Friday, February 12, 2021

#அ_சீனிவாசராகவன்


தமிழ்க்கவிதைக்காக முதன் முதலாக சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் அறிஞர் #அ_சீனிவாசராகவன்
———————————————————-
அசீரா என அழைக்கப்பட்ட அ. சீனிவாசராகவன் ( அக்டோபர் 23 1905 - ஜனவரி 5 1975) பன்முகத்தன்மை கொண்ட தமிழ் அறிஞர். அசீரா அவர்களின் நினைவு தினம் இன்று.
தமிழைக் காத்த பேராசான்.
தனித்த சிந்தனைச் செம்மலவர்.
அமுதத் தமிழை ஆங்கிலத்தில்
அளித்த மொழிபெயர்ப்பாளனவர்.
இவர் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்ற ஆங்கிலப் பேராசிரியராகவும் விளங்கினார். சிறந்த தமிழ்க் கவிஞர், பேச்சாளர், ஆய்வாளர், இலக்கியவாதி, மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டிருந்தார். சாகித்ய அகாதமி விருது முதன் முதலாக தமிழ்க்கவிதைக்காக வழங்கப்பட்டது அ. சீ. ராவின் கவிதைக்குத்தான். ' நாணல்’ என்பது அவரது புனைபெயர். இவர் தன் பெயரை அ.சீனிவாசராகவன் என்றே எழுதிவந்தார்.
சீனிவாசராகவன் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கண்டியூரில் பிறந்தார். அவரது தந்தை அண்ணாதுரை ஐயங்கார். தாயார் இரங்கநாயகி அம்மாள். அவருக்கு ஒரு சகோதரர், சகோதரிகள் இருவர். மனைவியின் பெயர்: இராஜம் அம்மையார்.
தனது பள்ளிப் படிப்பை நாகப்பட்டினத்திலும், கல்லூரிப் படிப்பை திருச்சி புனித ஜோசப் கல்லூரியிலும் முடித்தார். சிறிது காலம் அதே கல்லூரியிலும், பின்னர் பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியிலும் அதன் பிறகு நெல்லை இந்துக் கல்லூரியில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றினார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றினார். பிறகு 1951 ஏ.பி.சி. வீரபாகு தொடங்கிய தூத்துக்குடி வ. உ .சி கல்லூரியின் முதல்வராக 1969 வரை பணியாற்றினார். வ.உ.சிக் கல்லூரியில் முதல்வர் ஆனாலும் மேல் வகுப்பு மாணவர்களுக்க ஷேக்ஸ்பியர் வகுப்பெடுப்பார். ஏற்ற் இறக்கங்களோடு அவர் பேசிய அந்தோணியின் உரை என் காதுகளில் இன்னும் இருக்கிறது
மிகச்சிறந்த தமிழ் இலக்கியப் பத்திரிகை என்று அந்நாளில் கருதப்பட்ட ’சிந்தனை’ மாத இதழின் ஆசிரியராக இருந்து 1947 முதல் 1949 வரை நடத்தினார். இராஜாஜி, பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பிஸ்ரீ, கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, ந. பிச்சமூர்த்தி, நீதிபதி மகாராஜன், பெ. ந. அப்புசாமி எனப்பல அறிஞர்கள் அந்தப்பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். அதில் பேராசிரியர் பல இலக்கியத் திறனாய்வுகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் எழுதியிருக்கிறார். அதே சமயம் திரிவேணி என்னும் ஆங்கிலப் பத்திரிகைக்கு உதவியாசிரியாகவும் இருந்தார்.

