Sunday, October 27, 2019

*#ராஜா__வந்திருக்கிரார்* -கு.அழகிரிசாமி. தீபாவளி அன்று வீடு தேடிவரும் சிறுவன் .... கரிசல் பூமி கிராமத்து தீபாவளி......

*#ராஜா__வந்திருக்கிரார்*
-கு.அழகிரிசாமி.
தீபாவளி அன்று வீடு  தேடிவரும் சிறுவன் .... கிராமத்து தீபாவளி......

————————————————
(மேலுள்ள அட்டையில் உள்ளது சென்னையில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த HOE& Co வெளியிட்ட டயரி தாளில் கு.அழகிரிசாமி எழுதிய கதைகள். HOE& Co வழக்கறிஞரர்களுக்காக நீண்ட டயரியும் இது போன்ற பொதுமக்களுக்கான வெளியிட்ட டயரியில் தமிழ் ஆங்கிலம் தெலுங்கு கன்னடம்  மொழிகளில் நாட்குறிப்பு இருக்கும். இந்த HOE& Co நிறுவனம் சென்னை பாரிமுனையில் உள்ள பந்தர் தெருவில் இருந்தது. அதற்கு மேல் ராஜா வந்திருக்கிறார் என்பது கி.ராவால்  எழுதப்பட்டது. இந்த 97 வயதிலும் முப்பதைந்து ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய இந்த எழுத்தைப் போலவே கோணலில்லாமல், நடுக்கமில்லாமல் தெளிவாக எழுதுகிறார்.

சிறு பிராயத்தில், கல்லூரியில் பியூசி புகுமுக வகுப்பு சேர்வதற்கு முன் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படிக்கிற காலம் வரை கிராமத்தில் தீபாவளி என்பதில் ஒரு நாட்டமும் ஆர்வமும் அதிகமாக இருந்தது.  எண்ணெய் வைத்து தலை  குளித்து விடியலில் புது துணிகளை அணிவது வாடிக்கை. எங்கள் கிராமத்தில் பொண்ணு டெய்லர் என்பவர் காஜா போட்டுக் கொண்டிருக்கிறேன், தைத்து கொடுத்து விடுகிறேன் என்று தன்னைச் சுற்றி பத்திருபது பேர் சூழ்ந்திருக்க சொல்லிக் கொண்டேயிருப்பார். ஆனால் தீபாவளி முடிந்த இரவு வரை புது துணிகள் சிலருக்கு தைத்துக் கொடுக்க முடியாததால் ஏமாற்றத்தில் அவர்கள் அவரை சபித்துக் கொண்டே போவதை எல்லாம் பார்த்ததுண்டு.

தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே துணிகளை கொடுத்து விடுவது வாடிக்கை. கிராமத்தை பொறுத்த வரையில் அதிரசம், முறுக்கு, சீடை தான் செய்வார்கள், மற்ற இனிப்பு வகைகள் கிராமத்தில் கிடையாது. இந்த முறுக்கு சீடையில் வெண்ணையும் நெய்யும் போடாமல் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெயில் சுட்டால் மணமும் ருசியும் அதிகமாக இருக்கும். வெண்ணையில் சுடும் போது அந்த ருசி இருப்பதில்லை. பலரிடம் இந்த விஷயம் எடுபடவில்லை. கல்லூரிக்கு சென்ற பின் வேறு ஒன்றிலும் அக்கறை இல்லாமல் புது திரைப்படங்கள் என்ன வந்துள்ளன என்பதில் தான் ஆர்வம் இருக்கும். அப்போதெல்லாம் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலத்தில் தான் அதிக்கப்படியான திரைப்படங்கள் வெளியாகும். அந்த திரைப்படங்கள் நூறு நாட்களை தாண்டி வெள்ளி விழாவும் கொண்டாடியதுண்டு. தீபாவளி மலர் கல்கி, கலைமகள், அமுதசுரபி தான் அப்போது கண்ணில் படும். தீபாவளி அன்று இந்த ராஜா வந்தார் என்ற கதையை முதன்முதலாக 1972ல் படித்ததாக நினைவு.)
••••
*ராஜா வந்திருக்கிரார்*
கு.அழகிரிசாமி.

எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா! என்று கெட்டிக்காரத் தனமாகக் கேட்டான் ராமசாமி.
செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்; தம்பையா ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்; மங்கம்மாள் மூக்கின் மேல் ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டும் கண்ணை இலேசாக மூடிக்கொண்டும் லேசாக யோசனை செய்தாள். அந்த மூவரும் ராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்றப் பிள்ளைகள்.
அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. ராமசாமி தன் ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்திய தேச சரித்திரப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். செல்லையா அந்த வருடம் இந்திய தேச சரித்திரம் வாங்கவில்லை; அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். இருவரும் படப் போட்டியை ஆரம்பித்து விட்டார்கள்.
ராமசாமி தன் புத்தகத்தை முதலிலிருந்து ஒவ்வொரு தாளாகத் திருப்புவான்; படம் இருக்கும் பக்கத்தைச் செல்லையாவுக்குக் காட்டி, இதோ, இந்தப் படத்துக்குப் பதில் படம் காட்டு என்பான். செல்லையா தன் புத்தகத்தைத் திறந்து அதில் உள்ள ஒரு படத்தைக் காட்டுவான்; பிறகு, இருவருமே புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டுவார்கள். யாராவது ஒருவருடைய புத்தகத்தில் அடுத்த படியாகப் படம் வரும்; உடனே, அந்தப் படத்துக்கு அடுத்தவன் பதில் படம் காட்ட வேண்டும். இவ்விதமாக பதிலுக்குப் பதில் படம் காட்டிய வண்ணம் புத்தகம் முழுவதையும் புரட்டுவார்கள்.எவன் புத்தகத்தில் அதிகப் படங்கள் இருக்கின்றனவோ, அவன் ஜெயித்து விடுவான்; மற்றவன் தோற்றுப் போவான். உடனே ஜெயித்தவன், உனக்குப் படம் காட்ட முடியல்லே! தோத்துப் போயிட்டியே! என்று பரிகாசம் செய்வான். இந்த மாதிரியான படப் போட்டிதான் அன்றும் நடந்து கொண்டிருந்தது.
போட்டி பாதியில் நிற்கிறது. அந்தச் சமயத்தில் ஐந்தாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் வந்துவிட்டார். அந்த கணக்கு வாத்தியார் மிகவும் கெடுபிடியானவர். அவர் வகுப்பில், பையன்கள் வெளியே தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்க முடியாது. தவிரவும் கணக்குப் போடும்போது, பென்சிலும், கையுமாக இருக்க வேண்டும். இதில், படப்போட்டி நடத்துவது எப்படி?
வாத்தியார் வந்ததும் இவருடைய போட்டியும் நின்றுவிட்டது. கடைசியில், சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வெளியே வந்த பிறகு, ஒரு வேப்பமரத்தின் அடியில் நின்று இருவரும் அந்தப் போட்டியை நடத்தினார்கள்.
ராமசாமியின் சரித்திரப் புத்தகத்தில் பாதிதான் தாண்டியிருக்கும்; ஆனால் செல்லையாவின் சிவிக்ஸ் புத்தகம் முடிந்துவிட்டது. செல்லையா தோற்றுப் போய்விட்டான். பக்கத்தில் நின்ற பிள்ளைகள் அவனைக் கேலி செய்தார்கள். தங்கள் அண்ணன் தோற்றுப் போனதைக் கண்டு, தம்பையாவுக்கும் மங்கம்மாளுக்கும் சொல்லமுடியாத வருத்தம்.
அந்த இடத்தை விட்டு எல்லோரும் வீட்டுக்குப் போகப் புறப்பட்டார்கள். நடந்து செல்லும்போதே, படப் போட்டி வேறொரு அவதாரம் எடுக்கத் தொடங்கியது. எங்கள் வீட்டில் அது இருக்கே, உங்கள் வீட்டில் இருக்கா? என்று இருவரும் ஒருவரிடம் ஒருவர் கேட்க ஆரம்பித்தனர். இந்தப் புதுப் போட்டியின் கடைசிப் பகுதியில் தான் ராமசாமி, எனக்கு சில்க் சட்டை இருக்கே, உனக்கு இருக்கா? என்று கேட்டான்.
வேப்ப மரத்தைவிட்டு, அரை பர்லாங் தூரத்திலுள்ள பார்வதியம்மன் கோவில் பக்கமாக வந்தாய்விட்டது. இன்னும் செல்லையாவோ தம்பையாவோ ராமசாமிக்கு பதில் சொல்லவில்லை. ஆனால், மங்கம்மாள் திடீரென்று எல்லோரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு, ராமசாமியின் முன்னாள் வந்து நின்றாள் குழந்தைகள் எல்லோரும் மங்கம்மாவையே கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அவள், ரேகை சாஸ்திரியிடம் காட்டுவது போலக் கையை வைத்துக் கொண்டு, ஐயோ! சில்க் சட்டை எதுக்காம்? ஹூம், லேசாச் சருகு மாதிரி இருக்கும். சீக்கிரம் கிழிஞ்சி போகும். (செல்லையாவின் சட்டையைக் காட்டி) இதுதான் கனமாயிருக்கு. ரொம்ப நாளைக்குக் கிழியாமே இருக்கும். நல்லாப்பாரு! என்று மிகமிகப் பரிகாசமாகச் சொல்லிவிட்டு செல்லையாவின் பக்கத்தில் வந்து நின்றாள்.
ராமசாமி திகைத்து நின்றுவிட்டான். முதல் வகுப்பில் படிக்கும் மங்கம்மாள், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் தன்னை இப்படித் தோற்கடித்து விட்டாளே என்று சங்கடப்பட்டான். பிள்ளைகள் ராமசாமியைப் பார்த்து, தோத்துப் போயிட்டியா! என்று ஏளனம் பண்ணினார்கள்.
மங்கம்மாள் செல்லையாவின் சட்டையைப் பிடித்துக்கொண்டு, அவனை ஒட்டி உரசி நின்று கொண்டாள். நடக்கும் போதும் அப்படியே நடந்து வந்தாள். அவள் மனதிற்குள்ளே ஒரு பெருமிதம்.
ராமசாமி அடுத்து கேள்வியைப் போட்டான்: எங்கள் வீட்டிலே ஆறு பசு இருக்கு; உங்க வீட்டிலே இருக்கா?
இதற்குச் செல்லையா பதில் சொல்லவில்லை; மங்கம்மாளும் பதில் சொல்லவில்லை. தம்பையா, இவுஹதான் பணக்காரராம்! அதுதான் ரொம்பப் பெருமை ஹூம்! பெருமை பீத்திக்கலாம்என்று சொல்லி நிலைமையைச் சமாளிக்க முயன்றான். அது முடியவில்லை. அந்தச் சமயத்தில் செல்லையா, அது சரி, எங்க வீட்டிலே ஒன்பது கோழி இருக்கு, உங்க வீட்டிலே இருக்கா? என்று ஒரு போடு போட்டான்.
ராமசாமியும் தயங்கவில்லை: நாங்கள் உங்களைப் போலக் கோழி அடிச்சுச் சாப்பிட மாட்டோம். நாங்க எதுக்குக் கோழி வளக்கணும்? அதுதான் எங்க வீட்டிலே கோழி இல்லே என்றான்.
அதெல்லாம் சும்மா. ஒன்பது கோழி இருக்கா, இல்லையா? என்று ஒரே பிடிவாதமாகக் கேட்டான் செல்லையா.
ராமசாமிக்கு பதில் சொல்ல முடியவில்லையே என்று கூட வருத்தமில்லை. மற்றப் பிள்ளைகள் எல்லோரும் ஒன்று கூடிக் கொண்டு அவனைப் பரிகாசம் செய்வதை அவனால் தாங்கமுடியவில்லை.அழுகை வரும் போல இருந்தது. அதனால் எல்லோரையும் விட வேகமாக நடக்க ஆரம்பித்தான். மற்றப் பிள்ளைகளும் அதே வேகத்தில் நடந்தார்கள். சிறு குழந்தையாக இருக்கும் மங்கம்மாள் அதே வேகத்தில் நடக்க முடியாது. அதனால் ஓடினாள்.
சிற்சில குழந்தைகள் தங்கள் தங்கள் வீட்டுக்கு நேராக வந்த மாத்திரத்தில் கூட்டத்திலிருந்து விலகி வீட்டுக்குப் போய் விட்டார்கள். கூட்டம் குறையக் குறைய ராமசாமியின் அவமானமும் குறைந்துகொண்டு வந்தது.
மேலத் தெருவுக்குள் நுழையும் போது, ராமசாமியும் அவனுடைய எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூவரும்தான் மிஞ்சினார்கள். ஏனென்றால், அந்தக் குக்கிராமத்துப் பள்ளிப் பிள்ளைகளில், இவர்களுடைய வீடுகள் தான் மேலத் தெருவில் இருந்தன.
ராமசாமியின் வீடு முதலாவதாக வந்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டுக்குள்ளே பாய்ந்தான் ராமசாமி. உடனே, வீதியில் நின்ற அந்த மூவரும், தோத்தோ நாயே! என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டும், கையால் சொடுக்குப் போட்டுக்கொண்டும் நின்றார்கள்.
அப்போது வீட்டுக்குள்ளிருந்து ஒரு மீசைக்காரன் தலைப்பாக் கட்டுடன் வெளியே வந்தான். அவன் ராமசாமியின் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவன். குழந்தைகள் மூவரும் கிழிந்துபோன அழுக்குத் துணியுடனும், பரட்டைத் தலையுடனும் தெருவில் நின்று, ஒரே குரலில் தோத்தோ நாயே! என்று சொல்வதைப் பார்த்து, சீ, கழுதைகளா! போறீகளா, எண்ணமும் வேணுமா? என்று அதட்டினான். மூன்று பேரும் நாலுகால் பாய்ச்சலில் ஓடிவிட்டார்கள். அவர்கள் போன பிறகு, பிச்சைக்காரக் கழுதை! தோத்தோ! நாயே!கழுதை! என்று தனக்குத் தானே ஏகத்தாளமாச் சொல்லிக் கொண்டு, தன வேலையைக் கவனிக்கப் போனான்.
செல்லையா, தம்பையா, மங்கம்மாள்  மூன்று பேரும் நெஞ்சோடு புத்தகக் கட்டுக்களை அணைத்துக்கொண்டு வீடு சேரும் போது, அவர்களுடைய தாயார் தாயம்மாள் வாசல் பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தாள்.
மங்கம்மாள் ஒரே ஓட்டமாக ஓடி, அம்மாஎன்று தாயம்மாளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டாள்.
குனிந்து வாசல் தெளித்துக் கொண்டிருந்த தாய் செல்லமாக, ஐயோ! இது என்னடா இது! என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு அழுவது போலச் சிரித்தாள்! அம்மா அழுவதைக் கண்டு மங்கம்மாளுக்கு அடக்க முடியாதபடி சிரிப்பு வந்தது.
ஐயா வந்துட்டாரா அம்மா? என்று தம்பையா கேட்டான். அப்பாவைத் தான் ஐயா என்று அந்த கிராமத்துப் பிள்ளைகள் குறிப்பிடிவார்கள்.
வரலையே! என்று பொய் சொல்லிவிட்டு, பொய்ச் சிரிப்பும் சிரித்தாள் தாயம்மாள்.
நிஜம்மா? என்று கேட்டான் தம்பையா.
நிஜம்ம்ம்மா தான்! என்று சொன்னாள் தாயம்மாள். அப்புறம் சிரித்தாள்.
மங்கம்மாள் விறுவிறு என்று அம்மாவுக்கு முன்னாள் வந்து நின்றாள். வலது கையிலிருந்து புத்தகக்கட்டை இடது கையில் இடுக்கிக் கொண்டாள். வலது கையின் ஆள்காட்டி விரலை மூக்கின் மேலும், புருவங்களுக்கு மத்தியிலும் வைத்துக்கொண்டு, முகத்தையும் ஒரு பக்கமாகத் திருப்பிக்கொண்டு, அம்மா! எனக்குத் தெரிஞ்சு போச்சு! நீ பொய் சொல்றே! ஐயா வந்துட்டாரு! என்று நீட்டி நீட்டிச் சொன்னாள்.
தாயம்மாளுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. பல்லை இறுகக் கட்டிக்கொண்டு, போக்கிரிப் பொண்ணு! என்று மங்கம்மாளின் கன்னத்தைக் கிள்ளினாள்.
செல்லையா மிகவும் ஆழமான குரலில், ஐயா வரல்லையாம்மா? என்று கேட்டான். அவன் குரலில் சோகம் ததும்பி, ஏமாற்றம் இழையோடியிருந்தது.
தாயம்மாள் வீட்டிற்குள் நுழைந்தாள். மூளையிலிருந்த ஒரு ஜாதிக்காய்ப் பொட்டியைச் சுட்டிக்காட்டி, அந்தப் பெட்டியைத் திறந்து பாரு மங்கம்மா என்றாள்.
மூவருமே ஓடிப்போய்ப் பெட்டியைத் திறந்தனர்.
பெட்டிக்குள்ளே இருந்த ஜவுளிப் பொட்டணத்தை வெளியே எடுத்து அவிழ்த்துப் பார்த்தனர். மறுநாள் விடிந்த பிறகு ஆரம்பமாகும் தீபாவளி, குழந்தைகளுக்கு அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. ஒரே குதூகலம்! ஒவ்வொரு துணியாக எடுத்து, இது யாருக்கு இது யாருக்கு என்று இனம் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பொட்டணத்தில் இரண்டு மல் பனியன்களும், இரண்டு கால் சட்டைகளும், ஒரு பாவாடையும், ஒரு பச்சை நிறமான சட்டையும், ஒரு நான்கு முழ ஈரிழைச் சிட்டைத் துண்டும் இருந்தன.
துண்டைத் தவிர மற்ற உருப்படிகள் இன்னின்னாருக்குத்தான் என்று குழந்தைகளே பங்கு போட்டுவிட்டார்கள். துண்டுயாரைச் சேருவது என்று தெரியவில்லை உடனே செல்லையா கேட்டான்: துண்டு யாருக்கும்மா?
ஐயாவுக்கு என்றாள் தாயம்மாள்.
அப்படின்னா உனக்கு? என்று மங்கம்மாள் கேட்டாள்.
தாயம்மாள் சிரித்துக்கொண்டு, எனக்குத் தான் ரெண்டு சீலை இருக்கே இன்னும் எதுக்கு? எல்லோரும் புதுத்துணி எடுக்க நாம் என்ன பணக்காரரா?
ஐயாவுக்கு மட்டும் பிறகு புதுத்துண்டு எதுக்காம்? என்றாள் மங்கம்மா.
வாயாடி! வாயாடி! ஐயாவுக்கு ஒரு துண்டுகூட இல்லே. துண்டு இல்லாமே எத்தனை நாளைக்குப் பழைய வேட்டியை உடம்பிலே போட்டுக்கிட்டு அலையறது? என்று சொல்லிவிட்டு, மங்கம்மாளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள் தாய்.
அந்தி மயங்கி, இருட்டத் தொடங்கியது. விளக்கேற்றுவதற்காகத் தாயம்மாள் எழுந்தாள்.
விளக்கேற்றிவிட்டுக் குழந்தைகளை வெந்நீரில் குளிப்பாட்டி விட்டாள். ஐப்பசி மாதமானதால் அநேகமாக நாள் தவறாமல் மழை பெய்திருந்தது. பூமி குளிர்ந்து ஜில்லிட்டு விட்டது. காற்றும் ஈரக்காற்று. இதனால் வெந்நீரில் குளித்துவிட்டு வந்த குழந்தைகளை ஈரவாடை அதிக வேகத்துடன் தாக்கியது. எல்லோரும் குடுகுடு என்று முற்றத்திலிருந்து வீட்டுக்குள்ளே ஓடி வந்து விட்டார்கள்.
குழந்தைகள் சாப்பிடும்போதுதான், அவர்களுடைய அப்பா பக்கத்துக் கிராமத்துக்கு ஒரு தூர பந்துவின் திடீர் மரணத்தை முன்னிட்டுச் சென்றிருப்பதாகவும், மறுநாள் மத்தியானத்துக்குள் வந்துவிடுவார் என்றும், வரும்வரை காத்திருக்காமல் குழந்தைகளோடு தீபாவளி கொண்டாடி விடவேண்டும் என்று அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் என்றும் தாய் தெரிவித்தாள்.
சாப்பாடு முடிந்தது. ராப் பாடம் படிக்க மாடக்குழியில் இருந்த அகல் விளக்கைத் தூண்டிவிட்டுக் கொண்டு அதன் முன்னால் மூன்று பெரும் உட்கார்ந்தார்கள்.
தாயம்மாள் சாப்பிட்டுவிட்டு, எச்சில் கும்பாக்களைக் கழுவ முற்றத்துக்கு வந்தாள். முற்றத்தின் மூலையில் கொஞ்ச தூரத்துக்கு அப்பால் ஒரு முருங்கை மரம் உண்டு. அதன் நிழலில் கருப்பாக ஓர் உருவம் தெரிந்தது. பக்கத்து வீட்டு நாயாக இருக்கும் என்று நினைத்து உள்ளே வந்துவிட்டாள்.
மண் தரையில் முந்தானையை விரித்து ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு, குழந்தைகள் உரக்கச் சத்தம்போட்டுப் பாடம் படிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் தாய். சிறிது நேரத்தில், தரை என்னமாக் குளுருது! ராத்திரி எப்படிப் படுத்துக்கிடுறது? என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாள். அவளுடைய உடம்பு அவளுடைய ஸ்பரிசத்துக்கே ஜில் லென்றிருந்தது.
தம்பையா, அண்ணனைப் பார்த்து, துணைக்கு வர்ரயா? என்று கூப்பிட்டான். இருட்டானதால் வீட்டு முற்றத்துக்குப் போய் ஒன்றுக்குப் போய்விட்டுவர அவனுக்கு பயம். செல்லையா துணைக்குப் போனான். இந்தச் சிறுவர்களின் கண்ணிலும் முருங்கை மரத்தடியில் இருந்த கருப்பு உருவம் தென்பட்டது. அதைப் பார்த்து பயந்து போகாமல் இவர்கள் தைரியமாக நின்றதற்குக் காரணம், ராமசாமியின் வீட்டை நோக்கிப் போகும் இரண்டு பேர் இரண்டு பெட்ரோமாக்ஸ் விளக்குகளைக் கையில் எடுத்துக் கொண்டு போனதுதான். ஆள் நடமாட்டமும் விளக்கு வெளிச்சமும் சேர்ந்து தைரியம் கொடுத்தன. இருவரும் கருப்பு உருவத்தைக் கூர்ந்து பார்த்தார்கள்.
அது இவர்களைப்போன்ற ஒரு சிறுவனுடைய உருவம்தான்.
உடனே இருவரும் பக்கத்தில் போனார்கள். அப்பொழுது மழை இலேசாகத் தூற ஆரம்பித்தது. அதனால் முருங்கை மரத்துக்குக் கீழாகப்போய் நின்று கொண்டு, அந்தச் சிறுவனுடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அவனுக்கு வயது எட்டு அல்லது ஒன்பது இருக்கும். அவன் உடம்பில் அழுக்கடைந்த கௌபீனம் ஒன்றைத் தவிர, வேறு உடைகள் கிடையாது, தரையில் உட்கார்ந்தால் குளிரும் என்று, பாதங்கள் மட்டும் தரையில் படும் படியாக அவன் குந்திக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னாள் மூன்று எச்சில் இலைகள். கிராமத்தில் வெண்கலக் கும்பாவில் சாப்பிடாமல், இல்லை போட்டுச் சாப்பிடுகிற வீடு ராமசாமியின் வீடுதான். அந்த வீட்டின் வாசலிலிருந்துதான் அந்த எச்சில் இலைகளை எடுத்துக் கொண்டு வந்து, அவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த பருக்கைகளையும் கரி வகைகளையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டிருந்தான்.
செல்லையாவோ தம்பையாவோ ஒன்றும் சொல்லாமல் பார்த்துக்கொண்டே நின்றார்கள்.
ஏற்கனவே யாரோ கடித்துச் சுவைத்துத் துப்பிய முருங்கைக் காய்ச் சக்கைகளில் ஒன்றை இலையிலிருந்து எடுத்தான் சிறுவன். அதை இரண்டாம் தடவையாகக் கடிக்க ஆரம்பித்தான்.
சீ! எச்சீ! ஆய் என்று சொல்லிவிட்டுக் கீழே தூ என்று துப்பினான் தம்பையா.
சிறுவன் ஏறிட்டுப் பார்த்துவிட்டுப் பழையபடியும் குனிந்து கொண்டான். செல்லையாவுக்குத் திடீரென்று ஏதோ உதயமானது போல், டேய்! ஏண்டா எங்க வீட்டு வாசலிலே வந்து உட்கார்ந்திருக்கே? போடா என்று அதட்டினான்.
சிறுவன் போகாவிட்டாலும் பயந்துவிட்டான்; அதனால் இடது கையால் தலையைச் சொறிந்துகொண்டு, அதிவேகமாக இலையை வழித்தான்.
உங்க வீட்டுக்குப் போயேன் என்றான் தம்பையா.
மழை பலமாகப் பிடித்து விடும்போல இருந்தது.அதற்குள்ளாக அவனை விரட்டிவிட்டு, வீட்டிற்குள் ஓடிவிட வேண்டும் என்று செல்லையாவும் தம்பையாவும் முடிவு கட்டினார்கள்.
போடா இல்லாட்டி உன் மேலே துப்புவேன் என்றான் தம்பையா. சிறுவன் எழுந்திருக்கும் வழியைக் காணோம்.
அவனைக் காலால் மிதிக்க வேண்டுமென்று தம்பையா தீர்மானித்தான்.
மழை சட சட வென்று பெய்ய ஆரம்பித்துவிட்டது.
வெளியே போன குழந்தைகள் மழையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற திகைப்புடன் தாயம்மாள் ஓடிவந்து, செல்லையா! என்று கூப்பிட்டாள்.
ம்ம் என்று பதில் வந்தது.
இருட்டிலே அங்க என்ன பண்றீங்க? என்று சொல்லிக் கொண்டே மரத்தின் பக்கமாக வந்துவிட்டாள். அங்கே வந்து, நின்று யோசிப்பதற்கு நேரமில்லை மழை. ஆகவே, மூன்று பேரையும் அவசர அவசரமாக வீட்டுக்குள்ளே அழைத்துக்கொண்டு ஓடிவந்தாள்.
சிறுவன் விளக்கு வெளிச்சத்தில் வந்து நின்றான். அவனுடைய உடம்பெல்லாம் ஒரே சிரங்கு. தலையில் பொடுகு வெடித்துப் பாம்புச் சட்டை மாதிரி தோல் பெயர்ந்திருந்தது. பக்கத்தில் வந்து நின்றால், ஒரு மாதிரி துர்வாடை. இந்தக் கோலத்தில் நின்றான் சிறுவன்.
இது யாரம்மா? என்று மங்கம்மாள் திகைப்போடு கேட்டாள்.
யாரோ? யார் பெத்த பிள்ளையோ? என்று சொல்லிவிட்டு, மழையில் நனைந்த குழந்தைகளைத் துவட்டப் பழைய துணியை எடுக்கப்போனாள். அவள் மறுபக்கம் திரும்பியதும், தம்பையா அம்மாவுக்குக் கேட்காமல், வாய்க்குள்ளேயே போடா என்று பயமுறுத்தினான்.
செல்லையா, போ என்று அவனைப் பிடித்துத் தள்ளினான்.
இவர்கள் இருவரையும் பார்த்து மங்கம்மாளும் அர்த்தமில்லாமல் போயேன் என்று சிணுங்கிக்கொண்டே சொன்னாள்.
அவ்வளவுதான், திடீரென்று மடை திறந்த மாதிரி கோ வென்று அழுது விட்டான். விஷயம் என்னவென்று தெரியாமல் பதைபதைப்புடன் ஓடி வந்தாள் தாயம்மாள்.
ஏண்டா அழுகிறே? சும்மா இரு. அவனை என்ன சொன்னீங்க நீங்க? என்று தன் குழந்தைகளைக் கேட்டாள்.
அவன் போன்னா, போகமாட்டேங்கிறான் என்று புகார் பண்ணுவதைப் போலச் சொன்னாள் மங்கம்மாள்.
சீ, அப்படி எல்லாம் சொல்லக்கூடாது! நீ சும்மா இரு அழாதேப்பா என்று சொல்லிச் சிறுவனைத் தேற்றினாள்.
சிறுவன் அழுகையை அப்படியே நிறுத்திவிட்டான். ஆனால், பெருமூச்சு விடுவதை மட்டும் அவனால் நிறுத்த முடியவில்லை.
சும்மா இரு தம்பி! அழாதே! என்று இரண்டாவது தடவையும் தாயம்மாள் சொன்னாள்.
பழைய துணியைக் கொண்டு செல்லையாவும் தம்பையாவும் உடம்பைத் துடைத்துக்கொண்டார்கள். உடனே மங்கம்மாள் தம்பையாவைப் பார்த்து. பாவம்! அவனுக்குக் குடு! என்றாள்.
தம்பையா துணியைக் கொடுத்தான்.
நீ சாப்பிட்டாயா? என்று தாயம்மாள் அவனைப் பார்த்துக் கேட்டாள்.
அவன் எச்சியைச் சாப்பிடுறான், அம்மா. ராமசாமி வீட்டிலிருந்து எச்சிலையை எடுத்துவந்து சாப்பிடுறான். அசிங்கம்! என்று முகத்தைச் சுளித்துக்கொண்டு சொன்னான் தம்பையா. குழந்தைகள் எல்லோரும் சிரித்தார்கள். இந்தா தம்பையா! இனிமே அப்படிச் சொல்லாதே! என்று அதட்டிவிட்டு, நீ யாரப்பா? உனக்கு எந்த ஊரு? என்று தாயம்மாள் சிறுவனை விசாரித்தாள்.
விளாத்திகுளம் என்றான் சிறுவன்.
உனக்குத் தாய் தகப்பன் இல்லையா?
இல்லை
இல்லையா? என்று அழுத்திக் கேட்டாள் தாயம்மாள்.
உம் செத்துப் போயிட்டாக.
எப்போ, தம்பி?
போன வருஷம் அம்மா செத்துப் போயிட்டா. ஐயா, நான் சின்னப்பிள்ளையாயிருக்கும் போதே செத்துப் போயிட்டாராம்.
உனக்கு அண்ணா தம்பி ஒருத்தரும் இல்லையா?
இல்லை
உடனே தம்பையா கேட்டான்:
தங்கச்சியும் இல்லையா?
இல்லை
பாவம் என்று சொல்லிவிட்டுத் தம்பையா நிறுத்திக் கொண்டான்.
இங்கே எதுக்கு வந்தே? என்று தாயம்மாள் கேட்டாள்.
கழுகுமலைக்குப் போறேன்.
அங்கே ஆரு இருக்கா?
அத்தை என்று பதில் சொன்னான் சிறுவன். அவன் விளாத்தி குளத்திலிருந்து கால்நடையாகவே நடந்து அந்தக் கிராமம் வரையிலும் வந்திருந்தான். இந்த இருபது மெயில் பிரயாணத்துக்கு நான்கு நாட்களாகிவிட்டன. நான்காவது தினத்தில் தான் இந்தக் கிராமத்தில் வந்து தங்க நேர்ந்தது. அதுவும் பொழுது இருட்டி விட்டதனாலும் பசியும் இருந்ததனாலும் தான் மறுநாள் விடிந்த பிறகு, எட்டு மெயில் தூரம் நடந்து கழுகுமலைக்குப் போனால், அவனுடைய அத்தை தன் வீட்டில் அவனை வைத்துக் கொள்ளுவாளா, விரட்டி விடுவாளா என்பது அவனுக்குத் தெரியாது. அத்தையையும் அவன் பார்த்ததில்லை. எப்படியோ, ஒரு வழியில் அவனுக்கு அவள் அத்தை என்றும், அங்கே போ என்றும் யாரோ சொல்ல, அதை நம்பிக்கொண்டு அந்தச் சிறுவன் விளாத்திக் குளத்திலிருந்து கால்நடையாகவே நடந்து வந்திருக்கிறான்.
மேற்கண்ட விவரங்களை எல்லாம் சிறுவனுடைய வாய் மொழி மூலமாகவே தாயம்மாள் அறிந்து கொண்டாள்.
உன் பேரு என்ன? என்று கடைசியாகக் கேட்டாள் தாயம்மாள்.
ராஜா என்றான் சிறுவன்.
அப்புறம் அவனுக்குச் சாப்பாடு போட்டார்கள். அவன் சாப்பிட்ட பிறகு, குழந்தைகளுக்குப் படுக்கையை எடுத்து விரித்தாள். மண் தரை ஈரச் சதசதப்புடன் இருந்ததால், வெறும் ஓலைப்பாயை விரித்துப் படுப்பதற்கு இயலாமல் இருந்தது. அதனால், கிழிந்து போய்க் கிடந்த மூன்று கோணிப் பைகளை எடுத்து உதறி விரித்து, அதன் மேல் வீட்டிலிருந்த இரண்டு ஓலைப் பைகளையும் பக்கம் பக்கமாக விரித்தாள். ராஜா தெற்குக் கோடியில் படுத்துக் கொண்டான். அவனுக்குப் பக்கமாகச் செல்லையாவும் அப்புறம் தம்பையாவும் படுத்துக் கொண்டார்கள். தம்பையாவின் உடம்பு இரண்டு பாய்களிலுமே பாதிப்பாதி படிந்திருந்தது. வடகோடியில் தாயம்மாளும் மங்கம்மாளும் படுத்துக் கொண்டார்கள்.
எங்கோ தூரத்தில், ஒரு வீட்டில் சீனிவெடி வெடிக்கும் சப்தம் கேட்டது. தீபாவளி மறுநாளானாலும், யாரோ ஒரு துருதுருத்த பையன் அப்பொழுதே (வேட்டுப்) போட ஆரம்பித்துவிட்டான்.
வேட்டுச் சத்தம் கேட்டதும், எனக்கு மத்தாப்பு என்றாள் மங்கம்மாள்.
எனக்கும் என்றான் தம்பையா.
நம்ம கிட்ட அதுக்கெல்லாம் பணம் ஏது மங்கம்மா? ராமசாமி பணக்காரன். அவனுக்குச் சரி, எவ்வளவு வேட்டுன்னாலும் போடுவான்.
ஊஹும் எனக்கு மத்தாப்பு என்று முரண்டு பண்ணினாள் மங்கம்மாள்.
வம்பு பண்ணாதே. சொன்னாக் கேளு. மத்தாப்பு கொளுத்தினா வயிறு நிறையாதா? காலையிலே உனக்கு தோசை சுட்டுத் தாரேன். நிறையச் சாப்பிடு, மத்தாப்பு எதுக்கு?
மங்கம்மாள் தன் முரண்டை நிறுத்தவில்லை; அழுவதுபோல் சிணுங்க ஆரம்பித்தாள்.
செல்லையா தூங்க ஆரம்பித்தான்.
அப்போது தெருவில் ஆட்கள் நடந்து செல்லும் சந்தடி கேட்டது.
சமீன் வந்து இறங்குறதுன்னா லேசா? என்று தாயம்மாள் தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டு, மங்கம்மா! நீ நல்ல பிள்ளை! பிடிவாதம் பண்ணாதே. அடுத்த வருஷம் நிறைய மத்தாப்பு வாங்குவோம். இந்த வருஷம் நாம் எவ்வளவு சங்கடப் பட்டோம்ன்னு உனக்குத் தெரியாதா? என்றாள். அப்புறம் அவளால் சரியாகப் பேச முடியவில்லை. வாய் குழறியது. மங்கம்மாளைப் பார்த்துத்தான் அவள் பேசினாள். ஆனால் அவள் உண்மையில் தன்னுடைய தாயாரிடத்திலோ, தன்னை உயிருக்கு உயிராகப் பேணி வளர்த்த ஒரு கிழவியிடத்திலோ, தான் வருஷக் கணக்கில் அனுபவித்த துயரங்களைக் கண்ணீரும் கம்பலையுமாகச் சொல்லுவது போலவே பேசினாள். ஒரு நீண்ட பெருமூச்சுடன், மங்கம்மாள்! நீ கூட ஒரு நாள் சாப்பாடு இல்லாமெ பள்ளிக்கூடம் போனியே கண்ணு. உன் வயித்துக்குக் கூட அன்னிக்கு ஒருவாய்க் கூளு கெடைக்கல்லையே! (அவளுக்குக் கண்ணீர் வந்துவிட்டது.) சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் போது நீ மத்தாப்புக் கேக்கலாமா, கண்ணு? பேசாமப் படுத்துத் தூங்கு என்று தேற்றினாள். மங்கம்மாளைப் பரிவோடு தடவிக் கொடுத்தாள்.
ஒரு மத்தாப்பாவது வாங்கித் தா என்றாள் மங்கம்மாள்.
அழுகையுடனும் துயரச் சிரிப்புடனும் தாயம்மாள் சொன்னாள்: நீ தானே இப்படிப் பிடிவாதம் பண்றே? அந்தப் பையனைப் பாரு அவன் மத்தாப்பு கேக்கிறானா சோறு கிடைக்காமே, எச்சிலைக்கூட எடுத்துத் திங்கறான். அவன் சோறு வேணும்ன்னு கூட அழல்லே; நீ மத்தாப்பு வேனும்னு அழறே மங்கம்மா
மங்கம்மாளுக்கு அவன் மேல் கோவம் வந்துவிட்டது. அவனைப் புகழ்ந்து, தன் கோரிக்கையைத் தாயார் புறக்கணித்துக் கொண்டுவருவது அவளுக்குப் பிடிக்கவில்லை. உடனே, அவனுக்கு ஒரே சிரங்கு! என்று திட்டுவது போலக் கடுமையாகச் சொன்னாள்.
அவனுக்குத் தாய் தகப்பன் இருந்தா அப்படி இருப்பானா? தாயில்லாப் பிள்ளைன்னா யாரு கவனிப்பா? அவனோட அம்மா, முன்னாலே, அவனுக்குத் தீபாவளிக்குப் புதுவேட்டி, புதுச்சட்டை எல்லாம் வாங்கிக் குடுத்திருப்பா! மத்தாப்பும் வாங்கிக் கொடுத்திருப்பா. இப்போ, அவன் அதை எல்லாம் நினைச்சுக் கேக்கிறானா பாரு.
இப்போ அவன் தூங்கிட்டான். காலையில் கேப்பான் என்று சொல்லிவிட்டு மங்கம்மாள் சிணுங்கினாள்.தாயம்மாளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. வாயாடி என்று சொல்லி மங்கம்மாளின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினாள்.
தாயம்மாளுக்குத் திகைப்பாக இருந்தது. எதை மூடிக்கிறது? ஊம்? என்று ஒரு கணம் யோசித்தால். அப்புறம், என் பிள்ளைகளை விடவா அந்தப் பீத்தல் பெரிசு? என்று சொல்லிக் கொண்டே எழுந்து போய், மறு நாள் கட்டிக்கொள்வதற்காக துவைத்து உலர்த்தி மடித்து வைத்திருந்த  உண்மையில் பீத்தல் இல்லாத நாட்டுச் சேலையை எடுத்துக்கொண்டு வந்து ராஜா உட்பட உல்லோருக்கும் சேர்த்துப் போர்த்தினாள்.
மங்கம்மாளைப் பார்த்து, சரி, படுத்துக்கோ காலையிலே எப்படியும் வாங்கித் தாரேன் என்று சொல்லி அவளை உறங்கப் பண்ணுவதற்கு முயன்றாள்.
மூன்றாவது தடவையாகவும் சீனவெடியின் சப்தம் கேட்டது.
தாயம்மாள் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்: இன்னிக்கு அங்கே யாரும் தூங்கமாட்டாக போலிருக்கிறது! ஊம், அரண்மனைக் காரியம்! ஆளு போறதும் வாரதுமா இருக்கும். ராமசாமியும் தூங்காம வேட்டுப் போடுறான்!
ராமசாமியின் அக்காளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டவன் ஒரு ஜமீன்தாரின் மகன். அந்த வருஷம் தலை தீபாவளிக்காக அவனை அன்று மாலையில் அழைத்து வந்திருந்தார் ராமசாமியின் தகப்பனார். அந்த ஊரில் மட்டுமில்லாமல் அந்த வட்டாரத்திலேயே அவர்தான் பெரிய மிராசுதார். ஜமீன்தாரை, மிகவும் கோலாகலமாக அழைத்து வந்து தீபாவளி நடந்த அநேக தினங்களாகவே அவர் வீட்டில் ஏற்பாடுகள் நடந்து வந்தன. தீபாவளிக்கு முதல் நாள்தான் மாப்பிள்ளை வந்து இறங்கினான். அதற்க்கு முன் பத்துப் பதினைந்து நாட்களாக ஒரு நிமிஷத்திற்கு ஒன்பது தடவை, ராஜா வர்றார், சிறப்பாகச் செய்யணும் என்று அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். உண்மையில் வெகு சிறப்பாகத்தான் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன
மங்கம்மா!
பதில் இல்லை; தூங்கிவிட்டாள்.
தாயம்மாளும் அகல் விளக்கை அணைத்துவிட்டுத் தலையைச் சாய்த்தாள்.
முதல் கோழி கூப்பிட்டதும் தாயம்மாள் கண்விழித்து விட்டாள். அப்போது மணி நாலு ஆகவில்லை. நல்ல வேளையாக மழை அப்போதுதான் நின்றிருந்தது சிறு தூவானம் மட்டும் ஓலைக் கூரையில் விழுவது, ஒரே நிதானத்துடன் சோளம் பொரிவது போலக் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தத் தெருவில் வேறு சில வீடுகளில் ஏற்கனவே எழுந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடத் தொடங்கி விட்டதற்கு அடையாளமாக வேட்டுச் சப்தமும், வேட்டுச் சப்தத்தைக் கேட்டுப் பயந்து நாய்கள் குரைக்கும் சப்தமும் கேட்டுக் கொண்டிருந்தன.
தாயம்மாள் எழுந்து விளக்கை ஏற்றினாள். பழைய படியும் மழை பிடித்து விடக்கூடாதே என்று அவளுக்கு பயம். அதனால் குழந்தைகளை எழுப்பி, விறுவிறு என்று குளிப்பாட்டிவிட்டு, மற்ற வேலைகளை கவனிக்கலாம் என்று திட்டம் செய்தாள். குழந்தைகளுக்குப் படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. கடைசியில் முனகிக் கொண்டும், புரண்டு படுத்துக்கொண்டும் ஒருவழியாக எழுந்து விட்டார்கள். அவள் ஒவ்வொரு குழந்தையாக எண்ணெய் தேய்த்து விட்டாள். ஆனால் ராஜா மட்டும் எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாது என்று சொல்லித் தூரத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காவிட்டால் தோஷம் என்று சொன்னாள். ராஜாவுக்கோ என்ன சொன்னாலும் காதில் ஏறவில்லை.
அரப்புக் காந்தும்; நான் மாட்டேன். என்று பிடிவாதமாகச் சொன்னான் ராஜா.
அரப்புப் போடல்லே; சீயக்காய் போட்டுக் குளிப்பாட்டுறேன். குளிர்ச்சியாயிருக்கும்
ஊஹும்.
தம்பி, சொன்னாக் கேளுடா. என்னை உன் அம்மான்னு நெனைச்சுக்கோ, உனக்குக் காந்தும் படியாக நன் தேய்ப்பனா?  வா, எண்ணெய் தேய்ச்சிக் குளி. இந்தத் தீபாவளியோடே பீடை எல்லாம் விட்டுப்போகும். குளிக்காம இருக்கக்கூடாதப்பா  இப்படி வெகுநேரம் கெஞ்சிய பிறகுதான் அவன் வேறு வழி இல்லாமல் சம்மதித்தான்.
ராஜா எழுந்து வந்து மணையில் உட்கார்ந்தான். அது தான் நல்ல பிள்ளைக்கு அடையாளம். ஒரு பிள்ளைக்குத் தேச்சி, ஒரு பிள்ளைக்கு தேக்காமல் விடலாமா? என் பிள்ளை குட்டியும் நல்லா இருக்கனுமில்லப்பா! என்று மற்றவர்களுக்குச் சொல்லுவது போலத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டே எண்ணெய் தேய்த்தாள். தாயில்லாக் குழந்தைன்னா இந்தக் கோலம் தான். நான் மூணாம் வருஷம் காய்ச்சலோட படுத்திருன்தேனே, அப்போ கண்ணை மூடியிருந்தா என் குழந்தைகளுக்கும் இந்தக் கதிதானே? அதுகளும் தெருவிலே நின்னிருக்கும்.  இப்படி என்னென்னவோ மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவசர அவசரமாகக் குழந்தைகளைக் குளிப்பாட்டினாள். ஆனால், தாயம்மாள் பயபத்திரமாகச் சீயக்காய்த் தூளைப் போட்டுத் தேய்த்த போதிலும், ராஜா பல தடவைகள் ஐயோ, ஐயோ என்று அழுதுவிட்டான். அவன் அழும்போதெல்லாம் அவள் இன்னிக்கோட உன் சிரங்கு குணமாயிரும் என்று மட்டும் மாறி மாறிச் சொல்லிக்கொண்டே இருந்தாள்.
யாரோ எவரோ? மழைன்னு வந்து வீட்டிலே ஒதுங்கிட்டான். அவனைப் போகச் சொல்ல முடியுமா! அவன் வந்த நேரம், தீபாவளியாப் போச்சு. குழந்தைகளுக்குள்ளே வஞ்சம் செய்யலாமா? பார்க்கிறவுகளுக்கு நான் செய்யறதெல்லாம் கேலியாயிருக்கும். அவுக கேலி செய்தாச் செய்துட்டுப் போகட்டும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் பகவான் துணை செய்வான்.
அவள் தோசை சுட்டுக் கொடுத்தாள். அவளுடைய குழந்தைகள் புதுத் துணி உடுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் அவசர அவசரமாகச் சாப்பிட்டார்கள். தம்பையா கடைசித் தோசையைப் பாதியிலேயே வைத்து விட்டு எழுந்துவிட்டான். அவனால் மேற்கொண்டும் இரண்டு தோசைகள் சாப்பிட முடியும். இருந்தாலும் அவசரம்.
தெருவில் ஜன நடமாட்டம் தொடங்கிவிட்டது. மழையும் பரிபூரணமாக நின்றுவிட்டது. உதயத்தின் ஒளி சல்லாத் துணியைப்போல அவ்வளவு மெல்லியதாக ஊரையும் உலகத்தையும் போர்த்தியது.
புதுத் துணிகளுக்கு மஞ்சள் வைத்துச் செல்லையாவும் உடுத்துக் கொண்டான்; தம்பையாவும் உடுத்துக் கொண்டான். மங்கம்மாளும் பாவாடையும் சட்டையும் போட்டுக் கொண்டாள்.
அவன் கௌபீனத்தோடு நின்றான்.
தாயம்மாளுக்குப் பகீர் என்றது. இத்தனையும் செய்தும் புண்ணியமில்லாமல் போய்விட்டதே என்று கலங்கினாள். இந்த மாதிரியான ஒரு கட்டத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. சிட்டைத் துண்டை எடுத்துக் கொடுப்பதா, கொடுக்காமல் இருப்பதா? அவள் மனதுக்குள்ளே வேதனை மிக்க போராட்டம். மாதக் கணக்கில் ஒரு ரூபாய்த் துண்டு இல்லாமல் அவளுடைய கணவன் பட்ட கஷ்டத்தையும், வீதிவழிப் போவதற்குக் கூசியதையும், ஒரு துண்டு வாங்க வழியில்லையே! என்று கணவன் துயரத்துடன் வாய்விட்டுப் புலம்பியதையும் நினைத்துப் பார்த்தாள். இந்தத் துயரத்தின் எதிர்புறத்தில், ஒன்றும் சொல்லாமல், ஒன்றும் செய்யாமல், மெளனமாக நின்று கொண்டிருந்தான் ராஜா.
தாயம்மாளுக்குத் திக்குத் திசை தெரியவில்லை; ராஜாவின் முகத்தை எதற்கோ ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள். ராஜாவோ வெகுநேரமாகக் கண்கொட்டாமல் அவளையே பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்.
என்னைச் சோதிக்கத்தான் வந்திருக்கேடா நீ என்று மனக் கசப்புடன் சொல்வது போலச் சொன்னாள் தாயம்மாள். ஆனால், அவளுக்கும் மனக் கசப்புக்கும் வெகுதூரம். மனதுக்குள் ஏற்பட்ட சிக்கல்களை விடுவிக்கவே இப்படிப்பட்ட ஒரு வாசகத்தை அவள் தூக்கிப் போட்டாளே ஒழிய அவள் சொற்களில் மனக்கசப்பின் நிழல் கூடப் படியவில்லை.
அப்போது மங்கம்மாள் எழுந்துவந்து அம்மாவின் கன்னங்களில் தன் உள்ளங்கைகளை வைத்து, தன் முகத்துக்கு நேராக அவளுடைய முகத்தைத் திருப்பினாள்; அப்புறம் ஏதோ ரகசியத்தைச் சொல்லுவதுபோலச் சொன்னாள்.
பாவம்! அவனுக்கு அந்தத் துண்டைக்குடு அம்மா!
குழந்தை இந்த வார்த்தைகளைச் சொல்லி நிறுத்தினாள். ஒரு நிமிஷம் மௌனம் நிலவியது. பிறகு, திடீரென்று தாயம்மாளின் முகம் கோரமாக மாறியது. முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு கேவிக் கேவி அழுதாள். அவளுடைய பெருமூச்சும் விம்மலும் வீட்டை அடைத்துக் கொண்டு கேட்டன.
குழந்தைக்கு விஷயம் விளங்கவில்லை. மங்கம்மாள், தான் அப்படிச் சொன்னதர்க்காகத் தான் அம்மா அழுகிறாள் என்று பயந்துவிட்டாள்.
தாய், தன் பலத்தை எல்லாம் பிரயோகித்து அழுகையைத் தொண்டைக் குழியில் அழுத்தினாள், அவள் நெஞ்சு வெடித்துவிடும் போல் விம்மியது. குரலும் அந்த ஒரு நிமிஷத்தில் ஜலதோஷம் பிடித்ததுபோலக் கம்மலாகி விட்டது.
பிறகு தழுதழுத்துக் கொண்டே சொன்னாள்:
தம்பையா!
என்னம்மா!
ஹூம், ராஜாவுக்கு அந்தத் துண்டை எடுத்துக்குடு.
வீட்டு முற்றத்தில் காலைவெயில் அடித்துக் கொண்டிருந்தது. அந்தப் பொன்னொளியில் மஞ்சள் பூசிய முகத்துடன் புத்தாடை தரித்துக்கொண்டு நிற்கும் மங்கம்மாள், அப்போது எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். ஈரம் காய்வதற்கா இருக்கமில்லாதத் தொள தொள என்று சடை போடப் பட்டிருந்ததால், கூந்தல், இரண்டு காதுகளையும், கன்னங்களில் பாதியையும் மறைத்துக் கொண்டிருந்தது. பரவலாகக் கிடக்கும். கூந்தலின் நடுவே இளங்காற்றுப் புகுந்து சிலுசிலுக்கும் போது, சுகமும் கூச்சமும் தாங்க முடியாமல் சிரித்துக் கொண்டே இமைகளைக் குவித்தாள் மங்கம்மாள்.
வெகு நேரமாக, தாயம்மாள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். சந்தர்ப்பவசமாக, அவளுக்கு நேராக மங்கம்மாள் முகத்தைத் திருப்பினாள்.
என் ராஜாத்தி மகாலக்ஷ்மி மாதிரி இருக்கா! என்று தன்னை மறந்து இன்பத்துடன் சொல்லிவிட்டாள் தாய். அவ்வளவுதான். குழந்தையின் கையைப் பிடித்து வெகுவேகமாக வீட்டுக்குள்ளே இழுத்துக்கொண்டு வந்து, திருஷ்டிப் பரிகாரமாக அவளுடைய கன்னத்தில் துலாம்பரமாகச் சாந்துப் பொட்டை எடுத்து வைத்தாள்.
அப்புறம் மங்கம்மாள் வீதிக்கு ஓடிவிட்டாள். ராமசாமியின் வீட்டுப் பக்கம் எச்சில் இலைகள் ஏராளமாகக் கிடந்தன. அங்கே நாலைந்து பேர் நின்று பேசிக் கொண்டும், வெற்றிலை பாக்குப் போட்டுத் துப்பிக் கொண்டும் இருந்தார்கள். ராமசாமி நீலநிறமான கால்சட்டையும், அந்த ஊருக்கே புதிய புஷ்கோட்டும் போட்டுக் கொண்டு நின்றான். மங்கம்மாளைப் பார்த்ததும் அவன் பக்கத்தில் ஓடிவந்தான்; மங்கம்மாளும் அவனைப் பார்த்து நடந்தாள். இருவரும் பாதி வழியில் சந்தித்துக் கொண்டனர். சந்தித்த மாத்திரத்தில், மிகவும் சந்தோஷத்துடன் ராமசாமி சொன்னான்
எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கார்!
ஊர்க்காரர்களைப் போல அவனும் தன் அக்காள் புருஷனை ராஜா என்று சொன்னான். ஆனால் அவன் சொன்னதற்குக் காரணம் சந்தோஷம்தானே ஒழிய மங்கம்மாளைப் போட்டிக்கு அழைப்பதற்கு அல்ல. ஆனால், அவளோ வேறுவிதமாக நினைத்து விட்டாள். முதல் நாள் பள்ளிக் கூடத்திலிருந்து வந்தபோது நடந்த போட்டிதான் அவள் ஞாபகத்தில் இருந்தது. அவன் சொன்னதற்குப் பதில் சொல்லி அவனுடைய பெருமையை மட்டம் தட்டவேண்டும் என்று அவள் மனம் துடித்தது.
அதனால் ஒரு அரை அடி முன்னாள் நகர்ந்து வந்து நின்றாள். யாதொரு திகைப்பும், தயக்கமும் இல்லாமல் ராமசாமியைப் பார்த்து, ரேகை சாஸ்திரியிடம் காட்டுவது போலக் கையை வைத்துக் கொண்டு, மிக மிக ஏளனமாகச் சொன்னாள்.
ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கார்? எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கார். வேணும்னா வந்து பாரு.
 எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா! என்று கெட்டிக்காரத் தனமாகக் கேட்டான் ராமசாமி.செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்; தம்பையா ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்; மங்கம்மாள் மூக்கின் மேல் ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டும் கண்ணை இலேசாக மூடிக்கொண்டும் லேசாக யோசனை செய்தாள். அந்த மூவரும் ராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்றப் பிள்ளைகள்.அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. ராமசாமி தன் ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்திய தேச சரித்திரப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். செல்லையா அந்த வருடம் இந்திய தேச சரித்திரம் வாங்கவில்லை; அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான்.

