Monday, September 8, 2025

இன்று (27-8-2025) வெளி வந்த துக்ளக் வார இதழில் அதன் வாசகர்களுக்கு அளித்த எனது

 இன்று (27-8-2025) வெளி வந்த துக்ளக் வார இதழில் அதன் வாசகர்களுக்கு அளித்த எனது

பேட்டி-3
—————————————————————————-
To: Radhakrishnan KS <
பி.நிலாவேந்தன்: நீங்கள் தமிழக நலனுக்காக நிறைய பொதுநல வழக்குகள் தொடுத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். அவை குறித்து வாசகர்களுக்கு சொல்லுங்களேன்?
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: ஆம். உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதி மன்றத்திலும் 45 வழக்குகள் வரை தொடர்ந்துள்ளேன். தேசிய நதிகள் இணைப்பு, விவசாயிகள் பிரச்சனை, தமிழக உரிமைகள், சுற்று சூழல் தொடர்புடைய வழக்குகள்: கேரளாவிற்கும், நமக்கும் குமரி முதல் கொங்கு மண்டலம் வரை ஒரு டஜன் ஆறுகளுடன் பிரச்னை இருக்கிறது. ஆனால் இங்கு இருக்கும் கம்யூனிஸ்டுகள் என்ன செய்கிறார்கள்? யாராவது கேரள கம்யூனிஸ்டுகளுடன் பேசி சுமுகமான முடிவை ஏற்படுத்தி தந்திருக்கிறார்களா? மதுரையில் ஒரு கம்யூனிஸ்ட் எம்.பி. என்னதான் செய்கிறார்? முல்லைப் பெரியாறு அணையின் நீரை நம்பிதானே அவருக்கு வாக்களித்த மக்கள் இருக்கிறார்கள். அவர் இதற்காக என்றைக்காவது குரல் கொடுத்திருக்கிறாரா? கம்பம் பகுதியில் உள்ள கண்ணகி கோவில் தமிழர்களுக்கு சொந்தம் என்று நான் வழக்கு போட்டேன். கம்யூனிஸ்டுகள் யாராவது அது பற்றி பேசினார்களா? அல்லது கேரளா அரசுடன் சுமூக பேச்சுவார்த்தையாவது நடத்தினார்களா? இவர்களுடைய தலைவராக இருந்த பி.இராமமூர்த்தி ஆழியார் பரம்பிகுலத்தை காமராஜர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அன்றைய கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியிடமிருந்து பெற்றுத் தந்தார். அந்த உணர்வுகள் இன்றைக்கு மங்கிப் போய்விட்டனவே. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் இதற்காக சிலை திறந்து வைத்தார். அதில் பி.இராமமூர்த்தி சிலை இல்லை. இதை மக்கள்தான் கேட்க வேண்டும். ஆனால் மக்களோ 500 ரூபாய் வாங்கிக் கொண்டு வாக்களிக்க துவங்கி விட்டார்கள். இப்படி இருக்கும் போது மக்களுக்கு கேள்வி கேட்கும் அதிகாரம் எங்கிருந்து வரும்?
எஸ்.வெங்கட்: தற்போது நீங்கள் தி.மு.க.வில் இருக்கிறீர்களா, இல்லையா?
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: இல்லை. 2022-ஆம் ஆண்டு இறுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு போட்டதால் நான் தி.மு.க.விலிருந்து இடைக்காலமாக நீக்கப்பட்டதாக அறிவித்தார்கள். அது உண்மையான காரணமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதன்பிறகு தான் ராஜகண்ணப்பன் போன்றவர்கள் காங்கிரஸை விமர்சித்தனர். அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை. எனவே அவர்கள் என்னை நீக்கம் செய்வதற்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. அதற்கு இதை பயன்படுத்திக் கொண்டார்கள். வழக்கமாக தி.மு.க.வில் அது போல் இடைக்காலமாக நீக்கப்பட்டால், நீக்கப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள். ஆனால் எனக்கு இன்றளவும் நோட்டீஸ் வரவில்லை. நிரந்தரமாக நீக்கப்பட்டதாகவும் அறிவிப்பு வரவில்லை. அதற்காக நான் தி.