Friday, September 23, 2016

பெரியார் – மணியம்மை திருமணம்;இராஜாஜி-டி.கே.சி

நேற்று (22.09.2016) கி.ரா.வை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், கல்கி ப்ரியன், நானும் சந்தித்த்தைப் பற்றி பதிவு செய்திருந்தேன்.
புதுச்சேரியில் கி.ரா.வை சந்திக்கும் போதெல்லாம் அறியாத பழைய செய்திகளையும் நிகழ்வுகளையும் பேசி விவாதிப்பதுண்டு. அப்படியாக நேற்றைக்கு பெரியார் – மணியம்மை திருமணம் குறித்தும், கம்யூனிஸ்டுகள் மீது 1950களில் நடந்த திருநெல்வேலி சதி வழக்கு, விவசாயிகள் போராட்டம், ஆங்கிலேயர் ஆட்சியில் பாரதியின் பாடல்களை தடை செய்தது குறித்தும், பாரதியின் தந்தை சுப்பையா எட்டயபுரம் அருகே உள்ள பிதப்புரம் கிராமத்தில் பஞ்சாலை அமைத்து நடத்த முடியாமல் அந்தப் பஞ்சாலையினுடைய இடிபாடான சுவர்கள் இன்னும் அந்த கிராமத்தில் உள்ளன, இந்த கிராம வட்டாரங்களில் தான் 1950களில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமறவாக வாழ்ந்து வந்தது குறித்தும், இரசிகமணி கமப இராமாயணப் பாக்களில் இடைச்செருகல்களை நீக்கி அவர் 1950களின் துவக்கத்தில் வெளியிட்ட டி.கே.சி.யின் இராமாயணப் பாடல்கள் 3 தொகுப்புகள் குறித்தும், மறைந்த முன்னாள் இந்திய மல்யுத்த வீரர் தாராசிங் கோவில்பட்டியில் மனோரமா ஸ்வீட் ஸ்டாலில் அவர் உண்ட விதம், நீதிக் கட்சி இறை மறுப்புக் கொள்கையை வலியுறுத்தவில்லை, சேரன்மாதேவி வ.வே.சு குருகுலப் பிரச்சினை, முதல்வர் ஓமாந்தூர் ராமசாமி ரெடியார் என பல செய்திகளைப் பேசும் போது புதிதாக அறிய முடிந்தது.
1. பெரியார் – மணியம்மை திருமண சர்ச்சையின் போது திருவண்ணாமலையில் மூதறிஞர் ராஜாஜியும் பெரியாரும் தனியாகச் சந்தித்து திருமணத்தைக் குறித்துப் பேசியதாக கடந்த காலச் செய்திகள் உண்டு. அவ்விருவரும் பேசியதென்ன என்று கேள்விக் கணைகளும் எழுப்பியதுண்டு. இதில் புதிதாக அறியப்படவேண்டியது என்னவென்றால் இந்தப் பேச்சுவார்த்தையில் இரசிகமணி டி.கே.சியும் மூன்றாவது நபராக கலந்துக் கொண்டார் என்பதை கி.ரா சொல்லித் தான் அறிந்தேன். இரசிகமணி உடனிருப்பதைப் பார்த்த பெரியார் “நம்ம ரெண்டு பேரு மட்டும் தான் பேசணும்” என்று சொல்லியுள்ளார். சூழ்நிலையை உணர்ந்த இரசிகமனி எழுந்து அறையை விட்டு வெளியேற முற்பட்ட போது இராஜாஜி, “ நாயக்கரே! நான் வேற.. அவர் வேற இல்ல... இரசிகமணி யோசனைகள் சொல்வாரு.. இருக்கட்டும்” என மறுத்துப் பேசினார். அந்தப் பேச்சுவார்த்தை குறித்து டி.கே.சி -  கி.ராவிடம் சம்பாஷித்த போது, பெரியார் இராஜாஜியிடம் மணியம்மையைத் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறேன். வயதாகிய காலத்தில் எனக்கு ஒரு துணை வேண்டும் என்று சொன்னதாகவும் அதற்கு ராஜாஜி அவர்கள், “ நாயக்கரே! திருமணம் வேண்டாமே... தவிர்க்கலாமே” என்றாராம். அப்போது இரசிகமணி இடைமறித்து ராஜாஜியிடம், “ உங்க நண்பர் நாயக்கர் கல்யாணம் பண்ணிக்கிட விரும்பறார். இரண்டு பேரும் விரும்புனா கல்யாணம் பண்ணிக்கிட வேண்டியது தானே. மனப்பூர்வமா ரெண்டு பேரும் விரும்பும் போது நீங்க தடுக்கணுமா?” எனக் கூறியுள்ளார்.
(பதிவுகள் தொடரும்)

1 comment:

  1. பதிவுக்கு நன்றி! இதன் தொடர்ச்சி எங்கு உள்ளது என்று கூறவும்

    ReplyDelete

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...