 இருவரும் படப் போட்டியை ஆரம்பித்து விட்டார்கள்.ராமசாமி தன் புத்தகத்தை முதலிலிருந்து ஒவ்வொரு தாளாகத் திருப்புவான்; படம் இருக்கும் பக்கத்தைச் செல்லையாவுக்குக் காட்டி, இதோ, இந்தப் படத்துக்குப் பதில் படம் காட்டு என்பான். செல்லையா தன் புத்தகத்தைத் திறந்து அதில் உள்ள ஒரு படத்தைக் காட்டுவான்; பிறகு, இருவருமே புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டுவார்கள். யாராவது ஒருவருடைய புத்தகத்தில் அடுத்த படியாகப் படம் வரும்; உடனே, அந்தப் படத்துக்கு அடுத்தவன் பதில் படம் காட்ட வேண்டும். இவ்விதமாக பதிலுக்குப் பதில் படம் காட்டிய வண்ணம் புத்தகம் முழுவதையும் புரட்டுவார்கள்.எவன் புத்தகத்தில் அதிகப் படங்கள் இருக்கின்றனவோ, அவன் ஜெயித்து விடுவான்; மற்றவன் தோற்றுப் போவான். உடனே ஜெயித்தவன், உனக்குப் படம் காட்ட முடியல்லே! தோத்துப் போயிட்டியே! என்று பரிகாசம் செய்வான். இந்த மாதிரியான படப் போட்டிதான் அன்றும் நடந்து கொண்டிருந்தது.போட்டி பாதியில் நிற்கிறது. அந்தச் சமயத்தில் ஐந்தாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் வந்துவிட்டார். அந்த கணக்கு வாத்தியார் மிகவும் கெடுபிடியானவர். அவர் வகுப்பில், பையன்கள் வெளியே தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்க முடியாது. தவிரவும் கணக்குப் போடும்போது, பென்சிலும், கையுமாக இருக்க வேண்டும். இதில், படப்போட்டி நடத்துவது எப்படி?வாத்தியார் வந்ததும் இவருடைய போட்டியும் நின்றுவிட்டது. கடைசியில், சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வெளியே வந்த பிறகு, ஒரு வேப்பமரத்தின் அடியில் நின்று இருவரும் அந்தப் போட்டியை நடத்தினார்கள்.

