Friday, November 17, 2023

#*எமது பகுதி கரிசல்மண் சொலவடைகள் சில*…. (பழமொழிகள்) (#கோவில்பட்டி, #விளாத்திகுளம், #சாத்தூர்,#சங்கரன்கோவில் #ராஜபளையம் பகுதிகளில் கேட்டது….)



—————————————
 
பேயாத்தாள் ஆனாலும் பெத்த ஆத்தாள் பெத்த ஆத்தாதான்

களையே புடுங்கி போட்டாச்சு புல்லுக்கு போய் பயந்துக்கிட்டு...




 எள்ளு எண்ணெய்க்குக் காயுது
எலிப் புளுக்கையும் ஒண்ணாக் காயுது
 
ஆடு கிடப்பது ஆவுடையாபுரம்
புழுக்கை போடுவது பொம்மையாபுரம்
 
வடக்குப் பார்த்த மாளிகையை விட
தெற்கு பார்த்த ஓலை வீடு மேல்
 
வாயிலே சர்க்கரை
கையிலே கருணைக்கிழங்கு
 
 
தாயைத் தண்ணிக்கரையிலே பார்த்தால்
மகளை வீட்டில் பார்க்க வேண்டாம்
 
மானூறு குளத்திற்கு
நானூறு மடை
 
தாசனை அடித்து ஆண்டிக்குக்
கொடுத்தது போல
 
கொடுத்தாலும் கொடுக்க விட மாட்டான் கொச்சுராமு
வாங்கினாலும் வாங்க விட மாட்டான் வல்ராமு
 
வாழ்ந்து கெட்டவன் வடக்கே போ
கெட்டு நொந்தவன் கிழக்கே போ
 
சாத்திரம் பொய்யானால்
சமனத்தைப் பார்
 
நன்செயைப் பார்த்துக் கெட்டான்
புன்செயைப் பாராமல் கெட்டான்
கார்த்திகைபிறை கண்டகாராளா
கை நாற்றைப்போட்டுக் கரை ஏறு
 
கரிவேப்பிலை வித்தாலும்
கிரகலட்சணம் வேணும்
 
ஆலமரம் அரசமரம் அரசு
ஆண்டார் வைத்த மரம்
புங்க மரம் புளிய மரம்,
புண்ணியவான் வச்ச மரம்
 
ஊருக்கு உபதேசம்
 
வீட்டிற்குள் திருடிய கோழி
 
மோர்க்கடன் முகட்டை முட்டும்
 
மூக்குப் போன கழுதை
தூவானத்துக்கு அஞ்சாது
 
 
நடு வடக்கே மின்னினால்
நாளையே மழை வரும்
 
காலை உப்பாங் காத்து
மாலைத் தென்றல்
 
மலடி அறிவாளா
மத்தவ பிள்ளையை
 
கயத்தார்த்துக் கடல் காற்று
கடன் வாங்க அடிச்சுச்சாம்
 
சித்திரை உழ பத்தர மாத்துத் தங்கம்
 
வலிய வந்தவள் கிழவி
 
காணிக் காக்கா கரையிலே நிக்கிது
வந்தட்டிக் காக்கா வரப்பிலே நிக்கிது
 
வந்தவன் வலுத்தான்
இருந்தவன் இளைச்சான்
பாரிக்கு மிஞ்சின கொடையும் இல்லை
மாரிக்கு மிஞ்சின செழிப்பும் இல்லை
 
