Friday, February 12, 2021

#இந்திய_அரசின்_பார்வைக்கு...... #சொல்லவேண்டிய_கடமை


———————————————————-
இலங்கையில் கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு ஜப்பானுக்கும் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியும் அதை குப்பைத் தொட்டியில் இலங்கை அரசு போட்டுவிட்டது. இந்தியாவை எளிதாக நினைத்து கிழக்கு முனையத்தை ஒப்பந்தத்தின்படி வழங்க மறுத்துள்ளது.
சீனாவின் தூண்டுதலின் படி 400 மில்லியன் டாலர் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க கால அவகாசம் இருந்தும் இந்தியாவிடம் இலங்கை கடனை திருப்பிக்கொடுத்தற்கு காரண காரியங்கள் உள்ளன.
அதற்கு அடுத்த நாள் சீனாவிற்கு காற்றாலை அமைக்க கச்சத்தீவு அருகே மூன்று தீவுகளில் மின் உற்பத்திக்கு இலங்கை தாராளமாக அனுமதி வழங்கியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 50 கிமீ தூரத்தில் சீனாவின் ஆதிக்கம் இதன் மூலம் இருக்கும். இந்தியாவோடு ஒப்பந்தம் செய்த சம்பூரில் நிலக்கரி மூலம் மின்சாரம் திட்டத்திற்கும் இலங்கை அரசு சரியான ஒத்துழைப்பு தரவில்லை. மதுரங்கேணியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் கிடப்பில் உள்ளது.
கடந்த இண்டு நாட்களாக ஒரு முக்கியப் பிரச்சினை யாழ்பாணத்தில், இந்திய அரசால் ரூபாய் 100 கோடி மதிப்பில் கட்டப்பட்ட யாழ்பாணம் கலாச்சார மையத்தை சிங்கள அரசு இலங்கை படையிடம் ஒப்படைத்துள்ளது, இது என்ன நியாயம். கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தவேண்டிய இந்த அரங்கத்தில் சிங்கள அரசு எடுத்துக்கொண்டு இருப்பதை இந்தியா பாராமல் இருப்பது நல்லதல்ல.
இந்தியாவின் பங்களிப்புகளையும் உதவிகளையும் பெற்று இலங்கையில் பலத்திட்டங்கள்நடைமுறைப்படுத்தப்பட்டன, இவையாவும் இலங்கையைப் பொருத்தவரை நன்றியற்ற காரியங்கள் தான் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
அந்தத் திட்டங்கள் வருமாறு,
1. யாழ்பாணம் பலாலி விமான நிலையம் (தற்போது மூடப்படும் நிலை எனத்தகவல்)
2. காங்கேசன் துறையில் தாது மண் மற்றும் சிமெண்ட்ஆலை திட்டம்.
3. கொழும்பு யாழ்பாணம் இரயில் பாதையை சீர் அமைத்து தந்தது.
4. வவுனியாவில் புது பெரும் மருத்துவமனை.
5. சம்பூர் மின் உற்பத்தி திட்டம்.
6. இந்திய இலங்கை சுற்றுலாத் திட்டத்தை விரிவுபடுத்துவது
7. சூரிய வெப்பத்தைக்கொண்டு இந்தியா உதவியால் மின் சக்தி ஒப்பந்தம் செய்வது.
8. இலங்கையில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் தொழில் பயிற்சியும் இந்தியா அளிப்பது
9. கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையம் இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கை
10.எல்.என்.ஜி திரவ, இயற்கை எரிவாயுத் திட்டம்
11.ஈழத்தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்தல்
12.நகர்புறத்தில் வீதிகளைச் சீர்படுத்தி தருதல்
13.விவசாய வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி, இலங்கைத் தமிழர்களுக்கு விவசாயத்திற்கு டிராக்டர் வழங்குதல்
14.ஈழத் தமிழ் பிள்ளைகளுக்கு பாடசாலை செல்ல சைக்கிள் வழங்கல்
15.திரிகோணமலை துறைமுகத்தளம் மற்றும் எண்ணெய் உற்பத்தி தொழில் ரீதியான ஒப்பந்தம்
16.இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது உள்ள சிக்கல்கள். இந்தப்பயிற்சி யாருக்காக, இங்கிலாந்தில் சுமார் இரண்டு லட்சம் இராணுவ வீர்ர்கள் தான் இருக்கிறார்கள், இலங்கையில் சுமார் 3 லட்சம் இராணுவ வீரர்கள் இருக்கிறார்கள், இது எதற்கு, இந்தியர்களை அழிப்பதற்காகவா..? என்று இந்தியா உணரவேண்டும்.
17. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் 400 கோடி மதிப்பிலானா கட்டுமான பணிகள் ஒப்பந்தம்.
18.பெட்ரோல் எண்ணெய் கிணறுகள் குறித்தான ஒப்பந்தங்கள்.
19.இந்திய இரயில் மற்றும் பேருந்துகள் விற்பனை ஒப்பந்தங்கள்.
என சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி இலங்கைக்கு பலவகைகளில் இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இவற்றில் பலவற்றை நிறைவேற்ற முடியாமல் இலங்கை அரசு சண்டித்தனமும் செய்கிறது.
இலங்கையில் இந்துக்கள் வணங்கும் கோவில்கள் 100-க்கும் மேலாக அழிக்கப்பட்டதை ஏற்கனவே பட்டியலிட்டு இருந்தேன். இலங்கையில் அகழாராய்ச்சிப் பணிகள் நடக்கின்றன. அது யாவும் சிங்கள கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக செயற்கையான தகவல்களை கோத்தபயவும், ராஜபக்சேவும் செய்துவருகின்றனர். வடக்கு கிழக்கு மாகாணம் மட்டுமல்ல பல இடங்களில் சைவ அடையாளங்களும் தோண்டும் போது கிடைத்துள்ளன. இதையெல்லாம் அழிக்கப்படவேண்டும் மறைக்கப்படவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு சிங்கள அரசு செய்துகொண்டு வருகிறது.