மு.க.வில் இன்னும் இருப்பதாக சந்தோஷப்பட்டு கொள்ளவில்லை. எனக்கு கலைஞர் தி.மு.க. போதும்; ஸ்டாலின் தி.மு.க. தேவையில்லை. அது ஸ்டாலின் தி.மு.க. என்பதையும் தாண்டி இப்போது உதயநிதி தி.மு.க. என்று மாறி வருகிறது. துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கூட உதயநிதிக்கு சால்வையும் சல்யூட்டும் போடும் துர்பாக்கியமான நிலை இருக்கிறது. எனக்கு அந்த நிலைமை வேண்டாம். தி.மு.க.விற்கான பல முக்கிய பணிகளை நான் செய்திருக்கிறேன். ஜெயலலிதா வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றியதற்கு ஆரம்பகால பணிகளை நான்தான் செய்தேன். முரசொலி மாறன் கேட்டு கொண்டதற்கிணங்க நானும் டெல்லி சம்பத்தும் இணைந்துதான் அந்த பெரும் முயற்சியை எடுத்தோம். அடுத்ததாக கலைஞரை நள்ளிரவில் கைது செய்த போது அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற வீடியோவை காலை 4 மணிக்கு சன் டிவியில் கொண்டு போய் கொடுத்தது நான்தான். இன்னொரு குடும்ப விஷயத்தை சொல்ல வேண்டுமென்றால், கனிமொழியின் முதல் கணவருடனான விவாகரத்தை வெளியுலகிற்கே தெரியாமல் இரவு 8 மணிக்கு நீதிபதியின் அறையிலேயே நடத்த சட்டப்படி அனுமதி பெற்று, முடித்து வைத்தேன். திமுகவில் 1986 டெசோ, முள்ளிவாய்க்காலுக்கு பிறகு நான் திமுகவில் இணைந்து நடத்திய டெசோ அதன் பின் ஐநா மன்றத்தில் திமுக வின் கருத்துகளை முன்வைத்ததும், இது குறித்து ஸ்டாலினை லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் பேச வைத்ததும் போன்ற பல்வேறு பணிகளை தி.மு.க.விற்காக செய்தேன். மதிமுகவிலும் திமுகவிலும் நான் பெற்றதும் ஒன்றும் இல்லை ஆனால் இழந்தது அதிகம். எனது இளமை காலத்தையும், கோடிக்கணக்கான சொத்துகளையும் இழந்தது தான் மிச்சம். ஈ.சி.ஆரில் ஐந்து ஏக்கர் நிலம் இருந்தது. இன்றைக்கு விலை என்ன? அதை விற்றேன். அண்ணாநகரில் ஆற்காடு வீராசாமிக்கு அடுத்த வீடு எனது வீடு. 3 கிரவுண்ட். அதை விற்றேன். பெல்ஸ் ரோட்டில் ஒரு வீடு; திருவான்மியூரில் மூன்று கிரவுண்டில் ஒரு வீடு- இவை எல்லாவற்றையும் என் அரசியல் சூழலில் விற்று விட்டேன். ஆனால் எனக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் அநேகம். என்னிடத்தில் வேறொரு அரசியல்வாதி இருந்திருந்தால் நிச்சயமாக அவன் விரக்தியில் காணாமல் போயிருப்பான்.
எல்.கோபால்: நீங்கள் ஒரு எழுத்தாளர் கூட. இதுவரை எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள்?
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: நான் 1977 முதல் எழுதி வருகிறேன். கதை சொல்லி இதழின் ஆசிரியர். தமிழ்நாட்டின் உரிமைகள், திட்டங்கள், பொருளாதாரம், மனித உரிமைகள் என 20 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளேன். 'நிமிர வைக்கும் நெல்லை', பாரதி குறித்தான 1500 பக்கம் கொண்ட தொகுப்பு, பாஞ்சாலக்குறிச்சி சரிதம், கச்சத்தீவு, ஈழத்தமிழர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என்பதும் முக்கியமானவை.
பி.நிலாவேந்தன்: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று நினைக்கிறீர்கள்?
