Saturday, October 26, 2019

#கி_ரா_வின்_கோபல்ல_கிராமம், # பல்லபுரத்து_மக்கள், #அந்தமான்_நாயக்கர் என முப்பரிணாமங்களான (Triology) படைப்பு.

#கி_ரா_வின்_கோபல்ல_கிராமம், #

பல்லபுரத்து_மக்கள், 
#அந்தமான்_நாயக்கர் என முப்பரிணாமங்களான (Triology) படைப்பு.
-------------------------------------
கி.ரா., (ராயங்கால் ஸ்ரீ கிருஷ்ண ராஜநாராயணப் பெருமாள் ராமாநுஜன்) தான் பிறந்த மண்ணையும் மக்களையும் பற்றி விரிவாக “கோபல்ல கிராமம்” (1976), “கோபல்ல புரத்து மக்கள்” (1990), “அந்தமான் நாயக்கர்” (1995) என்று மூன்று படைப்புகளை வழங்கியுள்ளார். கோபல்ல கிராமம் படைப்பை லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டம் முதன்முதலாக வெளியிட்டது. பின் கவிஞர் மீராவின் அகரமும் அதன் அடுத்த பதிப்புகளை வெளியிட்டது. கோபல்லபுரத்து மக்கள் ஆனந்த விகடனில் 34 வாரங்கள் தொடராக வந்தது. அந்தமான் நாயக்கர் தினமணி கதிரில் தொடராக வந்தது. கி.ரா.வின் கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கர் என முப்பரிணாமங்களான (Triology) படைப்பு.




இவரது ‘கோபல்ல கிராமம்’ அது உருவாக அம்மக்கள் தங்களோடும் பிறரோடும் நிகழ்த்திய போராட்டத்தை விளக்கும். அத்துடன் அவர்கள் காக்கத்தியத்திலிருந்து இடம்பெயர்ந்து குடியேறியதும் வளர்ந்ததும் இதில் சொல்லப்பட்டது. நா. வா. சொன்னது போல ஒரு குழுவின் நாட்டுமரபான வரலாற்றைக் கூறும் நாட்டார் கதையம்சம் கொண்ட இதில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் துவக்கம், அதன் இறுதி நாட்கள், 1940களில் விடுதலைப் போராட்டமும், விடுதலையைப் பெற்றது எல்லாம் விவரிக்கப்பட்டுள்ளன.

கோபல்லபுரத்து மக்களில் விடுதலைப் போராட்ட வரலாற்றினை சாதாரண மக்களை நாயகர்களாக்கிச் சொல்லப்பட்டுள்ளது. கிட்டப்பனும் அச்சிந்தலுவும் கொண்ட காதல் கதையுடன் விடுதலைப் போராட்டம் எவ்வாறு அந்தக் கிராமத்தைப் பாதித்தது என்பதும் படைக்கப்பட்டுள்ளது.

அந்தமான் நாயக்கர் கதை என்பது ஒரு குற்றமும் அறியாத விவசாயி ஒருத்தனை சுதந்திர இந்தியாவின் போலீஸ் அடித்தே கொன்று போடுகிறது. வெள்ளை அரசை எதிர்த்து நடந்த கொடிப் போராட்டத்தின் போது அந்த விவசாயி மூவர்ணக் கொடியை மரத்தில் கட்டினான். அதற்குத் தண்டனை அந்தமான் சிறைவாசம். விடுதலைக்குப் பின்னும் சாதாரண மக்களின் போராட்டம் தொடர்கிறது. விடுதலைக்கு முன்னும் பின்னும் வேதனைப்பட்டது என்னவோ இவர்கள்தான். ‘‘சுதந்திர இந்தியாவிலும் வெள்ளைக்காரன் ஏதோ ஒரு உருவத்தில் இங்கே இருக்கவே செய்கிறான்’’ என்பது தான் உண்மை. 

இந்த மூன்று படைப்புகளும் ஓர் குக்கிராமத்தில் நகர்வதையும், மரத்தின் கீழே உள்ள ஒரு கயிற்றுக் கட்டிலிலிருந்தும், விடியலில் ஓட்டு வீட்டிலில் இருந்தும் எழுதப்பட்ட இந்த படைப்புகள் நகர்ப்புறத்திலும் கொண்டாடப்பட்டது தான் சிறப்பு.

இந்த படைப்பு கதைசொல்லியாகவும் உள்ளது. ஒரு சமுதாயத்தின் வரலாறாகவும் உள்ளது. It is folklore, fiction and non-fiction என்று உள்ளடக்கி படைக்கப்பட்ட படைப்பு என்றைக்கும் சிரஞ்சீவியாக விளங்கும்.