அகழாராய்ச்சி தகவல்கள் வருமாறு:
ஈழபூமி தமிழர் சிவபூமி இதவிட இனியொரு சான்றா
குருந்தூர் மலையில் தோண்ட தோண்ட பல்லவர் காலத்து சிவலிங்கம், தமிழர் புராதன பொருட்கள் கண்டுபிடிப்பு! தொல்லியல் அகழ்வில் பல்லவர் காலத்து தாராசிவன் கண்டுபிடிப்பு குருந்தூர் மலையில் லிங்கவழிபாடு இடம்பெற்றதை உறுதிப்படுத்தும் முகமாக லிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மண் எங்களின் சொந்த மண்!
பொத்துவில் முதல் பொலிகண்டிவரை கிண்டுங்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முந்திய தமிழர் சார்ந்த தொல்லியல் சான்றுகள் கிடைக்கும். அப்படியே பொலநறுவை, அநுராதபுரம், நீர்கொழும்பு, சிலாபம், புத்தளத்திலும் கிண்டுங்கள் இலங்கை மண்ணின் சொந்தகாரர் யாரென்று அப்போது தெரியும்!
இதையும் இந்திய அரசு பார்த்துக்கொண்டு இருந்தால் சரியாக இருக்குமா..? இலங்கையில் உள்ள தமிழர்கள் இந்தியாவை தொப்புள் கொடி உறவு என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இதை இந்திய அரசு கவனித்திற்கு கொண்டு சென்றும் பாரா முகமாக இருக்கிறது. இதனால் இந்தியாவின் ஆளுமை எதிர்காலத்தில் கேள்விக்குறியாக அமைந்துவிடக்கூடாது. இதை இந்திய அரசு தட்டிக்கேட்க வேண்டும் என்பது ஈழ மக்களின் கோரிக்கை ஆகும்.
சமீபத்தில் இலங்கையில் பொத்துவிலிருந்து பொலிகண்டி வரை தமிழகர்களின் எழுச்சிப் பயணம் உலகத்தின் கவனத்தைத் திருப்பி உள்ளது, இந்த நேரத்தைப் பயன்படுத்தி இந்திய அரசு இலங்கைப் பிரச்சினையை கையிலெடுத்து, இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் எடுத்த நடவடிக்கைகளின் படி எடுக்கவேண்டும். இது எங்களைப் போன்ற ஈழ செயல்பாட்டாளர்களின் குரலாகும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12.02.2021

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...