Sunday, September 4, 2016

கோவை நரசிம்மலு நாயுடுவும் சிறுவாணியும்



இன்றைக்கு சிறுவாணி பிரச்சினையால் கொங்கு மண்டலம் கிளர்ந்தெழுந்துள்ளது. இந்த நீரை கோவை நகருக்கு கொண்டுவர கடந்த நூற்றாண்டு துவக்கத்தில் முயற்சிகள் எடுத்தவர்தான் நரசிம்மலு நாயுடு.  முல்லைப் பெரியாறு போல சிறுவாணி அமைய வேண்டும் என்று 1900 கட்டங்களில் நரசிம்மலு நாயுடு விரும்பியதுண்டு.  ஆனால் அவர் சொல்லி 30 ஆண்டு கழித்துதான் ஆங்கிலேயர்கள் 1930ல் அந்த நீரை கோவைக்கு குடிநீராக வழங்கினார்கள்.

நரசிம்மலு நாயுடு குடும்பத்தைச் சேர்ந்த சீனிவாசன் நேற்றைக்கு கோவையிலிருந்து வந்து என்னை சந்திக்கும்போது அவரை குறித்து நினைவு கூர்ந்து விவாதித்தோம்.

நரசிம்மலு நாயுடு பற்றி எத்தனை பேர் இன்றைக்கு அறிந்துள்ளார்கள் என்று தெரியவில்லை. கோவை நகரை நிர்மாணித்ததில் அவருக்கு முக்கிய பங்குண்டு. கோவை நகரத்தில் குடியேறினால் நோய்கள் வந்துவிடும் என்று பயந்த காலத்தில் அக்கால கோவையில் குடியேற்றத்தை வேகமாக செயல்படுத்தியவர்தான் நரசிம்மலு நாயுடு. இன்றைக்கு கோவை மாநகராட்சி கட்டிடத்தை அமைத்தவரும் அவர்தான். அவர் குறித்து பேராசிரியர் தொ.பரமசிவம் குறிப்பிடுவது, "என் எண்ணற்ற ஆதங்கங்களில் இன்னொன்று நரசிம்மலு நாயுடு குறித்ததுதான். கோவையில் அவர் பெயரில் ஒரு பள்ளி இன்றும் உள்ளது. 1900 லேயே வேளாண்மை குறித்து அற்புதமான நூலை எழுதியவர் நரசிம்மலு நாயுடு. அவர் எழுதிய 'விவசாயம் அல்லது கிருஷி சாஸ்திர சாரசங்கியம்' என்கிற நூல் தமிழில் முதன்முதலில் வந்த வேளாண்மை குறித்த அருமையான நூல். ஆனால் அவரைப் பற்றி இன்னும் ஒரு பல்கலைக் கழகத்துலகூட யாரும் ஆராய்ச்சிப் படிப்புக்காக இதுவரைக்கும் தொடக்கூட இல்லை. அருமையான மனிதர்ங்க அவர். நீங்க இதப் பத்தி எங்கியாவது எழுதுங்க...." என்கிறார்.

கோவையில் பஞ்சாலைகள் அமைவதற்கு அடிகோலியவரும் இவர்தான்.  கல்கத்தாவுக்கு சென்று பஞ்சு அரவை இயந்திரங்களை வாங்கிக் கொண்டு வந்து கோவையில் அமைத்தபின்தான் சிறிது சிறிதாக கோவை பஞ்சாலை நகரமாக மாறி தமிழகத்தின் மான்செஸ்டராக பெயர்பெற்றது.

இவர் மிகச்சிறந்த ஆசிரியர். மிகச்சிறந்த கல்விமான். பல மொழிகள் கற்றவர். பல நூல்கள் எழுதியவர். புகழ்பெற்ற பத்திரிகையின் ஆசிரியர். ஆங்கிலம் மற்றும் தமிழில் அற்புத பேச்சாளர். அநீதிகளுக்கு எதிராகப் போராடிய நேர்மையாளர். தமிழ்த் தொண்டாற்றிய தமிழறிஞர். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கப் புலவர். தட்சிண இந்திய சரித்திரம், இந்து பைபில், சமரச வேத உபந்யாசம், பூமி சாஸ்திர கிரந்தம், சிறந்த கணிதம் முதலான நூற்றுக்கணக்கான நூல்களைப் படைத்தவர்.