*கோபல்லபுர கிராமம் கடைசி அத்தியாயம் (40) கி.ரா.வின் கைவண்ணம் நாட்டுக்கொரு வரலாற்றுச் செய்தியை சொல்கின்றது. 

“விட்டில் பஞ்சத்தின்போது ஜனங்கள் இங்கே பட்ட துயரத்தைப் பிரஸ்தாபித்து, அது சமயம் கோட்டையார் செய்த உபகாரத்தை அவர்கள் பெரிதும் சிலாகித்தார்கள். 
நன்றி சொன்னார்கள்.

இனிமேல் அரசு இப்படி சமயங்களில் மெத்தனமாக இருக்காது என்றும், விரைந்து வந்து உதவும் என்றும் உறுதி சொன்னார்கள்.

அரசாங்க விரோத சக்திகளுக்கு யாரும் ஒத்துப்போகக் கூடாது. வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்ற கேட்டுக்கொண்டார்கள்.

பாரம்பரியமாகவே நீங்கள் ராஜ விஸ்வாசம் கொண்ட மக்கள். மகாராணி விக்டோரியா உங்களுக்கு வேண்டிய எல்லாவித நன்மைகளையும் செய்யவே எங்களை இங்கே அனுப்பி இருக்கிறார்கள் என்றார்கள்.

அங்கே கூடியிருந்த அனைவருக்கும் இது நல்லதாகவே பட்டது.

ஏகோபித்த நம்பிக்கையுடன் அவர்கள் விக்டோரியா மகாராணியின் ஆட்சியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல அந்த நம்பிக்கை மெல்ல மெல்ல சிதிலமடைந்ததையும், நாட்டின், அந்த கிராமத்தின் மக்களுடைய சுதந்திர ஆவேசம் நீறுபூத்த நெருப்பாக இருந்ததையும் வெள்ளை ஆட்சி கண்டுகொள்ளவில்லை. 

நிலவிய அப்போதைய அமைதி, வரும் ஒரு புயலுக்கு முன்னுள்ளது என்பதை அறியவில்லை யாரும்.”

*கோபல்லபுரத்து மக்களின் தனது இரண்டாவது பாகத்தில் கி.ரா. அத்தியாயம் 27இல் குறிப்பிடுகிறார்; 

கோபல்ல புரத்தின் தோற்றத்தைப் போலவே அந்த மக்களின் மன இயல்பும் மெதுவாக மாற்றமடைந்து கொண்டே வந்தது. பழக்க வழக்கங்களை விட, ஆடை அணிகள் போன்ற உடம்பு சம்மந்தப்பட்ட காரியங்களில் மட்டும் வெகு துரிதமான மாற்றம் காண முடிந்தது. பாதிப் பேருக்கு மேல் இளம் தலைமுறையினர் தங்கள் குடுமியை வெட்டி எறிந்துவிட்டு “சேக்கு” (கிராப்) வெட்டிக் கொண்டார்கள். முத்து நாயுண்டு தன்னுடைய கொண்டையை எடுத்து விட்டு கிராப் வெட்டிக் கொள்ளப் போகிறார் என்று கேள்விப்பட்டதும் அந்த முடியைப் பெற பலத்த போட்டி ஏற்பட்டது பெண்களிடையே. அவருடைய தலைமுடியின் அடர்த்தியும் நீளமும் பெண்களுக்கு மத்தியில் எப்பவும் ஒரு பேச்சாக இருக்கும். கடைசியில் அத அப்பிநாயுண்டு வீட்டுப் பெண்களுக்குக் கிடைத்தது.

பொன்னையனாசாரியைக் கூட்டிக் கொண்டு வந்து அந்த வெட்டிய முடியை சன்னமான வெள்ளிக் கம்பியால் முடிக் கொத்தின் மேல் நுனியை அழகாக இறுக்கிக் கொடுக்கச் சொல்லிப் பெற்றுக் கொண்டார்கள். அந்த முடி மிக நீண்ட நாள் அந்தக்குடும்பத்தின் மதிப்புக்குரிய சொத்தாக இருந்தது. பல கல்யாணங்களுக்கு வந்து வாங்கிக் கொண்டு போவார்கள் மணப்பெண்ணின் முடிசிங்காரித்தலுக்கு.

---

தாலுகா போர்டுகளை கலைத்துவிட்டு பெரியளவில் ஜில்லா போர்டு என்று அமைத்து அதனிடம் கல்வி, சுகாதாரம், காலைகள் பராமரிப்பு முதலிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது.

இதனால், கோபல்லபுரத்தில் ஜில்லா போர்டு ஆண்கள் பாடசாலை, ஜில்லா போர்டு பெண்கள் பாடசாலை என்று இரண்டு பள்ளிக் கூடங்கள் ஏற்பட்டது.

