Tuesday, February 16, 2021

#பழந்தமிழர்களின்_தேர்தல்_முறை #குடவோலை_முறை


——————————————————-
இத்தேர்தலின் வேட்பாளர்கள் பெயர்கள் தனித்தனி ஓலை நறுக்குகளில் எழுதி ஊரார் முன்னிலையில் குடத்தில் போடப்படும். ஒரு சிறுவனை, அதிலிருந்து ஒவ்வொன்றாக எடுக்க செய்து தேர்வான உறுப்பினர் பெயர்கள் உரக்கப்படிக்கப்படும். அரசனின் அதிகாரி அங்கு அமர்ந்து கண்காணிப்பார். இங்கே குழப்பங்கள், கலகங்கள் இருந்ததில்லை. போட்டியாளரின் வெற்றி, தோவியை கடவுளே தீர்மானிப்பதாக நம்பினர்.
பட்டத்து யானை யாருக்கு மாலை சூட்டுகிறதோ அவருக்கே நாடாளும் உரிமை தந்த ஒரு காலம் இருந்தது. சங்ககாலம் துவங்கி தமிழகத்தில் கிராம சபைகளுக்கென தமிழர்கள் தேர்தல் நடத்தினர். இப்பழமைத் தேர்தலே ‘குடவோலை முறை’ எனப்பட்டது.
பாண்டிய நாட்டு கிராமங்களில் குடவோலை வழக்கத்தில் இருந்ததை திருநெல்வேலி மானூரில் கிபி.800-ல் கண்டறிந்த மாறன்சடையன் கல்வெட்டு தெரிவிக்கிறது. கிபி.1919-ல் உத்திரமேரூரில் முதல் பராந்தகன் சோழர் கால வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு, உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலத்தில் கிராம நிர்வாகம் குடவோலை முறைப்படி நடந்ததை உறுதி செய்கிறது. இக்குடவோலை முறை இராஜராஜ சோழர் காலத்திற்கும் முன்பிருந்ததும் தெளிவாகிறது. அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் ஆகிய இடங்கள் ‘கிராம சபை’ பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது.
வேளாண் மக்கள் வாழ்ந்த ஊர்கள் ‘ஊர்ச்சபை’ என வழங்கப்பட்டிருக்கிறது. கோயில் மண்டபங்கள், பொது இடங்கள், குளக்கரை, மரத்தடிகளிலேயே இத்தேர்தலும், கிராம சபை கூட்டங்களும் நடந்தன. இப்படி தமிழகத்தில் குடவோலை முறை தேர்தல் பல்லாண்டுகள் தொடர்ந்திருக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சியில் ஒரு குடையின் கீழ் இந்தியா கொண்டுவரப்பட்டது. மக்களிடம் சுதந்திர உணர்வு மேலோங்கியதால், ஆட்சிப்பொறுப்பில் இந்தியர்களுக்கு பங்களிப்புத் தரும் கட்டாயம் ஆங்கில அரசுக்கு வந்தது. இந்திய கவுன்சில் சட்டத்தை 1861-ல் நிறைவேற்றி, சென்னை கவுன்சில் உருவாக்கப்பட்டது. இச்சட்டம் 1892-ல் மாற்றியமைக்கப்பட்டு, சென்னை (சட்டமன்றம்) கவுன்சிலுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை 1909-ல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1919-ல் சென்னை கவுன்சிலுக்கு 98 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இங்கும் சொத்து இருப்பவர்களுக்கே ஓட்டளிக்கும், தேர்தலில் நிற்கும் உரிமை தரப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர் ஆட்சியில் இப்படி பல தேர்தல்கள் நடந்தன. இந்தியா 1947-ல் சுதந்திரமடைந்து, அரசியல் சாசனம் உருவானது. அதன் பின் இந்திய நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு 1952-ல் முதல் தேர்தல் நடந்தது. முதலில் 21 வயது நிரம்பியவருக்கே ஓட்டுரிமை என்றிருந்தது, தற்போது 18 வயது நிரம்பியவர்களும் இந்த உரிமை பெறுகின்றனர்.

