Sunday, September 18, 2016

"சிறுமைகண்டு பொங்கி எழு"

இன்று தொலைக்காட்சியில் ஒரு விவாதத்தை பார்க்க முடிந்தது. அந்த "சம்பாஷணை"யில் ஜனநாயகம், அரசியல், மக்கள் பணி, பொதுவாழ்வு, உலக அரசியல் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் சற்று ஆத்திரமும், கோபமும் வந்தாலும் ஜனநாயக கோட்பாடுகள் அடங்கிய நூலை எடுத்துப் படித்து சற்று கோபத்தை தணிக்க முடிந்தது. பிளாட்டோவின் குடியரசு, அரிஸ்டாட்டிலின் அரசியல் பார்வை, சிஸ்ரோவின் அணுகுமுறை, சாக்ரடீசின்  கோட்பாடுகள், லிங்கன், காரல் மார்க்ஸ், ஜான் லாக் (John Locke), மாண்டஸ்கி, கொப்ஸ், வால்டர் ரூசோ, உத்தமர் காந்தி என பலர் கூறிய அரசியல் கோட்பாடுகளை அரசியலில் அறிவியல் ரீதியில் பார்க்காமல் தறுதலையாக சிலர் தலையெடுத்துக்கொண்டு பத்திரிகைகளும், ஊடகங்களும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கும்பொழுது பாரதியின் வரிகளான "சிறுமைகண்டு பொங்கி எழு" என ரௌத்திரத்தில் தள்ளப்படுகின்றோம்.  தகுதியே தடையான காலத்தில் தகுதியற்ற, தரமற்ற, கண்ணியமற்ற, பொறுப்பற்ற சிலர் பொதுவாழ்வுக்கு வந்து நாசப்படுத்துவது நாட்டுக்குத்தான் கேடு.  இதையும் சிலர் ரசிக்கின்றனர். எதிலும் ஜாதி, இனப் பாகுபாடுகள் என வந்துவிட்டன. இது அரசியலில் மட்டுமல்லாமல் ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் நுழைந்து சங்கடப்படுத்துகின்றது. இதையும் மக்கள் அங்கீகரித்தால் ரணங்களை அவர்கள்தான் அனுபவிக்கவேண்டும்.  இதுதான் ஜனநாயகம் என்று மக்கள் எடுத்துக்கொண்டால் அதற்கு விலைகொடுக்கவேண்டியதும் அவர்கள்தான். பொதுவாழ்வில் திறமைகள், ஆற்றல்கள் என்ற ஆளுமை தேவையில்லை. பணம், ஜாதி, புஜபலம் இருந்தால் போதும் என்றால் அது ஜனநாயகம் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? பேட்டிகளும், விவாதங்களும் தங்கள் விருப்பத்துக்கேற்றவாறு இல்லாமல் சிலரை திட்டமிட்டு முன்னிறுத்தவேண்டும் என்று செய்கின்ற செயலும் தடுக்கப்படவேண்டும். தனிப்பட்டவர்கள் விருப்பத்துக்காக செய்வது என்றால் நாடும், மக்களும் பாதிக்கப்படுவார்கள். அமைப்பு முறையே மாறுபடும்.  புரட்சி, நேர்மையான மாற்றம், விடுதலை, உண்மையான ஜனநாயகக் கட்டமைப்பு என்பவை பின் நவீனத்துவ சூழலில் பார்க்கவேண்டும். அரசியல் என்பது வல்லான் வகுத்த வழி என்று சொல்வது முட்டாள்தனமானது. மக்களின் இறையாண்மையைக் கொண்டு நேர்மையான குடியரசு இருந்தால்தான் உண்மையான மக்கள் நல அரசுகளாக இயங்க முடியும். இந்த நிலையில் சிலர் தங்கள் விருப்பத்துக்கேற்றவாறு அரசியலை பேசி தொலைக்காட்சி விவாதங்களில் விளம்பரம் தேடிக் கொள்வதோ, வேறு பிரச்சார வடிவத்தில் தங்கள் சுய விளம்பரத்தை நிலைநாட்ட செய்துகொள்ளும் முயற்சிகள் அனைத்தும் பிற்கால சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது. ரஷ்யாவில் என்ன நடந்தது? சீனாவில் என்ன நடந்தது? எனவே மாற்றங்கள் நியாயமாக இருக்கவேண்டும். இப்படிப்பட்ட விவாதங்களை நிறுத்திவிட்டு யதார்த்த நிலைக்கு வந்தால் எல்லோருக்கும் நல்லது.

#இன்றையஜனநாயகம் #democracy #ksrposting #ksradhakrishnanposting 

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...