Saturday, March 19, 2016

Bosnia

போஸ்னிய இசுலாமியப் பெண்கள் வன்புணர்ச்சிகள்; இன அழிப்பே!
     
-பேராசிரியர் பிரான்சிஸ் ஏ.போய்லே

(பேராசிரியர் பிரான்சிஸ் ஏ. போய்லே, இலியானாஸ் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் உலக மகளிர் நாளையொட்டி, மார்ச் 9 நடந்த பெண்கள் சட்டங்கள் கருத்தாய்வரங்கில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி இக்கட்டுரை. போஸ்னியா போரின்போது இசுலாமியப் பெண்கள் செர்பிய கிறித்துவர்களால் பெருவாரியாக வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். இவையெல்லாம் வெறும் வன்புணர்ச்சி அல்ல; திட்டமிட்ட இன அழிப்பு என்பதை உலக நீதிமன்றத்தில் நிரூபித்தவர் பேராசிரியர் போய்லே. இதற்காக அவர் கணக்கெடுப்பில் இறங்கியபோது, 20,000-25,000 போஸ்னிய இசுலாமியப் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டதை அறிந்தார். ஆனால், அண்மைய ஐநா அறிக்கை 40,000 என்று கூறுகிறது. உலக நீதிமன்றத்தில் செர்பிய அரசு, இங்கிலாந்து, அமெரிக்க அரசுகளைக் குற்றவாளிகளாக்கினார். இங்கிலாந்தின்மீதான விசாரணை நடக்கவிருந்த நேரத்தில், இவ்வழக்கில் பேராசிரியர் போய்லே ஆஜரானால் போஸ்னியாவை அழித்து ஒழிப்போம் என, இங்கிலாந்து மிரட்டியது. அதைத் தொடர்ந்து, போய்லேவை போஸ்னிய அரசு நீக்கிவிட்டது. இந்த வழக்கைத் தாக்கல் செய்தது போஸ்னிய குடியரசின் குடியரசுத்தலைவர் அலிஜா இஜெட்பெகோவிச்சைக்.அதன்பிறகு, இந்த வழக்கு நீர்த்துப்போகத் தொடங்கியது. முன்னாள் செர்பிய அதிபரும், போஸ்னிய படுகொலைக்குக் காரணமானவருமான கராட்ஜிக் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் யுகோஸ்லாவேகியாவுக்கான சர்வதேச குற்ற விசாரணைத் தீர்ப்பாயம் வரும் 24 அன்று தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் இக் கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது.)

இரண்டாம் உலகப் போரின்போது, நாஜிகள் மிகக் கொடூரமான போர்முறைகளைக் கையாண்டனர். ஆனால், அவர்கள்கூட எதிரிநாட்டுப் பெண்களை திட்டமிட்டு, பெருவாரியாக வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்துவதை ஒரு போர்முறையாகக் கொள்ளவில்லை. ஆனால், இதே இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் ராணுவம் சீனப் பெண்களை இம்முறையில் திட்டமிட்டு வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால், போஸ்னியா கதை மிகுந்த துயர்மிக்கது. அங்கு நடந்தது வெறும் வல்லுறவு மட்டுமல்ல; அவற்றை போர்க்கால குற்றச்செயல்களாக மட்டும் கொள்ளமுடியாது. அதுவொரு இனத்தை அழிப்பதுதான் என்று உறுதியாக நம்புகிறேன். சந்தேகமின்றி இன அழிப்புதான். எனவே, போஸ்னியா வன்புணர்ச்சிகள் ஒரு இனப்படுகொலை எனக் குற்றம்சுமத்தி உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.

இந்த வழக்குக்காக உலக நீதிமன்றத்தில் வாதாடுவதற்காக, பல்வேறு நம்பத்தகுந்த சுயேட்சையான மனித உரிமைச் செயல்பாட்டு அமைப்புகளிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டேன். இங்கு நான் உரையாடிக்கொண்டிருக்கும் 20,000-25,000 போஸ்னிய இசுலாமியப் பெண்கள் வன்புணர்ச்சிகளுக்கான தரவுகள் அங்கிருந்துதான் பெரும்பாலும் பெறப்பட்டன. 1948ல் நடந்த இன அழிப்பு மாநாட்டின் தீர்மானங்களைப் பார்த்தீர்கள் என்றால், போஸ்னியா வன்புணர்ச்சிகள் ஒரு இன அழிப்பு என்பதற்கான ஆதாரவாதங்களை நீங்கள் உணரமுடியும்:

பிரிவு 2

இந்த மாநாட்டில் ஒரு தேசியம், இனம், மொழி அல்லது மதக் குழுக்கள் ஒன்றைப் பகுதியாகவோ, முழுமையாகவோ அழிக்கும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இன அழிப்பு என வரையறுக்கப்படுகிறது.