ஜில்லாவின் பல பகுதிகளிலிருந்தும் அந்த கிராமத்துக்கு வாத்தியார்களும் வாத்தியாரம்மாக்களும் தங்களோடு பல்வேறு வகையான விடயங்களோடும் வந்து தங்க நேர்ந்தது.

முக்கியமாக, எழுதப்படிக்க பெண்கள் கற்றுக் கொண்டதை விட வாத்தியாரம்மாக்களிடம் அவர்கள் பார்த்துக் கற்றுக் கொண்டதுதான் ரொம்ப. குமருப்பெண்டுகளிடம் இது வேகமாகப் பரவியது. உச்சி வகிடு பக்கவகிடாகியது. ரவிக்கை அணியும் வழக்கம் வந்தது. பதினாறு முழம் பன்னிரண்டு முழச் சேலையாகியது. உள்பாவாடை, உள்பாடி என்று வந்தது. மாராப்பு சரிந்து விழாமல் இருக்கவும் அலங்காரத்துக்காகவும் புரூச்குத்திக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது. வாசனைச் சோப்பு போட்டுக்குளிக்கும் பழக்கம் கூட வந்துவிட்டது.

பெரிய குடும்பங்களில் மட்டும் முன்பெல்லாம் சீவில்லிப்புத்தூர் போனால் ஆண்டாள் கோவிலில் தரும் ஸ்நானப் பவுடர் வாங்கிக் கொண்டு வந்து தேய்த்துக் குளிக்கும் பழக்கம் பெண்களிடம் இருந்தது. அதையொட்டி இவர்களும் பலவாசனாதிப் பொருள்களை சேர்த்து இடித்து தேய்த்துக் குளிப்பதற்கென்றே குளியல்த்தூள் தயாரித்து வைத்துக் கொள்வது என்றிருந்தது. இந்த வாசனைச் சோப் வந்தபிறகு அதை கைவிட ஆரம்பித்தார்கள்.
************

‘கி.ராஜநாராயணன் கடிதங்கள்’

தமிழின் மூத்த படைப்பாளியான கிரா அவர்கள், தமிழிலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.  சிறுகதை மற்றும்  நாவலாசிரியர், கட்டுரையாளர், நாட்டுப்புறக்கதை மற்றும் கரிசல் வட்டார வழக்கு அகராதியின் தொகுப்பாளர், பல்கலைக்கழகச் சிறப்புப் பேராசிரியர் என்ற பன்முகங்கொண்ட கி.ரா, கடித இலக்கியத்திலும், தம் முத்திரையைப் பதித்துள்ளார்.

சம காலத்துத் தமிழிலக்கிய படைப்பாளிகளுக்கு, இவர் எழுதிய கடிதங்கள்  ‘கி.ராஜநாராயணன் கடிதங்கள்,’  என்ற தலைப்பிலும், அவர்களின் மறுமொழிகள், ‘அன்புள்ள கி.ரா.வுக்கு,’ என்ற தலைப்பிலும், நூலாக்கம் பெற்றுள்ளன.  ‘கு.அழகிரிசாமி கடிதங்கள்,’ என்ற தனிநூலும் வெளிவந்துள்ளது.  

‘கடிதங்கள் எழுதுவதிலும், கடிதங்களைப் படிப்பதிலும் உள்ள சந்தோஷம் புஸ்தகங்களில் இல்லை,” என்று குறிப்பிடும் கி.ரா, முப்பது வயதுக்குப் பிறகே கதைகள் எழுதத் துவங்கியதாகவும், அதற்கு முன் எழுத்தாளர் நண்பர்களுக்குப் பக்கம் பக்கமாகக் கடிதங்கள் எழுதிக் குவித்ததாகவும்,  ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆகவே அவரிடமிருந்த எழுத்துத் திறமையை வெளிக் கொணர்ந்து, எழுத்தை அவர் வசப்படுத்திய பெருமை, கடிதங்களையே  சேரும்.

உடல் நலம் குறித்த விசாரணை, குடும்பத்தினர் குறித்த தகவல் பரிமாற்றம் ஆகியவை மட்டுமின்றி, அக்கால இலக்கிய நிகழ்வுகள்,  சமூக சிந்தனை, எழுத்தாளர்களின் மனவோட்டம், ராயல்டியை எதிர்பார்த்து ஏங்கும் வறுமையான வாழ்க்கைச் சூழல், தனிப்பட்ட குணாதிசயங்கள், நுட்பமான அனுபவங்கள்,  வாசித்த பல்வேறு படைப்புகள் குறித்த விமர்சனங்கள்  போன்ற அரிய விபரங்களும், உண்மைகளும் இக்கடிதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளமையால், இவை வரலாற்று ஆவணங்களாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை.

