Thursday, November 9, 2023

#*ரசிகமணிடிகேசியின்தோழர் லானாசானா நூற்றாண்டு*



—————————————
1940களில் தமிழ் இலக்கிய உலகில் லானாசானா என்று அழைக்கப்பட்ட ல. சண்முகம்சுந்தரம் அவர்களின் ஒரு நூற்றாண்டு வருடம்  இந்த 2023 ல் கவனம் பெறுகிறது.

ல .சண்முகசுந்தரம் அவர்கள் கோவில்பட்டி அருகில் உள்ள நாச்சியார்புரம் கிராமத்தில் லட்சுமணன் -அருணாச்சல வடிவாம்பாள் தம்பதியருக்கு 1923 ஆம் ஆண்டு வைகாசி விசாகம் அன்று பிறந்தார். ஐந்து வயது வரை திண்ணை பள்ளிக்கூடத்திலும்  பின்னர் இடைச்செவல் நடுநிலைப் பள்ளியிலும் பயின்றார்.

அக்காலத்தில் இவருக்கு இடைச்செவலைச் சேர்ந்த மண்ணின் கதை சொல்லி கி இராஜநாராயணனும்  கு அழகிரிசாமியும் உற்ற நண்பராக இருந்தார்கள்.1942ல் தற்போதய  மதுரைச்செந்தமிழ் கல்லூரி இருக்கும் இடத்தில் அமைந்திருந்த 
மதுரை தமிழ் சங்கத்தில் முறையாக் தமிழ் பயின்று அதில் தேர்ச்சி பெற்று முதன்மை மாணவராக தன்னை வளர்த்தெடுத்துக்கொண்டார்.
அங்குதான் பேராசிரியர் வையாபுரி பிள்ளை அவர்களின் அறிமுகம் அவருக்கு கிடைக்கிறது.
அவரது ஆலோசனையின் பேரில் திருவையாறு  அரசர் கல்லூரியில் பயின்று வித்வான் பட்டமும் பெற்றார். அதன்பின் கழுகுமலை கடையநல்லூர் விருதுநகர் தென்காசி போன்ற பள்ளிகளில் தமிழாசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
ரசிகமணி டி.கே சிவசிதம்பரம் முதலியாருக்கும் 
ல. சண்முகசுந்தரத்திற்கும் இடையே குரு சிஷ்ய உறவு இருந்தது.
பாஸ்கர தொண்டைமான் ஜஸ்டிஸ் மகாராஜன் மீ பா சோமு சுந்தா ஆகியோரைத் தொடர்ந்து ரசிகமணியின் கடைக்குட்டி சீடரானார் ல சண்முகசுந்தரம்.

1948 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் விரிவுரையாளர் பதவிக்கென  ல சண்முக சுந்தரத்திற்கு அனுமதிக்கடிதம் 
வந்தபோது அதை லானா சானா எடுத்துக் கொண்டு போய் ரசிக மணியிடம் காட்ட என்னிடம் இருந்து சண்முகசுந்தரத்தை பிரிக்க வா பார்க்கிறீர்கள் என்று சொல்லி அந்த கடிதத்திற்கு வர முடியாது  என்று சொல்லி  கல்லூரி முதல்வருக்கு தந்தி அடிக்கிறார். அப்படியான நேசம் மிக்க தமிழ் உறவு இருவரிடமும் இருந்தது

1953 இல் திருக்குற்றாலத்தில் கம்பர் கண்ட ராமாயணம் என்ற தலைப்பில் ராஜாஜி தலைமையில் சண்முகசுந்தரம் ஒரு அருமையான உரை நிகழ்த்திய போது அவரது ஆற்றலை அறிந்த ராஜாஜி அது முதல் அவருக்கு நட்பானார்.  ரசிகமணி அவர்கள் சண்முகசுந்தரம் என்று பெயர் சொல்லி அழைத்த போது ராஜாஜி அவரை வித்வான் என்று அடைமொழியிட்டு அழைத்தார் .

ரசிக மணியின் மறைவிற்கு பின் அவருக்கு ஏதாவது ஒரு நினைவு சின்னம் ஏற்படுத்த வேண்டும் என்று அவரது பேரன் தீப நடராஜன்கேட்டுக்கொண்ட போது  மூன்று நிமிடம் மௌனமாக இருந்த ராஜாஜி அவர்கள் நமது வித்வான் லா சண்முகசுந்தரத்தை அழைத்து மூன்று நாட்கள் 10 20 பேரை கூட்டி வைத்து கம்பர் பாடல்களையும் தமிழ் பாடல்களையும் தொடர்ந்து பாட வைக்க வேண்டும் அதுவே ரசிக மணிக்கான நினைவு சின்னம் என்று தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தினார்.

ல ச எழுதிய முதல் நூலே ரசிகமணி டி கே சி . தான் .அதைத்தொடர்ந்து தமிழ் கவி அமுதம், நான் அறிந்த ராஜாஜி, திருமூலர் கண்ட திருக்கோவில், உண்மையின் ஒய்யாரம், தமிழ் கவி இன்பம், கவி கோவில் ஒன்று, அற்புதத்திலும் அற்புதம்,  தெய்வமகாகவி திருமூலர், குற்றால குறவஞ்சி, கலிங்கத்துப்பரணி, அமிர்த கலசம், ஆனந்தக் கூத்து, ரசிகமணி டி கே சி வரலாறு உட்பட சுமார் 27க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழுக்கும் அதன் வளமைக்கும் பெருமை சேர்த்தவர் ல சண்முகசுந்தரம்!

நமது கட்சிக்காரரா ஏதாவது ஒரு நான்கு வரி தமிழில் எழுதி அதை புத்தகமாக கொண்டு வாப்பா என்று சொல்ல அவர்கள் ஏதாவது மாணவர் ஆய்வேட்டை  செப்பனிட்டு  அதில் ஒரு புத்தகத்தையும் போட்டு அரசு நலன்களை அனுபவித்து வருகின்ற காலத்தில்.

 மேற்கண்ட தமிழ் தொண்டர்கள் வாழ்நாள் முழுக்க தமிழ்ப் பணி செய்த வரலாறுகளை காலம் மறைத்து தான் விடுகிறது. மயில் ஆடியது போக வான் கோழிகள் சிறகு விரித்து ஆடும் பொல்லாத காலம் இது.

ல. சண்முகசுந்தரம் அவரிடம் பயின்ற மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.அவர் எழுதிய நூல்கள் பலவற்றின் ஊடாக அவரது நூற்றாண்டை நினைவில் வைத்து  அவரைப் போற்ற வேண்டியது தாய் தமிழுக்கு நாம் செய்யும் சிறப்பு.

#ரசிகமணி_டிகேசியின்_லானாசானா_நூற்றாண்டு

#ல_சண்முகசுந்தரம்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost

No comments:

Post a Comment