பி) ஒரு குழுவின் உறுப்பினர்களை உடல்ரீதியாக, மனரீதியாகத் துன்புறுத்துவது.

ஆனால், ஒரு குழுவின் உறுப்பினர்களை வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது உடல், மனம் ஆகிய இரண்டுக்கும் கடுமையாகக் காயங்களை ஏற்படுத்துவது. இந்த வழக்கில், யுகோஸ்லேவிய, போஸ்னிய செர்ப் கிறித்துவர்கள் போஸ்னிய இசுலாமியப் பெண்களை வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளனர். அதனால்தான் இன அழிப்பு குற்றத்துக்கான குற்ற விளக்கத்தை நான் உங்களுக்கு மேற்கோள் காட்டினேன். இன அழிப்பைப் பொறுத்தவரை அது, அவர்களிடம் ஒரு குற்ற மனநிலையாக நிலவியதால்தான் குறிப்பிட்ட நோக்குடைய அக்குற்றச் செயல்கள் நிகழ்ந்தன என்பதை இந்த வழக்கில் நான் நிறுவவேண்டியிருந்தது. எனவே, இந்த வழக்கைப் பொறுத்த வன்புணர்ச்சிக்கு ஆளானவர்கள் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாலும், போஸ்னிய தேசியத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் போஸ்னிய இசுலாமிய இனப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் அவ்வாறு வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள் என்பதை வாதிட்டு நிறுவ வேண்டியிருந்தது.

இதை எவ்வாறு செய்தேன்?

வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை கூடுமானவரை திரட்டினேன். ஐநா அமைப்புகள், ஐரோப்பியக் குழு, அம்னஸ்டி இண்டர்நேஷனல், மனித உரிமைகள் கண்காணிப்பு போன்ற மதிக்கத்தக்க, நம்பகத்தன்மைகொண்ட மனித உரிமைச் செயற்பாட்டமைப்புகள் ஆகியவற்றிலிருந்து அவற்றைத் திரட்டினேன். அவற்றை ஒழுங்காகத் தொகுத்து உலக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன்.

இந்த வன்புணர்ச்சிகளின் நோக்கம் இன அழிப்புதான் என்பதை நிறுவ என்ன மாதிரியான தடயங்களைப் பயன்படுத்திக் கொண்டேன்?

இங்கே நான் வரைகலை மொழியைப் பயன்படுத்தப்படுகிறேன். ஹேய் நாமெல்லாம் சட்டம் பயின்றவர்கள், வயது வந்தோர்கள். இதுதான் இந்த வழக்கில் நான் வாதாடிய மொழி:

இப் பெண்கள் கூட்டாக வல்லுறவுக்கு உட்படுத்தப்படும்போது வல்லுறவாளர்களாலும், அவரைச் சுற்றியிருந்த ஆண்களாலும் தனிநபர் வல்லுறவின்போதும், கூட்டு வல்லுறவின்போதும் கூறப்பட்ட மொழிகளை பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களில் திரட்டினேன்:

அவர்கள் போஸ்னிய இசுலாமியப் பெண்களை தனிநபர் வல்லுறவு அல்லது கூட்டு வல்லுறவு செய்யும்போது தனிநபர் வல்லுறவாளர்களும், கூட்டு வல்லுறவாளர்களும் ஃபக் மொகம்மது என்று கூறியுள்ளனர். இது, அப் பெண்கள் போஸ்னிய இசுலாமியப் பெண்களாக இருப்பதால்தான் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற உள்நோக்கை நிறுவுகிறது அல்லது தனிநபர் வல்லுறவாளர்களும், கூட்டு வல்லுறவாளர்களும் அப் பெண்களை வல்லுறவு செய்யும்போது ‘ஃபக் யுவர் துருக்கிஸ் மதர்ஸ்’ என்று கூறியுள்ளனர். போஸ்னியர்கள் துருக்கியர் அல்ல. தெற்கு ஸ்லாவிய இனம். ஆனால், அவர்கள்சார்ந்த மதம் துருக்கிக்கானது. அதனால், செர்பியர்கள் அவர்களை துருக்கியர் என அழைத்தனர். எனவே, அப் பெண்களின் இனம் மற்றும் தேசியத்தின் காரணமாக உள்நோக்கம் கொண்டு வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர் என வாதிட்டேன். மற்றும் ‘ஃபக் அலிஜா”. இது, போஸ்னிய குடியரசின் குடியரசுத் தலைவரும், எனது கட்சிக்காரருமான அலிஜா இஜெட்பெகோவிச்சைக் குறிப்பதாகும். அவர் போஸ்னிய இசுலாமியர். இன்னும் இதுபோலப் பல.

