Thursday, September 8, 2016

சாத்தூர்

Uசாத்தூர்
======

ஒரு காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லை வடக்கே சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் வரை 
இருந்தது. சாத்தூர் ரயிலடி முக்கியமான கேந்திரமாக திகழ்ந்தது. விருதுநகரைவிட, சிவகாசியை விட 
அக்காலத்தில் சாத்தூரும், ஸ்ரீவில்லிபுத்தூரும்தான் பிரதானமாக திகழ்ந்தன. விருதுநகர் மாவட்டத்தின் 
மாவட்ட நீதிமன்றமும் ஸ்ரீவில்லிபுத்தூரில்தான் அமைந்துள்ளது. சாத்தூர், பருத்தி, மிளகாய் வற்றல் 
வியாபாரம் பெருகியிருந்தது. கமிஷன் மண்டிகளாக திகழ்ந்தன. சாத்தூரில் கிறித்துவ பாதிரிமார்களும் 
ஆரம்பகாலத்தில் வந்திறங்கினர். சாத்தூருக்கு ரயிலில் வரும் தபால்களை குதிரைகள் மூலம் பிரித்து 
அனுப்பப்பட்டதெல்லாம் கடந்தகால செய்திகள். சாத்தூர் பேனா நிப்பு, 1970 வரை உலக பிரசித்திபெற்றது. 
சாத்தூர் சேவும் காரசாரமான ருசியானது. இங்கு விளையும் வெள்ளரி பிஞ்சும் உண்ண இதமாக இருக்கும். 
பாண்டிய கிராம வங்கியின் தலைமையிடமும் சாத்தூர்தான்.  விவசாயப் போராட்டத்திலும் முக்கிய இடம் 
பெற்ற இடம்.  எஸ்.ஆர். நாயுடு நினைவு கல்லூரியும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 
கட்டணச் சலுகைகளோடு அருமையான கல்வியை வழங்குகின்றது. அது போல மெல்லிசை மன்னர் 
பிச்சக்குட்டி பிறந்த இடமும் சாத்தூர்தான். பெருந்தலைவர் காமராஜர், பசும்பொன் தேவர், எஸ். ஆர். 
நாயுடு, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்த மாணவர் தலைவர் பெ. சீனிவாசன் ஆகியோர் கடந்த கால அரசியல் களத்தில் சுவடுகள் பதித்த இடம்,சாத்தூர்,கு.அழகிரிசாமியின் எழுத்தில் பாடல் பெற்ற ஸ்தலம் அல்லவா...அப்படிப்பட்ட சாத்தூரை பற்றிய Vijay K வின் பதிவு கண்ணில் பட்டது. அவரது 
பதிவு இதோ....

Ithu Enga Ooru சாத்தூர்...........

விருதுநகர் மாவட்டம் புரதான பெருமையும் ,புகழும் வாய்ந்தது, இங்குள்ள ஒவ்வொரு ஊருக்கும் 
சுவாரசியமான பெயர் காரணம் உண்டு. இந்த வரலாறை இது வரை யாரும் பதிவிட்டதாக தெரியவில்லை. 
நம்மால் முடிந்த வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர்களின் பெயர் காரணத்தை “ஊரும் 
பெயரும்” என்ற இந்த தொடர் மூலம் தங்களின் பார்வைக்கு விருந்தாக்குகிறது,அந்த வரிசையில் சாத்துரை 
பற்றி காண்போம் .

சாத்தூர்.

விருதுநகர் மாவட்டத்தின் தென் திசையில் தேசிய நெடுஞ்சாலை 7 லில் அர்ஜுனா மற்றும் வைப்பாறு 
நதிகளில் நடுவே அமைந்துள்ள இந்த நகரம் பழமையான அதே நேரத்தில் விவசயம் மற்றும் தொழில் 
நகரமாகும். பேனா நிப்பு தயாரிப்பு இந்தியாவில் இங்கு மட்டுமே நடைபெறுகிறது. மேலும் சாத்தூர் சேவு 
உலக புகழ் பெற்றது. இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆண்டு தோறும் லட்சகணக்கான பக்தர்கள் 
வந்து செல்லும் புனித ஸ்தலமாக உள்ளது. தீப்பெட்டி தொழிலும் இன்று இங்கே கொடிகட்டி பறக்கிறது. 
கல்வி நிறுவனங்களில் எஸ்.ஆர்.என் கல்வி நிறுவனங்கள், எட்வர்ட் பள்ளிகள் முக்கியமானது. இந்நகரத்தின் பெயர் காரணத்தை காண்போம் 
.இங்கே புகழ் பெற்ற மாரியம்மன் ,பெருமாள்,சிவன் கோயில்கள் உள்ளன.

