Saturday, November 18, 2023

#*இருத்தலியல்*….. #*வாழ்க்கை அந்தந்த நேரத்து நியாயம்... -ஜெயகாந்தன்*

#*இருத்தலியல்*….. 
#*வாழ்க்கை அந்தந்த நேரத்து நியாயம்...
-ஜெயகாந்தன்* 
————————————
பொதுவாக தத்துவத்தின் கவனக் குவிப்பானது தனி நபர்களின் வாழ்வியல் நிலைகள் குறித்தும் மேலும் அவர்களது உணர்ச்சிகள், செயல்கள், பொறுப்புகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றுடனும் தொடர்புடையவை என இருத்தலியல் வாதிகள் கருதினர்.
19ஆம் நூற்றாண்டின் தத்துவவாதி சோரன் கீர்க்கே கார்ட் அவர், இறந்தப் பிறகு கடும் ஆய்வுகளுக்கு உட்பட்ட பின்னர் அவரே இருத்தலியலின் தந்தையென கருதப்படுகிறார்.
 தனி நபரே அவரது சொந்த வாழ்க்கைக்கு மற்றும் அவ்வாழ்க்கையை உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் வாழவும்,பல இருத்தல் தடைகள் மற்றும் திசைதிருப்பல்கள் துன்பம், ஏக்கம், அபத்தம், தனிமைப்படல் மற்றும் அலுப்பு உள்ளிட்டவை இருப்பினும் அதற்கான பொருள் என்னவென்று உரைக்க அத் தனி நபரே பொறுப்பானவர் என்பதை நிலைநிறுத்தினார்.

இருத்தலியல் இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு மனிதரின் தனிநபர் தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் மீண்டும் இயல்பான வழியில் உறுதியளிக்க செப்பனிட ஒரு வழி முறையான காலப்பங்கை ஆற்றியது என்பதுதான் வரலாற்றில் மிக முக்கியமானது.

மனிதன் இயற்கையான வகையினாமாக விளக்கப்படவில்லை, ஆனால் கடவுளின், சுதந்திரமான, படைப்பாக்க செயல்களை யார் ஒருவர் தோற்றுவிக்கிறோ அவரது கற்பனையில் உருவாக்கப்பட்டவனாக உள்ளான்.

இத்தகைய சிந்தனைகளின் வழி வந்தவர் தான் ழான் பால் சார்ந்தர். அவரை அறம் வழி சார்ந்த கடைசி மனிதன் என்று இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிடுகிறார்கள். உலகத்தில் எந்த மூலையில் அரசாகங்கள் உருவாகிறதோ அந்த அரசாங்கத்தை தலைமை பண்புடன் காப்பவர்களுக்கு இந்த அதிகாரம் அற்ற பற்றற்ற தனிநபர் இறையாண்மையோடு மற்றமைகள் ஒடுக்கப்பட்டவைகள் சார்ந்த பண்பும் அவர்களுக்கு இருக்க வேண்டும் அதற்கான தன்மை உடையவரே அதாவது தன் செயல்களுக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடிய அறம் உள்ளவர்கள் மட்டுமே இத்தகைய அரசியலில் இடம் பெற முடியும் என்பதாகத்தான் இந்த இருத்தலியல்  பார்வை நீள்கிறது. இதை இலக்கியத்தில் காஃப்காவும் ஆல்பர்ட் காம்யுவும்  மிகச் சிறப்பாக தங்களுடைய படைப்புகளில் வெளிப்படுத்தி இருப்பார்கள்.

எப்படியானாலும் அரசாங்கம் என்பது அதைப் பொறுப்பேற்று தலைமையில் இருக்கக்கூடிய ஒரு தனி நபரின் உள்ளம் சார்ந்த அறம் சார்ந்தது என்பதுதான் இதனுடைய  இயல்பூக்கவாதம் என்று சொல்லலாம்.

இதை அடிப்படையாக வைத்து இங்கு இருக்கக்கூடிய அரசியலை உற்று நோக்கினோமானால் அனைத்தும் கேலிக்கூத்தாக இருக்கிறது. ஒழுக்கக்கேடான  சுயநலமான ஜால்ராக்களை கைக்கூலிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு வணிக அரசியல் ரீதியாக தன்னுடைய வசதிகளை பெருக்கிக் கொண்டு மக்கள் என்கிற மற்றவர்களை சற்றும் பொருட்படுத்தாமல் அவர்களை பல்வேறு வகையான ஊடகச்செய்திகளின்  வழியில் பிம்பகளின் வழியே ஏமாற்றிக்கொண்டு திரிகிற ஒரு கூட்டத்தை தான் நாம் அரசியல் ஆட்சியாளர் என்று நம்புகிறோம்.

தான் செய்கிற காரியத்துக்கு முழு பொறுப்பேற்றுக் கொள்ளும் அறம் கூட இவர்களுக்கு இல்லை. மற்றவர்களை குறை சொல்லுதல். தன் தவறுகளை மறைத்து அதிகாரத்தை வைத்துக் கொண்டு மக்களை வெற்றிடமாக்குதல் போன்றவை தான் இன்றைய தமிழ்நாடு அரசின் போக்காக இருக்கிறது. கலைஞர் காலத்தில் உடனிருந்த இத்தகைய அரசியல் மரபு சார்ந்தவர்களைப் புறக்கணிப்பதன் மூலமாக முதல்வர் ஸ்டாலின் தனக்குத்தானே தலையில் மண்ணள்ளி போட்டுக்கொள்கிறார் இத்தகைய  அறச்சிந்தனை அற்ற அரசுகள் நீடித்ததாக உலகில் வரலாறு இல்லை.

