Friday, October 18, 2019

#வடகிழக்கு_பருவ_மழை நான்கு நாட்களுக்கு முன்பே நேற்று இராவில் தொடங்கிவிட்டது. அது குறித்தான கரிசல் மண்ணின் #நாட்டுப்புற_தரவு.

#வடகிழக்கு_பருவ_மழை நான்கு நாட்களுக்கு முன்பே நேற்று இராவில் தொடங்கிவிட்டது. அது குறித்தான கரிசல் மண்ணின் #நாட்டுப்புற_தரவு.
என்றோ #கரிசல்_மண்ணில்விழப்போகும் மழைத்துளிக்காக ஏங்கும் எங்கள் கரிசல் வட்டாரக் கவிஞரின் இதயக் குரல்.
-----------------------------
இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கி,கோமல் சுவாமிநாதன் தயாரிப்பில் தண்ணீர் தண்ணீர் என்ற திரைப்படம்,நான் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டபோது எடுக்கப்பட்டு வெளிவந்து தமிழக மக்களால் வெகுவாக கவனிக்கப்பட்டது. அந்த கரிசல்மண் சார்ந்த கவிஞர் கி. உக்கிரபாண்டி நாகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். அவரின் இந்த கவிதை கவனத்தை ஈர்த்தது.

வடகிழக்குப் பருவமழை
-----------------

இருக்கன்குடி மூலயில
இருட்டிக்கிட்டு வந்தா
இந்த வாரம் சந்தை இருக்காது
இருந்து பேல மந்தை இருக்காது
கம்மாய் நிறைஞ்சி போகும்
வயக்காடு வழிஞ்சி ஓடும்
கரிசக்காட்டுல கம்மபுல்லும்
செவக்காட்டுல சங்கரன்கோவில் கடலையும் காணமும்
செடி செத்த
வெட்டாத செம்மண்ணுல
இடி மின்னலுக்கு இடம் கொடுத்தா
விடியுமுன்ன விடிவெள்ளி பூமி வந்து
முட்டைக்காளானா மொளச்சிருக்கும்
ஓடி பெறக்குனா
ஒரு பெட்டி
சுத்தி பெறக்குனா
சித்தி வீட்டுக்கும் சேத்து குடுக்கலாம்
நாட்டுக்கோழி வேகுதுன்னு
நாலு நாக்கு சொல்லுமாம்
ஆட்டுக்கறி அடுப்புல இருக்குன்னு
ஆளுக பேசுமாம்
கட்டிக்குடுத்தவ பாசம்போல
ஒட்டிக்கிட்டு இருக்குமாம்
காளான் வாசம்
ஓடப்பக்கம் ஒசந்திருக்கும்
ஒத்த பனை
குருத்தோலை புதுசுன்னு
குறுஞ்செய்தி குடுத்திருக்கும்
கொடிவீசி தளிரடிக்கும்
பிரண்டை செடி
பேன் பாக்க நேரமில்லாத
பொம்பளைங்க முடி
குட்டைய கலக்கி
சேலையை வீசினா
ஒரு தூக்காளி நிறைஞ்சிரும்
அயிரையும் சிலேப்பியும்
தெருவிளக்க
தேடி வந்து சாகும் ஈசல்
அரிசிய வறுத்து சேர்த்து திங்கிம்
அதுல நாலு பொம்பளைங்க
செயற்கை உரம்
செஞ்சவினை
களைக்கொல்லி கருமாந்திரம்
தொழிற்சாலை ரசாயன கழிவு
தொறந்து விட்டா
தொப்பனே யாருக்கு அழிவு?
ஆவியாகும் சூத்திரம்
அழிஞ்சி போகாதா?
மழை பேயும் மாண்பு
மக்கிப்போகாதா?
மேகத்துக்கு மோகம் வந்தா
தணிச்சிட்டுப் போக
தரணிவரணும்ங்கிறது
தாத்தா காலம்
ஆடு மாட்டு பசிக்கு
ஐப்பசில அட மழை பெஞ்சதெல்லாம்
அந்தக் காலம்
வருசமாகியும்
வயசுக்கு வராதா பொட்ட புள்ள மாதிரி
வறண்ட பூமிக்கு
வராமலே போய்க் கிட்டு இருக்கு
வடகிழக்குப் பருவ மழை.
- நாகம்பட்டி, கி. உக்கிரபாண்டியின் வடகிழக்கு வாசம் (வடகிழக்கு பருவமழை)
(படம். கரிசல் காட்டு கவிதைச்சோலை, பாரதி பிறந்த எட்டையபுரம்- கரிசல் மண்ணின் கேந்திரம்.)
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
17/10/2019.
Image may contain: one or more people and outdoor

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...