இரவல் கொடுத்தவள்
இருந்து அழவிட மாட்டாள்
 
பகிர்ந்து தின்னால் பசி ஆறும்
 
புரட்டாசி மாதத்தில் வரட்டு ஆடு
புழுக்கை போடாது
 
அரிசி ஆழாக்கு ஆனாலும்
அடுப்பு கட்டி மூன்று வேண்டும்
 
வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும்
 
யார் தொட்டா தேர் ஓடும்
சங்கர் பட்டர் தொட்டால் தேரோடும்
 
தொட்டாத் துலங்கும்
தோட்டம் வச்சாக் காய்க்கும்
பாட்டம் நிறைஞ்சா
வாட்டம் இல்லை
 
விரிசோலையைக் கண்டு
குருத்தோலை சிரிச்சுதாம்
 
தொட்டிய பேயி தொட்டாலும் விடாது
 
கொக்கு குறிப்பறியும்
காக்கை டொப்பறியும்
 
ஆளு இருக்க சீரைப் பார்த்து
கிடைக்கு ரெண்டு ஆடு கேட்டதாம் நரி
 
நொண்டிக் குதிரைக்குச் சருக்குண்ணதாம் சாக்கு ஒன்றுதான்
 
ஆடத் தெரியாதவளுக்கு தெருக் கோணலாம்
 
குட்டித்த ஆட்டோட
விடுதலை ஆடும் கத்திச்சாம்
 
பந்திக்கு முந்துவான்
படைக்குப் பிந்துவான்
 
நெல்லுக்குப் புல்
நேரான கம்மபுல்
 
நாய் வித்த காசு குரைக்காது
 
கழுதை கனா கட்டதாம்
கந்தலும் பித்தலும்
 
கசாப்புக் கடைக்காரன்
காருண்ணியம் பேசியது போல
 
தாய்ப் பொன்னிலும்
மாப் பொன் எடுப்பான்
 
ஒழக்குக்குள்
கிழக்கும் மேற்கும்
 
 
இருட்டுக்கு இருளப்பன்
வெளிச்சத்திற்கு வெளியப்பன்
 
இழந்தவனுக்கு எள்ளு
வலுத்தவனுக்கு வாழை
 
வாழை வாழ வைத்தாலும் வைக்கும்
தாழ வைத்தாலும் வைக்கும்
 
கீரை வித்தாலும் கிரகம் வேண்டும்
 
பசுவில் கோழையும் இல்லை
பார்ப்பானில் ஏழையும் இல்லை
 
பேய்க்கு வாக்கப்பட்டா புளிய மரத்தில்
ஏறித்தான் தீர வேண்டும்
 
செக்களவு பொன்னிருந்தாலும்
செதுக்கித் தின்னா இராது
 
 
யோக்கியன் வாரான்
செம்பைத் தூக்கி உள்ளே வை
 
வெந்ததைத் தின்னா
விதி வந்தா சாவான்
 
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை
வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
 
விருந்தும் மருந்தும் மூணு வேளை
 
நாரவாயில் இருந்தாலும்
நச்சு வாயில் இருக்கக் கூடாது
 
மூன்றாவது பெண் பிறந்தால்
முற்றம் எல்லாம் பொன்னாம்
 
தேவதானத்திலே தேரோட்டமாம்
திரும்பிப் பார்த்தால் நாயோட்டமாம்
 
 
கள்ளாட்டுக் கறிக்கு கார் நெல்
பருக்கை வேறா
 
எட்டு மிளகு இருந்தால்
எமன் அண்ட மாட்டான்
 
கிழட்டுக் கூத்தாடி பங்கிற்கு
லாந்துனது போல
 
ஏழையும் கோழையும் எதிர்த்து
மின்னினால் இரவே வருமாம் மழை
 
ஆடிப் பொறை தேடிப் பிடி
 
ஐந்தாறு பெண் பிறந்தால்
ஆண்டியும் போண்டியாவான்
 
சுற்றிக் குடியிருக்கும் சின்ன
பையல் சாவாசம்
 
 
எலிக்கு என்ன வேலை
மண் தோண்டு வேலை
 
சுண்டெலிக்குத் தக்க
கன்னிக் குடம்
 
ஆண்டிக்கும் உண்டு இன உணர்வு
 
பிச்சைச் சோத்திலேயும்
குழைஞ்ச சோறா
 
அப்பனுக்குப் பிள்ளை
தப்பாமல் பிறந்திருக்கு
 
சொர்க்கத்திற்குப் போயும் ராட்டினத்தைக் கையிலே கொண்டுபோன கதை
 
அட்டையைப் பிடித்துக்
கட்டிலில் போட்டாலும் கிடக்காது
 
தவளை தண்ணிக்கு இழுக்கக்
கரட்டாண் வெட்டைக்கு இழுத்துச்சாம்
குருவி உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாம்
 
தலைமுடி இருந்தால் எப்படியும் முடியலாம்
 
ஆளு இருக்கிற சீரைக் கண்டு
ஆவரையும் மலம் வாரிச்சாம்
 
கள்ளன் பெரிசா காப்பான் பெரிசா
 
ஆக்கங் கெட்ட கோவிலுக்கு
அருக்கெட்ட பூசாரி
 
பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் தள்ளமாடினானாம்
 
செவிடி செம்படுத்ததால் என்றால்
கெட்டிக் குடத்தால் நானா மாட்டமெங்க ***
 
வயதிற்கு மூத்தவளைக் கட்டியது போல
 
கணக்கனைப் பகைத்தவன் காணி இழந்தான்
 
கோவில்பட்டிக் கணக்காப் பிள்ளை
இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான்
 