 ராமசாமியின் சரித்திரப் புத்தகத்தில் பாதிதான் தாண்டியிருக்கும்; ஆனால் செல்லையாவின் சிவிக்ஸ் புத்தகம் முடிந்துவிட்டது. செல்லையா தோற்றுப் போய்விட்டான். பக்கத்தில் நின்ற பிள்ளைகள் அவனைக் கேலி செய்தார்கள். தங்கள் அண்ணன் தோற்றுப் போனதைக் கண்டு, தம்பையாவுக்கும் மங்கம்மாளுக்கும் சொல்லமுடியாத வருத்தம்.அந்த இடத்தை விட்டு எல்லோரும் வீட்டுக்குப் போகப் புறப்பட்டார்கள். நடந்து செல்லும்போதே, படப் போட்டி வேறொரு அவதாரம் எடுக்கத் தொடங்கியது. எங்கள் வீட்டில் அது இருக்கே, உங்கள் வீட்டில் இருக்கா? என்று இருவரும் ஒருவரிடம் ஒருவர் கேட்க ஆரம்பித்தனர். இந்தப் புதுப் போட்டியின் கடைசிப் பகுதியில் தான் ராமசாமி, எனக்கு சில்க் சட்டை இருக்கே, உனக்கு இருக்கா? என்று கேட்டான்.வேப்ப மரத்தைவிட்டு, அரை பர்லாங் தூரத்திலுள்ள பார்வதியம்மன் கோவில் பக்கமாக வந்தாய்விட்டது. இன்னும் செல்லையாவோ தம்பையாவோ ராமசாமிக்கு பதில் சொல்லவில்லை. ஆனால், மங்கம்மாள் திடீரென்று எல்லோரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு, ராமசாமியின் முன்னாள் வந்து நின்றாள் குழந்தைகள் எல்லோரும் மங்கம்மாவையே கவனித்துக் கொண்டிருந்தார்கள்.அவள், ரேகை சாஸ்திரியிடம் காட்டுவது போலக் கையை வைத்துக் கொண்டு, ஐயோ! சில்க் சட்டை எதுக்காம்? ஹூம், லேசாச் சருகு மாதிரி இருக்கும். சீக்கிரம் கிழிஞ்சி போகும். (செல்லையாவின் சட்டையைக் காட்டி) இதுதான் கனமாயிருக்கு.

