Wednesday, November 8, 2023

#*வெளிச்சம்இருந்தால்தான் உங்கள் நிழல்கூட உங்களோடு வரும்*.

#*வெளிச்சம்இருந்தால்தான் உங்கள் நிழல்கூட உங்களோடு வரும்*.
—————————————
தேவைக்கான போட்டியே அனைத்து உயிர்களின் ஆதார பண்பாக இருக்கிறது. ஆனால் மனித நிலை என்பது வெறும் போட்டி மட்டுமல்ல .அது சார்புநிலைத் தத்துவங்களோடும் பிற உயிர்களை தான் அல்லாத பிறரையும் மதிக்கும் உயர்ந்த பண்பை லட்சியமாக கொண்டு தான் மனித உயிராக  பரிணமித்தது.

 நிலங்களில் நிலைத்த கூட்டு வாழ்க்கையைத் தொடங்கிய பின்னர்தான் மனித வாழ்க்கையில் வெவ்வேறு குணங்கள் உள்ள வெவ்வேறு பண்புகள் உள்ள மனிதர்கள் தோன்றினார்கள்.

பொதுவாக மக்கள் வழக்கில் சொல்வது போல் ஐந்து விரலும் ஒன்றே போலவா இருக்கிறது அதுபோல ஒவ்வொரு வீட்டிலும்  பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தானே இருக்கிறார்கள். ஹிட்லரும் காரல் மார்க்ஸும் மனிதர்கள்தான் என்றாலும் நாம் இவர்களில் யாரை எப்படிப் புரிந்து கொள்கிறோம்.

போட்டியும் பொறாமையும் தீய குணங்களும் கொண்டு அடுத்தவரை சாய்த்து விட்டால்தான் நாம் அந்த பதவிக்கும்  அதிகாரத்திற்கும் வர முடியும் அடுத்தவரை கெடுத்து பிழைப்பதுதான் திறமை என்று நம்பு அளவிற்கு இந்த பின் நவீனத்துவ காலம் அனைத்து கேடுகளையும் ஒன்றாகிவிட்டது.

நாம் ஜனநாயகம் என்று சொல்கிறோமே இந்த ஜனநாயகத்திற்குள் எவ்வளவு வன்முறையான போக்குகள் அடுத்து கெடுக்கும் குணங்கள் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து தான் பார்க்க வேண்டும்.

இக்காலத்தில் ஜனநாயகத்திற்குள் நுண்பாசிசப் போக்குகள் உருவாகி இருக்கிறது. மக்களால்தான் நாம் ஆட்சிக்கு வந்திருக்கிறோம் என்பதை பதவி ஏற்றபின் காற்றில் பறக்க விடுவது தான் வழக்கமாக இருக்கிறது.

சக போட்டியார்களை அடித்து வீழ்த்திவிட்டு திறனற்றுப் போகச் செய்த பின் தாங்கள் ஜெயித்ததாக மார் தட்டிக் கொள்கிறார்கள்.

குறிப்பாக இன்றைய ஜனநாயகம் மக்களை வலிமை அற்றவர்களாகவே சித்தரிக்கிறது.
வெற்று விளம்பரங்களின் மூலம் பல விதமான இலவசங்களை அளிப்பதன் மூலமாக அரசுகள் மக்களை மௌனம் ஆக்கி உண்மையில் நாட்டு நலத் திட்டங்கள் மீது கேள்வி எழுப்ப திராணியற்றவர்களாக இருக்கச் செய்கிறது.

அதன் அடியில் ஆள்வோரின் குடும்பம் அதைச் சுற்றியுள்ள உறவுகள் யாவும் பன் மடங்கு பணபலம் பெற்றவர்களாக மாறும்போது திறமை உள்ளவர்கள் திறமை அற்றவர்கள் என்பதை பிரிக்கும் சூழ்ச்சி தெரிந்து விடுகிறது.

உண்மையில் அரச பதவி ஏற்பவர்கள் நிர்வாக திறன் உள்ளவர்களா மேலும் மக்கள் நிர்வாகத்தின் மீது தன் சொந்த பற்றுக்களை ஒழித்து அவர்களின் வளர்ச்சிக்கு எல்லா துறைகளிலும் ஆன முன்னேற்றத்திற்கு  பாதுகாப்பாளர்களாய் இருக்கிறார்களா என்பது தான் அரசியலில் அவசியத்தேவை என்பதைத்தான் நாம் மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறோம். 
•••
பெரிதினும் பெரிது கேள்னு சொன்னான் பாரதி. ஆனா பெருசா எதுவும் கேக்கத் தெரியாது எனக்கு. கேட்டதும் இல்ல. அந்த நிமிஷம்... ஒசத்தின்னு நினைக்கிறவன் நான். எதிர்ல இருக்கற மனிதர்களை சந்தோஷப்படுத்திடணும்னு ஆசைப்படுறவன் நான்.

வாழ்க்கையில் நீ பலதடவை கஷ்டப்பட்டு இருப்பாய் அல்லது காயப்பட்டு இருப்பாய்.

அதனால் உன் இதயம் உடைந்து இருக்கலாம் சில வேளைகளில் நீ கண்ணீர் வடித்தும் இருக்கலாம்.

இவையெல்லாம் உன் வாழ்க்கையில் நீ கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட துயரங்கள் மட்டும் தான்எதுவும் தொடர்ந்து நிகழும் என்று நினைக்காதே 

நினைத்தால் உன்னால் நகரவே முடியாது.

பெரும்பாலானவர்களின் வாழ்க்கை திசை மாறுவதற்கான காரணம் கூட இருப்பவர்கள் முதுகில் குத்துவதால் தான்.

நெஞ்சை நிமிர்த்தி நியாயம் பேச தெரிந்தவர்களுக்கு ஏனோ தவறை உணர்ந்து தலை குனிய தெரிவதில்லை 

கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியவில்லையே என்று வருந்துபவர்களை  விட கொடுக்கப்பட்டது பொய்யான வாக்குதான் என்று நினைத்து  திருப்தியடைவார்கள் இங்கு அதிகம் 

மற்றவர்கள் உயிர் போனாலும் பரவாயில்லை தாங்கள் நிம்மதியாக சுயநலமாக வாழ்ந்தால் போதும் என பலர் இருக்கிறார்கள் 

மனதை காயப்படுத்த மாட்டார்கள் என்றுதான் இதயத்தில் வைத்து நேசிக்கிறோம்.

தேவைப்பட்டால் சந்தர்ப்பம் அமைந்தால் இவர்கள் உயிரை கூட எடுக்க தயங்க மாட்டார்கள்.

இருளைக் கண்டு பின்வாங்காமல் எப்போதுமே வாழ்க்கையில் முன்னோக்கி நகருங்கள்.

வெளிச்சம் இருந்தால் மட்டும் தான் உங்கள் நிழல் கூட உங்களோடு சேர்ந்து வரும்.

இன்னும் வாழணும்னு உத்வேகம் கொடுக்கிற நேசிக்கிறவங்க இருக்கற வரை, சாகறதாவது போறதாவது. இன்னும் ஜெயிக்கறதுக்கு எவ்ளவோ இருக்கு.
ஜெயிச்சிட்டு சாவோம். இதனால் ஆகாதெனில் இப்போதல்ல எப்போதும்
எதனாலும் ஆகாதென்பதே
முடிவு...! சத்யமேவ ஜயதே. சத்தியம்தான் ஜெயிக்கும்.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
8-11-2023


No comments:

Post a Comment