இன்றைய முதல்வருக்கு தெரியாது தொடக்ககால திராவிட முன்னேற்றக் கழகத்தில் ழான் பால் சார்த்தரை போல அது நாத்திகமாகவே இருந்தாலும்  இத்தகைய உள்ளார்ந்த அறம் சார்ந்த தனி நபர்களால்   கட்டப்பட்டது தான் இந்த அரசியல் அமைப்பு !அதனுடைய பாதகமான கடைசி மனிதராக இன்றைய முதல்வர் இருக்கிறார் அவரைச் சுற்றி போலி கூட்டங்கள் உருவாகி இருக்கிறது. உண்மையில் இந்த அரசு ஓட்டு வங்கியை விற்று வாங்கும் ஒரு வணிக அமைப்பாக தான் மாறி இருக்கிறது. ஒரு தனி நபராக பொறுப்பேற்றுக் கொள்ளும் அறங்கள் இந்த ஆட்சிக்கு இல்லை ஆகவே இது சிந்தனையாளர்களும் செயலூக்கம் உள்ளவர்களும் எதிர்கொள்ள வேண்டிய ஒரு மக்கள் பிரச்சனை.

மேற்சொன்ன இருத்தலியல்வாதிகளாக காந்தி,  நேத்தாஜி,ஓமந்தூரர்,  சியாமா பிரசாத் முகர்ஜி பி. எஸ். குமாரசாமி ராஜா, ஜெயபிரகாஷ் நாராயண் காமராஜர்,   
ஏ.கே. கோபாலன், ஜெ சி குமரப்பா, மொரார்ஜி தேசாய், கக்கன், அண்ணா,அன்றைய இளம் துருக்கியர்கள், காயிதே மில்லத் என இந்திய அளவில் பலரையும் நாம் குறிப்பிட முடியும். இவர்கள் 
பொது வாழ்வில் எளிமை, அற அரசியல் பொழிவுகள். இவர்களை நினைந்து பார்க்கிறோமா?

நீங்கள் எதைத் தீர்வென்று தீர்மானிக்கிறீர்களோ
அது சிலருக்குத் தீதாவதும் உண்டு...!
(வாழ்க்கை அந்தந்த நேரத்து நியாயம்...
-ஜெயகாந்தன்)

அந்தப் பறவையின் கூவல் தொண்டையில் அடைபட்டுக் கிடக்கிறது. என்ன செய்ய..
 -அம்பை.

இருத்தலின் விதிகள் 
மாறிய பிறகும்..
நிலவும் காற்றும் 
நேரவிதிகளும் 
தலைகீழான பிறகும்
நிலையும் நிழலும் 
பிறழ்ந்த பிறகும்
நம்பிக்கையும் கைவிடுதலும்  சுழன்றடித்த பின்னும்

உனக்கும் எனக்குமாய் 
இந்த ஆகாயம் மட்டுமாவது இருக்கிறதே
அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் 
உச்சி மோந்து கொள்கிற மாதிரி.
- Savitha சவீதா

கிடைக்கும் போதல்ல.
இழக்கும்போதே
பிரகாசமாய்
ஒளிர்கிறது
எது?
எதுவாயினும்.
-@savitha சவீதா

 வந்தது எல்லாம் இழப்பதற்கே, இழந்ததெல்லாம் மீண்டும் வரவே பாடுகள். என நம்பிக்கை…. தோல்விகள்  நமக்கு பாடங்கள், வளப்படுத்தும் நெறிகள் என கொள்ள வேண்டும். 

இன்றைக்கு எத்தனை அரசியல்வாதிகள் தங்களுடைய செயலுக்கு தாங்களே பொறுப்பு ஏற்பார்கள் இந்த கேள்வியுடன் இருத்தலியல் வாதத்தை நாம் மேலும் பேசத் தொடங்க வேண்டும்.

தொடர்ந்து இதே போக்குகளை வைத்துக்கொண்டு மக்களின் மீது நிலவ முடியாது என்பதற்கு அரசியல் இயங்கியல் பாடம் கற்பிக்கும் என்பதுதான் வரலாறு இதில் எவரும் தப்ப முடியாது.

உப்பு தின்னா தண்ணி குடி 
தப்பு செஞ்சா தலையில் அடி 
என்ற கிராம வாழ்வியல்  முறை வேண்டும்.

#இருத்தலியல் #existentialism

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
18-11-2023.


No comments:

Post a Comment

How to organise day today….. அன்றாட பணிகள்,நடவடிக்கைகள் குறித்து குறிப்பு தாட்கள். My routine one daily. #கேஎஸ்ஆர் #ksr

How to organise day today….. அன்றாட பணிகள்,நடவடிக்கைகள் குறித்து குறிப்பு தாட்கள். My routine one daily.#கேஎஸ்ஆர் #ksr