கவிஞர் கலாப்ரியா அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் மற்றும் அவர் குறித்து பலரும் எழுதிய கட்டுரைகள் அடங்கிய இலக்கிய விழா மலரை எனக்கு அனுப்பி வைத்திருந்தார் அது நேற்று வந்துவிட்டது. மிகச் சிறப்பான வடிவமைப்புடன் பஃறுளி என்ற தலைப்பில் அந்தத் தென் மாவட்ட கரிசல் பொருணை மண்ணின் கவிஞருக்கான வாழ்நாள் உள்ளடக்கத்துடன் அவரது கவிதைகளையும் சேர்த்து அழகிய மலராக வந்துள்ளது. அதில் நான் அவர்பற்றி எழுதிய ஒரு கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. கலாப்ரியாவின் 75 ஆவது பிறந்தநாள் விழாவிற்கும் இந்த மலருக்கும் அதைத் தயாரித்தவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
••••
எங்கள் நெல்லை மண்ணின் காவியக் கவிஞர் #கலாப்பிரியா!
#திருநெல்வேலிக்கும் விருதுநகருக்கும் இடையே மண் மற்றும் நீர் வள வேறுபாடுகள் போக ஐந்து வகைத் திணை நிலங்களும் உள்ளடங்கிய திருநெல்வேலி தமிழ்நாட்டின் எல்லைக்குள் இயற்கையின் கடாட்சம் பெற்ற நீர்மை பொங்கிய ஒரு நிலப்பகுதியாக இன்றளவும் இருந்து வருகிறது.. சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து திருநெல்வேலிச் சீமை பல்வேறு வகையான மாற்றங்களுக்கு உரிய வகையில் தான் அரசியல் கலை மற்றும் பண்பாட்டுத் தளங்களில் திகழ்ந்து வருகிறது. இன்னும் சொன்னால் பல்வேறு வகையான வாழ்க்கை முறைகள் வளமான பண்பாடுகள் ஆன்மீகம் பக்தி அரசியல் கலை இசை போன்றவற்றில் திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவிலும் பிரசித்தி பெற்றது. அதை ஒட்டிய எங்களது பகுதியான விளாத்திகுளம் விருதுநகர் ஓட்டப்பிடாரம் என பல சுற்றுப்புறங்களை அனுசரித்த மக்கள் வாழ்க்கையையும் அவர்களின் அன்றாடப் பாடுகளையும் ஒரு கிராமத்து மனிதனாக அதன் நிலத்தில் அறிந்தவன் என்கிற வகையில் திருநெல்வேலி சீமை எப்போதும் என் நினைவில் ஆன்மீக பூமியாகத்தான் தான் நிலைத்து இருக்கிறது. அதன் பெருமைகளை முற்றும் அறிந்தவன் என்கிற முறையில் தான் “நிமிர்ந்து நிற்கும் நெல்லை” என்கிற என்னுடைய நூலை மிகுந்த பிரயாசைப்பட்டுக் கொண்டு வந்தேன். திருநெல்வேலி அதனளவில் இலக்கியப்படைப்புகளின் உச்சமாக இருந்த காலங்களை பின்னோக்கிப் பார்க்கிறேன் அவற்றையெல்லாம் தமிழ் எழுத்து வாழ்வின் பொற்காலங்கள் என்றுசொல்லலாம். சங்கரதாஸ் சுவாமிகள் தொட்டு ராமானுஜக் கவிராயர் வானமாமலை ஜீவானந்தம் கி ராஜநாராயணன் திகசி நெல்லை கணபதி எனப்பல இலக்கிய அறிஞர்களைப் பூர்வீகமாக கொண்டது திருநெல்வேலி.சமகாலத்தில் வண்ணதாசன் வண்ண நிலவன் விக்கிரமாதித்தன் போன்ற பல நவீன இலக்கிய படைப்பாளிகளின் வரிசையில் கவிஞர் கலாப்ரியா அவர்களையும் தொடர்ந்து வாசித்து வருபவன் என்கிற முறையில் அவரது 75 வது வயது பூர்த்தி அடைந்திருக்க கூடிய நிலையில் அவரைக் குறித்த எனது சில வாசிப்புகளை முன்வைப்பது இங்குபொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
டி கே. சோமசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட கலாப்ரியா ஜூலை 30, 1950 அன்று திருநெல்வேலி சுடலைமாடன் தெருவில் (கடையநல்லூரில்) பிறந்தார். தந்தை கந்தசாமி. தாய் சண்முகவடிவு.பள்ளி படிப்பை திருநெல்வேலி ஷாஃப்டர் உயர்நிலைப்பள்ளியில் முடித்தார். இளங்கலை கணிதவியலை நெல்லை ம. தி. தா இந்துக் கல்லூரியிலும், முதுகலை கணிதவியலை நெல்லை யோவான் கல்லூரியிலும் (1971 முதல் 1973)படித்து முடித்ததாக அவர் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.அந்த வகையில் பார்க்கும் பொழுது அவருக்கு இப்போது 75 வயது ஆகியிருக்கிறது.