தொடக்க கால காங்கிரஸ் மாநாடுகளில் இவர் தென்னகத்தின் பிரதிநிதி. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் உண்மையைப் பரப்ப ஓய்வில்லாது உழைத்த உத்தமர். இராஜாராம் மோகன்ராய் ஏற்படுத்திய பிரம்ம சமாஜத்தை கோவைப் பகுதியில் பரப்பிய பெருமகன். சாதி, மத மூடப்பழக்க வழக்கங்களைத் தள்ளி வைத்தவர். சீர்திருத்தம், பெண்ணுரிமை, விதவை மறுமணம் பரவத் தொண்டாற்றியவர். இன்று நாம் காணும் விக்டோரியா டவுன்ஹால், விக்டோரியாப் பேரரசியின் பொன்விழா நினைவாய் இவர் கட்டியதுதான். கோவையில் நாம் சுவைக்கும் சிறுவாணி நீர்த் திட்டத்தை உருவாக்கிய தேசாபிமானி.

இவரைக் குறித்து மறைந்த தமிழறிஞர் ம.ரா.போ. குருசாமி குறிப்பிடுவது, "சமய நிறுவனங்கள் பலவும் இணைந்து செய்யவேண்டிய திருப்பணியை ஞானப் பெருந்தகை சே.ப.நரசிம்மலு நாயுடு ஒருவரே ஏகாக்கிர சிந்தையோடு மிக வெற்றிகரமாக செய்து முடித்தார்.

இது வரலாற்று வழியில் எல்லோரும் உணரவேண்டிய உண்மையாகும். சிறப்பான இந்த உண்மைச் செயல் வடிவிலே நடைமுறைக்கு ஏற்றவாறு விளக்கும் "இந்து பைபில்" நூலை வெளியிட்டார்".

கவிஞர் புவியரசுக் குறிப்பிடுவது, "நரசிம்மலு நாயுடு என்ற அறிஞர் நுண்மான் நுழைபுலம் கொண்ட கல்விமான். அவருடைய பன்மொழிப் புலமை தமிழ் மொழிக்கு அருட்கொடையாகும்".

இப்படிப்பட்ட ஆளுமைகொண்ட நரசிம்மலு நாயுடு பற்றி ஒரு சமயம் கி.ரா. கேட்டிருந்தார். குறிப்புகளை, தரவுகளைத் தேடி கதைசொல்லியில் அவரைப் பற்றிய விரிவான பதிவை 2009 காலகட்டத்தில் எழுதியுள்ளேன். அவர் எழுதிய இந்து பைபில் என்ற மத நல்லிணக்க நூல், 1017 பக்கம் கொண்டது. 1911 நவம்பர் மாதம் வெளியிட்டார். அந்த நூலில் பல அரிய செய்திகள் மதத்தைத் தாண்டி தத்துவார்த்த ரீதியான சொல்லாடல்கள் உள்ளன.

1911லிலேயே நரசிம்மலு நாயுடு கூறிய கருத்துக்கள் சில....

"இருண்ட மனங்களிலே இன்பவிளக் கேற்றுங்கள்
இதயத்தின் வாசலிலே எழிற்கோலம் போடுங்கள்
வானத்தில் ஆயிரம்பூ வனப்பு உண்டு மணமில்லை
ஞானப்பூ பறித்துவந்து நறுமணத்தைப் பரப்புங்கள்

இத்தனைநாள் கருவறையில் ஏகாந்தம் கொண்டிருந்த
சித்தன் விழிதிறந்து செகம்காண வருகின்றான்
வாருங்கள் தோழர்களே வாழ்த்தி வரவேற்போம்
வாருங்கள் தோழியரே வாய்மணக்கப் பாடிடுவோம்!"

"இளைய தலைமுறை அறியாமையிலிருந்து விடுபட வேண்டும்; மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட வேண்டும்; அறிவு, சுதந்திரம், தன்னிறைவு எங்கும் நிலவ வேண்டும்; பேரிறை மெய்ம்மையை அனைவரும் உணரவேண்டும்!"

இவரைப் பற்றிய வரலாற்றை சாகித்திய அகாதமி நூலாக வெளியிட்டுள்ளது.


#கோவை #நரசிம்மலுநாயுடு #சிறுவாணி #இந்துபைபில் #ksrposting #ksradhakrishnanposting #narasimmalunaidu #kovai #coimbatore #siruvani

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...