Friday, February 26, 2021

#பாரதி_மண்டபம்_எட்டயபுரம் #சில_நினைவுகள்....

———————————————————
கடந்த அக்டோபர் 12, 1947-ல் கல்கி இதழ் வெளியிட்ட பாரதி மண்டபம் திறப்பு விழா சிறப்பு மலரை எட்டயபுரம் குற்றாலம் பராசக்தி கல்லூரி பேராசிரியர் மறைந்த சகோதரி வி.ஜெயபாரதியிடம் இருந்து கிடைத்தது. நண்பர் கோவில்பட்டி மாரிஸ் நேற்று கரிசால்காட்டின் கவி பாரதி புத்தகம் விசயமாக என்னைச் சந்திக்க வந்தபோது இந்த கல்கி இதழில் வந்த செய்திகளையும் சேர்க்கச் சொன்னேன்.
பாரதி மண்டபம் கட்டுவதற்கான நிதி வழங்கியவர்கள பட்டியலை எல்லாம் கல்கி ஆசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி இந்த இதழில் பட்டியலிட்டு வெளியிட்டு இருந்தார். அந்த பழைய இதழை திருப்பிப் படித்தபோது பல அரிய செய்திகள் இருந்ததால் திரும்பவும் படிக்கத் தோன்றியது.

பாரதி இறந்தபோது ஒற்றைப்படை எண்ணிக்கையிலான ஆட்களைக் கொண்டுதான் மயானத்திற்கு கொண்டு சென்று தகனம் நடந்தது . கப்பலோட்டியத்தமிழன் சிதம்பரனாருக்கும் நடந்ததும் மிக கொடுமைதான்.
அரசியலில் இன்றைக்கு அல்ல வ.உ.சி., பாரதி காலத்திலிருந்து தகுதியேத் தடை என்ற நிலை தொடங்கியது என்கிறார்கள். பாரதியை பைத்தியக்காரன் ஆக்கினார்கள், வ.உ.சி. தன் சொத்துக்களை எல்லாம் விற்று நாட்டின் சுதந்திரம் வேண்டி போராடியவர். வ.உ.சி கோவில்பட்டி மண்ணில் காலில் செருப்பு இல்லாமல் நடக்க வைத்தார்கள். பின்னாட்களில் எண்ணெய் வியாபாரம் நடத்தி அன்று வயிற்றைக் கழுவ வேண்டிய நிலை யாரால் ஏற்பட்டது.
தமிழகம் பலரை கொண்டாட்டும், ஆனால் தகுதியான வ.உ.சி ஏன் மறந்தார்கள். அதுபோலவே சேலம் செல்வந்தர் வரதராஜ நாயுடு இந்திய எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழ்நாடு என்ற ஏடுகளின் நிறுவனத்தின் சொந்தக்காரர், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே 1000 கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர், பயணிகள் பேருந்தும் வைத்திருந்தார். வைக்கம் போராட்டத்திலும், சேரன்மாதேவி குருகுல போராட்டங்களிலும் அவர் பெயர் ஏன் மறைக்கப்பட்டது. காமராஜரும், சி,சுப்ரமணியமும் தமிழ்நாடு காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக போட்டியாக இருந்தபோது சேலம் வரதராஜ நாயுடு காமராஜரை முதல்வர் ஆக்கினார், கடைசியில் அவர் அன்றாட உணவுக்கே திண்டாடியது, அவர் குடும்பமே நடுத்தெருவில் நின்று, வறுமையில் வாடியது அதையும் நாட்டு மக்கள் பார்த்ததை எல்லாம் பேசுவதும் கிடையாது.அறிவதும் கிடையாது.
இன்றைக்கு நாம் ஆர்ட்டிபிசியல் சிந்தடிக் (Artificial -Synthetic) தலைவர்களைத் தூக்கிப்பிடிப்பது, பாசாங்கான போலிகளை நம்புவது, நமக்கென்ன நாடு நாசமாக போனால் என்ன..? என்ற நிலை.......
தேர்தல் நாள் அன்று ஓட்டை 1000 ரூபாய்க்கு விற்கலாம். அதுவே போதும் என்ற எண்ணம் வந்த பிறகு நாம் என்ன சொல்ல. ஜாதிகள் கூடாது என்கிறார்கள், ஆனால் ஜாதிக்கொரு கட்சி, ஜாதி வாரிய கணக்கெடுப்பு, ஜாதிகளின் உரிமைகளை உரத்தக் குரலில் பேசிக்கொண்டும், பேசுபவருடைய personality cultக்கும்,ஊடக வெளிச்சத்துக்கு ஜாதியைப் பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் ஜாதிகள் இல்லை என்றும் சொல்வார்கள். மது விற்பனையைக் கொண்டு ஒரு அரசாங்கம் நடக்கும் என்றால் அது மக்கள் நல அரசாங்கமா, அதில் வரும் வருமானம் நேர்மையான வருமானமா? காசுக்கு ஓட்டை விற்பது, மது ஆலை மூலம் அரசாங்கம் நடத்துவதும் விபச்சார தொழிலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது. பேசுபது ஒன்று நடப்பது ஒன்று என்ற நிலையில் ஒவ்வொருவரின் சுயநலமும் அந்தரங்கமும் நோக்கமும் (Hidden agenda) எதுவும் உருப்படப்போவ
தில்லை. வாழ்க நாடு.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23.02.2021

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...