 ரொம்ப நாளைக்குக் கிழியாமே இருக்கும். நல்லாப்பாரு! என்று மிகமிகப் பரிகாசமாகச் சொல்லிவிட்டு செல்லையாவின் பக்கத்தில் வந்து நின்றாள்.ராமசாமி திகைத்து நின்றுவிட்டான். முதல் வகுப்பில் படிக்கும் மங்கம்மாள், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் தன்னை இப்படித் தோற்கடித்து விட்டாளே என்று சங்கடப்பட்டான். பிள்ளைகள் ராமசாமியைப் பார்த்து, தோத்துப் போயிட்டியா! என்று ஏளனம் பண்ணினார்கள்.மங்கம்மாள் செல்லையாவின் சட்டையைப் பிடித்துக்கொண்டு, அவனை ஒட்டி உரசி நின்று கொண்டாள். நடக்கும் போதும் அப்படியே நடந்து வந்தாள். அவள் மனதிற்குள்ளே ஒரு பெருமிதம்.ராமசாமி அடுத்து கேள்வியைப் போட்டான்: எங்கள் வீட்டிலே ஆறு பசு இருக்கு; உங்க வீட்டிலே இருக்கா?இதற்குச் செல்லையா பதில் சொல்லவில்லை; மங்கம்மாளும் பதில் சொல்லவில்லை. தம்பையா, இவுஹதான் பணக்காரராம்! அதுதான் ரொம்பப் பெருமை ஹூம்! பெருமை பீத்திக்கலாம்என்று சொல்லி நிலைமையைச் சமாளிக்க முயன்றான். அது முடியவில்லை. அந்தச் சமயத்தில் செல்லையா, அது சரி, எங்க வீட்டிலே ஒன்பது கோழி இருக்கு, உங்க வீட்டிலே இருக்கா? என்று ஒரு போடு போட்டான்.ராமசாமியும் தயங்கவில்லை: நாங்கள் உங்களைப் போலக் கோழி அடிச்சுச் சாப்பிட மாட்டோம். நாங்க எதுக்குக் கோழி வளக்கணும்? அதுதான் எங்க வீட்டிலே கோழி இல்லே என்றான்.அதெல்லாம் சும்மா.

 ஒன்பது கோழி இருக்கா, இல்லையா? என்று ஒரே பிடிவாதமாகக் கேட்டான் செல்லையா.ராமசாமிக்கு பதில் சொல்ல முடியவில்லையே என்று கூட வருத்தமில்லை. மற்றப் பிள்ளைகள் எல்லோரும் ஒன்று கூடிக் கொண்டு அவனைப் பரிகாசம் செய்வதை அவனால் தாங்கமுடியவில்லை.அழுகை வரும் போல இருந்தது. அதனால் எல்லோரையும் விட வேகமாக நடக்க ஆரம்பித்தான். மற்றப் பிள்ளைகளும் அதே வேகத்தில் நடந்தார்கள். சிறு குழந்தையாக இருக்கும் மங்கம்மாள் அதே வேகத்தில் நடக்க முடியாது. அதனால் ஓடினாள்.சிற்சில குழந்தைகள் தங்கள் தங்கள் வீட்டுக்கு நேராக வந்த மாத்திரத்தில் கூட்டத்திலிருந்து விலகி வீட்டுக்குப் போய் விட்டார்கள். கூட்டம் குறையக் குறைய ராமசாமியின் அவமானமும் குறைந்துகொண்டு வந்தது.மேலத் தெருவுக்குள் நுழையும் போது, ராமசாமியும் அவனுடைய எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூவரும்தான் மிஞ்சினார்கள். ஏனென்றால், அந்தக் குக்கிராமத்துப் பள்ளிப் பிள்ளைகளில், இவர்களுடைய வீடுகள் தான் மேலத் தெருவில் இருந்தன.ராமசாமியின் வீடு முதலாவதாக வந்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டுக்குள்ளே பாய்ந்தான் ராமசாமி. உடனே, வீதியில் நின்ற அந்த மூவரும், தோத்தோ நாயே! என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டும், கையால் சொடுக்குப் போட்டுக்கொண்டும் நின்றார்கள்.அப்போது வீட்டுக்குள்ளிருந்து ஒரு மீசைக்காரன் தலைப்பாக் கட்டுடன் வெளியே வந்தான். அவன் ராமசாமியின் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவன்.

 குழந்தைகள் மூவரும் கிழிந்துபோன அழுக்குத் துணியுடனும், பரட்டைத் தலையுடனும் தெருவில் நின்று, ஒரே குரலில் தோத்தோ நாயே! என்று சொல்வதைப் பார்த்து, சீ, கழுதைகளா! போறீகளா, எண்ணமும் வேணுமா? என்று அதட்டினான். மூன்று பேரும் நாலுகால் பாய்ச்சலில் ஓடிவிட்டார்கள். அவர்கள் போன பிறகு, பிச்சைக்காரக் கழுதை! தோத்தோ! நாயே!கழுதை! என்று தனக்குத் தானே ஏகத்தாளமாச் சொல்லிக் கொண்டு, தன வேலையைக் கவனிக்கப் போனான்.செல்லையா, தம்பையா, மங்கம்மாள்  மூன்று பேரும் நெஞ்சோடு புத்தகக் கட்டுக்களை அணைத்துக்கொண்டு வீடு சேரும் போது, அவர்களுடைய தாயார் தாயம்மாள் வாசல் பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தாள்.மங்கம்மாள் ஒரே ஓட்டமாக ஓடி, அம்மாஎன்று தாயம்மாளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டாள்.குனிந்து வாசல் தெளித்துக் கொண்டிருந்த தாய் செல்லமாக, ஐயோ! இது என்னடா இது! என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு அழுவது போலச் சிரித்தாள்! அம்மா அழுவதைக் கண்டு மங்கம்மாளுக்கு அடக்க முடியாதபடி சிரிப்பு வந்தது.ஐயா வந்துட்டாரா அம்மா? என்று தம்பையா கேட்டான். அப்பாவைத் தான் ஐயா என்று அந்த கிராமத்துப் பிள்ளைகள் குறிப்பிடிவார்கள்.வரலையே! என்று பொய் சொல்லிவிட்டு, பொய்ச் சிரிப்பும் சிரித்தாள் தாயம்மாள்.நிஜம்மா? என்று கேட்டான் தம்பையா.