2009-ல் இந்தியன் ஓவர் சீஸ் வங்கிப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற கலாப்ரியா தற்பொழுது தென்காசி அருகே உள்ள இடைக்கால் என்ற கிராமத்தில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார்.
கலாப்ரியா 1978-ல் சரஸ்வதியை மணந்தார். இவர் பள்ளியில் கணித ஆசிரியையாகவும், தலைமை ஆசிரியையாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அகிலாண்ட பாரதி, மருத்துவர். இளைய மகள் தரணி, பொறியாளர். கலாப்ரியாவின் இரு மகள்களும் நூல்களை எழுதியுள்ளனர். அகிலாண்டபாரதி மருத்துவநூல்ளோடு நாவல்களையும் எழுதுகிறார். கவிஞரின் பிள்ளைகள் இலக்கியத்தில் வருவது வியப்பில்லை தானே! இப்படியான அவரது அகவாழ்வு ஒரு புறம் இருக்க
பிராயம் தொட்டு பல்வேறு சிறு இதழ்களில் எழுதி வந்திருக்கிறார். அவரது நேர்காணல் சிலவற்றை வாசித்ததில் அவர் குறிப்பாக “சிறுவயதில் நான் ஒரு எம்ஜிஆர் ரசிகனாக இருந்தேன்” என்று சொல்லி இருக்கிறார். விளையாட்டுப் பருவம் முடிந்து பதின் பருவங்களில் சினிமா கிரிக்கெட் நாடகங்கள் எழுத்து வாசிப்பு நூலகங்களை பயன்படுத்துவது இவை எல்லாம் தெரு விளையாட்டுகளுக்கு இடையே தான் ஒரு நபருக்கு நேர்ந்திருக்க வேண்டும். எனக்கும் இப்படித்தான் நண்பர்களும் தெருவிளையாட்டுகளும் வாசிப்புப் பழக்கமும் நேர்ந்தது. அப்படியாக தனது சகோதரர் நண்பர்கள் மூலமாக பல நூல்களைப் பெற்று வாசித்து கவிதைக்கும் படைப்புகளுக்கும் வந்தவர் தான் கலாப்பிரியா. சிறுவயதில் நிர்மால்யம் என்ற ஒரு சிறு கையெழுத்துப் பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தியவர்.
பழமையான விவசாயம் முறைகளையும் வெயில் மழை காலங்களில் தாமிரபரணி பொங்கிப்பிரவகித்து வரும் நாட்களிலும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஊர் வளைந்து கிடக்கும் நேரங்களில் திருநெல்வேலியின் இலக்கிய படைப்புகளும் பொங்கிப்பிரவாகம் எடுத்துத் தான் வந்தன. தமிழ்நாட்டின் வேறு எந்த மாவட்டங்களையும் விடவும் திருநெல்வேலியில் இலக்கியப் படைப்பும் படைப்பாளிகளும் அதிகம்.
அதிகம் கவிஞர்கள் என்கிற நிலையில் அவர்களோடு எழுதியும் உறவாடியும் வந்த கலாப்ரியாவின் மொழி அக்காலங்களில் தனியாக வித்தியாசமாக இருந்ததாக அவர் குறித்த விமர்சனங்கள் சொல்கின்றன.
“கனியாகப் பார்த்தால்
வியாபாரி
விதையாகப் பார்த்தால்
விவசாயி
வேராகப் பார்த்தால்
தத்துவவாதி
பூவை பூவாகவே
பார்த்தால்
படைப்பாளி”
என்று எழுதித் தானொரு கவிஞனாக உருவான சம்பவத்தை சுருக்கமாகவே இந்தக் கவிதையில் கலாப்பிரியா சொல்லிவிடுகிறார்.