கணக்கன் பெண்டாட்டி இறந்தால்
வருவார் கோடி போவார் கோடி
 
கோடி நிழல் குடியைக் கெடுக்கும்
 
ஆடு தப்ப விட்டவனுக்குச்
செடி எல்லாம் கண்
 
குடிப்பது கூழத்தண்ணி கொப்பிழிப்பது பன்னீரா
 
தனக்கு எளியது சம்பந்தம்
 
உள்ளூர்ப் பச்சலை மருந்துக்கு உதவாது
 
உழுவுத நாளில் ஊர்சுற்றிவிட்டு
அறுக்க நாளில் ஆள்பார்ப்பது போல
 
 
தாய் தவுட்டுக்கு அழுவும்போது
பிள்ளை பாலுக்கு அழுததாம்
 
காலாட்டி வீட்டில் வாலாட்டி தங்காது
 
கொச்சியிலே குருணி வித்தால்
அங்கேயே போவார்கள்
 
மாவைத் தின்னாலும் ஒன்றுதான்
பண்ணியாரத்தைத் தின்னாலும் ஒன்றுதான்
 
யானைக்காரனிடம் சுண்ணாம்பு கேட்டது போல
 
சேத்தூரான் வழக்கு சேரவிடாது
 
விளக்கு மாத்திற்கு குஞ்சரம் எதற்கு
 
ஊர்ப் பணத்தை வெட்டியான் சுமந்தது போல
 
எண்ணைக்குடம் போட்டவனும்
ஆத்தாட அப்பாட
தண்ணீர்க் குடம் போட்டவனும்
ஆத்தாட அப்பாட
 
கால் ஒடிஞ்ச கோழிக்கு
உரல் கட தஞ்சம்
 
மழை பேஞ்ச இடத்திலே பேயும்
ஆடு மேஞ்ச இடத்திலே மேயும்
 
நாம் உள்வழி வந்தால்
இவன் பிறவா வழி வருவான்
(நாம் உள்வாசலில் வந்தால் இவன் புறக்கடை வாசல் வழி வருவான்)
 
மின்னல் ஒரு பக்கம் மின்ன இடி ஒரு பக்கம் விழுந்தது போல
 
ஆடு கொடுத்தவனுக்கு உப்புக் கண்டம்
கொடுக்க வருத்தமா
 
இருக்க இடம் கொடுத்தால்
படுக்க இடம் கேட்பதா
 
தண்டட்டிக்காரி தலையை அசைத்துப் பேசுவா
 
மிச்சத்தைக் கொண்டு மேற்கே போகாதே
 
தட்டான் பறந்தால் தட்டாம மழை வரும்
 
பங்காளி வீடு தீப்பிடிக்கும்போது
காலைக் கட்டி அழுதானாம்
 
தனக்குப் போக தானம்
 
நாசியால் போற சீவனை
கோடாரி கொண்டு வெட்டியது போல
 
பெண்டாட்டிட்ட கோபிச்சுக்கிட்டு
புடக்காளியை வெட்டினானாம்
 
நாய் குரைச்சா விடியுது
 
கரிசல் காட்டுக் கோழிக்கு
நெல் கொத்தத் தெரியாது
ஊர் நாட்டாண்மைக்குத்தால்
கழிதல் கணக்கு
 
அம்மி மிதக்குது ஆல இலை முங்குது
 
தலைக்காவேரி தெரியாதவன் எல்லாம் வியாபாரி
 
ஆத்திநார்மனக்க ஆண்டாங் கோனார் பகையானார்
 
சக்தி சிறிதானாலும் முக்தி பெரியது
 
நல்லவனுக்கு மூன்று பாதை
வம்பனுக்கு ஒரு பாதை
 
பட்டபட்ட பாட்டை எல்லாம்
பானையில் போட்டுவிட்டு
பூம்பாளை நெல்குத்திப் பொங்கல் வைக்கப் போனாளாம்

கிடைக்காதது கிடைச்சுப் போச்சு
கீழத் தெரு நமக்காச்சு
 
ஆறு பெருகினாலும் நாய் நக்கிதான் குடிக்கணும்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-11-2023

 
~~~~~~~~~~~~~~~~~~~

No comments:

Post a Comment