 நிஜம்ம்ம்மா தான்! என்று சொன்னாள் தாயம்மாள். அப்புறம் சிரித்தாள்.மங்கம்மாள் விறுவிறு என்று அம்மாவுக்கு முன்னாள் வந்து நின்றாள். வலது கையிலிருந்து புத்தகக்கட்டை இடது கையில் இடுக்கிக் கொண்டாள். வலது கையின் ஆள்காட்டி விரலை மூக்கின் மேலும், புருவங்களுக்கு மத்தியிலும் வைத்துக்கொண்டு, முகத்தையும் ஒரு பக்கமாகத் திருப்பிக்கொண்டு, அம்மா! எனக்குத் தெரிஞ்சு போச்சு! நீ பொய் சொல்றே! ஐயா வந்துட்டாரு! என்று நீட்டி நீட்டிச் சொன்னாள்.தாயம்மாளுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. பல்லை இறுகக் கட்டிக்கொண்டு, போக்கிரிப் பொண்ணு! என்று மங்கம்மாளின் கன்னத்தைக் கிள்ளினாள்.செல்லையா மிகவும் ஆழமான குரலில், ஐயா வரல்லையாம்மா? என்று கேட்டான். அவன் குரலில் சோகம் ததும்பி, ஏமாற்றம் இழையோடியிருந்தது.தாயம்மாள் வீட்டிற்குள் நுழைந்தாள். மூளையிலிருந்த ஒரு ஜாதிக்காய்ப் பொட்டியைச் சுட்டிக்காட்டி, அந்தப் பெட்டியைத் திறந்து பாரு மங்கம்மா என்றாள்.மூவருமே ஓடிப்போய்ப் பெட்டியைத் திறந்தனர்.பெட்டிக்குள்ளே இருந்த ஜவுளிப் பொட்டணத்தை வெளியே எடுத்து அவிழ்த்துப் பார்த்தனர்.

 மறுநாள் விடிந்த பிறகு ஆரம்பமாகும் தீபாவளி, குழந்தைகளுக்கு அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. ஒரே குதூகலம்! ஒவ்வொரு துணியாக எடுத்து, இது யாருக்கு இது யாருக்கு என்று இனம் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.பொட்டணத்தில் இரண்டு மல் பனியன்களும், இரண்டு கால் சட்டைகளும், ஒரு பாவாடையும், ஒரு பச்சை நிறமான சட்டையும், ஒரு நான்கு முழ ஈரிழைச் சிட்டைத் துண்டும் இருந்தன.துண்டைத் தவிர மற்ற உருப்படிகள் இன்னின்னாருக்குத்தான் என்று குழந்தைகளே பங்கு போட்டுவிட்டார்கள். துண்டுயாரைச் சேருவது என்று தெரியவில்லை உடனே செல்லையா கேட்டான்: துண்டு யாருக்கும்மா?ஐயாவுக்கு என்றாள் தாயம்மாள்.அப்படின்னா உனக்கு? என்று மங்கம்மாள் கேட்டாள்.தாயம்மாள் சிரித்துக்கொண்டு, எனக்குத் தான் ரெண்டு சீலை இருக்கே இன்னும் எதுக்கு? எல்லோரும் புதுத்துணி எடுக்க நாம் என்ன பணக்காரரா?ஐயாவுக்கு மட்டும் பிறகு புதுத்துண்டு எதுக்காம்? என்றாள் மங்கம்மா.வாயாடி! வாயாடி! ஐயாவுக்கு ஒரு துண்டுகூட இல்லே. துண்டு இல்லாமே எத்தனை நாளைக்குப் பழைய வேட்டியை உடம்பிலே போட்டுக்கிட்டு அலையறது? என்று சொல்லிவிட்டு, மங்கம்மாளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள் தாய்.அந்தி மயங்கி, இருட்டத் தொடங்கியது. விளக்கேற்றுவதற்காகத் தாயம்மாள் எழுந்தாள்.

 விளக்கேற்றிவிட்டுக் குழந்தைகளை வெந்நீரில் குளிப்பாட்டி விட்டாள். ஐப்பசி மாதமானதால் அநேகமாக நாள் தவறாமல் மழை பெய்திருந்தது. பூமி குளிர்ந்து ஜில்லிட்டு விட்டது. காற்றும் ஈரக்காற்று. இதனால் வெந்நீரில் குளித்துவிட்டு வந்த குழந்தைகளை ஈரவாடை அதிக வேகத்துடன் தாக்கியது. எல்லோரும் குடுகுடு என்று முற்றத்திலிருந்து வீட்டுக்குள்ளே ஓடி வந்து விட்டார்கள்.குழந்தைகள் சாப்பிடும்போதுதான், அவர்களுடைய அப்பா பக்கத்துக் கிராமத்துக்கு ஒரு தூர பந்துவின் திடீர் மரணத்தை முன்னிட்டுச் சென்றிருப்பதாகவும், மறுநாள் மத்தியானத்துக்குள் வந்துவிடுவார் என்றும், வரும்வரை காத்திருக்காமல் குழந்தைகளோடு தீபாவளி கொண்டாடி விடவேண்டும் என்று அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் என்றும் தாய் தெரிவித்தாள்.சாப்பாடு முடிந்தது. ராப் பாடம் படிக்க மாடக்குழியில் இருந்த அகல் விளக்கைத் தூண்டிவிட்டுக் கொண்டு அதன் முன்னால் மூன்று பெரும் உட்கார்ந்தார்கள்.தாயம்மாள் சாப்பிட்டுவிட்டு, எச்சில் கும்பாக்களைக் கழுவ முற்றத்துக்கு வந்தாள். முற்றத்தின் மூலையில் கொஞ்ச தூரத்துக்கு அப்பால் ஒரு முருங்கை மரம் உண்டு. அதன் நிழலில் கருப்பாக ஓர் உருவம் தெரிந்தது. பக்கத்து வீட்டு நாயாக இருக்கும் என்று நினைத்து உள்ளே வந்துவிட்டாள்.மண் தரையில் முந்தானையை விரித்து ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு, குழந்தைகள் உரக்கச் சத்தம்போட்டுப் பாடம் படிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் தாய். சிறிது நேரத்தில், தரை என்னமாக் குளுருது! ராத்திரி எப்படிப் படுத்துக்கிடுறது? என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாள். அவளுடைய உடம்பு அவளுடைய ஸ்பரிசத்துக்கே ஜில் லென்றிருந்தது.தம்பையா, அண்ணனைப் பார்த்து, துணைக்கு வர்ரயா? என்று கூப்பிட்டான்.

 இருட்டானதால் வீட்டு முற்றத்துக்குப் போய் ஒன்றுக்குப் போய்விட்டுவர அவனுக்கு பயம். செல்லையா துணைக்குப் போனான். இந்தச் சிறுவர்களின் கண்ணிலும் முருங்கை மரத்தடியில் இருந்த கருப்பு உருவம் தென்பட்டது. அதைப் பார்த்து பயந்து போகாமல் இவர்கள் தைரியமாக நின்றதற்குக் காரணம், ராமசாமியின் வீட்டை நோக்கிப் போகும் இரண்டு பேர் இரண்டு பெட்ரோமாக்ஸ் விளக்குகளைக் கையில் எடுத்துக் கொண்டு போனதுதான். ஆள் நடமாட்டமும் விளக்கு வெளிச்சமும் சேர்ந்து தைரியம் கொடுத்தன. இருவரும் கருப்பு உருவத்தைக் கூர்ந்து பார்த்தார்கள்.அது இவர்களைப்போன்ற ஒரு சிறுவனுடைய உருவம்தான்.உடனே இருவரும் பக்கத்தில் போனார்கள். அப்பொழுது மழை இலேசாகத் தூற ஆரம்பித்தது. அதனால் முருங்கை மரத்துக்குக் கீழாகப்போய் நின்று கொண்டு, அந்தச் சிறுவனுடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.அவனுக்கு வயது எட்டு அல்லது ஒன்பது இருக்கும். அவன் உடம்பில் அழுக்கடைந்த கௌபீனம் ஒன்றைத் தவிர, வேறு உடைகள் கிடையாது, தரையில் உட்கார்ந்தால் குளிரும் என்று, பாதங்கள் மட்டும் தரையில் படும் படியாக அவன் குந்திக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னாள் மூன்று எச்சில் இலைகள். கிராமத்தில் வெண்கலக் கும்பாவில் சாப்பிடாமல், இல்லை போட்டுச் சாப்பிடுகிற வீடு ராமசாமியின் வீடுதான். அந்த வீட்டின் வாசலிலிருந்துதான் அந்த எச்சில் இலைகளை எடுத்துக் கொண்டு வந்து, அவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த பருக்கைகளையும் கரி வகைகளையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டிருந்தான்.செல்லையாவோ தம்பையாவோ ஒன்றும் சொல்லாமல் பார்த்துக்கொண்டே நின்றார்கள்.

 ஏற்கனவே யாரோ கடித்துச் சுவைத்துத் துப்பிய முருங்கைக் காய்ச் சக்கைகளில் ஒன்றை இலையிலிருந்து எடுத்தான் சிறுவன். அதை இரண்டாம் தடவையாகக் கடிக்க ஆரம்பித்தான்.சீ! எச்சீ! ஆய் என்று சொல்லிவிட்டுக் கீழே தூ என்று துப்பினான் தம்பையா.சிறுவன் ஏறிட்டுப் பார்த்துவிட்டுப் பழையபடியும் குனிந்து கொண்டான். செல்லையாவுக்குத் திடீரென்று ஏதோ உதயமானது போல், டேய்! ஏண்டா எங்க வீட்டு வாசலிலே வந்து உட்கார்ந்திருக்கே? போடா என்று அதட்டினான்.சிறுவன் போகாவிட்டாலும் பயந்துவிட்டான்; அதனால் இடது கையால் தலையைச் சொறிந்துகொண்டு, அதிவேகமாக இலையை வழித்தான்.உங்க வீட்டுக்குப் போயேன் என்றான் தம்பையா.மழை பலமாகப் பிடித்து விடும்போல இருந்தது.அதற்குள்ளாக அவனை விரட்டிவிட்டு, வீட்டிற்குள் ஓடிவிட வேண்டும் என்று செல்லையாவும் தம்பையாவும் முடிவு கட்டினார்கள்.போடா இல்லாட்டி உன் மேலே துப்புவேன் என்றான் தம்பையா. சிறுவன் எழுந்திருக்கும் வழியைக் காணோம்.அவனைக் காலால் மிதிக்க வேண்டுமென்று தம்பையா தீர்மானித்தான்.மழை சட சட வென்று பெய்ய ஆரம்பித்துவிட்டது.வெளியே போன குழந்தைகள் மழையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற திகைப்புடன் தாயம்மாள் ஓடிவந்து, செல்லையா! என்று கூப்பிட்டாள்.ம்ம் என்று பதில் வந்தது.இருட்டிலே அங்க என்ன பண்றீங்க? என்று சொல்லிக் கொண்டே மரத்தின் பக்கமாக வந்துவிட்டாள். அங்கே வந்து, நின்று யோசிப்பதற்கு நேரமில்லை மழை. ஆகவே, மூன்று பேரையும் அவசர அவசரமாக வீட்டுக்குள்ளே அழைத்துக்கொண்டு ஓடிவந்தாள்.

 சிறுவன் விளக்கு வெளிச்சத்தில் வந்து நின்றான். அவனுடைய உடம்பெல்லாம் ஒரே சிரங்கு. தலையில் பொடுகு வெடித்துப் பாம்புச் சட்டை மாதிரி தோல் பெயர்ந்திருந்தது. பக்கத்தில் வந்து நின்றால், ஒரு மாதிரி துர்வாடை. இந்தக் கோலத்தில் நின்றான் சிறுவன்.இது யாரம்மா? என்று மங்கம்மாள் திகைப்போடு கேட்டாள்.யாரோ? யார் பெத்த பிள்ளையோ? என்று சொல்லிவிட்டு, மழையில் நனைந்த குழந்தைகளைத் துவட்டப் பழைய துணியை எடுக்கப்போனாள். அவள் மறுபக்கம் திரும்பியதும், தம்பையா அம்மாவுக்குக் கேட்காமல், வாய்க்குள்ளேயே போடா என்று பயமுறுத்தினான்.செல்லையா, போ என்று அவனைப் பிடித்துத் தள்ளினான்.இவர்கள் இருவரையும் பார்த்து மங்கம்மாளும் அர்த்தமில்லாமல் போயேன் என்று சிணுங்கிக்கொண்டே சொன்னாள்.அவ்வளவுதான், திடீரென்று மடை திறந்த மாதிரி கோ வென்று அழுது விட்டான். விஷயம் என்னவென்று தெரியாமல் பதைபதைப்புடன் ஓடி வந்தாள் தாயம்மாள்.ஏண்டா அழுகிறே? சும்மா இரு. அவனை என்ன சொன்னீங்க நீங்க? என்று தன் குழந்தைகளைக் கேட்டாள்.அவன் போன்னா, போகமாட்டேங்கிறான் என்று புகார் பண்ணுவதைப் போலச் சொன்னாள் மங்கம்மாள்.சீ, அப்படி எல்லாம் சொல்லக்கூடாது! நீ சும்மா இரு அழாதேப்பா என்று சொல்லிச் சிறுவனைத் தேற்றினாள்.சிறுவன் அழுகையை அப்படியே நிறுத்திவிட்டான். ஆனால், பெருமூச்சு விடுவதை மட்டும் அவனால் நிறுத்த முடியவில்லை.சும்மா இரு தம்பி! அழாதே! என்று இரண்டாவது தடவையும் தாயம்மாள் சொன்னாள்.பழைய துணியைக் கொண்டு செல்லையாவும் தம்பையாவும் உடம்பைத் துடைத்துக்கொண்டார்கள். உடனே மங்கம்மாள் தம்பையாவைப் பார்த்து. பாவம்! அவனுக்குக் குடு! என்றாள்.