என்னால் கூடுமானவரைக்கும் திரட்டிய இந்த வாக்குமூலங்களை ஒரு தொகுப்பாக உலக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். ஆனாலும், அப் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதை நிறுவ, இவை போதுமான ஆதாரங்கள் அல்ல. இந்த வல்லுறவாளர்கள் இதனால் போர்க் குற்றவாளிகள், பிறர் துன்பத்தைத் துய்ப்பவர்கள் என்பதை நிறுவவும் இவை போதாது. மதக் காரணங்களுக்காக அல்லது தேசிய காரணங்களுக்காக அல்லது இனக் காரணங்களுக்காக இன அழிப்பு உள் நோக்கத்துடன் இந்த செர்பிய ஆண்கள் போஸ்னிய இசுலாமியப் பெண்களை வல்லுறவு செய்தனர் என்பதை, இன அழிப்பு மாநாட்டின் பிரிவு 2 வரையறையான ‘‘ஒரு தேசியம், இனம், மொழி அல்லது மதக் குழுக்கள் ஒன்றைப் பகுதியாகவோ, முழுமையாகவோ அழிக்கும் எண்ணத்துடன்” செய்த வரையறைக்குப் பொருந்தும்வண்ணம் அவர்கள் செயல்முறை இருந்தது என்பதை நிறுவவேண்டியிருந்தது. தேசிய, இன, மத காரணங்களுக்காகத்தான் இந்த போஸ்னிய இசுலாமியப் பெண்கள் கிறித்துவ செர்பிய ஆண்கள் வல்லுறவு செய்தனர் என்று வாதிட்டேன்.

அதோடு, இன அழிப்பு மாநாட்டு வரையறை பிரிவு 2, டியின் படியும் இது, இன அழிப்பு என்று வாதிட்டேன். பிரிவு 2, டி என்ன சொல்கிறது:

‘‘ஒரு குழுவுக்குள் குழந்தை பிறப்பைத் தடுக்கும் உள் எண்ணத்துடன் திணிக்கப்படும் நடவடிக்கைகள்” இன அழிப்பாகும் என்கிறது.

இதன்படி, அந்த கிறித்துவ செர்பிய ஆண்கள் இன அழிப்புக்கான இரண்டாவது குற்ற மனநிலையுடனும், குற்ற வரையறைக்குள்ளும் செயல்பட்டுள்ளனர் என வாதிட்டேன். இங்கும் மதிப்புமிக்க மனித உரிமை செயற்பாட்டமைப்புகள் மூலம் திரட்டிய பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களை சாட்சியங்களாகத் தாக்கல் செய்தேன்.

இப் பெண்கள், தனிநபர் வல்லுறவுகளுக்கு, கூட்டு வல்லுறவுகளுக்கு ஆளாகும்போது, தனிநபர் வல்லுறவிலும் கூட்டுவல்லுறவிலும் ஈடுபட்ட கிறித்துவ செர்பிய ஆண்கள் “நாங்கள் உனக்கு உன்மூலம் குட்டி செர்பிய பையனைத் தரப்போகிறோம்” அல்லது “நாங்கள் உனக்கு உன்மூலம் ஒரு செர்பிய குழந்தை தரப்போகிறோம்” என்று கூறியபடி ஈடுபட்டுள்ளனர்.

ஏனென்றால், தெற்கு ஸ்லாவிய இனப் பண்பாட்டில் இனம் தந்தைவழி பரவுவதாக நம்பப்படுகிறது. எனவே, கிறித்துவ செர்பிய ஆண்மூலம் போஸ்னிய இசுலாமியப் பெண் குழந்தை பெறும்போது அக் குழந்தை செர்பிய குழந்தையாகிவிடுகிறது. அதோடு, “நாங்கள் உனக்கு ஒரு நல்ல குட்டி ஷெட்னிக் குழந்தை தரப்போகிறோம்” என்றும் கூறியுள்ளனர். ஷெட்னிக் என்பது, இரண்டாம் உலகப் போரின்போது செர்பிய பிரிவினையை எதிர்த்துப் போரிட்ட செர்பியப் படைவீரர்களை அழைக்கும் சொல் ஆகும். நாஜிகளை எதிர்த்துப் போரிட்டது தவறல்ல. ஆனால் இங்கு போஸ்னிய இசுலாமியப் பெண்களை வல்லுறவு செய்யும்போது, செர்பிய சொல்லாடலான ஷெட்னிக் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர்.