திருநெல்வேலி நெல்லையப்பன் காந்திமதியின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட பூமி. அதைச் சுற்றிலும் வளர்ந்த கலாச்சாரங்கள் விழாக்கள் தொன்று தொட்டு நடந்து வரும்போது அங்கே வளர்ந்தவர்களுக்கு என்ன விதமான மனநிலை இருந்திருக்கும் என்பதைக் காணும் போது கலாப்ரியாவின் கவிதை ஒன்று
“பகலின்
வெளிச்சத்திற்கேற்ப
தன் ஒப்பனைகளைக்
கலைத்துக் கலைத்து
மாற்றி மாற்றி
அழகு காட்டுகிறது
பிரகாரச் சிலை”
என்று குறிப்பிடுகிறது
பிரகாரத்தின் சிலையை அதன் தேஜஸ்சை பக்தியையும் தாண்டி அதன் அழகை வெவ்வேறு வகைகளில் உற்று பார்க்கும் ஒரு கவிஞன் இங்கே மலர்ந்து விடுகிறான். அதற்குப் பிறகு தான் நாமும் கூட பிரகாரச் சிலையை அதன் மீது கொஞ்சும் வெளிச்சங்களை கலைத்துக் கலைத்து அது அலங்காரத்திற்கு உள்ளாகும் இடங்களையும் கவனிக்க தொடங்குகிறோம்.
கலாப்ரியாவின் கவிதைகளில் காமமும் இயற்கையும் அதிகம் தென்படுவதாக இன்னொரு விமர்சனத்தில் கவிஞர் விக்கிரமாதித்தன் சொல்லுகிறார்.
“தொலைவில் புணரும்
தண்டவாளங்கள்
அருகில் போனதும்
விலகிப் போயின”
என்று அக்காலத்தில் ஒரு கவிஞன் எழுதும் போது அது என் வாசிப்பிலும் அதிர்வுகளை உண்டாக்கி தான் இருந்தது. 1970களில் தனது இலக்கிய பயணத்தை தொடர்ந்த கலாப்பிரியா திருநெல்வேலியில் மண் சார்ந்த படைப்புகளின் அதன் ஞாபகங்களில் ஊன்றித் திளைத்து தன் கவிதையை வேறொரு கோணத்தில் எழுதிப் பார்த்திருக்கிறார்.
“தவறி விழுந்த
குஞ்சுப்பறவை
தாயைப்போலவே
தானும் பறப்பதாய்
நினைத்தது.
தரையில் மோதிச்சாகும்வரை”.
காலம் கனியும் வரை காத்திருக்க வேண்டிய மனித வாழ்க்கையை இப்படித்தான் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர் கலாப்பிரியா!.
தொடர்ந்து நிறைய கவிதைகளை எழுதித் தமிழின் ஆகச்சிறந்த முக்கியமான நவீனகவிஞராக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட கலாப்பிரியா பிற்காலங்களில் உரைநடைகளை எழுத தொடங்கிய போது அவர் இந்த திருநெல்வேலிச் சீமையின் பல்வேறு புதிய பக்கங்களை அங்கு வாழ்ந்த மனிதர்களின் உள்ளார்ந்த அபிலாசைகளை அவர்களின் வாழ்வின் மிக நுண்ணிய சித்திரங்களை எழுதி வந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பாரதியார் பாரதிதாசன் போன்றோர் எழுதியகுறுங்காவியங்களைப் போலவே தன்னுடைய “எட்டயபுரம்” “மற்றாங்கே “போன்ற நீள் கவிதைப் படைப்புகளிலும் மனித வாழ்வியலைச் சித்தரித்துக் காட்டி உயர்ந்திருக்கிறார். இன்றளவில் “உருள் பெரும் தேர்” போன்ற உரைநடைகள் ஏறக்குறைய அவரது சுயசரிதம் போலவே திருநெல்வேலி மண்ணின் வாழ்வியலையும் மனிதப் பண்புகளையும் துல்லியமாக படம்பிடித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர் சிறு வயதில் பார்த்த சினிமாக்களைப் பற்றி அவை அவர் மீது செலுத்திய தாக்கங்கள் அன்றைய நடிகர்கள் கதாநாயகிகள் சினிமாப் பாடல்கள் போன்றவற்றையும் கூட மிக அழகாக இந்த தலைமுறைக்கு எழுதிக் கடத்தி தந்திருக்கிறார். அவரது பொருளியல் வாழ்வை விட இயற்கையோடு இணைந்த அழகியல் வாழ்க்கையும் இந்த மண்ணின் கலாச்சாரமும் அவருக்கு அதிகம் படைப்பைத் தந்திருக்கின்றன.