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: அ.தி.மு.க.விற்கென்று எப்போதுமே தமிழகத்தில் 30 சதவிகிதத்திற்கு குறையாத வாக்கு வங்கி இருக்கிறது. அதோடு தற்போது பா.ஜ.க. கூட்டணி 11 சதவிகித வாக்குகளை பெற்றிருக்கிறது. எனவே அது இரண்டையும் கூட்டினால் 41 சதவிகிதம் வருகிறது. ஒரு மூன்று சதவிகிதம் குறைந்தால் கூட 38 சதவிகிதம் நிச்சயம் கிடைக்கும். அதோடு பா.ம.க. வருகிறது; கிருஷ்ணசாமி வருகிறார். இவர்களுக்கு ஒரு மூன்று சதவிகித வாக்குகள் என்று வைத்துக் கொண்டால் மொத்தம் 49 சதவிகிதம் வந்துவிடும். இந்த நிலையில்தான் நான் ஒரு புது முயற்சி எடுத்து வருகிறேன். ஆந்திராவில் துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாணை வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க கூட்டணிக்காக அழைத்து வர திட்டமிட்டுள்ளேன். ஏற்கனவே நயினார் நாகேந்திரனை அழைத்து சென்று பவன் கல்யாணை சந்தித்து, அவரை முருகன் மாநாட்டிற்கு வரவழைத்ததில் எனது பங்குண்டு. அவர் வந்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்வாரேயானால் 20 சதவிகிதத்திற்கும் மேலிருக்கும் தெலுங்கு பேசும் தமிழக மக்களில் கணிசமானோரை அ.தி.மு.க. அணி பக்கம் ஈர்க்க முடியும் என்று நம்புகிறேன். 20 சதவிகிதத்தில், 8 சதவிகிதம் வந்தால் கூட அ.தி.மு.க. அணி 50 சதவிகிதத்தை தொட்டுவிடும். தி.மு.க.விற்கென்று இருக்கும் மைனாரிட்டி வாக்கு வங்கியில் விஜய் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்துவார். ஆளும் தி.மு.க. மீது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தி இருக்கிறது. 'எப்போதுடா தேர்தல் வரும்; தி.மு.க.வை தண்டிக்கலாம்' என்று மக்கள் காத்திருக்கிறார்கள். எனவே அரசாங்கத்திற்கு எதிரான அந்த வாக்குகள் அ.தி.மு.க.விற்கே கணிசமாக செல்லும். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி வரவிருக்கும் 2026 தேர்தலில் வெற்றியைப் பெறும் என நினைக்கிறேன். அதற்கு அடையாளமாகதான் எடப்பாடி பழனிசாமி போகுமிடம் எல்லாம் பெரும் கூட்டம் கூடுகிறது. அவர் சாமானிய விவசாய பாஷையில் பேசுகிறார். ஆனால் அவரைப் பார்க்க இந்த அளவு மக்கள் கூட்டம் கூடுகிறது என்றால், தி.மு.க. அரசு வீழ்த்தப்பட்டு, மீண்டும் அ.தி.மு.க. அரசு அரியணை ஏறும் என்பதற்கான அறிகுறியாகதான் தோன்றுகிறது.
சுராகி: 'வாஜ்பாய் அரசில் என்னை மத்திய அமைச்சராக பதவியேற்க சொன்னபோது நான் அந்த பதவியை ஏற்க மறுத்ததை, தற்போது தவறு என்று உணர்கிறேன்' என்று வைகோ கூறியிருக்கிறார். அது பற்றி உங்கள் கருத்தென்ன?
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: அவர் அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொன்னபோது நான் அதை கண்டித்தேன். 'ராமகிருஷ்ண ஹெக்டே நான்கு எம்.பி.க்கள் வைத்து கொண்டு தொழில்துறை அமைச்சராகிறார். அப்படியிருக்கும்போது நீங்கள் பெட்ரோல் துறை அமைச்சராவதில் உங்களுக்கு என்ன தடை இருக்கிறது? இதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், கட்சிக்காரர்களுக்கும் பல விதங்களில் உதவலாமே? என்று கேட்டேன். ஆனால் அவர் அதை நிராகரித்தார். 'மந்திரி பதவி கொடுத்தும் வேண்டாம் என்கிறாரே வைகோ?' என்று வாஜ்பாய் உட்பட பலரும் பிரமிப்பாய் பார்த்தார்கள். அதை அனுகூலமாக வைத்து அவர் வேறு பலன்களை பெற்றிருக்கக்கூடும் என சிலர் கூறினார்கள், அது எனக்கு தெரியாது. அந்த நேரத்தில் அவர் எனக்கு இன்னொரு துரோகமும் இழைத்தார். 'ராதா, நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். உங்களது ரெஸ்யூம் ஒன்று என்னிடம் கொடுங்கள்' என்று கேட்டார். நானும் கொடுத்தேன். என்னை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று எனது ரெஸ்யூமை வாஜ்பாயிடமும், அத்வானியிடமும் கொடுத்து, 'இவருக்கு காதி போர்டு சேர்மன் பதவி தர வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். 'சரி நமக்கு எந்த பதவியும் தராமல் தடுத்து வந்த அவரே, நமக்காக முயற்சி எடுக்கிறாரே' என்று மனதிற்குள் நினைத்தேன். ஆனால் அது சில காலம்தான் நீடித்தது. இவர் கொடுத்த கோரிக்கை என்னவாயிற்று என்று நான் டெல்லியில் விசாரித்த போது 'வைகோ உங்களுக்காக கொடுத்த மனுவை அவரே திரும்ப பெற்றுக் கொண்டார்' என்ற அதிர்ச்சி தகவல் எனக்கு கிடைத்தது. இப்படி பல நிகழ்வுகளை சொல்ல முடியும். இது ஒரே ஒரு சம்பவம் தான்.