அடுத்ததாக, யுகோஸ்லாவிய தேசிய ராணுவத்தின் அங்கமான யுகோஸ்லாவிய செர்ப் படை அல்லது போஸ்னிய செர்ப் படை என்றழைக்கப்பட்ட படை முகாம்கள், போஸ்னிய இசுலாமியப் பெண்களை வல்லுறவு செய்வதற்கென்றே போஸ்னியப் பகுதிகள் நெடுக அமைக்கப்பட்டது. அங்கு இந்த போஸ்னிய இசுலாமியப் பெண்கள் ஒரு பாலியல் அடிமைகளாக்கப்பட்டு மீண்டும் மீண்டும் வல்லுறவுக்கும், கூட்டு வல்லுறவுகளுக்கு ஆட்படுத்தப்பட்டதுடன் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டனர், மறு விற்பனை செய்யப்பட்டனர், பாலியல் அடிமைகளாக நாடு கடத்தப்பட்டனர். இந்த வல்லுறவுகளால் கருவுற்றது தெரியவந்தால் “நீ ஒரு ஷெட்னிக் குழந்தையைப் பெற்றுத்தரப் போகிறாய். நீ இங்குதான் தங்க வேண்டும், அக் கருவை அழிக்க விடமாட்டோம்” என்றுகூறி தடுத்துள்ளனர். இதுவும், இன அழிப்பு மாநாட்டு தீர்மான வரையறை பிரி 2,டி மீறலாகும் என்று வாதிட்டேன்.

இறுதியாக, கனடாவில் அதிக எண்ணிக்கையிலான போஸ்னிய அகதிகளைக் கொண்டிருந்தோம். கிளிண்டன் நிர்வாகம் போஸ்னிய விவகாரத்தில் கபட நாடகம் ஆடியபோதும், அமெரிக்காவுக்குள் ஓரளவுக்குமேல் போஸ்னிய அகதிகளை அனுமதிக்கவில்லை. இதனால், அதிக போஸ்னிய அகதிகள் கனடாவுக்குள் வந்தனர். நான் கனடா சென்று, ‘ஒரு துணிச்சல் கொண்ட, செர்பிய வல்லுறவால் பாதிக்கப்பட்ட ஐந்து பெண்கள் முன்வந்து நேரடியான வாக்குமூலங்கள் தரவேண்டும்; அதை நான் உலக நீதிமன்றத்தில் தாக்கல் செய்வேன். பிறகு, உலக நீதிமன்றத்தில் அவர்கள் நேரடியாக ஆஜராகி மொத்த உலகின் செவிகளில் கேட்கும்படி சாட்சியமளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன். எனக்கு அத்தகைய துணிச்சலான ஐந்து போஸ்னியப் பெண்கள் கிடைத்தனர். அவர்கள் வாக்குமூலங்களைப் பெற்று, உலக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன்.

இந்த நீண்ட வரலாறை மேலும் தொடராமல் சுருக்கமாக முடிக்கிறேன். எனது வாதமும், வாக்குமூலங்களும், சாட்சியங்களும் முதல் கட்டமாக, இன அழிப்பு, போர், வல்லுறவுகளை நிறுத்துவதற்காகும்.

அடுத்து நான் பெற்ற வெற்றி, யுகோஸ்லாவியாவுக்கு எதிராக உலக நீதிமன்றம் பிறப்பித்த ஆணையாகும். மூன்று அம்சங்கள் கொண்ட அந்த ஆணையின் முதல் அம்சம், போஸ்னியா அல்லது போஸ்னியர்களுக்கு எதிரான அனைத்துவிதமான இன அழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த யுகோஸ்லாவிய அரசுக்கு ஆணையிட்டது. இதை ஏகமனதாக வென்றேன்.

இரண்டாவது அம்சம், போர் நடவடிக்கையாகவும், இன அழிப்பு நடவடிக்கையாகவும் யுகோஸ்லேவிய ராணுவ, துணை ராணுவ, பயங்கரவாத, குற்றச்செயல் குழுக்கள் போஸ்னிய இசுலாமியப் பெண்கள் கூட்டு வல்லுறவு செய்யப்படுவதைத் தடுக்க தனது அரசு அதிகாரம் அத்தனையையும் பயன்படுத்தி, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதற்கு ரஷ்ய நீதிபதி மட்டும் ஒப்பவில்லை.

மூன்றாவதாக, இதன்மீது மேல்முறையீடு செய்வதற்கான எந்த முயற்சியிலும் யுகோஸ்லேவியா இறங்கக்கூடாது என்ற எனது விண்ணப்பத்தை அனைத்து நீதிபதிகளும் ஒருமனதாக ஏற்றுத் தீர்ப்பளித்தனர்.

நான் ஏகமனதாக வென்றேன்.

(ஆனால் தொடர்ந்த கதை சோகமானது)

- தமிழில்: அப்ஸ்

Courtesy: மின்னம்பலம்.காம்

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...