந்து செல்வார்கள். எல்லோருக்கும் வாழை இலையில் சுண்டல் உண்டு. 
சில நாட்களில் சக்கரைப்பொங்கலும் கிடைக்கும். 
அந்த 9 நாட்களும்  " சித்ராலயா இல்லம் " திருவிழாக் கோலமாய்க் காட்சியளிக்கும். ஓவியரும் ஒரு ஓரமாய் நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு கலைஞனுக்கு மட்டுமே இது சாத்தியம்.
நவராத்திரி விழாவை கலை விழாவாக அவர் ரசித்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். 
அவரது மகன் சோமு கல்லூரியில் எனக்கு ஒரு ஆண்டு இளையவர். நல்ல ஓவியர். பள்ளி,கல்லூரி ஓவியப்போட்டிகளில் பரிசுகளை அள்ளிக் குவித்தவர்.
கொண்டையாராஜு அவர்களின் சிஷ்யர்கள் எப்போதுமே ஓவியங்கள் வரைந்தால் படத்தின் கீழே கொண்டையாராஜு அவர்கள் பெயரைப் போட்டு அதன் கீழே தான் தங்கள் பெயரைப் போடுவார்கள். ஓவியர் ராமலிங்கமும் அப்படியே தான் போடுவார்.
இவரை நான் மறக்க முடியாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
வாழ்க்கையில் முதன்முதலில் ஒரு அம்பாசடர் காரில் போனது இவரது காரில் தான். போன ஊர் ஆழ்வார்குறிச்சி.
அப்படிப் போகும்போது தான் இவர் கழுத்தில் போட்டிருந்த மைனர் செயின் பார்த்துக் கேட்டேன். " நீங்க என்ன கழுத்துல செயினெல்லாம் போட்டுருக்கீங்க..? கேள்ஸ் தானே போடுவாங்க ? "
அவர் பதில் ஒன்றும் சொல்லாமல் புன்னகை மட்டும் புரிந்தார்.
" ஏலே..அதிகப்பிரசங்கித்தனமா எதுவும் கேக்காதேல.." என்று என் அப்பா என்னைப் பார்த்து சத்தம் போட்டதும் நினைவுக்கு வருகிறது.
இது நடந்து 43 ஆண்டுகள் ஆகின்றன.
 இப்போதும் மாதாங்கோவில் தெருவைக் கடந்து செல்லும்போதெல்லாம், பொகேன்வில்லா பூக்கள் பூத்து நிற்கும் அந்த வீட்டின் நினைவுகள் வந்துபோகும்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...