பெயர்க்காரணம்

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் தத்தன் எனும் பெருமாள் பக்தர் ஒருவர் இருந்தார். அவர் பெருமாள் 
ஆலயங்களை எல்லாம் தரிசித்து கொண்டே ஊர் ஊராக செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். 
அவ்வாறு செல்லும் போது வழியில் ஏதேனும் நதிகளை கண்டால் தன்னுடன் எடுத்து செல்லும் பெருமாள் 
திருமகள் மற்றும் பூமா தேவி சிலைகளை வைத்து பூஜை செய்து பின் எடுத்துச் செல்வதை வழக்கமாக் 
கொண்டிருந்தார். அவ்வாறாக ஒரு சமயம் தற்போதைய சாத்தூரின் வைப்பாற்று படுகையைக் கண்டு 
அங்கிருந்த அரச மரத்தடியில் தான் கொண்டு வந்த சிலைகளை வைத்து விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தார். 
காலை எழுந்து வழக்கம் போல பூஜைகளை முடித்து விட்டு உற்சவரின் சிலைகளை எடுத்துக் கொண்டு 
கிளம்ப முயற்சித்தார் அவரால் சிலைகளை அவ்விடம் விட்டு நகர்த்த முடியவில்லை. அப்பொழுது 
அருகில் இருக்கும் சாஸ்தா கோவிலில் இருந்து வருவதாக கூறிய ஒரு சிறுவன் பகவான் இவ்விடத்தில் 
இருக்க விரும்புகிறார். எனவே தாங்கள் அவரை இவ்விடத்திலேயே விட்டுவிடுங்கள் எனக் கூறி விட்டு 
மாயமானான். அந்தப் பக்தரின் பெயரால் அப்பகுதி கட்ட தத்தன் என அழைக்கப்படுகிறது.
சாத்தூரிலிருந்து 50 மைல் அப்பால் உள்ள சேத்தூர் ஜமீன்தார் மிகவும் பண வசதி படைத்தவர், மிக்க 
பெருமாள் பக்தி உடையவர். ஆனால் பிறவியிலேயே பார்வை இழந்தவர். ஒரு நாள் அவரது கனவில் 
பெருமாள் தோன்றினார் . அவருக்கு அந்த அரச மரமும் தெளிவாக தெரிந்தது. ஜமீன்தார் பெருமாளைப் 
பார்த்து பெருமானே என்னைப் பிறவியிலேயே இரு கண்களும் தெரியாதவனாய் படைத்து விட்டாய். நான் 
எப்படி உன்னை சேவிப்பேன் என முறையிட்டார். உடனே பெருமாள் உனக்கு இன்று முதல் ஒரு கண் 
தெரியும், நீ என்னை தேடி வந்து என்னை சேவிக்கும் கணமே உனது மறு கண்ணும் உனக்கு தெரியும் என 
கூறினார். உடனே அந்த ஜமீன்தார் தனது ஆட்களுடன் வெங்கடப்பெருமானை தேடி புறப்பட்டார். அவர்கள் 
செல்லும் வழியில் தெற்கே அந்த பெருமான் இருப்பதைக் கண்ட அவரது ஆட்கள் ஜமீன்தாரிடம் 
சொன்னார்கள். அவர் பெருமானே என வணங்கவும் அவருக்கு மற்றொரு கண்ணும் பார்வை வந்தது. 
மகிழ்ந்த அந்த ஜமீன் பெருமாளுக்கு அங்கு கோவில் கட்ட எண்ணினார். ஆனால் அங்கே சரியான இடம் 
அமைய வில்லை. எனவே கோவிலைச் சாஸ்தா கோவில் அருகே கட்டி அந்த பகுதிக்கு சாத்தூர் எனவும் 
அந்த பெருமாளை சாத்தூரப்பன் எனவும் அழைத்தனர்.

அக் கோவில் குடமுழுக்கு விழா திருப்பதி குருக்கள் தலைமையில் சிறப்பாக நடந்தது. பெருமாள், 
குருக்கள் ஒருவரிடம் நான் இந்த இடத்திலிருந்து மேற்கு பகுதியில் ஒரு ஆலமரத்தின் அடியில் 
இருப்பதாகக் கூறி, விவரமறிந்த ஜமீன்தார் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது, ஆலமரத்தடியில் 
வெங்கடாசலபதியைக் கண்டார். அந்த குருக்கள் இந்தப் பகுதி படந்தால் என அழைக்கபடும் எனவும் 
பெருமாள் குடி கொண்டிருப்பதால் தென் திருப்பதி என அழைக்கப்படும் எனவும் மொழிந்தார். இன்றும் 
படந்தால் மற்றும் சாத்தூர் என அருகருகே இரண்டு ஊர்களிலும் பெருமாள் கோயில்கள் உள்ளன. 
ஒவ்வொரு ஆண்டும் ஆனி தேரோட்டத் திருவிழாவின் போது சாத்தூரப்பன், படந்தால் சென்று தங்கிய 
பின்புதான் தேரில் எழுந்தருள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முத்தாய்ப்பாக சாத்தூர் சேவு தயாரிக்கும் முறையினை காண்போம்

இங்குள்ள நீர் ஆதாரங்கள், விளையும் மிளகாய் வற்றலின் காரம், சேவு தயாரிப்பவர்களின் கைவண்ணம், 
தரம் ஆகியவை, மற்ற ஊர் சேவுகளிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.. 80 ஆண்டுகளுக்கு முன் 
சண்முக நாடார் காராச்சேவில் உருவாக்கிய தனிச்சுவையே சாத்தூருக்கு இன்றும் புகழ் சேர்க்கிறது. 
வழக்கமாக சூரியகாந்தி எண்ணெயில்தான் இவ்வகை பலகாரங்கள் செய்வார்கள். சாத்தூர் சேவு கடலை 
எண்ணெயில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. அதன் தனிச் சிறப்புக்கு கடலை எண்ணெயின் மணமும் ஒரு 
காரணமே. அத்துடன் கொடைக்கானலில் இருந்து தருவிக்கப்படும் மலைப்பூண்டும் சாத்தூர் மிளகாயும் 
கூடுதல் சுவை சேர்க்கின்றன. ஒரு மாதம் வரை கெடாத பலகாரம் இது. மெலிதான காராச்சேவு 
மட்டுமல்ல... நயம் சேவு, சீரகச் சேவு, மிளகுச் சேவு, பட்டர் சேவு, இனிப்பு சேவு என பல வகை உண்டு 
இங்கு!#ksradhakrishnaposting

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...