வி.நாராயணன்: வாரிசு அரசியலை எதிர்த்துதான் வைகோ தனிக்கட்சி கண்டார். ஆனால் இன்றைக்கு அவரே அவரது கட்சியில் தனது வாரிசை முன்னுறுத்தி விட்டார். தி.மு.க.வின் வாரிசு அரசிலையும் ஆதரித்து வருகிறார். இது குறித்து உங்கள் பார்வை என்ன?
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: நான் என் அப்பாவால் அரசியலுக்கு வரவில்லை, நான் எனது மகனையும் அரசியலுக்கு கொண்டு வரவில்லை என மகனும் வைகோவும் தனித்தனியாக சொல்லுகின்றனர். என் மகன் அவராக தனியே தொழில் செய்கிறார். நான் எந்த சிகரெட் விற்பனைக்கான டீலர்ஷிப்பையும் வாங்கி கொடுக்கவில்லை என் சொன்னார். ஆனால் நான் ம.தி.மு.க.விலிருந்த போதே, 1998ல் இருந்து வைகோவின் மகன் அரசியலில் தலையிட்டு, நான் மேலே வராமல் பார்த்துக் கொண்டார். அதேபோல கலைஞர் எனக்கு ஸீட் கொடுக்க முன்வந்த போதெல்லாம் அதை ஸ்டாலின் தடுத்து நிறுத்தினார். ஆனால் ஒன்று சொல்கிறேன்- வாரிசு அரசியலை கையில் எடுத்தவர்கள் எங்குமே அதிக காலம் வெற்றிகரமாக இயங்கியதில்லை. காஷ்மீரில் பாருங்கள்.. மறைந்த ஷேக் அப்துல்லா வின் மகளுக்கும் மகங்களுக்கும் பிரச்சனை, பஞ்சாபில் பிரகாஷ்சிங் பாதல் குடும்பத்தில் மகனுக்கும், மருமகளுக்கும் சண்டை! ஹரியானாவில் தேவிலால் மகன், சிறைக்கு சென்ற சௌதாலாவிற்கும் அவருடைய சகோதரர்களுக்கும் சண்டை. உபியில் முலாயம்சிங் யாதவ்வை வீட்டிலே அடைத்து வைத்து சாப்பாட்டை கதவிடுக்கு வழியாக தள்ளும் கொடூரம். அப்பாவால் அரசியலுக்கு வந்த அகிலேஷ் அப்பாவையே நீக்கி அரசியல் செய்தார். பீஹாரில், லாலுபிரசாத் யாதவ் தன் மூத்த மகனையே கட்சியை விட்டு நீக்கினார். இப்போது தேஜஸ் யாதவிற்கும், அவரது சகோதரிகளுக்கும் சண்டை! மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் மருமகன் சாரதா சிட்பண்ட் மோசடியில் சிக்கி பெரும் பிரச்னையானது. அடுத்து மஹாராஷ்டிராவிற்கு வாருங்கள்.. அஜித்பவார்- சரத் பவார் சண்டை! கர்நாடகாவுக்கு போனால் தேவகௌடா- மகன்கள் ரேவண்ணாவுக்கும் குமாரசாமிக்கும் இடையே சண்டை! கேரளாவில் பினராயி விஜயன் பொலிட் பீரோ உத்தரவையும் மீறி என் மருமகன்தான் அமைச்சர் என்று அடம்பிடித்து கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டுக்கு வாருங்கள்.. வாரிசு அரசியலை கொண்டு வந்த கருணாநிதி, அழகிரியை 'அவன் மகனே இல்லை' என்று கூறுமளவிற்கு சூழ்நிலை வந்தது. அது எவ்வளவு பெரிய துர்பாக்கியம்! தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு மூன்று அப்பாவிகள் உயிரிழக்க நேர்ந்ததற்கும் குடும்ப அரசியல்தானே காரணம்? இப்போது பா.ம.க.வை எடுத்துக் கொள்ளுங்கள்.. மகனை முன்னிறுத்தி டாக்டர் ராமதாஸ் அரசியல் செய்தார். இன்று மகனுக்கும் அவருக்குமே முட்டிக்கொண்டு விட்டது. கட்சி இரண்டாக உடைந்து நிற்கிறது. வாரிசு அரசியலுக்கு எதிராக இருந்த வைகோ தனது மகனை கட்சியின் பொறுப்புக்கு கொண்டு வந்ததிலிருந்து அந்த கட்சியில் நடக்கும் குழப்பங்களையெல்லாம் நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். அதனால் வாரிசு அரசியலை எந்த மாநிலத்தில் முன்னெடுத்தாலும் அது அந்த கட்சியையும், அந்த மாநிலத்தையும் கடுமையாக பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
(முற்றும்)
தொகுப்பு: எஸ்.ஜே.இதயா

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்