 தம்பையா துணியைக் கொடுத்தான்.நீ சாப்பிட்டாயா? என்று தாயம்மாள் அவனைப் பார்த்துக் கேட்டாள்.அவன் எச்சியைச் சாப்பிடுறான், அம்மா. ராமசாமி வீட்டிலிருந்து எச்சிலையை எடுத்துவந்து சாப்பிடுறான். அசிங்கம்! என்று முகத்தைச் சுளித்துக்கொண்டு சொன்னான் தம்பையா. குழந்தைகள் எல்லோரும் சிரித்தார்கள். இந்தா தம்பையா! இனிமே அப்படிச் சொல்லாதே! என்று அதட்டிவிட்டு, நீ யாரப்பா? உனக்கு எந்த ஊரு? என்று தாயம்மாள் சிறுவனை விசாரித்தாள்.விளாத்திகுளம் என்றான் சிறுவன்.உனக்குத் தாய் தகப்பன் இல்லையா?இல்லைஇல்லையா? என்று அழுத்திக் கேட்டாள் தாயம்மாள்.உம் செத்துப் போயிட்டாக.எப்போ, தம்பி?போன வருஷம் அம்மா செத்துப் போயிட்டா. ஐயா, நான் சின்னப்பிள்ளையாயிருக்கும் போதே செத்துப் போயிட்டாராம்.உனக்கு அண்ணா தம்பி ஒருத்தரும் இல்லையா?இல்லைஉடனே தம்பையா கேட்டான்:தங்கச்சியும் இல்லையா?இல்லைபாவம் என்று சொல்லிவிட்டுத் தம்பையா நிறுத்திக் கொண்டான்.இங்கே எதுக்கு வந்தே? என்று தாயம்மாள் கேட்டாள்.கழுகுமலைக்குப் போறேன்.அங்கே ஆரு இருக்கா?அத்தை என்று பதில் சொன்னான் சிறுவன். அவன் விளாத்தி குளத்திலிருந்து கால்நடையாகவே நடந்து அந்தக் கிராமம் வரையிலும் வந்திருந்தான். இந்த இருபது மெயில் பிரயாணத்துக்கு நான்கு நாட்களாகிவிட்டன. நான்காவது தினத்தில் தான் இந்தக் கிராமத்தில் வந்து தங்க நேர்ந்தது. அதுவும் பொழுது இருட்டி விட்டதனாலும் பசியும் இருந்ததனாலும் தான் மறுநாள் விடிந்த பிறகு, எட்டு மெயில் தூரம் நடந்து கழுகுமலைக்குப் போனால், அவனுடைய அத்தை தன் வீட்டில் அவனை வைத்துக் கொள்ளுவாளா, விரட்டி விடுவாளா என்பது அவனுக்குத் தெரியாது. அத்தையையும் அவன் பார்த்ததில்லை.

 எப்படியோ, ஒரு வழியில் அவனுக்கு அவள் அத்தை என்றும், அங்கே போ என்றும் யாரோ சொல்ல, அதை நம்பிக்கொண்டு அந்தச் சிறுவன் விளாத்திக் குளத்திலிருந்து கால்நடையாகவே நடந்து வந்திருக்கிறான்.மேற்கண்ட விவரங்களை எல்லாம் சிறுவனுடைய வாய் மொழி மூலமாகவே தாயம்மாள் அறிந்து கொண்டாள்.உன் பேரு என்ன? என்று கடைசியாகக் கேட்டாள் தாயம்மாள்.ராஜா என்றான் சிறுவன்.அப்புறம் அவனுக்குச் சாப்பாடு போட்டார்கள். அவன் சாப்பிட்ட பிறகு, குழந்தைகளுக்குப் படுக்கையை எடுத்து விரித்தாள். மண் தரை ஈரச் சதசதப்புடன் இருந்ததால், வெறும் ஓலைப்பாயை விரித்துப் படுப்பதற்கு இயலாமல் இருந்தது. அதனால், கிழிந்து போய்க் கிடந்த மூன்று கோணிப் பைகளை எடுத்து உதறி விரித்து, அதன் மேல் வீட்டிலிருந்த இரண்டு ஓலைப் பைகளையும் பக்கம் பக்கமாக விரித்தாள். ராஜா தெற்குக் கோடியில் படுத்துக் கொண்டான். அவனுக்குப் பக்கமாகச் செல்லையாவும் அப்புறம் தம்பையாவும் படுத்துக் கொண்டார்கள். தம்பையாவின் உடம்பு இரண்டு பாய்களிலுமே பாதிப்பாதி படிந்திருந்தது. வடகோடியில் தாயம்மாளும் மங்கம்மாளும் படுத்துக் கொண்டார்கள்.எங்கோ தூரத்தில், ஒரு வீட்டில் சீனிவெடி வெடிக்கும் சப்தம் கேட்டது. தீபாவளி மறுநாளானாலும், யாரோ ஒரு துருதுருத்த பையன் அப்பொழுதே (வேட்டுப்) போட ஆரம்பித்துவிட்டான்.வேட்டுச் சத்தம் கேட்டதும், எனக்கு மத்தாப்பு என்றாள் மங்கம்மாள்.எனக்கும் என்றான் தம்பையா.நம்ம கிட்ட அதுக்கெல்லாம் பணம் ஏது மங்கம்மா? ராமசாமி பணக்காரன். அவனுக்குச் சரி, எவ்வளவு வேட்டுன்னாலும் போடுவான்.ஊஹும் எனக்கு மத்தாப்பு என்று முரண்டு பண்ணினாள் மங்கம்மாள்.வம்பு பண்ணாதே. சொன்னாக் கேளு.

 மத்தாப்பு கொளுத்தினா வயிறு நிறையாதா? காலையிலே உனக்கு தோசை சுட்டுத் தாரேன். நிறையச் சாப்பிடு, மத்தாப்பு எதுக்கு?மங்கம்மாள் தன் முரண்டை நிறுத்தவில்லை; அழுவதுபோல் சிணுங்க ஆரம்பித்தாள்.செல்லையா தூங்க ஆரம்பித்தான்.அப்போது தெருவில் ஆட்கள் நடந்து செல்லும் சந்தடி கேட்டது.சமீன் வந்து இறங்குறதுன்னா லேசா? என்று தாயம்மாள் தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டு, மங்கம்மா! நீ நல்ல பிள்ளை! பிடிவாதம் பண்ணாதே. அடுத்த வருஷம் நிறைய மத்தாப்பு வாங்குவோம். இந்த வருஷம் நாம் எவ்வளவு சங்கடப் பட்டோம்ன்னு உனக்குத் தெரியாதா? என்றாள். அப்புறம் அவளால் சரியாகப் பேச முடியவில்லை. வாய் குழறியது. மங்கம்மாளைப் பார்த்துத்தான் அவள் பேசினாள். ஆனால் அவள் உண்மையில் தன்னுடைய தாயாரிடத்திலோ, தன்னை உயிருக்கு உயிராகப் பேணி வளர்த்த ஒரு கிழவியிடத்திலோ, தான் வருஷக் கணக்கில் அனுபவித்த துயரங்களைக் கண்ணீரும் கம்பலையுமாகச் சொல்லுவது போலவே பேசினாள். ஒரு நீண்ட பெருமூச்சுடன், மங்கம்மாள்! நீ கூட ஒரு நாள் சாப்பாடு இல்லாமெ பள்ளிக்கூடம் போனியே கண்ணு. உன் வயித்துக்குக் கூட அன்னிக்கு ஒருவாய்க் கூளு கெடைக்கல்லையே! (அவளுக்குக் கண்ணீர் வந்துவிட்டது.) சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் போது நீ மத்தாப்புக் கேக்கலாமா, கண்ணு? பேசாமப் படுத்துத் தூங்கு என்று தேற்றினாள்.

 மங்கம்மாளைப் பரிவோடு தடவிக் கொடுத்தாள்.ஒரு மத்தாப்பாவது வாங்கித் தா என்றாள் மங்கம்மாள்.அழுகையுடனும் துயரச் சிரிப்புடனும் தாயம்மாள் சொன்னாள்: நீ தானே இப்படிப் பிடிவாதம் பண்றே? அந்தப் பையனைப் பாரு அவன் மத்தாப்பு கேக்கிறானா சோறு கிடைக்காமே, எச்சிலைக்கூட எடுத்துத் திங்கறான். அவன் சோறு வேணும்ன்னு கூட அழல்லே; நீ மத்தாப்பு வேனும்னு அழறே மங்கம்மாமங்கம்மாளுக்கு அவன் மேல் கோவம் வந்துவிட்டது. அவனைப் புகழ்ந்து, தன் கோரிக்கையைத் தாயார் புறக்கணித்துக் கொண்டுவருவது அவளுக்குப் பிடிக்கவில்லை. உடனே, அவனுக்கு ஒரே சிரங்கு! என்று திட்டுவது போலக் கடுமையாகச் சொன்னாள்.அவனுக்குத் தாய் தகப்பன் இருந்தா அப்படி இருப்பானா? தாயில்லாப் பிள்ளைன்னா யாரு கவனிப்பா? அவனோட அம்மா, முன்னாலே, அவனுக்குத் தீபாவளிக்குப் புதுவேட்டி, புதுச்சட்டை எல்லாம் வாங்கிக் குடுத்திருப்பா! மத்தாப்பும் வாங்கிக் கொடுத்திருப்பா. இப்போ, அவன் அதை எல்லாம் நினைச்சுக் கேக்கிறானா பாரு.இப்போ அவன் தூங்கிட்டான். காலையில் கேப்பான் என்று சொல்லிவிட்டு மங்கம்மாள் சிணுங்கினாள்.தாயம்மாளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. வாயாடி என்று சொல்லி மங்கம்மாளின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினாள்.தாயம்மாளுக்குத் திகைப்பாக இருந்தது. எதை மூடிக்கிறது? ஊம்? என்று ஒரு கணம் யோசித்தால். அப்புறம், என் பிள்ளைகளை விடவா அந்தப் பீத்தல் பெரிசு? என்று சொல்லிக் கொண்டே எழுந்து போய், மறு நாள் கட்டிக்கொள்வதற்காக துவைத்து உலர்த்தி மடித்து வைத்திருந்த  உண்மையில் பீத்தல் இல்லாத நாட்டுச் சேலையை எடுத்துக்கொண்டு வந்து ராஜா உட்பட உல்லோருக்கும் சேர்த்துப் போர்த்தினாள்.மங்கம்மாளைப் பார்த்து, சரி, படுத்துக்கோ காலையிலே எப்படியும் வாங்கித் தாரேன் என்று சொல்லி அவளை உறங்கப் பண்ணுவதற்கு முயன்றாள்.

 மூன்றாவது தடவையாகவும் சீனவெடியின் சப்தம் கேட்டது.தாயம்மாள் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்: இன்னிக்கு அங்கே யாரும் தூங்கமாட்டாக போலிருக்கிறது! ஊம், அரண்மனைக் காரியம்! ஆளு போறதும் வாரதுமா இருக்கும். ராமசாமியும் தூங்காம வேட்டுப் போடுறான்!ராமசாமியின் அக்காளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டவன் ஒரு ஜமீன்தாரின் மகன். அந்த வருஷம் தலை தீபாவளிக்காக அவனை அன்று மாலையில் அழைத்து வந்திருந்தார் ராமசாமியின் தகப்பனார். அந்த ஊரில் மட்டுமில்லாமல் அந்த வட்டாரத்திலேயே அவர்தான் பெரிய மிராசுதார். ஜமீன்தாரை, மிகவும் கோலாகலமாக அழைத்து வந்து தீபாவளி நடந்த அநேக தினங்களாகவே அவர் வீட்டில் ஏற்பாடுகள் நடந்து வந்தன. தீபாவளிக்கு முதல் நாள்தான் மாப்பிள்ளை வந்து இறங்கினான். அதற்க்கு முன் பத்துப் பதினைந்து நாட்களாக ஒரு நிமிஷத்திற்கு ஒன்பது தடவை, ராஜா வர்றார், சிறப்பாகச் செய்யணும் என்று அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். உண்மையில் வெகு சிறப்பாகத்தான் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தனமங்கம்மா!பதில் இல்லை; தூங்கிவிட்டாள்.தாயம்மாளும் அகல் விளக்கை அணைத்துவிட்டுத் தலையைச் சாய்த்தாள்.முதல் கோழி கூப்பிட்டதும் தாயம்மாள் கண்விழித்து விட்டாள். அப்போது மணி நாலு ஆகவில்லை. நல்ல வேளையாக மழை அப்போதுதான் நின்றிருந்தது சிறு தூவானம் மட்டும் ஓலைக் கூரையில் விழுவது, ஒரே நிதானத்துடன் சோளம் பொரிவது போலக் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தத் தெருவில் வேறு சில வீடுகளில் ஏற்கனவே எழுந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடத் தொடங்கி விட்டதற்கு அடையாளமாக வேட்டுச் சப்தமும், வேட்டுச் சப்தத்தைக் கேட்டுப் பயந்து நாய்கள் குரைக்கும் சப்தமும் கேட்டுக் கொண்டிருந்தன.தாயம்மாள் எழுந்து விளக்கை ஏற்றினாள்.

