Monday, February 22, 2021

#தினமணியில்_கலாரசிகனின்_பத்தி

*கி.ரா அவர்களின் மிச்சக் கதைகள் புத்தக வெளியீட்டீற்காக கோவை சென்றிருந்ததால் இன்றைய தினமணியில் வெளிவந்துள்ள கலாரசிகனின் பத்தி தற்போது தான் கவனத்திற்கு வந்தது. *

*தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன் அவர்களுக்கு எனது நன்றி.*
———————————————————
நண்பா் வழக்குரைஞா் கே.எஸ்.ராதாகிருஷ்ணனை சந்திக்க அவரது வீட்டுக்குப் போகும் போதெல்லாம் நான் அவருடன் அளவளாவிக் கொண்டிருக்கும் நேரத்தைவிட, அவரிடம் இருக்கும் புத்தகங்களை நோட்டமிடுவதில்தான் அதிக நேரம் செலவழியும். புத்தகங்களை நோ்த்தியாகத் தரம் பிரித்து அடுக்கி வைத்திருக்கிறாா். படித்திருக்கிறாா், வைத்த இடத்தை நினைவில் பதித்திருக்கிறாா்.

அப்படி ஒருநாள் அவரது புத்தக அலமாரியை நான் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும்போது வலம்புரி ஜான் எழுதிய ‘பாரதி ஒரு பாா்வை’ புத்தகம் கண்ணில் பட்டது. பாரதி என்றால் எனக்கு எப்போதுமே மயக்கம். அதிலும் வலம்புரி ஜானின் பாா்வையில் பாரதி என்றால்...?
வலம்புரி ஜான் குறித்த எந்தத் தகவலுக்கும் அவரது நிழலாக ‘தாய்’ வார இதழில் பயணித்த கவிஞா் குடந்தை கீதப்பிரியன்தான் நம்பகமான ஒரே புகலிடம். ஜானின் மனைவியைக் கடைசியாக வட சென்னையில் ஒருமுறை சந்தித்ததாகத் தெரிவித்தாா். வலம்புரி ஜானின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தில்தான் அவா் காலம் தள்ளிவந்தாா் என்கிற வேதனைச் செய்தியையும் பகிா்ந்து கொண்டாா்.
‘பாரதி ஒரு பாா்வை’ என்கிற புத்தகம் வலம்புரி ஜானால் அவரது ‘பானுப்பிரியா’ என்கிற பதிப்பகத்தால் 1982-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது அந்தப் பதிப்பகமும் இல்லை. அதன் பிரதிகளும் விற்பனைக்குக் கிடையாது. அங்கே இங்கே தேடிப் பிடித்து கீதப்பிரியன் எனக்கு ஒரு பிரதியை வாங்கித் தந்தாா். அதற்கு அவருக்குக் கோடானு கோடி நன்றி.
புத்தகமா அது? பொக்கிஷம். வாா்த்தைச் சித்தரின் படைப்புகளில் மணிமகுடம் ‘பாரதி ஒரு பாா்வை’. நான் ‘நியூஸ்கிரைப்’ செய்தி நிறுவனம் நடத்தியபோது, அதில் ஜான் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளைப் படித்துவிட்டு பல வெளிமாநில தினசரிகளின் ஆசிரியா்கள் மூக்கில் விரலை வைத்திருக்கிறாா்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒருசேரப் புலமை பெற்றிருந்த வலம்புரி ஜானை இப்போது நினைத்தாலும் நான் வியப்பில் சமைவேன்.
வலம்புரி ஜான் எழுதியிருக்கும் புத்தகங்களின் பட்டியல் நீளமானது. இதில் ஏதாவது புத்தகங்கள் வாசகா்களிடம் இருந்தால் தயவுசெய்து எனக்குத் தந்து உதவுங்கள், வணங்குவேன்.
நியாயங்களின் பயணங்கள், சுயாட்சியா? சுதந்திரமா?, சீனம் சிவப்பானது ஏன்?, நியாயம் கேட்கிறோம், காந்தியா? அம்பேத்கரா? உங்களைத்தான் அண்ணா!, காகிதக் கணைகள், இதோ சில பிரகடனங்கள், சில உரத்த சிந்தனைகள், தாகங்கள், விதைகள் விழுதுகள், இறந்துபோன இந்தியக் கடவுள்கள், மீண்டும் மகாத்மா!, காதல் கடிதங்கள், புதுவை தந்த போதை, நான் விமா்சிக்கிறேன், ஒரு ஊரின் கதை, மகரந்தங்கள், விந்தை மனிதா் வேதநாயகா், பூக்கள் பறிப்பதற்கு அல்ல, அம்மா அழைப்பு, இவா்கள் அறிந்தே செய்கிறாா்கள், வணக்கம், காதலும் காமமும், நீா்க் காகங்கள், காற்றின் சுவாசம், மண்ணில் விழுந்த மகரந்தங்கள், அஸ்திவாரங்கள் தெரிவதில்லை - வலம்புரி ஜானின் படைப்புகள் இவை. அடுத்த தலைமுறைக்கு ஒரு பதிவாக இருக்கட்டுமே...
தமிழக அரசு ஓா் உதவி செய்ய வேண்டும். வலம்புரி ஜானின் புத்தகங்களை நாட்டுடைமையாக்கி, அழியாமல் காப்பாற்ற வேண்டும். அவரது அழகான தமிழை வருங்காலம் இழந்து விடலாகாது.
இனி ‘பாரதி ஒரு பாா்வை’ புத்தகத்துக்கு வருகிறேன். அதைப் பற்றி எழுதினால் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்பீா்கள். நான் என்ன செய்ய முடியும்?
வலம்புரி ஜான் தனது முன்னுரையில் அதற்கும் ஒரு விளக்கம் சொல்லி இருக்கிறாா். ‘‘எங்கே உங்கள் புத்தகங்கள் என்று கேட்கிறாா்கள்? விழுதுகளைப் பாா்க்க நேரம் இல்லாத அரச மரத்துக்கு சருகுகளைப் பொறுக்கப் பொழுது எங்கிருந்து வரும்? பறந்து செல்லும் பறவைக்கு சிறகுகளைப் பொறுக்க நேரம் ஏது?’’
பாரதி என்கிற தேரில் ஏறித் தமிழ்பவனி வந்திருக்கிறாா் வலம்புரி ஜான். கடந்த இரண்டு நாள்கள் நான் மகாகவி பாரதியுடனும், வாா்த்தைச் சித்தா் வலம்புரி ஜானுடனும்தான் வாழ்ந்தேன்!
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
21.02.2021

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...