1970களில் தமிழின் இலக்கியத்திற்குள் வந்தவர்கள் திராவிட சார்பு மற்றும் மார்க்சிய சிந்தனைகளால் கவரப்பட்டவர்களாகத் தான் இருப்பார்கள் என்பதற்கு கலாப்ரியாவும் ஒரு உதாரணம். என்னைப் போன்றவர்கள் காங்கிரஸ் சிந்தனைகளில் இருந்து திராவிட சிந்தனைகளுக்குள் வந்திருந்தாலும் தமிழ் இலக்கியங்களில் வழியே இந்த பொருனை கரிசல் மண்ணின் எழுத்துக்களை மிகவும் நேசித்தவர்களாகத்தான் இருந்தோம் ஜீவா புதுமைப்பித்தன் போன்ற ஆளுமைகள் மற்றும் திகசி போன்றவர்கள் ஆரம்பித்த வட்டத் தொட்டி போன்றவற்றின் வழியேயும் தொடர்ந்து கி ராஜநாராயணன் எழுத்துக்களாலும் கவரப்பட்டு இளம் பிராயத்தில் இவர்களின் வழியாகத்தான் பல்வேறு படைப்புகளையும் எங்களால் வாசிக்க முடிந்தது. அரசியல் ஈடுபாடுகளிலும் பொதுத் தளத்திலும் ஒரு வழக்கறிஞன் அரசியல்க்காரன் என்கிற முறையில் எனது செயல்பாடுகள் மற்றொரு பக்கம் இருந்தாலும் விடாமல் தொடர்ந்த இலக்கிய வாசிப்பு தான் என்னை அதிகம் பண்படுத்தியது அந்த வரிசையில் நான் கலாப்ரியாவையும் இணைத்துக் கொள்வேன் அவர்மிகச்சிறந்த என்னுடைய நண்பர்களில் ஒருவர்! எனக்கு இன்றைய நவீன கவிதைகளில் அதிகம் வாசிப்பு இல்லை என்றாலும் கூட எங்களின் மண்ணின் மைந்தரான கலாப்ரியாவின் படைப்புகளை அவரது நூல்களை வாங்கி எனது நூலகத்தில் சேகரித்து வைத்திருக்கிறேன் எப்போதேனும் அதை எடுத்து வாசிப்பது எனது வழக்கம். அவரது கவிதைகளில் நான் குறிப்பிட்டிருக்கும் மேற்கண்ட வரிகளைப் பலமுறை திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். நுட்பமான கவிதைகளை விட அவரது உரைநடைகளை வாசிப்பது எனக்கு உற்சாகமானது. புதிய கல்வி முறைகள் வந்த பிறகு நவீனமான சமூக மாற்றங்களுக்கு முகம் கொடுக்கும் விதமாக கலாபிரியா தொடர்ந்து எழுதி வருகிறார். ஒருபுறம் பழமையின் பீடிப்பு இந்த நவீன வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் இணங்கி வந்திருக்கிறது என்பதையும் பார்க்கும் போது கலாப்பிரியா இரண்டிலும் கால் பதித்து வெற்றி கண்டிருக்கிறார். திருநெல்வேலியின் படைப்பிலக்கிய எழுத்துக்களின் இடையே கலாப்ரியா ஒரு தனித்துவமான வித்தியாசமான படைப்பாளியாக இருக்கிறார் என்றுதான் அவரைப் பற்றிய விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில் அவர் எங்கள் மண்ணின் மைந்தராக தமிழ் கூறும் நல்லுலகத்தின் மகாகவியாக வாழ்ந்து வருகிறார் என்பதில் பெருமை கொள்கிறேன். இன்றைய முதிர்ந்த கனிந்த வயதில் அவரது வாழ்க்கையும் இலக்கியமும் ஒன்று போலவே பின்னிப்பிணைந்து வந்திருப்பதைக் காண முடிகிறது. அவரது படைப்புகள் தொடர்ந்து இன்றைய புதிய தலைமுறைகளால் வாசிக்கப்பட வேண்டும். அவர் இன்னும் எழுத வேண்டும் என்று இந்த 75 வது வெள்ளி விழா ஆண்டில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.
No comments:
Post a Comment