கம்பனிலும் பாரதியிலும் தோய்ந்த பேராசிரியர் மிகச்சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர். காரைக்குடியில் நடைபெறும் கம்பன் விழாவில் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் கலந்து ”கொள்ளாத ஆண்டே இல்லை. பேராசியர் பட்டிமண்டபச் சொற்பொழிவாளராகவும், நடுவராகவும் கவியரங்கத் தலைவராகவும் ஆற்றிய சொற்பொழிவுகள் இன்றும் நினைவு கூரப்படுகின்றன. கல்கத்தா, பம்பாய், டெல்லி என இந்தியா முழுவதும் அவர் பல இலக்கியச் சங்கங்களில் சொற்பொழிவாற்றியிருக்கிறார். அவருக்கிருந்த அலாதியான வெண்கலக்குரல் அவரது சொற்பொழிவுகளுக்கு மெருகூட்டியது.
பல ஆண்டுகள் வானொலியில் மார்கழி மாதம் முப்பது நாளும் அவர் ஆற்றிய திருப்பாவை, திருவெம்பாவை விளக்கங்கள் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டன. தமிழில் வானொலி நாடகங்களுக்கு வித்திட்டவர்களில் பேராசிரியர் முக்கியமானவர். அவருடைய பல வானொலி நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. அவர் உமர்கய்யாம் பாடல்கள், காளிதாசனின் மேக சந்தேசம், ஆதிசங்கரரின் மநீஷா பஞ்சகம், பஜகோவிந்தம் ஆகியவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். கம்பனின் பல பாடல்களை ”Leaves from kamban" பெயரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.
பாரதியின் பாடல்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கும் இவர் இராஜாஜி போன்ற அறிஞர்கள் மொழியாக்கம் செய்த பாரதி பாடல்களையும் தொகுத்துக் கல்கத்தா தமிழ்ச்சங்கம் சார்பாக ” voice of a poet" என்னும் பெயரில் வெளியிட்டிருக்கிறார்.
நாணல் என்னும் புனை பெயரில் இவர் எழுதிய வெள்ளைப்பறவை என்னும் கவிதை நூலுக்கு 1968ல் சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது. தமிழ்க் கவிதைக்கு அளிக்கப்பட்ட முதல் சாகித்ய அகாதமி பரிசு அதுதான்.
கல்கி, அமுதசுரபி கலைமகள் போன்ற பத்திரிகைகளில் நிறைய எழுதியிருக்கிறார். கல்கி பத்திரிகையில் அவர் எழுதிய இலக்கியச் செல்வம் என்னும் தொடர், குருதேவரின் குரல் என்னும் தொடர் இரண்டும் பெரும் வரவேற்பைப் பெற்றன. மாகாகவி தாகூர் பாடல்களை மேக்மில்லன் நிறுவனத்திற்காகக் கவியரசர் கண்ட கவிதை என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார். தாருதத்தின் ஆங்கிலக் கவிதைகள், வால்ட் விட்மனின் லீவ்ஸ் ஆஃப் கிராஸ் என்னும் புத்தகத்திலிருந்து சில கவிதைகள், டென்னிஸன், ஃபிரான்ஸிஸ் தாம்ஸன், இராபர்ட் பிரௌனிங் ஆகியோரின் கவிதைகள் சிலவற்றையும் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
1954 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த அகில இந்திய மொழிகள் மாநாட்டில் பிரதமர் நேரு தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் கணியன் பூங்குன்றனாரின் பாடலைச் சொல்லி இவர் பேசியதை பாரதப் பிரதமர் நேருஜி விரும்பி தனது அடுத்த நிகழ்ச்சியை இரத்து செய்யச் சொல்லி மேலும் பேசச்சொல்லிக் கேட்டார்.
இசை உலகில் டி.ஆர்.எஸ் என வழங்கப்படும் சுப்பிரமணியம் இவரது மாணவர். ஜஸ்டிஸ் மகராஜன், தமிழகச் சட்டசபை முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன், சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் எஸ் கந்தசாமி(துறைவன்), எழுத்தாளர்கள் சுந்தா, மீ.ப சோமு, கவிமாமணி இலந்தை சு இராமசாமி , கவிஞர் தொ.மு. சி. இரகுநாதன் ஆகியோர் இவருடைய மாணவர்களில் சிலர். இரசிகமணி டி.கே.சி நடத்திய வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பில் பங்கேற்றிருக்கிறார்.
இவர் எழுதியுள்ள நூல்கள்:
மேல்காற்று
இலக்கிய மலர்கள்
புது மெருகு
ஒரு நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை
வெள்ளைப்பறவை
காவிய அரங்கில்.
உதய கன்னி(நாடகம்)
மனப்பேய்(நாடகம்)
கவியரசர் கண்ட கவிதை
குருதேவரின் குரல்
நம்மாழ்வார்
தாருதத் பாடல்கள்(மொழியாக்கம்)
அவன் அமரன்(நாடகம்)
எல்லையிலே(நாடகம்)
விஸ்வரூபம்
இவரது நூற்றாண்டு விழாச் சமயத்தில் இவரது எழுத்துகள் அனைத்தும் அ.சீ.ரா எழுத்துகள் என்னும் தலைப்பில் ஏழு தொகுதிகளாக அல்லயன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
இவர் 1974ம் வருட இறுதியில் சாகித்ய அகாதமிக்காக நம்மாழ்வார் பற்றி ஒரு நூல் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் நம்மாழ்வாரின் பாசுரங்கள் பல ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. நம்மாழ்வாரை எழுதிய கை இனி வேறு எதையும் எழுதாது என்றார். அவர் சொன்னாற்போலவே வேறு எதுவும் எழுதாமல் 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் நாள் காலமானர்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11.02.2021

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...