 பழைய படியும் மழை பிடித்து விடக்கூடாதே என்று அவளுக்கு பயம். அதனால் குழந்தைகளை எழுப்பி, விறுவிறு என்று குளிப்பாட்டிவிட்டு, மற்ற வேலைகளை கவனிக்கலாம் என்று திட்டம் செய்தாள். குழந்தைகளுக்குப் படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. கடைசியில் முனகிக் கொண்டும், புரண்டு படுத்துக்கொண்டும் ஒருவழியாக எழுந்து விட்டார்கள். அவள் ஒவ்வொரு குழந்தையாக எண்ணெய் தேய்த்து விட்டாள். ஆனால் ராஜா மட்டும் எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாது என்று சொல்லித் தூரத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காவிட்டால் தோஷம் என்று சொன்னாள். ராஜாவுக்கோ என்ன சொன்னாலும் காதில் ஏறவில்லை.அரப்புக் காந்தும்; நான் மாட்டேன். என்று பிடிவாதமாகச் சொன்னான் ராஜா.அரப்புப் போடல்லே; சீயக்காய் போட்டுக் குளிப்பாட்டுறேன். குளிர்ச்சியாயிருக்கும்ஊஹும்.தம்பி, சொன்னாக் கேளுடா. என்னை உன் அம்மான்னு நெனைச்சுக்கோ, உனக்குக் காந்தும் படியாக நன் தேய்ப்பனா?  வா, எண்ணெய் தேய்ச்சிக் குளி. இந்தத் தீபாவளியோடே பீடை எல்லாம் விட்டுப்போகும். குளிக்காம இருக்கக்கூடாதப்பா  இப்படி வெகுநேரம் கெஞ்சிய பிறகுதான் அவன் வேறு வழி இல்லாமல் சம்மதித்தான்.ராஜா எழுந்து வந்து மணையில் உட்கார்ந்தான். அது தான் நல்ல பிள்ளைக்கு அடையாளம். ஒரு பிள்ளைக்குத் தேச்சி, ஒரு பிள்ளைக்கு தேக்காமல் விடலாமா? என் பிள்ளை குட்டியும் நல்லா இருக்கனுமில்லப்பா! என்று மற்றவர்களுக்குச் சொல்லுவது போலத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டே எண்ணெய் தேய்த்தாள்.

 தாயில்லாக் குழந்தைன்னா இந்தக் கோலம் தான். நான் மூணாம் வருஷம் காய்ச்சலோட படுத்திருன்தேனே, அப்போ கண்ணை மூடியிருந்தா என் குழந்தைகளுக்கும் இந்தக் கதிதானே? அதுகளும் தெருவிலே நின்னிருக்கும்.  இப்படி என்னென்னவோ மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவசர அவசரமாகக் குழந்தைகளைக் குளிப்பாட்டினாள். ஆனால், தாயம்மாள் பயபத்திரமாகச் சீயக்காய்த் தூளைப் போட்டுத் தேய்த்த போதிலும், ராஜா பல தடவைகள் ஐயோ, ஐயோ என்று அழுதுவிட்டான். அவன் அழும்போதெல்லாம் அவள் இன்னிக்கோட உன் சிரங்கு குணமாயிரும் என்று மட்டும் மாறி மாறிச் சொல்லிக்கொண்டே இருந்தாள்.யாரோ எவரோ? மழைன்னு வந்து வீட்டிலே ஒதுங்கிட்டான். அவனைப் போகச் சொல்ல முடியுமா! அவன் வந்த நேரம், தீபாவளியாப் போச்சு. குழந்தைகளுக்குள்ளே வஞ்சம் செய்யலாமா? பார்க்கிறவுகளுக்கு நான் செய்யறதெல்லாம் கேலியாயிருக்கும். அவுக கேலி செய்தாச் செய்துட்டுப் போகட்டும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் பகவான் துணை செய்வான்.அவள் தோசை சுட்டுக் கொடுத்தாள். அவளுடைய குழந்தைகள் புதுத் துணி உடுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் அவசர அவசரமாகச் சாப்பிட்டார்கள். தம்பையா கடைசித் தோசையைப் பாதியிலேயே வைத்து விட்டு எழுந்துவிட்டான். அவனால் மேற்கொண்டும் இரண்டு தோசைகள் சாப்பிட முடியும். இருந்தாலும் அவசரம்.தெருவில் ஜன நடமாட்டம் தொடங்கிவிட்டது. மழையும் பரிபூரணமாக நின்றுவிட்டது.

 உதயத்தின் ஒளி சல்லாத் துணியைப்போல அவ்வளவு மெல்லியதாக ஊரையும் உலகத்தையும் போர்த்தியது.புதுத் துணிகளுக்கு மஞ்சள் வைத்துச் செல்லையாவும் உடுத்துக் கொண்டான்; தம்பையாவும் உடுத்துக் கொண்டான். மங்கம்மாளும் பாவாடையும் சட்டையும் போட்டுக் கொண்டாள்.அவன் கௌபீனத்தோடு நின்றான்.தாயம்மாளுக்குப் பகீர் என்றது. இத்தனையும் செய்தும் புண்ணியமில்லாமல் போய்விட்டதே என்று கலங்கினாள். இந்த மாதிரியான ஒரு கட்டத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. சிட்டைத் துண்டை எடுத்துக் கொடுப்பதா, கொடுக்காமல் இருப்பதா? அவள் மனதுக்குள்ளே வேதனை மிக்க போராட்டம். மாதக் கணக்கில் ஒரு ரூபாய்த் துண்டு இல்லாமல் அவளுடைய கணவன் பட்ட கஷ்டத்தையும், வீதிவழிப் போவதற்குக் கூசியதையும், ஒரு துண்டு வாங்க வழியில்லையே! என்று கணவன் துயரத்துடன் வாய்விட்டுப் புலம்பியதையும் நினைத்துப் பார்த்தாள். இந்தத் துயரத்தின் எதிர்புறத்தில், ஒன்றும் சொல்லாமல், ஒன்றும் செய்யாமல், மெளனமாக நின்று கொண்டிருந்தான் ராஜா.தாயம்மாளுக்குத் திக்குத் திசை தெரியவில்லை; ராஜாவின் முகத்தை எதற்கோ ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள். ராஜாவோ வெகுநேரமாகக் கண்கொட்டாமல் அவளையே பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்.என்னைச் சோதிக்கத்தான் வந்திருக்கேடா நீ என்று மனக் கசப்புடன் சொல்வது போலச் சொன்னாள் தாயம்மாள். ஆனால், அவளுக்கும் மனக் கசப்புக்கும் வெகுதூரம்.

 மனதுக்குள் ஏற்பட்ட சிக்கல்களை விடுவிக்கவே இப்படிப்பட்ட ஒரு வாசகத்தை அவள் தூக்கிப் போட்டாளே ஒழிய அவள் சொற்களில் மனக்கசப்பின் நிழல் கூடப் படியவில்லை.அப்போது மங்கம்மாள் எழுந்துவந்து அம்மாவின் கன்னங்களில் தன் உள்ளங்கைகளை வைத்து, தன் முகத்துக்கு நேராக அவளுடைய முகத்தைத் திருப்பினாள்; அப்புறம் ஏதோ ரகசியத்தைச் சொல்லுவதுபோலச் சொன்னாள்.பாவம்! அவனுக்கு அந்தத் துண்டைக்குடு அம்மா!குழந்தை இந்த வார்த்தைகளைச் சொல்லி நிறுத்தினாள். ஒரு நிமிஷம் மௌனம் நிலவியது. பிறகு, திடீரென்று தாயம்மாளின் முகம் கோரமாக மாறியது. முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு கேவிக் கேவி அழுதாள். அவளுடைய பெருமூச்சும் விம்மலும் வீட்டை அடைத்துக் கொண்டு கேட்டன.குழந்தைக்கு விஷயம் விளங்கவில்லை. மங்கம்மாள், தான் அப்படிச் சொன்னதர்க்காகத் தான் அம்மா அழுகிறாள் என்று பயந்துவிட்டாள்.தாய், தன் பலத்தை எல்லாம் பிரயோகித்து அழுகையைத் தொண்டைக் குழியில் அழுத்தினாள், அவள் நெஞ்சு வெடித்துவிடும் போல் விம்மியது. குரலும் அந்த ஒரு நிமிஷத்தில் ஜலதோஷம் பிடித்ததுபோலக் கம்மலாகி விட்டது.பிறகு தழுதழுத்துக் கொண்டே சொன்னாள்:தம்பையா!என்னம்மா!ஹூம், ராஜாவுக்கு அந்தத் துண்டை எடுத்துக்குடு.வீட்டு முற்றத்தில் காலைவெயில் அடித்துக் கொண்டிருந்தது. அந்தப் பொன்னொளியில் மஞ்சள் பூசிய முகத்துடன் புத்தாடை தரித்துக்கொண்டு நிற்கும் மங்கம்மாள், அப்போது எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். ஈரம் காய்வதற்கா இருக்கமில்லாதத் தொள தொள என்று சடை போடப் பட்டிருந்ததால், கூந்தல், இரண்டு காதுகளையும், கன்னங்களில் பாதியையும் மறைத்துக் கொண்டிருந்தது. பரவலாகக் கிடக்கும்.

 கூந்தலின் நடுவே இளங்காற்றுப் புகுந்து சிலுசிலுக்கும் போது, சுகமும் கூச்சமும் தாங்க முடியாமல் சிரித்துக் கொண்டே இமைகளைக் குவித்தாள் மங்கம்மாள்.வெகு நேரமாக, தாயம்மாள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். சந்தர்ப்பவசமாக, அவளுக்கு நேராக மங்கம்மாள் முகத்தைத் திருப்பினாள்.என் ராஜாத்தி மகாலக்ஷ்மி மாதிரி இருக்கா! என்று தன்னை மறந்து இன்பத்துடன் சொல்லிவிட்டாள் தாய். அவ்வளவுதான். குழந்தையின் கையைப் பிடித்து வெகுவேகமாக வீட்டுக்குள்ளே இழுத்துக்கொண்டு வந்து, திருஷ்டிப் பரிகாரமாக அவளுடைய கன்னத்தில் துலாம்பரமாகச் சாந்துப் பொட்டை எடுத்து வைத்தாள்.அப்புறம் மங்கம்மாள் வீதிக்கு ஓடிவிட்டாள். ராமசாமியின் வீட்டுப் பக்கம் எச்சில் இலைகள் ஏராளமாகக் கிடந்தன. அங்கே நாலைந்து பேர் நின்று பேசிக் கொண்டும், வெற்றிலை பாக்குப் போட்டுத் துப்பிக் கொண்டும் இருந்தார்கள். ராமசாமி நீலநிறமான கால்சட்டையும், அந்த ஊருக்கே புதிய புஷ்கோட்டும் போட்டுக் கொண்டு நின்றான். மங்கம்மாளைப் பார்த்ததும் அவன் பக்கத்தில் ஓடிவந்தான்; மங்கம்மாளும் அவனைப் பார்த்து நடந்தாள். இருவரும் பாதி வழியில் சந்தித்துக் கொண்டனர். சந்தித்த மாத்திரத்தில், மிகவும் சந்தோஷத்துடன் ராமசாமி சொன்னான்எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கார்!ஊர்க்காரர்களைப் போல அவனும் தன் அக்காள் புருஷனை ராஜா என்று சொன்னான். ஆனால் அவன் சொன்னதற்குக் காரணம் சந்தோஷம்தானே ஒழிய மங்கம்மாளைப் போட்டிக்கு அழைப்பதற்கு அல்ல. ஆனால், அவளோ வேறுவிதமாக நினைத்து விட்டாள்.

 முதல் நாள் பள்ளிக் கூடத்திலிருந்து வந்தபோது நடந்த போட்டிதான் அவள் ஞாபகத்தில் இருந்தது. அவன் சொன்னதற்குப் பதில் சொல்லி அவனுடைய பெருமையை மட்டம் தட்டவேண்டும் என்று அவள் மனம் துடித்தது.அதனால் ஒரு அரை அடி முன்னாள் நகர்ந்து வந்து நின்றாள். யாதொரு திகைப்பும், தயக்கமும் இல்லாமல் ராமசாமியைப் பார்த்து, ரேகை சாஸ்திரியிடம் காட்டுவது போலக் கையை வைத்துக் கொண்டு, மிக மிக ஏளனமாகச் சொன்னாள்.ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கார்? எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கார். வேணும்னா வந்து பாரு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-10-2019.

#KSRPostings
#KSRadhakrishnanPostings


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...