முதல் தேர்தல் 1952-ல் நடந்தபோது, ஒவ்வொரு வேட்பாளருகும் தனித்தனி ஓட்டுப்பெட்டி வெவ்வேறு வண்ணகளில் வைக்கப்பட்டன. வாக்காளரிடம் தரும் ஓட்டுச் சீட்டை விரும்பிய வேட்பாளருக்கான வண்ணப்பெட்டியில் போட்டால் போதும். பின்னர் வாக்காளரிடம் தரும் ஓட்டுச்சீட்டில் வேட்பாளர் பெயர்கள், சின்னங்களில் விரும்பும் சின்னத்தை முத்திரையிட்டு, வாக்குச்சாவடியில் உள்ள ஒரு பெட்டியில் மட்டும் போட்டால் போதும். வாக்காளர் இடதுகை ஆட்காட்டி விரலில் அழியாத மை இடும் வழக்கம் வந்தது. பின்னர் மின்னணு வாக்கு எந்திரங்கள் வந்தன.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் கீழ் தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விருப்பம் இல்லையெனில் ‘நோட்டோ’ புதிய முறை மூலம் ஓட்டைப் பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது.
தேர்தல் ஆணையமானது இந்த ஜனநாயகத் திருவிழாவை நடத்தி, தமிழகத்தை ஆள்வதற்கான புதிய அரசு அமைய வழிசெய்கிறது.
அன்றைய குடவோலை முறை தேர்தலில் நிற்க 35 வயது முதல் 70 வயதிற்குள் உள்ள ஆண்களுக்கே அனுமதியுண்டு. குறைந்தது கால் வேலி நிலம், சொந்த வீடு வேண்டும். வேதப்படிப்பில் சிறந்தவருக்கு இதில் பாதி நிலம் போதும். ஒழுக்கமற்ற, சரிவர கணக்குக் காட்டாதவர் பெயரை குடத்தில் இடம்பெறமாட்டார்கள். உறுப்பினர்கள் ஒழுக்கமிக்கவராக, செயலாற்றுபவராக இருக்கவேண்டும். குற்றம் புரிந்து கழுதையில் ஏற்றப்பட்டோ, பிற தண்டனை பெற்றவரோ தகுதியற்றவர்கள். கோயில் மண்டபங்கள், பொது இடங்களில் இக்கூட்டங்கள் நடந்தன. அக்காலத்தில் தமிழகத்தில் உச்சத்திலிருந்த இந்த குடவோலை தேர்தல் முறை பின்னாளில் கைவிட்டுப் போனது. எனினும் இன்றைய தேர்தல் நிர்வாக முறைக்கு வித்திட்டது அன்றைய தமிழர்களின் குடவோலை முறைதான்.
இன்றைக்கு அமைச்சரவை இருப்பதைப் போல் குடவோலை முறையில் தேர்வாகும் கிராமசபையில் அன்று பல வாரியங்கள் இருந்தன. வயது முதிர்ந்தவர்கள் கொண்ட ஆண்டு வாரியம், ஆலயங்கள், மடங்கள் நிர்வகிக்க சம்சத்வர வாரியம், நீர்நிலை பராமரிப்பு, நீர் விநியோகத்திற்கு ஏரி வாரியம், தோட்டம், வேளாண்மை கண்காணிப்பு, நில அளவு காண, நிலத்தகராறு தீர்க்க தோட்ட வாரியம் உள்பட ஒவ்வொரு பணிக்கும் என கழனி, கலிங்கு, பொன், கணக்கு, பஞ்ச, தடிவழி, குடும்பம் என பல வாரியங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. பழந்தமிழர்களின் இந்த நிர்வாக முறை இன்றும் வைக்கிறது.
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
16.02.2021

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...