Tuesday, February 16, 2021

#அன்றும்_இன்றும்_வேல்_அரசியல்


———————————————————
சமீபகாலமாக முருக பெருமானின் அடையாளம் வேல் அதிகமாக சிலேகிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வர்களின் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஒரு முறை சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக கம்யூனிஸ்டுகள் இருந்தபோது,
வெற்றி வடிவேலன்-அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ!-பகையே!
துள்ளி வருகுது வேல்.
மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப ஓமந்தூரார் சொல்லியது,
துள்ளி வருகுது வேல்! பகையே விலகி நில் என்று ஓமந்தூரர் கூறியதுண்டு.
அதே காலக்கட்டத்தில் ஹைதராபாத் நிஜாம் இந்தியாவுடன் இணைய மறுத்து சண்டித்தனம் செய்துகொண்டிருந்தார். உள்துறை அமைச்சர் பட்டேல் இதற்கான கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்க்கு மிக உதவியவர் சென்னை ராஜ்தானியின் பிரதமர் ஓமதூரார் .அன்றைக்கு முதல்வரை பிரதமர் அல்லது பிரிமீயர் என்று அழைப்பார்கள், பிற்காலத்தில் முதல்வர் என்றானது.
பிரதமர் பண்டித நேரு நிஜாமிடம் பேசி பயனில்லாமல் பட்டேலிடம் இப்பிரச்சினையைச் சொன்னார். சர்தார் பட்டேலிடம், ‘நான் சென்னை ராஜ்தானியின் பிரதமர் நான் அஹிம்சாவாதி, யாருக்கும் கேடு நினைக்கமாட்டேன், ஆனால் என்னுடைய காவல்துறை படையை அனுப்பி ஹைதராபாத்தில் நிஜாமை நியாயமாக பனியவைக்கிறேன். என்னிடம் விட்டுவிடுங்கள்.ஜவகருக்கு இது புரியவில்லை. ’ என ஓமதூரார் கடுமையாக கூறினார் அந்த காலக்கட்டத்திலும் ‘துள்ளி வருகுது வேல்! பகையே சுற்றி நில்லாதே போ!’ ஓமதூரார் சாவல் இட்டார் ஓமதூரார். ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைய வைக்க உதவிய உத்தமர் நேர்மையின் இலக்கணம் ராமசாமி ரெட்டியார். இன்றைக்குள்ள இளைஞகர்களுக்கு இந்த வரலாறுகள் தெரியாது.இதுதான் இன்றைக்குள்ள மானங்கெட்ட அரசியல்.
அடுத்து வருகின்றேன்,
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நன்றாக நினைவுகின்றது. திருச்செந்தூர் செந்திலாண்டவர் கையில் இருந்த வேல் காணாமல் போய்விட்டது. கோவில் செயல் அலுவலர் சுப்ரமணியப் பிள்ளை மர்மமான முறையில் 26.11.1980-ல் மரணம் அடைந்தார். அப்போது ஆர்.எம்.வீரப்பன் அறநிலைத்துறை அமைச்சராக எம்ஜிஆர் அமைச்சரவையில் இருந்தார்.
இதை கேள்விப்பட்டவுடன் நெடுமாறனுடன் நானும் உடன் எம்.கே.டி.சுப்ரமணியம் (இவரையும் சொல்லிவிடுகிறேன். இவர் யாரென்றால் பேரறிஞர் அண்ணா திமுகவை ராபிட்சன் பார்க்கில் துவங்கிய போது அந்த அழைப்பிதழில் ஈ.வி.கே.சம்பத், நாவலர் , என்ற வரிசையில் இவர் பெயர் இடம்பெற்றது. இவர் பெரியாரை வா, போ என்று உரிமையோடு அழைப்பார். இவர் அண்ணாவையும் அப்படித்தான் அழைப்பார்.)திருச்செந்தூர் 29-11-1980இல் சென்றோம்.
எப்படி கோவிலில் இருந்த வேல் காணாமல் போனது மற்றும் சுப்ரமணியப் பிள்ளை மர்மமான மரணம் குறித்தும் உண்மைகளை அறிய அதற்கான நீதிவிசாரணை வேண்டும் என்று கேட்டோம்.
அப்போது முதல்வர் எம்ஜிஆர் ஓய்வுப் பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஜே.ஆர்.பால் தலைமையில் இது குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க 19-12-1980 அன்று உத்தரவிட்டார். பால் கமிஷன் அன்று நீதி விசாரணை சென்னை அசோக் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகம் இரண்டவது தளத்தில் நடைப்பெற்றது. திருநெல்வேலியில் ஆறு முறை இதன் அமர்வுகள் நடந்தன.அன்றைக்கு தலைமை செயலாளர் வி.கார்த்திகேயன் முன்னணியில் நடந்தது.

அந்த நீதி விசாரணையில் பழ.நெடுமாறன், திருச்செந்தூர் நாடளுமன்ற உறுப்பினர் கே.டி.கோசல்ராம் போன்றவர்கள் எல்லாம் ஆஜராகி பிரமான வாக்குமூலங்கள் வழங்கி சாட்சியங்கள் வழங்கினர். பால் கமிஷனில் ஆஜராகவும், மனுக்களை தயாரிக்கவும் நெடுமாறன், கே.டி.கோசல்ராமுக்கு நான் உதவியாக இருந்தேன்.
பால் நீதி விசாரணை அறுக்கையை அன்றைக்கு முதல்வர் எம்ஜிஆர் சட்டமன்றத்தில் வைக்கும் முன்னரே கலைஞர் பத்திரிக்கையாளர்களிடம் வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை அப்போது ஏற்படித்தது.இதனால் கலைஞர் மீதும் உதவியாளர் சண்முக நாதன் மீதும் வழக்கும் அதிமுக ஆட்சியில் போட்டப்பட்டது.
அதை அடுத்து,அந்த காலக்கட்டத்தில் அர்ச்சகர் சுப்ரமணியப் பிள்ளை மர்மச் சாவு, வேல் மாயமானது குறித்து நீதி கேட்டு கலைஞர் தலைமையில் நீண்ட நெடிய நடை பயணமாக மதுரையிலிருந்து திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, குறுக்குச்சாலை, தூத்துக்குடி, ஆறுமுகநேரி திருச்செந்தூர் வரை ஆயிரம் கணக்கானவர்கள் உடன் நடந்தே சென்றார்.
எம்ஜிஆர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வேலை வழங்கியது எல்லாம் அப்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இப்போதும் வேலைப் பயன்படுத்துவது குறித்து அரசியல் களத்தில் பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசியலில் வேல் என்பது, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்து விவாதங்களும் செய்திகளுமாக இன்று வரை தொடர்கின்றன.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
14.02.2021

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...