பள்ளி நண்பர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும், மலரும் நினைவுகளை வாசிக்கும் ஒவ்வொருவரும், தன் பால்யத்துக்குச் சென்று, மீள்வது உறுதி.   

சக மனிதரின் துன்பங்கண்டு துடிக்கும், இவர் மனநிலையைப் பல கடிதங்கள் எடுத்தியம்பு கின்றன.  வானம் பார்த்த பூமியான கரிசல் மக்களின் வாழ்க்கைப் பாட்டையும், மழையின்றிப் படும் துன்பத்தையும், கொஞ்சங் கொஞ்சமாக விவசாயம் அழிந்து வருவதையும், பல கடிதங்களில் இவரும் ஒரு விவசாயி என்பதால், உணர்வு பூர்வமாகப் பதிவு செய்திருக்கிறார்,  ஒவ்வொரு கடிதத்தின் முடிவிலும், அப்போதைய விவசாயப் பணிநிலவரம் குறித்து, எழுதத் தவறவில்லை.     
  
“இங்கே இந்த தீபாவளிக்கு, ஜனங்கள் அரிசி வடிக்கவில்லை; கண்ணீர் வடித்தார்கள்.
உணவுப் பற்றாக்குறை நீங்கினால், அறிவுப்பற்றாக்குறையும், தானாக நீங்கிவிடும்.  புண் ஆறிவிட்டால், பொருக்கு தானாகவே, விழுந்துவிடும்  மாதரி.  சோற்றுக்குள்ளே இருக்கான், சொக்கநாதன்”.

பாமர மக்களின் பேச்சு, பாட்டு, வசவு, தாலாட்டு, விளையாட்டு, நாடோடிக்கதைகள் ஆகியவற்றில் தாம், நம் மொழி உயிர் மூச்சுடன் விளங்குகிறது என்பதிலும், நாடோடிப் பாடல்களும், காட்டுப் பாடல்களும் இலக்கியத்தில் வைக்க வேண்டிய சமதையுடையவைகள் என்பதிலும் இவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

“சோளம் விதைக்கயிலே
சொல்லீட்டுப் போன மச்சான்
சோளம் பயிராச்சே
சொன்ன சொல்லும் பொய்யாச்சே!”

 பெண்ணின் காதல் ஏக்கத்தை அழகாகவும், எளிமையாகவும் வெளிப்படுத்தும், இந்த நாடோடிப் பாடலை எடுத்துக் காட்டி, ஷேக்ஸ்பியரையும், விக்டர் ஹுயுகோவையும் கரைத்துக் குடித்தவர்களால், இப்படி ஒரு பாடல் எழுத முடியுமா?” என்று கேட்கிறார்.

எந்த ஒரு காட்சியையும் நேர்முக வர்ணனை போல், துல்லியமான விவரங்களுடன்  விவரிப்பதில் கி.ரா வல்லவர்.  மலை மாட்டின்  துஷ்ட நடவடிக்கை களை, நாம் நேரில் பார்ப்பது போல் துல்லியமாக விவரித்து, அதை வம்பு செய்யும் மனதுக்கு ஒப்பிட்டிருப்பது, புதுமை.  மனம் ஒரு குரங்கு என்று  சொல்வதைத் தான், இதுவரை நாம் கேட்டிருக்கிறோம்.   

கடிதங்களில் ஆங்காங்கே கவித்துவமான வரிகளுக்கும் பஞ்சமில்லை.  தண்ணீரைப் பற்றிய அழகான வர்ணனை இது:-

“எத்தனை நிறப் பிறப்புகளில் தான், இந்தத் தண்ணீர் விளங்குகிறது!
வெள்ளி நுரையாக வழியும் குற்றால அருவித் தண்ணீர், பச்சை நிறமாக விளங்கும் திருச்செந்தூர் அலைகடல், நீலக்கம்பளத்தில் வெள்ளியால் ஆங்காங்கே ஜரிகைப் புட்டா இட்டது போலத் தெரியும் குமரிக்கடல், யானைக்கலரில் தெரியும், கரிசல் குளத்தின் புதுவெள்ளம்,  இப்படி 

(படம். கி.ராவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்தையாவுடன் 1970களில் நடந்த நிகழ்வில்)

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-10-2019.

#KSRPostings
#KSRadhakrishnanPostings
#கரிசல் இலக்கியம்
#கோபல்லபுரம்_கிராமம்
#கரிசல்_இலக்கியம்
#அந்தமான்_நாயக்கர்
#கி_ரா

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...